இராணுவம் சம்பந்தப்பட்டு, காஷ்மீரை அடிப்படையாக வைத்து திரைப்படம் ஒன்று எடுக்க வேண்டும் என்றால் அதில் தொழில்நுட்ப விஷயங்களுக்கு தான் மெனக்கிட வேண்டுமே ஒழிய வில்லன் கதாபாத்திரத்துக்கு அல்ல. ஏனெனில், அது இயல்பாகவே இஸ்லாமியர்களுக்கு சென்று விடுகிறது. குறிப்பாக இப்படங்களில் நாயகர்களாக வரும் இராணுவ வீரர்களின் வீரமும், தியாகமும், அர்ப்பணிப்பும் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் எல்லைகளில் தான் நினைவு கூறப்படுமே தவிர சீன எல்லைகளில் அல்ல.!
இதுவரை வெளிவந்த இராணுவ படங்களில் பெரும்பாலானவைகளின் கதைகள் தீவிரவாதிகள் என இஸ்லாமியர்களையே முத்திரை குத்தின. இதற்கு சற்றும் குறைவில்லாமல் அல்லது இதைவிட ஒருபடி மேலே சென்று ஒரு குறிப்பிட்ட மக்களையே பயங்கரவாதிகள் போல் சித்தரித்திருப்பது தான் சமீபத்தில் வெளிவந்த அமரன் படத்தினை நாம் விமர்சனம் செய்வதற்கான காரணம். அதற்கு முதலில் அமரன் படத்தின் கதையினை பார்த்து விடுவோம்.
கதைச் சுருக்கம்
நாட்டிற்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைதான் இந்த அமரன் திரைப்படம். சிறுவயதில் இருந்தே இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடு பயணிக்கும் முகுந்த், மிகவும் கஷ்டப்பட்டு ராணுவ வீரராக உயர்ந்து காஷ்மீர் பாகிஸ்தான் எல்லையில் மேஜராக பணியாற்றுகிறார். அப்பகுதியிலேயே ஒரு பயங்கரவாத முற்றுகையின் போது வீர மரணம் அடைகிறார் என்பதாக இப்படத்தின் கதை அவருடைய மனைவியின் பார்வையில் எடுத்துச் சொல்லப்படுகிறது.
படத்தின் மையக்கரு மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர மரணம், அவர் நாட்டிற்காக செய்த தியாகம் போற்றப்பட வேண்டும் என்பதுதான். இதில் தவறு ஒன்றும் இல்லை, நாட்டை பாதுகாக்கும் இராணுவ வீரர்கள் செய்யக்கூடிய தியாகங்களுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் இந்நாட்டு மக்கள் நன்றியுடன் அவர்களுக்கு தகுந்த மரியாதை செலுத்த வேண்டும் என்று இப்படத்தின் இயக்குநர் எண்ணி இருக்கலாம். ஆனால், தான் எடுத்துக் கொண்ட கதைக்கும், படம் எடுக்கப்பட்ட கதை களத்திற்கும், படம் உணர்த்தக்கூடிய செய்திக்கும் இயக்குநர் காட்டியிருக்கும் வித்தியாசத்தை தான் இங்கு ஆய்வுக்குட்படுத்த விழைகிறேன்.
படத்தில் நடித்திருக்கும் நபர்களின் நடிப்புத்திறமை மற்றும் இதர தொழில்நுட்ப விஷயங்களை பற்றி இங்கு நான் பேசப்போவதில்லை. இது போன்ற படங்களின் கதைக்களமான காஷ்மீர் பகுதியையும், அதன் மக்களையும், கதாநாயகர்களாக மட்டுமே காட்டப்படும் இராணுவ வீரர்களையும், அவர்களால் அங்கு ஏற்பட்டிருக்கும் தாக்கங்களைப் பற்றியும்தான் இந்த கட்டுரையில் காணப்போகிறோம்.
