• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»தொடர்கள்»யூதர்களின் தனிதேசக் கனவு – அத்தியாயம் 3
தொடர்கள்

யூதர்களின் தனிதேசக் கனவு – அத்தியாயம் 3

லியாக்கத் அலிBy லியாக்கத் அலிJune 27, 2021Updated:May 29, 2023No Comments5 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

முதலாம் உலக யூதர் மாநாடு

உலக யூதர்களின் முதலாம் மாநாட்டை 1896 ஆகஸ்ட் 29,30,31ல் சுவிட்சர்லாந்த் நாட்டின் பேசல் நகரில் மிகவும் ரகசியமாக நடத்தினார் ஹெசில். அதில் தனது சியோனிஸ திட்டத்தின் 100 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில் யூதர்கள் செய்யத் தவறியது, செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது என அனைத்தும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டில் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மேக்ஸ் நோர்தேவின் வார்த்தைகளை வைத்து சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் “பொதுவாகவும் சட்டரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வாழ்விடத்தை யூதர்களுக்கென” உருவாக்குவது என்பதே மாநாட்டின் மைய நோக்கம். இதற்காக கிருத்துவர்களுடன் (அவர்கள் காலங்காலமாக நம் பகைவர்கள் ஆனாலும்) நட்புறவைப் பேண வேண்டும்.. பலஸ்தீனில் யூத குடியிருப்புகளுக்கு நிதியுதவி செய்திட யூத தேசிய வங்கியை ஏற்படுத்த வேண்டும்.. உலக சீயோனிஸ இயக்கத்தைத் தோற்றுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மேலும் யூத இஸ்ரேலுக்கான ஹத்திக்வா எனும் தேசிய கீதமும் தாவீதின் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட தேசிய கொடியும் யூத தேசிய சின்னங்களாக ஏற்கப்பட்டன. இந்த மாநாட்டின் தீர்மானங்களே “பேசல் திட்டம்” என்று வழங்கப்படுகிறது.       

அந்த மாநாடு நடந்து முடிந்த அடுத்த ஆண்டு ஹெசில் சொன்னது: “அன்றைய தினம் பேசலில் நான் யூத தேசத்தைத் தோற்றுவித்தேன். அதை நான் இப்போது உரக்கச் சொன்னால் என்னைப் பார்த்து எல்லோரும் வாய்விட்டு சிரிப்பார்கள். ஒரு ஐந்து வருட காலத்தில் – இல்லை அடுத்த ஐம்பதாண்டுகளுக்குள் – இதையே அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்” இதுதான் ஹெசில் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வை,, நுட்பமான செயலாக்கத் திறன். இந்த மாநாட்டை முடித்த கையோடு ஹெசில் ராஜரீக நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டார். 1898ல் ஜெர்மனியில் இருந்த சிற்றரசான பேடன் தேசத்தின் பிரபுவை சந்தித்து பலஸ்தீனில் யூத குடியிருப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒட்டோமான் பேரரசின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதே தனது நோக்கம் என்று நைச்சியமாகப் பேசினார். அப்போது ஜெர்மனி ஒட்டோமான் பேரரசு சிதைந்துவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்ததால் தனது காலனிய திட்டத்தை லாவகமாக மறைத்து பேடன் பிரபுவின் ஆதரவைப் பெற்றார். தொடர்ந்து புருஷியாவின் மேனாள் அமைச்சரும் வியன்னாவிற்கான ஜெர்மன்  தூதருமான யூலன்பெர்கின் ஆதரவையும் பெற்றுக் கொண்டார். இவர்கள் மூலமாக ஜெர்மானிய சக்கரவர்த்தி கெய்சர் வில்லியமை அதே ஆண்டு அக்டோபர் 18ம் நாளில் சந்தித்து பலஸ்தீனத்தை யூதர்கள் வசம் ஒப்படைக்க (வளர்ச்சி கோஷத்தை முன்வைத்து) சுல்தானை நிர்பந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு ஒப்புக் கொண்டு பலஸ்தீனில் ஜெர்மானிய வணிகக் கம்பெனியை ஆரம்பிக்க சுல்தான் அப்துல் ஹமீதுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். இதற்குப் பின்னணியில் இருந்த யூத திட்டத்தை உணர்ந்த சுல்தான், “ஒட்டோமான் பேரரசு ஜெர்மனியின் உறவை பெரிதும் விரும்புகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் வில்லியம் தலையிடாமல் இருப்பதே இரு தரப்புக்கும் நல்லது” என்று தகவல் அனுப்பி அந்த சந்திப்பைத் தவிர்த்துவிட்டார். அதே சமயத்தில் ஒட்டோமான் பேரரசுக்குள் வாழ்ந்துவந்த யூதர்கள் உள்ளிட்ட முஸ்லிமல்லாத அனைவருக்கும் சுல்தான் சமஉரிமை வழங்கினார். இதன்மூலம் ஐரோப்பிய அரசுகளைத் திருப்திபடுத்தி தனது சாம்ராஜ்யத்தின் பொருளாதார நலன்களை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றும் கருதினார் சுல்தான் அப்துல் ஹமீது. 1850களில் ரஷ்யாவிற்கு எதிராக நடந்த போர்களின் விளைவாக ஒட்டோமான் பேரரசு கடனில் மூழ்கியது. 1875ல் ராஜ்ஜியத்தின் கடன் சுமை 100 கோடிக்கு மேலாக கழுத்தை நெறித்தது. 1901 மே 19 ஆம் நாளில் ஹெசில் சுல்தானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதும் இந்த கடனை பலஸ்தீனில் அமையப்போகும் யூத அரசு ஏற்றுக்கொள்ளும் என்று ஆசைவார்த்தைக் காட்டவும் தவறவில்லை.. பெரும் கடன்சுமையில் தத்தளித்த ஒரு சூழலில் மேற்குலகத்தை முற்றிலும் பகைத்துக் கொள்ளும் நிலையில் சுல்தான் இல்லை. தனது குடிமக்களுக்கு இடையே பாரபட்சம் காட்டி அதன் மூலம் புதிய பகையை ஏற்படுத்திக் கொள்ளவும் அவர் தயாராக இல்லை. பலஸ்தீனில் மற்றுமொரு “பல்கேரிய விவகாரம்” தலைதூக்குவதைத் தாம் விரும்பவில்லை” என்றே அவர் குறிப்பிட்டார். உண்மையில் 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் சுல்தான் தர்மசங்கடமான நிலையில்தான் இருந்தார். .     

