இந்திய அரசியல் அமைப்பிற்கு விரோதமான CAA சட்டத்திற்கு எதிராக அசாமில் தொடங்கிய போராட்டம் காட்டு தீயென நாடு முழுவதும் பரவியது. பொது மக்களால் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தினால் இந்தியவே ஸ்தம்பித்தது. முக்கியமாக, டெல்லி ஷாஹீன் பாக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சூழ நடத்தப்பட்ட போராட்டம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் ஷாஹீன் பாக் என்னும் பெயரில் போராட்டங்கள் வலுப்பெற்றன.
வடகிழக்கு மாகாணங்களில் தொடங்கிய இந்தப் போராட்டம் நிறைய இளம் தலைவர்களை உருவாக்கிய களமாக அமைந்தது. இப்போராட்டங்களில் மாணவர்கள், செயற்பாட்டாளர்களின் பங்களிப்பு மிகமுக்கியமானதாக இருந்தது. அதனை அரசாங்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்த்தது. அமைதியான முறையில் நடந்த CAA போராட்டத்தை வன்முறைக் களமாக மாற்ற இந்துத்துவவாதிகள் துடித்தனர். அதன் விளைவாக பிப்ரவரி 2020இல் வடகிழக்கு டெல்லியில் கலவரம் வெடித்தது. இதில் 53 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களாக இருந்தனர்.
கலவரத்தை தொடர்ந்து, கலவரத்தில் ஈடுபட்டதாகவும் அதற்குக் காரணமாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு ஷர்ஜீல் இமாம், உமர் காலித், காலித் சைஃபி, குல்பிஷா பாத்திமா, சஃபூரா சர்கார், ஆசிப் இக்பால் தன்ஹா, ஷதாப் அஹமது என CAA எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற மாணவத் தலைவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டனர்.
கொரோனா பெருந்தொற்றால் போராட்டங்கள் நிறுத்தப்பட்டன. நாடே ஊரடங்கில் முடங்கியது. ஊரடங்கை தொடர்ந்து அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கின. நாமும் நம் அன்றாட வாழ்க்கையை நோக்கி நகர்ந்தோம். ஆனால், CAA போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவத் தலைவர்கள் ஏறத்தாழ நான்காண்டுகள் கடந்தும் விடுவிக்கப்படாமல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் 12 பேர் இன்றும் விசாரணையின்றி சிறையில் உள்ளனர். அப்படி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சில மாணவத் தலைவர்களைப் பற்றிச் சுருக்கமாகக் காணலாம்.
உமர் காலித்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவரும் சமூக ஆர்வலருமான உமர் காலித் மீது பிப்ரவரி 2020இல் வடகிழக்கு டெல்லியில் வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு இரண்டு FIR பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முதல் வழக்கு, FIR (எண் 101/2020) 24 பிப்ரவரி 2020 அன்று வடகிழக்கு டெல்லியில் பதிவு செய்யப்பட்டது. கலவரம், கல் வீச்சு, வெடிகுண்டு வீச்சு, இரு சமூகத்தினரிடையே வெறுப்புணர்வை பரப்புதல், போலீசாரை தாக்குதல், அரசு சொத்துகளைச் சேதப்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் உமர் காலித் மீது பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உமருக்கு ஏப்ரல் 2021 அன்று ஜாமீன் கிடைத்தது. அதில் வன்முறையின்போது உமர் காலித் அங்கு இல்லை, வன்முறையில் அவர் ஈடுபட்டதை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் அவருக்கு எதிராக இல்லை, “இந்த வழக்கில், முழுமையடையாத விஷயங்களின் அடிப்படையில், உமர் காலித்தை சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை அனுமதிக்க முடியாது” என்றும் நீதிமன்றம் கூறியது.
