தேசபக்தி என்று தூக்கத்தில் கூட உளறும், சுதந்திரப் போராட்ட வீரர் என்று படேலுக்கு மிகப்பெரிய சிலை வைக்கும் பாஜகவிற்கு
பிரிட்டிஷாரை எதிர்த்து தீரத்துடன் போரிடுவதிலேயே தனது வாழ்நாள் முழுவதையும் கழித்த திப்பு சுல்தான் மீது ஏன் தீரா வெறுப்பு?
வரலாற்றில் பின்னோக்கி சென்றால் திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டார் என்பதும், ஆங்கிலேயர்கள் திப்பு என்ற பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்கினார்கள் என்பதும் அழிக்க முடியாத வரலாறாக இடம்பெற்றுவிட்டவை. திப்பு சுல்தான் மட்டுமல்ல, அவரது தந்தை ஹைதர் அலியும் கூட ஆங்கிலேயர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்தவர். அவரையும் இவர்களுக்கு பிடிப்பதில்லை.
அன்றைய காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து அத்தனை தீரத்துடன் போரிட யாரும் இருந்திருக்கவில்லை. திப்பு ஆங்கிலேயர்களை போரில் வெற்றி பெற்றிருந்தார். கடைசி ஆங்கிலோ-மைசூர் போரில் வீரமரணம் அடைந்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக மராத்தியர்களையும், நிஜாம்களையும் ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் மராத்தியர்களும், நிஜாம்களும் திப்புவை கைவிட்டனர். ஆங்கிலேயரை எதிர்த்து போரிட நெப்போலியனின் உதவியையும் திப்பு கேட்டிருந்தார். ஆனால் அவரது இந்த முயற்சிகளைப் பற்றி அவரை வெறுப்பவர்கள் மறந்தும் கூட பேசுவதில்லை.
இந்துத்துவ சக்திகள் வரலாற்றைக் குடைந்து திப்புவிற்கு எதிராக ஏதாவது கிடைக்குமா என்று தோண்டித் துருவியும், பொய்யான பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டும் அவரை இந்துக்களுக்கு எதிரானவராக சித்தரிக்க முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.
சிவாஜி உள்நாட்டிலேயே மேற்கொண்ட போர்கள், சூரத் போர், ஆங்கிலேயர்களுடன் கூட்டணி வைக்க நாடியது இவற்றைப் பற்றியும் வரலாற்றில் இருந்து அவர்கள் தோண்டித் துருவ வேண்டும். ஆனால் அவர்களுக்கு பிடிக்காத ஒருவரைப் பற்றிய வரலாற்றை ஆய்வதோடு அவர்களது வரலாற்றுத் தேடல் முற்றுப் பெற்றுவிடுகிறது.
நவீன உலகில் ஜனநாயகத்தில் தலைவர்கள் இனப்படுகொலைகள் நிகழ்த்துபவர்களாக இருந்தாலும் தேசியவாதி என்றும், சுதந்திர உணர்வாளர் என்றும் போற்றப்படுவார்கள். அத்தகைய தலைவர்களின் சீடர்கள் திப்புவை வெறுப்பாளராகவும், அக்கிரமம் செய்தவராகவும் சித்தரிக்கின்றனர் என்பது நகைமுரண்.
பிரதான காரணம் திப்பு சுல்தான், ஒரு முஸ்லிம், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து கிளம்பிய முதல் ஆட்சியாளராக இருப்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முஸ்லிமாக இருந்த போதும் ராமா என்ற அடையாளமிட்ட மோதிரத்தை அவர் பயன்படுத்தியிருந்தாலும், சிருங்கேரி மடத்துடன் மிகச் சிறந்த உறவினை பேணுபவராக இருந்தாலும் தனது வாழ்க்கையை ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரிலேயே கழித்து அதிலேயே இறந்தும் போன திப்பு பாஜக, சங் பரிவாரங்களின் கண்களுக்கு நாயகனாக தெரிவதில்லை.
நவீன ஜனநாயகத்தில் அரசியல் தலைவர்களுக்காக கலவரங்களையும், படுகொலைகளையும் நிகழ்த்தும் சியர் லீடர்ஸ் தான் மற்றவர்களுக்கு தேசியவாதி என்றும், தேச விரோதி என்றும் பட்டம் வழங்கும் ஏகபோக உரிமைகளை பெற்றுளளனர். பொய்யான பிரச்சார இயக்கங்களைக் கூட அவர்கள் நடத்துகிறார்கள். ஆனால் அவர்களால் வரலாற்றை மாற்றி எழுதிவிட முடியாது. 18ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்து எழுந்து நின்ற ஒரு ஆட்சியாளரைக் கூட பாஜகவால் சுட்டிக்காட்ட முடியாது. திப்பு, திப்பு மட்டுமே. அதைத்தான் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.
சந்தேகத்திற்கிடமின்றி இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முதன்மை இடத்தை திப்பு சுல்தான் பெறுவார். ஆங்கிலேய அரசின் சார்பாக தவிர்க்கமுடியாத, அச்சத்தை விளைவிக்கக் கூடிய எதிரி தளபதிகளாக வரிசைப்படுத்தப்பட்டவர்களில் நெப்போலியனும், திப்பு சுல்தானும் இடம்பெற்றிருந்ததாக மூத்த பத்திரிகையாளர் திலிப்.C.மன்டல் எழுதியுள்ளார்.
திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கொண்டிருந்தபோது தஞ்சை, திருவிதாங்கூர், பேஷ்வா என்று பல மாகாண அரசர்கள் அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தனர். மூன்றாம் வேற்றுமை ஆங்கிலோ-மைசூர் போரில் மராத்தியர்களும், நிஜாம்களும் ஆங்கிலேயரின் படையுடன் சேர்ந்து திப்புவிற்கு எதிராக போரிட்டனர்.
சுதந்திரப் போரில் ஒரு மாவீரனின் பங்களிப்பை போற்றிப் புகழாமல், சிறிய குழுக்களின் முட்டாள்தனத்தால் இந்து-முஸ்லிம் ப்ரச்னையாக சித்தரிக்கப்பட்டு வருவதாக மண்டல் எழுதியுள்ளார்.
தமிழில்: அபுல் ஹசன்