மீண்டும் ஒரு கட்டுரையில் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி… இன்று நாம் பார்க்கவிருக்கும் வளர்ச்சி மோடி முதலமைச்சராக இருந்த அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் குஜராத்தின் பாதையை முன்மாதிரி பாதையாக மாற்றியமைத்த ஆஸ்தான வளர்ச்சி… வேறு என்ன ? பொருளாதார வளர்ச்சி தான். பொருளாதார ரீதியாக குஜராத் எம்மாதிரி வளர்ச்சி பெற்றது என்பதை பார்ப்பதற்கு முன் ஒரு விந்தையான உண்மையை உங்களிடம் தெரிவிக்க ஆசைப்படுகிறேன், ஏனெனில் அது இந்த கட்டுரைக்கும் அவசியமானது…
எந்த ஒரு வளர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதற்காக திட்டங்கள் வரையறுத்து, அந்த திட்டங்களுக்கு பெயர் வைப்பது முக்கியமானது, ஏனெனில் அதை வைத்து தானே நாம் இன்ன இன்ன திட்டங்கள் இன்ன இன்ன வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டது என்பதை கண்டுகொள்ள முடியும். ஆனால் பாஜகவை பொறுத்தவரை இது கொஞ்சம் வித்தியாசமானது, இவர்கள் ஒரு வளர்ச்சியை ஏற்படுத்த முயன்றால் அந்த வளர்ச்சிக்கான பெயர்களே அந்த வளர்ச்சி முடிவில் என்னவாகப் போகிறது என்பதை நமக்கு உணர்த்திவிடும். இந்த விஷயத்தில் அவர்கள் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார்கள்…
உதாரணமாக, நரேந்திர மோடி அவர்கள் குஜராத் முன்னேறுகிறது என்பதை உணர்த்த ‘ஒளிரும் குஜராத்’ (Shining Gujarat) என்ற சம்மேளனத்தை 2003ஆம் ஆண்டு கொண்டு வந்தார் அல்லவா?. இதற்கு என்ன அர்த்தம் ஒளிரக்கூடிய எந்த ஒரு பொருளும் முடிவில் அணைந்துவிடும் (சூரியன் உட்பட), ஆனால் அத்தகைய பொருட்கள் ஆரம்பத்தில் பிரகாசமாக ஒளிரும் தானே? மேலும் எந்த ஒரு பொருளும் ஒளிர்வதற்கு துணைசாதனம் என்ற ஒன்றின் உதவி தேவைப்படும், மெழுகுவர்த்திக்கு மெழுகு உதவுவது போல. குஜராத்தும் அதை போலத்தான் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. பொய்களும், பொய்வாக்குறுதிகளும், மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தப்படும் விளம்பரங்களும், ஒரு சில எழுச்சி உரைகளுமே இதன் துணை சாதனங்கள் ஆகும்.
வேண்டுமென்றால், தூய்மை இந்தியா என்ற திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்களேன். தூய்மை இந்தியா என்பது வெறும் சாலைகளையோ, கழிவறைகளையோ சுத்தம் செய்வது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அதுமட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையே தூய்மை செய்து கார்ப்பரேட்களுக்கு தாரை வார்த்து கூறு போட்டு கொடுப்பதற்கு என்பதை முன்னரே மோடி அவர்கள் சூட்சுமமாக நம்மிடையே உணர்த்தியிருக்கிறார். மேக் இன் இந்தியா என்றால் என்ன? கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கே தெரிந்துவிடும், இந்தியாவினுள் உள்ள வளங்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, இப்படி ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே போகலாம். பாஜகவினர், தான் என்ன செய்யப் போகிறோம் என்பதை ஆரம்பத்திலே திட்டங்களுக்கு பெயர் வைப்பதன் மூலமாக தெரிவித்து விடுகிறார்கள். அதாவது அவர்கள் ஏமாற்றவில்லை மக்கள் தான் ஏமாறுகிறார்கள், இது மக்களின் தவறு. பாஜகவினர் இந்த (திட்டம் போட்டு கவுக்கும்) விஷயத்தில் நல்லவர்கள் தான்.