தேவைப்படாத சுல்தானின் அனுமதி

இந்த ராஜரீக நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தே போதே யூதர்களைக் குடியமர்த்தும் பணிகள் வீரியமாக நடக்க ஆரம்பித்தன. பலஸ்தீனில் இடம் வாங்க வருபவர்களுக்கு தாராளமாக வங்கிக்கடன் கிடைத்தது. ஒன்றுக்கும் உதவாத பாலை நிலங்களை அரேபிய நிலச்சுவான்தார்களிடமிருந்து நல்ல விலை கொடுத்து வாங்க யூதர்கள் போட்டியிட்டனர். நில உரிமையாளர்களில் பெரும்பாலானவர்கள் பலஸ்தீன விவசாயிகளிடம் குத்தகைக்கு விட்டுவிட்டு நகரங்களில் சொகுசாக வாழ்ந்து வந்தவர்கள். பலஸ்தீனில் என்ன நடக்கிறதென்பதே இவர்களுக்குத் தெரியவில்லை. செல்வாக்கு மிக்க பாரம்பரிய அரபுக் குடும்பங்களான ஜெருசலேமைச் சார்ந்த நஷாஷிபீ, உசைனீ, அல் அலமி மற்றும் ஜபாவின் தஜானீ ஆகியோரும் தங்கள் நிலங்களை யூதர்களிடம் விற்பதில் எந்த தயக்கமும் இல்லை. அவ்வளவு ஏன் யூத குடியேற்றத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்த ஒட்டோமான் அரசுக்கும் கூட அங்கு என்ன நிலை என்பது தெரியாமலேயே போனது. விளைவு 1902க்குள் யூதர்களின் சனத்தொகை 50000ஐ எட்டியிருந்தது. ரோத்ஸ்சைல்டு வங்கி குழுமம் மட்டும் 4,50,000 துனம் (ஒரு துனம் 1000 சதுர மீட்டர்) நிலங்களை வாங்கிக் குவித்தது. முதலாவது குடியேறிகளான ”சீயோன் காதலர்கள்” சீயோனிய இயக்கத்திற்கு 87000 பிரிட்டிஷ் பவுண்டுகளை வசூலித்துக் கொடுத்த நிலையில் 1893 – 99 காலகட்டத்தில் மட்டும் ரோத்ஸ்சைல்டு 15 லட்சம் பவுண்டுகளை செலவு செய்திருந்தார். குடியேற்றங்கள் மற்றும் நில விற்பனைக்கு ஒட்டோமான் அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகள் வெறும் பெயரளவிலேயே இருந்தது.