இரண்டாவது வழக்கில், சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்கில் அவரது ஜாமீன் மனுவானது இதுவரை இரண்டு முறை டெல்லி உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2023 முதல் உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருந்து வருகிறது. இந்த வழக்கில், உமர் காலித் போராட்டத்தின்போது மற்றவர்களுடன் இணைந்து சதி செய்து வன்முறையை ஏற்படுத்தியதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை உமர் காலித் செய்திருப்பாரா என்பதை தெரிந்து கொள்ள, ஜார்கண்டில் உள்ள பழங்குடியினர் நலன்குறித்து உமர் காலித் எழுதியுள்ள Ph.D ஆய்வறிக்கையிலிருந்து அவரது எண்ணங்களை மதிப்பிட முடியும் என்றும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். செப்டம்பர் 14, 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட உமர் காலித்தின் ஜாமீன் மனு இன்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஷர்ஜீல் இமாம்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவரும், முஸ்லிம் ஆர்வலரும், மாணவத் தலைவருமான ஷர்ஜீல் இமாம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்துகளை முன்வைத்ததற்காக இந்து தேசியவாத பிஜேபி அரசாங்கத்தால் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
பாட்னாவில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் தன் பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு, மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) B.Tech மற்றும் M.Tech பட்டங்களை பெற்ற இமாம், ஆண்டுக்கு 37 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளத்துடன் தான் பணிபுரிந்து வந்த டேனிஷ் வங்கி பணியைத் துறந்து வரலாற்றுத் துறையின் பக்கம் தனது கவனத்தை செலுத்தினார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் மாணவராக இணைந்தார்.
பெரும்பாலும் இடது சாரி, தாராளவாத மற்றும் தேசியவாதிகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்த இந்திய வரலாறு குறித்த கருத்துகளுக்கு சவால் விடுபவராக இமாம் இருந்தார். TRT, The Wire, Firstpost மற்றும் The Quint போன்ற புகழ்பெற்ற தளங்களில் அவரின் கட்டுரைகள் வெளிவந்தன.
முஸ்லிம்கள் தங்களது கடந்த காலத்தை அறிந்து கொள்ளுதல், அவர்களின் சுய பார்வையில் சிந்தித்தல், அவர்களின் உண்மையான வரலாற்றை எழுதுதல் போன்ற கருத்துக்கள் அவரது M.Phil ஆய்வறிக்கையில் இடம்பெற்று இருந்தன. இமாம், பாசிச பாஜக அரசை மட்டுமின்றி, இந்திய தேசிய காங்கிரஸ், இடது மற்றும் வலது சாரிகளையும் விமர்சித்தார். இது அவரை கல்வித்துறையில் மட்டுமின்றி அரசியலிலும் சர்ச்சைக்குரிய நபராக ஆக்கியது. தேர்தல் அரசியலைச் சுற்றியுள்ள விவாதங்களில் சமூகம், பொருளாதாரம் சார்ந்து முஸ்லிம்களை வலுப்படுத்த வேண்டும் என்றார். இது இந்திய அரசியலில் புதுமையான ஒன்றாகவும், நிறைய நபர்களுக்கு ஆச்சரியத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது.
ஷாஹீன் பாக் போராட்டத்தின் போது ஒரு மெலிந்த மனிதர் கூட்டத்தின் நடுவில் நின்று கொண்டு மக்களை அங்கேயே அமர்ந்து மதியத் தொழுகையை நிறைவேற்றச் சொன்னார். அவரது இடது புறத்தில் இருந்த அமனத்துல்லா கான் MLA, உள்துறை அமைச்சரின் அலுவலகத்தை நோக்கிக் கூட்டத்தைப் பேரணியாகச் செல்லும்படி வலியுறுத்தினார். இமாம், அனைவரையும் அங்கேயே அமர்ந்து சாலையை மறிக்குமாறு வலியுறுத்தினார். இமாமைத் தேர்ந்தெடுத்த மக்கள் சாலையில் அமர்ந்தனர். இந்த நிகழ்வின் மூலம் ஷாஹீன் பாக் போராட்டத்தில் ஷர்ஜீல் இமாமின் முக்கியத்துவத்தை அறிய முடிகிறது. “Chakka Jam” என்னும் சாலை மறியலை குறிக்கும் இந்த வார்த்தை ஷர்ஜீல் இமாமால் உச்சரிக்கப்பட்டு மிகப்பிரபலமானது.
இமாம் தனது அலிகர் உரையில் கல்வி மற்றும் அறிஞர்களின் பங்களிப்பு பற்றிய தனது கருத்தை வெளிப்படுத்தினார். அதில் “நீங்கள் ஒரு அறிஞராக இருந்தால், உங்கள் பொறுப்பு தெருக்களில் இருக்க வேண்டுமே தவிர வளாகத்திற்குள் மட்டும் அல்ல. நீங்கள் படித்தவராக இருந்தால் மக்களுக்குக் கல்வி கற்பிப்பது உங்கள் பொறுப்பு” என்று கூறினார்.