இப்பொழுது நாம் விஷயத்திற்கு வருவோம்.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு குஜராத் மாநிலத்தில் 2002 இல் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்திய மிகப்பெரிய இனப்படுகொலைக்குப் பின் சோற்றில் புடலங்காயை மறைக்கும் விதமாக அதற்கு அடுத்த ஆண்டே நவராத்திரி நாளில் ‘துடிப்புமிக்க குஜராத்’ (Vibrant Gujarat) என்ற நிகழ்வை மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து அதன் வாயிலாக அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் மோடியின் பிம்பத்தை மிகச்சிறந்த முறையில் கட்டமைத்திருந்தனர்.
‘துடிப்பு மிக்க குஜராத்’ மூலமாக திரு நரேந்திர மோடி அவர்கள் முதலீட்டாளர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் பரம்பரை போல மானியங்களை வாரி வாரி வழங்கி முதலீட்டாளர்கள் மத்தியில் செல்வாக்கையும் நட்புறவையும் வளர்த்துக் கொண்டதுடன், வெளியுலகிற்கு குஜராத்தின் வளர்ச்சிக்கு பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது என பெரிய அளவில் விளம்பரமும் செய்யப்பட்டது. ஆனால் உண்மை நிலைமையோ அதற்கு நேர்மாறானது.
முதல் விஷயமாக, நிறுவனங்கள் எப்பொழுதும் வாய்ப்புக்காக காத்திருக்க கூடியதாகவே இருக்கும், குஜராத்திலோ சிவப்பு கம்பளம் விரித்து தொழில் செய்ய அழைத்தால் செல்லாமல் இருக்குமா என்ன… அதிலும் சலுகைகளும் மானியங்களும் அள்ளி அள்ளி கொடுக்கப்பட்டால் எந்த ஒரு நிறுவனமும் அங்கு தொழில் தொடங்காமல் இருக்காது. ஏனெனில் குஜராத் கார்ப்பரேட்களுக்கு தொழில் தொடங்க சுவர்க்க பூமியாகிவிட்டது. எந்த ஒரு மாநிலமும் இவ்வளவு சலுகைகளுடன் தனியார்மயத்தை ஊக்குவிக்கமாட்டார்கள் அல்லவா… நிறுவனங்கள் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.
மேலும் ஒவ்வொரு ‘துடிப்பு மிக்க குஜராத்’ நிகழ்வும் அதற்கு முந்தைய நிகழ்வை விட விளம்பரத்திலும், ஆடம்பரத்திலும் பெரிய அளவில் உருவாக்கப்பட்டது. கார்ப்பரேட் பிரிவுகளுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் போக, குஜராத் அரசாங்கம் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வெகுஜனங்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கியுள்ளது. மோடி என்னும் தனிநபர், வளர்ச்சி என்பதை தனியார்மயம்,தாராளமயம் மூலமாகத்தான் கொண்டு வரமுடியும் என்பதை முழுமையாக நம்பியுள்ளார் போலும், குஜராத் மாநிலத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உட்பட எதுவுமே இலவசம் இல்லை என்பதன் மூலமாக அவருடைய தனியார்மய கொள்கை தானாகவே வெளிப்படுகிறது.
நரேந்திர மோடி அவர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனர்கள் மேல் தனி அன்பு தான். கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.
மேற்கு வங்கம்-சிங்கூர் பகுதியில் விவசாயிகளின் பெரும் எதிர்ப்புக்கு உள்ளாகி அங்கிருந்து துரத்தப்பட்ட டாடா மோட்டார்ஸை ‘வாருங்கள், குஜராத் முன்னேறுகிறது நீங்களும் முன்னேறிக் கொள்ளுங்கள்’ என்று அழைத்து விவசாயிகளின் நிலங்களை பிடுங்கி அவ்விடத்தில் (சனந்த்) நானோ கார் தொழிற்சாலையை அமைத்துக்கொடுத்திருக்கிறார்.