யூதர்கள் புனித யாத்திரைக்காக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதி பலவழிகளில் மீறப்பட்டது. உலகின் பல பகுதிகளில் இருந்து புறப்பட்ட யூதர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அந்தந்த நாடுகளின் பிரஜைகளாக பலஸ்தீனுக்குள் நுழைந்தனர். அதற்கான ஏற்பாடுகளை செய்ய எல்லா இடங்களிலும் யூத இடைத்தரகர்கள் இருந்தனர். மேற்குலக நாடுகளும் எல்லாவிதத்திலும் ஒத்தாசையாக இருந்தன. பலஸ்தீனில் நுழையும் யூதர்களை ரஷ்ய மற்றும் ஐரோப்பிய தூதரகங்களுக்கு அழைத்துச் சென்ற தரகர்கள், புதிய கடவுச் சீட்டுக்களைப் பெற்றுத் தந்தனர். இதன்மூலம் அவர்களின் யூத அடையாளம் பின்னுக்குத் தள்ளப்பட்டு தேசிய அடையாளத்துடன் பலஸ்தீனில் குடியேறினர். அதே போல் உள்ளூர் அதிகாரிகள் பலர் லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மண்ணை பதிவு செய்து கொடுத்தனர். உரிமையாளர்கள் இறந்து போன, வாரிசற்ற சொத்துகள் வேகமாக கைமாறின. 1890 – 97 வரை ஜெருசலேமின் அதிகாரியாக (முத்தாஷரீப்) இருந்த இப்ராஹிம் பாஷா, லஞ்சம் பெற்றுக் கொண்டு யூதர்களுக்கு நிலம் கைமாறுவதைக் கண்டு கொள்ளாமல் இருந்தார். இப்படியாக பல்வேறு சீர்கேடுகளில் சிக்கியிருந்த ஒட்டோமான் நிர்வாகத்தால் யூதர்களின் திட்டமிட்ட நகர்வை தடுத்து நிறுத்த முடியவில்லை. சட்டத்திற்கு புறம்பான வழிகளில் குடியேறிய – நிலங்களை வாங்கிக் குவித்த யூதர்களின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறுமனே வேடிக்கைப் பார்க்கும் அளவிற்கு ஒட்டோமான் பேரரசு வலுவிழந்து போயிருந்ததே உண்மை.    

இதற்கிடையில் யூத தேசமமைக்க சுல்தானிடம் அனுமதி பெறும் முதல்  முயற்சியில் தோல்வியடைந்த ஹெசில், அடுத்ததாக பிரிட்டனின் உதவியை நாடினார். 1902, அக்டோபர் 22ல் அவர் பிரிட்டிஷ் காலனிய செயலர் ஜோசப் சாம்பர்லேனை சந்தித்தார். இந்த சந்திப்பின் விளைவாக 1903ல் ஆங்கிலோ பலஸ்தீன் வங்கி உருவானது. இதே சமயத்தில் யூத காலனிகளை அமைக்க வேறு ஏதுவான இடங்களையும் பரிசீலிக்கத் தயாரானார். அப்போது ஆங்கிலேய அரசு சினாய் தீபகற்பம், எகிப்தின் எல் அரீஷ், உகான்டா போன்ற இடங்களைக் குறியிட்டுக் காட்டினர். சீயோனிஸ தலைவர்களுக்கிடையில் அபிப்பிராய பேதம் உண்டானதுடன், தங்கள் அடிப்படை நோக்கத்தில் ஹெசில் சமரசம் செய்து கொள்கிறாரோ என்ற சந்தேகமும் தலை தூக்கியது. மேலும் மேற்கூறிய பிரதேசங்கள் ஒட்டோமான் பேரரசின் இறையாண்மைக்குட்பட்ட பகுதிகள் என்பதால் எகிப்து உடன்பட மறுத்து விட்டது. 1903ல் ஹெசில்.ரஷ்ய உள்துறை அமைச்சரை (Vyacheslav Plehve) சந்தித்து, பலஸ்தீனில் அமையும் யூத தேசம் ரஷ்ய நலன்களுக்கு உகந்ததாக இருக்கும் என்று சொல்லி அவரது ஆதரவையும் பெற்றார். கடந்த ஐந்தாண்டுகளாக யூதர்களைக் கலவரத் தீக்கிரையாக்கிய ரஷ்ய அரசு பலஸ்தீனில் அமையப் போகும் சுதந்திர யூத தேசத்திற்கு அநுகூலமாகவே நடந்து கொண்டது. இதுபோல் ஒட்டோமான் பேரரசுக்கு நெருக்கடி கொடுக்க்க் கூடிய அனைத்து இராஜதந்திர நடவடிக்கைகளையும் ஹெசில். தொடர்ந்தார். எப்படியிருந்தாலும் எங்கேயும் வேரூன்ற விடாது விரட்டியடித்த ஐரோப்பிய தேசங்களுக்கு மத்தியில் இஸ்ரேல் என்ற நாடு அன்றைக்கு கால்கோள் கொள்வதற்கு அறிந்தோ அறியாமலோ முஸ்லிம்களின் பெருந்தன்மையே காரணமாக இருந்திருக்கிறது. இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஒருசிலரைத் தவிர பெரும் பாலானவர்கள் அவர்களைக் கரிசனத்துடனேயே அணுகியிருக்கின்றனர் வரலாற்றிற்கு ஒட்டுமொத்தமாக குழிபறித்துவிட்டு இன்றைக்கு பலஸ்தீன் பிரச்சினை யூத – முஸ்லிம் பிரச்சினையாக வலுவாக கட்டமைத்துவிட்டார்கள். 1904 ஆம் ஆண்டு ஹெசில் உயிர் பிரிவதற்கு முன்னால் சீயோனிஸ வடிவில் யூதர்களுக்கான தேசியத்தை நிரந்தரமாக்கி அதற்கான கட்டமைப்புகளை வலுவாக ஏற்படுத்திவிட்டே அவர் மறைந்து போனார்.

