• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»தொடர்கள்»தமிழ்த் தேசியத்தின் தொடக்கமும் மாற்றங்களும்
தொடர்கள்

தமிழ்த் தேசியத்தின் தொடக்கமும் மாற்றங்களும்

ஃபஹ்ருத்தீன் அலி அஹ்மத். VBy ஃபஹ்ருத்தீன் அலி அஹ்மத். VOctober 21, 2021Updated:May 29, 2023No Comments5 Mins Read
National Leader of Tamil Eelam Hon. Velupillai Pirabaharan
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

பொதுமக்கள் மத்தியில் தமிழ் தேசியம் என்கிற ஒரு அடிப்படை சிந்தனை தோன்றி தொடர்ந்து உரையாடப்பட்டும் வருவதில் இருந்து தமிழ் தேசியம் ஏன் முக்கியமாக கருதப்படவேண்டும் என்னும் அடுத்த கட்ட உரையாடலுக்கு நாம் செல்லவேண்டியது அவசியம். ஆகவே, பொதுக்கொள்கையோ தனி தலைவனோ இல்லாத தமிழ் தேசியம் அடிப்படையில் ஒரு மக்கள் இயக்கமாக இருப்பதையே நாம் கவனப்படுத்துதல் அவசியமாகிறது. தமிழ் தேசியம் என்னும் கருத்தாக்கம், நீண்ட காலமாக தமிழ்ச் சமுதாயத்தின் உள்ளத்தில் கிளர்ந்த அரசியல் மற்றும் மனித உரிமை மீட்சியின் கூட்டு வெளிப்பாடாக அமைகிறது. ஆக தமிழ் தேசியம் என்பது தங்கள் அரசியல் உரிமையைக் கோர விளையும் ஒரு இனத்தின் ஒளிவு மறைவு அற்ற உள்ள வெளிப்பாடு என்றே கொள்ள முடியும். ஆகவே தமிழ் தேசியம் தற்போது பரவலாக பேசப்படுவது போல் அரசியல் தளத்தில் விவாதிக்கப்படும் ஆற்றலை இன்னும் முழுமையாக பெறவில்லை என்பதே தெளிவு.

மாறாக, அச்சிந்தனை போக்கை உணர்ச்சிமிகு அரசியலாகவும் பாசிச இனச்சிந்தனையாகவும் வளர்த்தெடுக்க முனையும் சில தரப்பினரின் செயல்பாட்டை நாம் கண்டித்தே ஆகவேண்டும். காரணம் முழுவதும் பக்குவப்படாத ஒரு இன உரிமை சார்ந்த சிந்தனையை தம் போக்கிற்கும் தம் சுயநலத்துக்கும் சாதகமாக மாற்றி அமைக்க முயலுவது அம்மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய தீங்காகவே முடியும். அம்மக்கள் முன்னெடுக்க நினைக்கும் உரிமை சார்ந்த சிந்தனையின் ஞாயமும் உலக பார்வையில் மறைக்கப்பட்டு விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால், தமிழ் நாட்டில் நெடுங்காலமாக இயங்கிவரும் போலி இனமீட்சி சிந்தனையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தமிழ் தேசியம் மிக கவர்ச்சிகரமான, மக்களைக் கவரக் கூடிய, மேடைப் பேச்சுக்கு உதவக் கூடிய ஒரு கருத்தாக்கமாக மட்டுமே பயன்பட்டு வருவதையே காணமுடிகிறது. அதன் அடிப்படையிலேயே பல்வேறு முரண்பட்ட கருத்துகளையும் பாசிச வெறுப்பையும் மிகச் சாதாரணமாக அவர்கள் முன்வைக்கிறார்கள்

அடுத்து, தமிழ் மக்கள் தங்கள் உரிமை சார்ந்த கொதிப்பை வெளிப்படுத்த காரணமாக இருந்த பல்வேறு வெளி உள் நெருக்குதல்களை நாம் மொத்தமாக புறந்தள்ளிவிட முடியாது. குறிப்பாக இலங்கையில் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகவும் அந்நியராகவும் ஆக்கப்பட்டு கொன்று குவிக்கப்பட்ட கொடூரங்களும், அதை தடுத்து நிருத்த முடியாத தமிழ் நாட்டு அரசியல், சமூகத் தலைவர்களின் கையாலாகாத்தனமும், தொடர்ந்து இந்திய அரசாலும், தமிழக அரசியலாலும் தமிழர் மீது திணிக்கப்பட்டு வரும் உரிமை மீறல்களுமே தமிழினத்தை தமிழ் தேசியம் குறித்த சிந்தனைக்கு உந்தித் தள்ளி இருக்கும் நிலையையே நாம் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் பெரியாரால் நிலைநாட்டப்பட்ட திராவிட கொள்கை தமிழர் வாழ்வியலில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவந்திருப்பது கண்கூடு. குறிப்பாக தமிழ் நாட்டு அரசியலில் அதன் செல்வாக்கு மிக அதிகம். கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ் நாட்டில் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் தனித்து ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு காரணம் தமிழ் நாட்டு வாக்குச் சந்தையில் கலந்துவிட்ட திராவிட சிந்தனையேயாகும்.