இராணுவப் படங்களின் பொதுப்பண்புகள்
பொதுவாக இவ்வகை படங்களில் பல குறைகள் இருந்தாலும் முக்கியமாக இருக்கும் பிரச்சினைகள் இரண்டே இரண்டு தான். ஒன்று, ‘ஹீரோ vs வில்லன்’. ஹீரோயிசத்தை மிகைப்படுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக அதற்கேற்ற காட்சிகளை செருகுவது மற்றும் அதற்கு ஏற்ற வகையில் வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைப்பது. இரண்டாவது, ‘இராணுவம் vs காஷ்மீர்’. இராணுவ வீரர்களை மிகவும் நல்லவர்கள் போல காட்டுவது; அதே சமயத்தில் காஷ்மீர் மக்களை அல்லது அங்கு வாழும் சில நபர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது. இராணுவக் கதைகளை மையப்படுத்தி, படங்கள் இயக்கும் இயக்குநர்கள் தங்களது கதைகளை இங்கிருந்து தான் எழுதவே துவங்குகிறார்கள்.
ஹீரோ vs வில்லன்
இவ்வகை படங்களில் நாயகனுக்கு ஏற்ற வகையில் ஹீரோயிசத்தை மிகைப்படுத்தி வைப்பதற்காக இராணுவ வீரர் என்றாலே நாட்டை காப்பவர் என்றும் அவர்களிடையே மிளிரும் கௌரவம் மற்றும் கெத்து போன்ற உணர்வுகள் பார்வையாளர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதாகவும் காட்சிகள் அமைக்கப்படுகின்றன.
அமரன் படத்தின் துவக்கத்தில் வருகின்ற பிராங்க் ஒத்திகை, இடையில் வசீம் எனும் வீரரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டனர் என்பதற்காக மேஜர் முகுந்த், இராணுவ தலைமையின் கட்டளைகளை மீறி பயங்கரவாதிகள் என்று சொல்லப்படகூடியவர்கள் இடத்திற்கே சென்று கடத்தப்பட்ட இராணுவ வீரரை மீட்டு வருவது, இடைவேளைக்கு சற்று முன் படத்தின் முதல் பயங்கரவாதியை கொல்வதற்கு முன்னும் பின்னும் காட்டப்படும் காட்சிகள் என்பவை அவற்றுள் சில உதாரணங்கள்.
நாயகன் எப்படி இருந்தாலும் இராணுவத்தில் பணியாற்றும் இராணுவ வீரராக இருப்பதால் இயல்பிலேயே அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான ஹீரோயிசம் கிடைத்து விடுகிறது. அப்படி என்றால் அதற்கு இணையாக வில்லனின் கதாபாத்திரத்தன்மை எப்படி காட்டியிருப்பார்கள்?
படத்தின் முதல் காட்சியில் தீவிரவாதி என்று குறிப்பிடப்படும் காஷ்மீரைச் சேர்ந்த அஃப்சல் குரு தூக்கிலிடப்படுகிறார். அந்த செயலுக்கு எவ்வகை விளைவுகள் உருவாகிறது என்றால் அந்த செய்தி காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுக்கும், ஏன் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கும் சென்று சேர்கிறதாம்.
நேரடியான சாட்சிகள் ஏதும் இல்லாமல் சூழ்நிலை சாட்சியத்தின் (Circumstantial Evidence) மூலம் தூக்கிலிடப்பட்டவர் தான் அஃப்சல் குரு. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிருபிக்கப்படவில்லை. இருந்த போதும் `பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது. எனவே, குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே சமூகத்தின் கூட்டு மனசாட்சி (Collective Conscience of the Society) திருப்தி அடையும்’ என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தான் அவர் தூக்கிலிடப்பட்டார். உச்சநீதிமன்றம் இவ்வாறு நடந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என எழுத்தாளர் அருந்ததிராய் அவர்கள் கூட இதனைக் கண்டித்து இந்து நாளிதழில் கருத்து தெரிவித்திருந்தார்.