அதே சமயத்தில் 1909 ஆம் ஆண்டு பதவியை விட்டு வெளியேறிய சுல்தான் அப்துல் ஹமீது தன் கண்முன்னே இஸ்லாமிய ஆட்சி மற்றும் நிர்வாகத் திறனின்  பாரதூரமான வீழ்ச்சிக்கு சாட்சியாகிப் போனார். அவரது ஆட்சியின் இறுதி கட்டத்தில் அவர் விதித்த தடைகளை எல்லாம் மீறி இரண்டாம் ஆலியாவை யூதர்கள் சிறப்பாக மேற்கொண்டிருந்தார்கள். இரண்டாம் ஆலியாவின் முடிவில் ஏறத்தாழ ஒரு லட்சம் யூதர்கள் பலஸ்தீனில் குடிபுகுந்திருந்தனர். அதற்கும் மேலாக தங்கள் பாதுகாப்புக்கான ஹாஷமோர் என்ற ராணுவ அமைப்பையும் அவர்கள் அமைத்திருந்தனர். அரசின் அதிகாரங்கள் எதுவும் தங்களை நெருங்க முடியாத அளவுக்கு யூத குடியிருப்பு சங்கம், காலனிய அறக் கட்டளை தேசிய நிதியம், யூத வங்கிகள், நிலவள நிறுவனங்கள் என்று அனைத்தும் வேர்விட்டு அமைப்பாகி பலஸ்தீனின் பல்வேறு நகரங்களில் கிளைபரப்பி இறுமாந்து நின்றன. இப்போது அவர்கள் காசு கொடுத்து நிலம் வாங்க வேண்டிய அவசியமில்லாமல் மிரட்டி பறித்துக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மாறியிருந்தது. இந்த சிறப்பான செய்கைகளுக்காக சமூகநல அமைப்புகளையெல்லாம் நடத்தும் அளவுக்கு யூதர்கள் முன்னேறியிருந்தார்கள்.

லியாகத் அலி – எழுத்தாளர்

இஸ்ரேல் பாலஸ்தீன்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
லியாக்கத் அலி

Related Posts

ஃபலஸ்தீனம் மீதான இனப் படுகொலையில் அமெரிக்காவின் பங்கு

November 7, 2024

ஷஹீத் யஹ்யா சின்வாரின் இறுதி உயில்

October 23, 2024

“தூஃபாநுல் அக்ஸா” – அக்டோபர் 7ம் இஸ்ரேலின் தோல்வியும்

October 9, 2024

மும்பை இஸ்ரேலிய திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டதன் பின்னணி

August 21, 2024

இஸ்மாயில் ஹனிய்யா கொல்லப்படக் காரணம் என்ன?

August 10, 2024

தூஃபான் அல் அக்ஸா: இஸ்ரேல், அமெரிக்காவின் மத்திய கிழக்கு இருப்பிற்கான ஓர் சவால்!

January 2, 2024

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.