இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை தொடர்ந்துக் கொண்டிருந்தது. முஸ்லிம்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டனர்.
யூத தேசத்தை கட்டமைக்கும் வெறியில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி குடியேற்றங்களை அதிகப்படுத்தியது. பல்வேறு நாடுகளிலிருந்து யூதர்கள் ஆசைவார்த்தைகள் காட்டப்பட்டும் சில நேரங்களில் மிரட்டப்பட்டும் இஸ்ரேலுக்குள் குடியமர்த்தப்பட்டனர். ஆப்பிரிக்க நாடுகளிலில் ஒன்றான எத்தியோப்பியாவில் இருந்த யூதர்தள் சிலர் அச்சுறுத்தப்பட்டு கட்டாயமாக குடியமர்த்தப்பட்டனர். (தற்போது அவர்கள் யூதர்களே அல்ல என்று கூறி அவர்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையை வலதுசாரி யூதர்கள் செய்து வருகின்றனர்).
குடியேற்றங்களை தொடர்ந்ததால் ஆகும் செலவை சமாளிக்க இஸ்ரேல் அரசு திணறியது. 1950களில் பொருளாதார சிக்கல் உருவானாது, இருப்பினும் உலகம் முழுவதும் உள்ள யூதர்களின்-குறிப்பாக அமெரிக்க யூதர்களின்- நன்கொடை, அமெரிக்கா அரசின் ஆறரை கோடி டாலர் உதவித்தொகை, ஜெர்மனியின் ஹோலோகாஸ்ட் நிகழ்விற்கான நஷ்டயீட்டு தொகை ஆகியவை ஆக்கிரமிப்பையும் அடாவடித்தனத்தையும் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொள்ள சாதகமாக இருந்தன.
இஸ்ரேல் எகிப்துடன் நேரடியாக மோதும் போக்கை கையாண்டது. சினாய் தீபகற்பத்தை கைப்பற்றியதுடன், அதனுள் புகுந்து சோவியத் யூனியனில் இருந்து எகிப்து பெற்ற ஆயுதங்களையும் அழித்து நாசம் செய்தது. இஸ்ரேலின் இந்த அயோக்கியதனத்தை அமெரிக்க அரசே கண்டிக்கும் சூழல் நிலவியது. மட்டுமுன்றி, தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் அமெரிக்க அரசின் நிதி உதவி நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இதனால் இஸ்ரேல் தமது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டது.
இதன் பிறகு கிட்டத்திட்ட பத்தாண்டுகள் பெரும் போர் ஏதுமில்லை என்ற சூழல் மத்திய கிழக்கில் நிலவியது. இருப்பினும் பாலஸ்தீன நிலத்தில் யூத குடியேற்றங்களும் ஆக்கிரமிப்புகளும் கொஞ்சமும் குறையவில்லை.
அகதிகளின் போராட்டக்குழுக்கள்:-
களவு தேசம் இஸ்ரேல் உருவாக்கும் முன்பும், அதனை தொடர்ந்த நக்பா வெளியேற்றம் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றின் காரணமாக தங்களது நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஜோர்டான், எகிப்து, சிரியா, ஈராக், லெபனான், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக குடியேறினர். இப்படி சென்றவர்கள் தமது சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டவர்களாக இருந்தனர். இதன் காரணமாகவே, இஸ்ரேலை அழித்து பாலஸ்தீன தேசத்தை விடுவிக்க பல குழுக்களை தமது பகுதிகளில் ஏற்படுத்தி போராட்டங்கள் முன்னெடுத்தனர். அவர்களில் சிலர் தமது நிலத்தை மீட்க போரிட்டனர்; சிலர் அரபு தேசத்தை கட்டமைக்க போரிட்டனர்; சிலர் பைத்துல்முகத்தஸை அடக்கிய இறைவனின் பூமியை மீட்க போரிட்டனர். நோக்கங்களில் மாறுபட்டு இருந்த போதும் இஸ்ரேலை அழிக்க வேண்டும், பாலஸ்தீன் நிலத்தின் மீதான தமது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற புள்ளியில் அனைவரும் கருத்துவேறுபாடின்றி இணைந்தனர்.
அல்-ஃபத்தாஹ்:-
பாலஸ்தீன போராட்ட களத்தின் தவிர்க்க முடியாத இயக்கம். 1950களின் இறுதியில் பாலஸ்தீனிலிருந்து காஸாவிலும் பெய்ரூத்திலும் குடிபெயர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டது. யாசர் அராஃபத், ஸலாஹ் கலாஃப், கலீல் அல் வசீர் ஆகியோர் நிறுவனர்களில் முக்கியமானவர்கள். பாலஸ்தீன தேசியத்தை தமது சித்தாந்தமாக கொண்ட ஃபத்தாஹ், பாலஸ்தீனத்தை பால்ஸ்தீனர்களே விடுவிக்க வேண்டும், ஆயுதம் தாங்கிய போராட்டம் இன்றி இலக்கை அடைவது சாத்தியமில்லை என்று உறுதியாக நம்பியது. 1958 முதல் 1967 வரையிலான காலகட்டத்தில் தனித்து செயல்பட்ட இவ்வியக்கம், இஸ்ரேலுக்கு பெரும் எரிச்சலை உண்டுபண்ணியது. 1967 PLO-வில் இணைந்த அல்பத்தாஹ், அதன் தலைமை பொறுப்பையும் ஏற்றது.