ரத்தன் டாடா தன்னுடைய நானோ திட்டத்தை சிங்கூரிலிருந்து கைவிட்டு தனது தொழிற்சாலை எங்கு அமைப்பது என்ற யோசித்த வேளையில் மோடி மின்னல் வேகத்தில் குஜராத் தலைநகர் அகமதாபாத்துக்கு சற்று 30 கிமீ தொலைவில் சனந்த் என்ற இடத்தில் சலுகைகளுடன் ஆஃபர் கொடுத்திருக்கிறார். ரத்தன் டாடாவிற்கு இது மிகவும் குதூகலமளிக்கும் விஷயம். இதன் காரணமாகவே ரத்தன் டாடா ஒரு பேட்டியில் “இந்தியாவில் ஒரு கெட்ட ‘M’ மும் ஒரு நல்ல ‘M’ மும் இருப்பதாக நினைக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
முதல் ‘M’ மம்தாவையும் இரண்டாவது ‘M’ மோடியையும் குறிப்பதாகும். ஏனெனில் மம்தாவினால் தானே அவர் தனது திட்டத்தை மேற்கு வங்கத்திலிருந்து குஜராத்திற்கு மாற்றினார்.
எது எப்படியோ, நானோ தொழிற்சாலை உருவாக்கப்பட்டுவிட்டது, இனி என்ன டாடாவின் 1 இலட்சம் ரூபாய்க்கு கார் என்ற கனவினை நனவாக்கி விடவேண்டியது தானே. ஆனால் இங்கு தான் நாம் கவனிக்க வேண்டிய ஒரு திருப்பம் ஏற்பட்டது, நானோ காரின் அடக்கவிலை அதன் விற்பனை விலையை விட அதிகம், மேலும் இந்த நானோ கார் திட்டம் அட்டர் ஃப்ளாப் ஆனது வரலாறு.
மேலும் இது மட்டுமா நரேந்திர மோடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குமான அன்பு அப்பாற்பட்டது. மாருதி நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர் சங்கம் போராட்டம் நடத்திய சூழ்நிலையில், மாருதி சுசூகி நிறுவனத்தின் அதிபர் ஒசாமு சுசூகியை ஜப்பானுக்கே சென்று சந்தித்து திரும்பியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்
மோடிக்கு முதலாளிகளின் தயவு தேவை, அவர்களுக்கு மோடியின் தயவு தேவை.
அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானிக்கு கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா பகுதியில் மிகவும் குறைந்த விலையில் அதாவது ஒரு சதுர மீட்டருக்கு ₹1 to ₹32 வரை 15,946.32 ஏக்கர் (6456 ஹெக்டேர்) பரப்பளவில் நிலங்களை தாரை வார்த்து தந்திருக்கிறார். இந்த விலையை மற்ற நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தின் விலையோடு ஒப்பிடுகையில், டாடா மோட்டார்ஸ்க்கு (TATA Motors) நானோ கார் தொழிற்சாலைக்காக 1,110 ஏக்கர், ஒரு சதுர மீட்டருக்கு ₹ 900 என சனந்த் பகுதியிலும் (அஹமதாபாத்திற்கு அருகில்), ஃபோர்டு இந்தியா (Ford India) நிறுவனத்திற்கு 460 ஏக்கர், ஒரு சதுர மீட்டர் ₹ 1,100 என அதே அஹமதாபாத்திற்கு அருகிலும், மாருதி சுசூகி (Maruthi Suzuki) நிறுவனத்திற்கு 700 ஏக்கர், ஒரு சதுர மீட்டருக்கு ₹ 670 என ஹன்ஸல்பூர் பகுதியிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்த்தோமானால், ரஹேஜா கார்ப்க்கு (Raheja Corp.) ஒரு சதுர மீட்டர் ₹470, டி.சி.எஸ் (TCS) நிறுவனத்திற்கு ஒரு சதுர மீட்டர் ₹ 1,100, டோரண்ட் பவர் ( Torrent Power Generation) நிறுவனத்திற்கு ஒரு சதுர மீட்டர் ₹ 6,000 எனவும் வழங்கப்பட்டுள்ளது. (ஒரு ஏக்கர் = 4,046.86 சதுர மீட்டர்) அதானிக்கு மட்டும் இவ்வளவு குறைந்த விலையில் அதே சமயம் மிகப்பெரிய பரப்பளவில் நிலங்களை தாரை வார்த்ததால் அதானி யின் மிகவும் அன்புக்குரியவர் நமது நரேந்திர மோடி.