ஆனால், திராவிடம் என்கிற பரந்த வட்டத்துக்குள் அடக்கப்படவேண்டிய கர்நாடகம், கேரளம், ஆந்திரம் போன்ற பிற மாநில மக்கள் பெரியார் காலத்திலேயே திராவிட கொள்கைகளை ஏற்றுக் கொண்டதோ தங்களை திராவிடனாக உணர்ந்ததோ கிடையாது. தமிழ் நாட்டுக்குள் வாழ்ந்த பிற மொழி பேசும் மக்கள் (திராவிட பரந்த சிந்தனையால்) பெற்ற அணுகூலங்களை, பிற மாநிலங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் பெற முடியாமல் போனதும் உண்மை. தமிழ் நாட்டு அரசியல், கலை, பொருளாதார பரப்பில் (திராவிடர் என்ற பொது பெயரில்) பிற மொழியை தாய் மொழியாக கொண்ட மக்கள் பெற்ற செல்வாக்கு யாவரும் அறிந்ததே. திராவிட அரசியல் கட்சிகளில் இடம் பிடித்த தெலுங்கர்களும் மலையாளிகளும் ஆட்சி பீடத்தை பிடிக்கும் அளவுக்கு உயரமுடிந்தது. ஆனால் தமிழர்கள் பிற மாநிலங்களில் வந்தேறிகளாகவே நடத்தப்பட்டு வந்திருப்பதை மறுக்க முடியாது. அதனினும் மேலாக, திராவிட நண்பர்களாக இருக்க வேண்டிய கர்நாடகம், கேரளா போன்ற மாநில அரசாங்கங்களின் செயல்ப்பாடு தமிழ் நாட்டு விரோத செயலாக இருப்பதையும் நதி நீர் திட்டங்களின் வழி அறிய முடிகிறது. காவேரி ஆற்று பிரச்சனையை மத்திய அரசோ நீதிமன்றமோ முழுமையாக தீர்க்க முடியாத சூழலையே தமிழ் நாட்டு மக்கள் அனுபவிக்கின்றனர். அதே போன்று பாலாறு பிரச்சனையும் பெரியாறு அணைக்கட்டு பிரச்சனையும் திராவிட நட்பு மாநிலங்களாலேயே அநீதி இழைக்கப்படுகிறது.

திராவிட அரசியல் கொள்கையில் உள்ள போதாமைகளை சாக்காக கொண்டு தமிழ் தேசியவாதிகள் பலர் ஈ.வே.ரா வை தாக்குவதையும் காணமுடிகிறது. ஈ.வே.ராவை தமிழின துரோகியாக காட்டுவதன் வழி அவர் முன்னெடுத்த எல்லா சமுதாய போராட்டங்களையும் சிதைப்பது அவர்களின் நோக்கமாக இருக்கிறது. தமிழினத்தை இன்றுவரை அரித்து தின்னும் கரையானாக சாதியமும்  மூட நம்பிக்கைகளின் உறைவிடமாக சமயமும் இருந்தாலும் தமிழ் தேசியவாதிகள் அவை பற்றிய கவலை அற்றவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ் தேசியம் ஆரியத்தை ஆதரித்து திராவிடத்தை எதிர்க்கும் குழப்பமான நிலையிலேயே செயல்படுகிறது.

ஆகவே எனது பார்வையில் தமிழ் தேசியம் என்னும் கருத்தாக்கம் தோன்றவும் வளரவும் பின்வரும் 3 காரணங்களை முதன்மையானதாக கூற முடியும்

  1. தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் ஏமாற்றம் அளிக்கும் ஆட்சி பாங்கு.
  2. மாநில சுய ஆட்சிகளை கொண்டு மாநிலங்கள் இயங்கினாலும் தேசிய தேவைகளை முன்னிட்டு பொறுப்பாக செயல்பட வேண்டிய இந்திய மத்திய அரசாங்கத்தின் கையாலாகத்தனம்.
  3. இலங்கையில் தொடங்கிய தமிழீழ போராட்டமும் அதன் உணர்வு அலைகளும்.