நிலைமை இப்படியிருக்க, அப்சல் குருவை பற்றி உச்ச நீதிமன்றத்தை விடவும் இயக்குநர் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார் போல. அவரே நேரில் சென்று பயங்கரவாதிகளுக்கு பழிவாங்கும் உணர்வு இதன் மூலமாகத்தான் தூண்டப்பட்டிருக்க வேண்டும் என கள ஆய்வு மேற்கொண்டு இருக்கிறாரோ.! என நினைக்கத் தோன்றுகிறது.
அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட சம்பவத்தினால் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் உதவி காஷ்மீரில் உள்ளவர்களுக்கு கிடைத்து விடுவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தனி ஒரு நபர் வில்லனாக இருக்கவில்லை மாறாக மொத்த காஷ்மீர் மக்களும் எதிர்மறை கதாபாத்திரங்களாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் (மறைமுகமாக பாகிஸ்தான் துணை இருப்பதாக).
இம்மாதிரியான காட்சிகளின் மூலம் எதிர்மறை கதாப்பாத்திரத்தின் தன்மையையும் மிகைப்படுத்தி (காஷ்மீர் மக்களை பயங்கரவாதிகளாக காட்டியது) காட்டி, இராணுவ வீரர்களின் மீதான மதிப்பை அதிகரிக்கலாம் என்று நினைக்கிறார்களா?
இராணுவம் vs காஷ்மீர்
காஷ்மீர் உலகிலேயே மிகவும் அடர்த்தியான அதிக இராணுவ வீரர்களை கொண்ட இராணுவமயமாக்கப்பட்ட பகுதியாகும். அம்மாநிலத்தில் மக்களைக் கட்டுப்படுத்த 500,000 மேல் ஆயுதம் ஏந்திய வீரர்கள் (300,000 இராணுவ வீரர்கள், 70,000 ராஷ்டிரிய ரைபிள் வீரர்கள், 130,000 மத்திய போலீஸ் படைகள்) மற்றும் அவர்களைக் கண்காணிக்க 100,000க்கும் மேற்பட்ட சிவில் உளவுத்துறை மற்றும் கண்காணிப்புப் பணியாளர்களைக் கொண்ட ஒரு மெய்நிகர் இராணுவ ஆட்சி உள்ளது. இது மட்டுமல்லாது புலனாய்வு பணியகம், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு, தேசிய உளவுத்துறை, சீருடை அணிந்த இராணுவம், எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவற்றுடன் ஜம்மு காஷ்மீர் போலீஸும் சேர்ந்து தனது பங்குக்கு பயங்கரவாத செயல்களை மக்களிடையே கண்காணித்துக் கொண்டுள்ளன.
காஷ்மீரி மக்கள் அவர்களது நிலத்தில் 1989ஆம் ஆண்டு முதல் காயங்களையும், சித்திரவதைகளையும், அவமானங்களையும், மரணங்களையும் சந்தித்துள்ளனர். இவையெல்லாம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலின் விளைவாக அல்ல; மாறாக காஷ்மீர் மக்களிடையே ஏற்படுத்தப்படும் பிரிவினைவாத கிளர்ச்சிகளாலும், அவர்களை அடக்குவதற்கு இந்திய இராணுவம் ஆற்றும் எதிர்வினையின் விளைவாகவும் ஏற்படுவன.
காஷ்மீர் vs இராணுவம் என்ற நிலை ஏன் மிக நீண்ட காலமாக இருக்கிறது? இராணுவத்தை எதிர்த்து ஏன் காஷ்மீர் மக்கள் குரல் எழுப்புகிறார்கள், போராட்டங்கள் நடத்துகிறார்கள்? காஷ்மீர் மக்களை புரிந்து கொள்ள வேண்டுமானால், அவர்களது வாழ்வியலை புரிந்து கொள்வது அவசியம். அவர்களது வாழ்வியலை புரிந்து கொள்ள வேண்டுமானால் இரண்டு விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். ஒன்று காஷ்மீர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்கு, மற்றொன்று AFSPA என்ற சட்டம் அவர்களது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம். இவைபற்றிய சில வரலாற்றுத் தகவல்களை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
(அடுத்த பகுதியை வாசிக்க)