பாலஸ்தீன விடுதலை இயக்கம்(Palestine Liberation Organisation)
நேகேவ் பாலைவனத்தில் உருவாக்கப்பட்டு வந்த புதிய குடியிருப்புகளுக்கு தேவையான நீர் ஆதாரத்தை பெறுவதற்காக ஜோர்டான் நதியிலிருந்து தண்ணிரை திருப்பிவிட முயற்சித்தது. இது அரபு நாடுகளின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் நடவடிக்கை என்பதால் அரபுலகில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
1964ல் இப்பிரச்சனை குறித்தும் அகதிகள் பிரச்சனை குறித்தும் விவாதிக்க அரபு லீக் மாநாடு கெய்ரோவில் கூட்டப்பட்டது. இதில் இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகளிலும் போராடிக் கொண்டிருக்கும் குழுக்களை ஒன்றிணைத்து பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) உருவாக்கப்பட்டது. அப்போதிலிருந்து 1990கள் வரையிலும் இஸ்ரேலுக்கு பெரும் தலைவலியாக இவ்வியக்கம் இருந்தது.
PLO-வின் குறிப்பிடத்தக்க தாக்குதல்கள்:-
எகிப்தை ஒட்டியிருக்கும் காஸா, லெபனான், சிரியா ஆகிய நாடுகளில் PLO தமது முகாம்களை அமைத்தது. ஜோர்டானில் தலைமை முகாம் அமைக்கப்பட்டு இஸ்ரேலுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
இஸ்ரேலின் மிகப்பெரும் நீர் திட்டமான National Water Carrier-ஐ இலக்காக கொண்டு முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிரான தாக்குதல்கள் முடுக்கிவிடப்பட்டன.
1970 ல் நடைப்பெற்ற டாவ்ஸன் விமானதளக் கடத்தல் குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 6 ஆம் நாள் ஜெர்மனியிருந்தும் சுவிட்சர்லாந்திலும் முறையே அமெரிக்கா மற்றும் லண்டன் செல்லவிருந்த நான்கு விமானங்கள் கடத்தப்பட்டு அவை மத்திய கிழக்கு பிராந்தியங்களில் தரையிறக்கப்பட்டன. பாலஸ்தீன போராளிகள் பக்கம் உலக கவனத்தை ஈர்ப்பதற்காக நடத்தப்பட்ட இந்த விமானக் கடத்தல் நிகழ்வு, உலகில் நடைப்பெற்ற இரண்டாவது மிகப்பெரும் விமான கடத்தல் சம்பவமாக கருதப்படுகிறது.
1964 முதல் 1993 வரை பல தாக்குதல்களை இஸ்ரேலின் இராணுவத்திற்கு எதிராக PLO நடத்தியுள்ளது. இந்த போராட்டத்திற்காக அது பெரும் விலையையும் கொடுத்துள்ளது.
ஓஸ்லோ ஒப்பந்தம் – PLO செய்த வரலாற்றுப்பிழை:-
1993-ல் அமெரிக்கா மத்தியஸ்தத்தில் நடைப்பெற்ற ஓஸ்லா ஒப்பந்தத்தின் கையெழுத்திட்டதின் மூலம் PLO தமது ஆயூதம் தாங்கிய போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாகவும், தேர்தல் அரசியல் பாதையில் பயணிப்பதாகவும் முடிவெடுத்தது.
ஓஸ்லோ ஒப்பந்தப்படி ஆக்கிரமிப்புகளை நிறுத்தவும், பாலஸ்தீனை ‘தனி நாடாக’ அங்கீகரிக்கவும் கொஞ்சமும் அக்கறை காட்டாத இஸ்ரேல் அரசை நம்பி, தமது போராட்ட பாதையில் சமரசம் செய்து மிகப்பெரும் வரலாற்றுப் பிழை இழைத்தது PLO.
PLO 8-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் கூட்டமைப்பு என்னும் வகையில், ஒவ்வொரு அமைப்பிற்கும் இருக்கும் சித்தாந்த கோணங்கள் பல்வேறு தருணங்களில் போராட்ட பாதையை தேர்வு செய்வதில் துவங்கி எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது போன்ற போராட்ட வழிமுறையை தேர்வு செய்வதுவரை அவ்வப்போது உரசல்களை உருவாக்கியது. இது PLO-வின் பலவீனமாக பார்க்கப்பட வேண்டியது. மேலும் அது முன்னிருத்திய அரேபிய தேசியவாதமோ அல்லது பாலஸ்தீன தேசியவாதமோ PLO-வை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கவில்லை. ஏன் அவையே அதன் தோல்விக்கும் காரணமாக இருந்தன என்று கூட கருதலாம். சித்தாந்த பலம் இழந்திருந்த PLOவை 1990க்கு பிறகு மாற்றீடு செய்து பாலஸ்தீன போராட்டத்தை புதிய பாதையில் வழிநடத்தியது இஸ்லாமிய சித்தாந்தத்தில் வலிமையான நம்பிக்கையுடைய ஹமாஸ் என்னும் இஸ்லாமிய இயக்கம்.!
அஸ்லம் – எழுத்தாளர்