(பொதுவாக இலங்கை தமிழர்களின் போராட்டம் உலக தமிழர்களுக்கு பண்பாட்டு அடிப்படையில் புது தெம்பை தந்திருக்கிறது. அதே சமயம் இலங்கை இனப்படுகொலைகளும் அதை தடுக்க முடியாத இயலாமையும் குற்ற உணர்வாக பல தமிழர்களின் மனதிலும் தேங்கிக்கிடக்கிறது. இந்த குற்ற உணர்வில் இருந்து வெளிப்படும் வகையாகவும் தமிழினம் எதிரிகளால் சூழப்பட்டிருக்கிறது என்னும் கற்பிதத்தாலும் தமிழ் தேசியம் மிக தீவிரமாக பேசப்படுகிறது).

ஆகவே தமிழ் தேசியத்தின் பொது கட்டுமானம் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையிலேயே இருந்தாலும், அதன் அடிநாதமாக உயிர்ப்போடு நிற்கும் தமிழின உரிமை மீட்பு வெளிப்பாட்டு உணர்வு பொருளற்றதாகி விடாது. அந்த உணர்வை பக்குவப்படுத்தி அரசியல் அரங்கில் நேர்மையான, பொருத்தமான போராட்டமாக தகவமைக்க தமிழ் தேசியத்தில் அக்கரை செலுத்துவோர் சிந்திக்க வேண்டும்.

அடுத்த நிலையில் தமிழ் தேசியம் எப்படி அமைக்கப்படப் போகிறது என்னும் அடுத்த கட்ட வினாவுக்கு விடையாக தற்போது தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் பலர் கூறும் கருத்துக்கள் மிகுந்த சர்ச்சைகளைக் கொண்டதாகவும் பல்வேறு கற்பிதங்களை சொல்லி மக்களைக் குழப்பக்கூடியதாகவும் இருக்கிறது.

தமிழ் நாட்டில் தமிழனை இன ரீதியாக அடையாளப்படுத்தும் மிக வினோதமான ஆபத்தான இயக்கமாக தமிழ் தேசியம் செயல்படுவதை ஏற்க முடியாது. பல நூறு போர்களையும் பல்வேறு ஆட்சி மாற்றங்களையும் பல தலைமுறைகளையும் தாண்டி வாழும் மக்களிடம் தனி இனக் கூறுகளை தேட முயல்வதும் அவ்வாறு தேட தூண்டுவதும் பாசிச அரசியல் அன்றி வேறல்ல. இது போன்ற மனித விரோத செயல்கள் ஹிட்லரின் இன வெறி போக்கை ஞாபகப்படுத்தி அச்சமூட்டுகிறது.

தமிழ்த் தேசியத்தின் தொடக்கமும் மாற்றங்களும்

பெரியாரும் அவருக்கு முன்பு நீதிக் கட்சியினரும் ஒரு திராவிட தேசியத்தை முன்வைத்தனர். டி.எம்.நாயர், தியாகராய செட்டியார், நடேச முதலியார் போன்ற நிறுவனர்களின் நோக்கம் தமிழ் மொழி சார்ந்த தேசியம் அல்ல – பிராமண எதிர்ப்பும் பிராமணர் அல்லாதோரின் ஒருங்கிணைப்புமே அவர்களின் பிரதான நோக்கம். இந்தியா முழுக்க இந்த பிராமண எதிர்ப்பைக் கொண்டுசெல்ல அவர்கள் நினைத்தனர். பிராமண ஆதிக்கம் கொண்ட காங்கிரஸ் கட்சியை எதிர்த்தனர். அதே காரணத்துக்காக அன்னி பெசன்டையும், பிராமணியத்தை ஆதரிக்கிறார் என காந்தியையும் எதிர்த்தனர். இதற்கெல்லாம் உச்சமாக இந்திய தேச விடுதலைப் போராட்டத்தையே எதிர்த்தனர்.

ஆனால், பெரியார் திராவிடர் கழகத்தை ஆரம்பித்த பின்னரும் மொழிவாரியான தேசியமாக இது இருக்கவில்லை. ஒரு காரணம் இக்கட்சியில் தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடியர் எனத் தென்னிந்திய மொழியினர் பலரும் இருந்தனர். இன்னொரு காரணம், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களாக மக்கள் பிரிவதற்கு முன்னரே நீதிக் கட்சி தோன்றிவிட்டது. அவர்களின் கருத்தியல் ஒருங்கிணைந்த (திராவிட) தென்னிந்தியருக்கானதாக இருந்தது. இதனால் மிதமிஞ்சிய தமிழ்ப் பற்றை பெரியார் விமர்சனம் செய்தார். ஆனால், அண்ணாவின் வரவுடன் அரசியலில் தமிழ்த் தேசியத்தின் கொடி உயரப் பறக்கத் தொடங்கியது.