டெல்லி கலவரத்தின்போது டெல்லி ஜாமியா பகுதியிலும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும் ஆவேச பேச்சுக்களை பேசியதாக ஷர்ஜீல் இமாம் தேசத்துரோக மற்றும் UAPA வழக்கில் கைது செய்யப்பட்டார். 29 மே 2024 அன்று ஷர்ஜீல் இமாம் மீதான 2020 வகுப்புவாத கலவர வழக்கில் தேசத்துரோகம் மற்றும் UAPA தொடர்பான குற்றச்சாட்டுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இன்னும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இமாம் இன்றும் சிறையில்தான் இருக்கிறார்.
ஷதாப் அகமது
“எனது மகன் எந்தத் தவறும் செய்யவில்லை, அவர் போராட்டத்தில் தான் பங்கேற்றார். போராட்டத்தில் பங்கேற்பது குற்றமல்ல. அவர் எந்த மதத்திற்கோ, அரசாங்கத்திற்கோ, தேசத்திற்கோ எதிராக எதையும் சொல்லவும் இல்லை செய்யவும் இல்லை. அதற்கான ஆதாரங்களும் எதுவும் இல்லை. போராட்டங்களில் ஈடுபடுவது எங்கள் உரிமை. நான் என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள். 3 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது” என்று ஷதாபின் தந்தை ஒரு முறை கூறியிருந்தார்.
27 வயதான ஷதாப் அகமது டெல்லியின் ஜகத்பூர் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். காலையில் வேலைக்கு சென்ற ஷதாப் இரவில் CAA எதிர்ப்பு போராட்ட இடங்களுக்குச் சென்றுவருவார். “அவர் எல்லா இடங்களுக்கும் செல்வார். ஜமா மஸ்ஜித், ஷாஹின் பாக் இன்னும் பிற இடங்கள்” என்று அவரது சக ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.
CAA எதிர்ப்புப் போராட்டத்தின்போது புல்லட் காயத்தால் உயிரிழந்த ஹெட் கான்ஸ்டபிள் ரத்தன் லால் கொல்லப்பட்டது தொடர்பாக FIR 60/20இன் கீழ் ஷதாப் அகமது 2020 ஏப்ரல் 6 அன்று கைது செய்யப்பட்டார். 2020ல் குறைந்தது 53 பேரின் உயிரை எடுத்த டெல்லி கலவர வழக்கில் அவர் ஒரு ‘சதிகாரர்’ என்று குற்றம் சாட்டப்பட்டார். அவர்மீது கடுமையான UAPA வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 25,2020அன்று கார்களையும் ஷோரூமையும் எரித்தது தொடர்பாக ஷதாப் மீது 7 நவம்பர் 2020 அன்று ‘கலவரம்’ செய்ததாகா வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. இதுவரை ஷதாப் இரண்டு வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ளார். ஆனால் UAPA வழக்கினால் அவர் இன்னும் சிறையிலிருக்கிறார்.
குல்ஃபிஷா பாத்திமா
2020இல் குல்ஃபிஷா பாத்திமா மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் ஒரு வழக்கிற்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. UAPA வழக்கு உட்பட மற்ற வழக்குகள் மீதான அவரது ஜாமீன் மனு தடர்ச்சியாக தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அவர் இன்றும் சிறையில் இருக்கிறார்.
ஸஃபூரா ஸர்கர், இஷ்ரத் ஜஹான் என இன்னும் சிலபோராட்டக்காரர்கள் UAPAவின் கீழ் கைது செய்யப்பட்டு சில ஆண்டுகள் தங்களது வாழ்க்கையை சிறையில் கழித்தனர்.
UAPA எனும் இந்த வழக்கானது குறிப்பாக அரசு எதிராக நியாயமான கோரிக்கைகள் வைப்பவர்களையும், விமர்சனம் செய்பவர்களையும் குறிவைத்து ஒரு ஆயுதமாக அரசால் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கடுமையான ஜாமீன் விதிகளின் காரணமாக குற்றம் சாட்டப்பட்ட பலர் மேலே பார்த்தது போன்று பல வருடங்களை சிறையில் கழிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் இந்த வழக்கின் விதிகளை தளர்த்த வேண்டும் என்றும் வழக்கை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும் பலராலும் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.