அதானி குழுமம் நினைத்தால் இன்னும் கூட நிலங்களை வாரி சுருட்ட முடியும் ஆனால் உயர்நீதிமன்றம் என்ற ஒன்று உள்ளதே, ஆனால் அவர்களை பொறுத்தவரை அது உரோமம் தான் இருப்பினும் அது விதித்த தடை மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக டீலில் விட்டுவிட்டனர்.
மோடியின் ஆட்சியில் மோசடி இல்லை என்றால் தான் ஆச்சரியம். ஏனெனில் மோடிக்கும், மோசடிக்கும் ஒரு எழுத்துதானே வித்தியாசம். மோடியின் ஆட்சியில் இதுபோன்று மேலும் பல நில மோசடிகள் நடந்துள்ளன.
எஸ்ஸார், எல் அண்ட் டி, ஃபோர்டு இந்தியா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் நில சலுகைகளால் கொழுத்த இலாபம் அடைந்திருக்கின்றன என்று இந்திய தணிக்கை துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. மேலும், ரிலையன்ஸ், எஸ்ஸார், அதானி, ஏபிஎல், டோரண்ட் பவர் ஜெனரேஷன் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கிய சட்டவிரோத சலுகைகளால் அரசுக்கு 580 கோடி ரூபாய் நட்டமேற்பட்டிருப்பதாகவும், 2009-2010 மற்றும் 2010-2011 ஆகிய இரு நிதி ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காட்டப்பட்டுள்ள சட்டவிரோத சலுகைகளால் அரசுக்கு ₹17,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இந்திய தணிக்கை துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
குஜராத்தின் வளர்ச்சி அம்மாநிலத்தில் நுழைந்துள்ள முதலீடுகளின் அளவையும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளின் அடிப்படையில் தான் கணக்கிடப்படுகிறதேயொழிய, அம்மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்தை கொண்டு கணக்கிடப்படுவதாக தெரியவில்லை. மோடி குஜராத்தில் உருவாக்கியிருக்கும் வளர்ச்சி ரிலையன்ஸ், எஸ்ஸார், எல் அண்ட் டி, அதானி குழுமம், மாருதி, டாடா, ஏபிஎல், டோரண்ட் பவர் ஜெனரேஷன் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், விவசாயிகள், மீனவர்கள், உழைக்கும் வர்க்கத்தினர் போன்ற அடித்தட்டு மக்களுக்கு பாதகமாகவும் இருந்திருக்கிறது என்பதை மேற்குறிப்பிட்ட பல உதாரணங்கள் மூலமாக புரிந்து கொள்ளலாம். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் சாதாரண அடித்தட்டு மக்களுக்கு எதிராகவும் இருக்கக்கூடிய இத்தகைய வளர்ச்சி அடிப்படையிலேயே தவறானது.
இதனை குறித்து மேலும் விரிவாக நாம் பார்க்கவிருக்கிறோம், இக்கட்டுரையின் இரண்டாவது பகுதியில் மீண்டும் சந்திப்போம்.
- முகமது சாதிக் இப்னு ஷாஜஹான்