அசலான தமிழ்த் தேசியம் ஜி.யு.போப், கால்டுவெல் ஆகியோருடனும் இவர்களை அடுத்து 19ஆம் நூற்றாண்டில் சோமசுந்தர நாயகர், மறைமலை அடிகளாருடனும் தொடங்குகிறது. இதைச் சமயம் சார்ந்த தமிழ்த் தேசியம் என்கிறார்கள். போப் சைவ சமயத்தைத் தமிழரின் சமய அடையாளமாய் முன்வைக்கிறார். இத்துடன் ஆரிய மதம் × தமிழர் மதம் எனும் இருமை வேர்கொள்கிறது. தமிழ்ச் சமூகத்தில் உள்ள சாதியச் சீர்கேடு மற்றும் மதமாற்றச் செயல்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் சோமசுந்தர நாயகர் மற்றும் மறைமலை அடிகளார் சைவ சமய தேசியத்தைக் கட்டமைக்கிறார்கள். இவ்விருவரும் சைவ வெள்ளாளர்கள் அல்லர் (நாயகர் வன்னியர்; அடிகளார் சோழியர் வெள்ளாளர்). ஆக சைவ உணவுப் பழக்கமும் சைவ சமய நம்பிக்கையும் கொண்ட எந்தச் சூத்திரரும் சைவ வெள்ளாளர் ஆகலாம் என்னும் நிலைப்பாட்டை இவர்கள் எடுத்தனர். பிராமணர்களுக்கு எதிராக மத்திய சாதிகளைத் திரட்டி தேசியம் ஒன்றை நிறுவும் பணியை இவர்கள் செய்தனர்.

ஆத்திக – நாத்திகத் தமிழ்த் தேசியங்கள்

நீதிக் கட்சியினருடன் இவர்களுக்கு மத துவேஷ விஷயத்தில் மோதல் வருகிறது. சைவ சித்தாந்த நிறுவனர்கள் நாட்டார் மதங்களை, நம்பிக்கைகளை மூடநம்பிக்கைகளாகப் பழித்துச் சாடினர். ஆனால் பெரியாரோ சைவ மதத் தொன்மங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றையே எள்ளி நகையாடினார். இரு தரப்பினரிடையிலான மோதலில் நீதிக் கட்சியினரையே வென்று நீடித்தனர். தமிழகம் நாத்திகத் தமிழ்த் தேசியம் நோக்கி நடை போட்டது.

பிராமணர்களை எதிர்ப்பது, சூத்திரர்களின் அரசியல் களத்தைத் தயாரித்து அவர்களை ஒன்றிணைப்பது, அடித்தட்டினரின் சமய நம்பிக்கைகளைச் சாடுவது (கல் எப்படிடா கடவுள் ஆகும் மூடனே!) ஆகிய பொதுவான சரடுகள் திராவிடர் கழகம், அதன் தொடர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வருகையுடன் தொடர்ந்தன. குறிப்பாக இந்தப் பெயர்வுடன் வெள்ளாள சாதியினரிடமிருந்து பிற மத்திய சாதியினரின் கைக்குத் தமிழ்த் தேசியம் சென்றது.

ஃபக்ருதீன் அலி – எழுத்தாளர்

இனம் காந்தி தமிழ் தமிழ் தேசியம் பெரியார் மக்கள் மொழி
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
ஃபஹ்ருத்தீன் அலி அஹ்மத். V

Related Posts

ரயில் விபத்து: துயரத்தின்போதும் வெறுப்பை உமிழும் இந்துத்துவவாதிகள்

June 9, 2023

போலி முன்மாதிரி மாநிலம் குஜராத் – 6

May 14, 2023

போலி முன்மாதிரி மாநிலம் குஜராத் – 5

November 4, 2022

புதிய இந்தியாவிற்கு புதிய அகராதி

July 15, 2022

காந்தியின் இந்தியாவிலிருந்து கோட்சே இந்தியா: நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு சாவுமணி முழங்கியது.

July 14, 2022

இளம் தலைமுறையினரின் உலகம்

July 13, 2022

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

சூப்பர் மேன் திரைப்படம் பேசுபொருளானது ஏன்?

July 26, 2025

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.