எல்லா வகையான கல்வி முறைக்கும் ஒரு கருத்தியல் சார்பு உண்டு. அது மாணவர்களின் ஆளுமை உருவாக்கத்தில் பெரிதும் செல்வாக்கு செலுத்தும். வாழ்க்கைக்கான அர்த்தம் என்னவென அதுவே உணர்த்தும். மாணவன் சமூகத்தை எந்தக் கண்ணோட்டத்தில் அணுகவேண்டும் என்பதையும் அது தீர்மானிக்கும். சொல்லப்போனால், அவனின் ஒட்டுமொத்த சிந்தனை மற்றும் வாழ்க்கை முறையையும் அதுதான் வடிவமைக்கிறது. ஆகவே, கல்வி முறை குறித்த கரிசனம் நமக்கு அதிகமதிகம் தேவைப்படுகிறது.
சமீபத்தில் படித்துக்கொண்டிருந்த “கருத்தாயுதம்” எனும் கட்டுரை தொகுப்பில், அதன் ஆசிரியர் கே. பாலகோபால் (1952-2009) அவர்கள் கல்வி தொடர்பாக இந்துத்துவவாதிகளின் செயல்திட்டம் பற்றி விரிவாக விளக்கியிருந்தார். அவர் ஒரு கணிதவியல் அறிஞராகவும், மனித உரிமை போராளியாகவும் இருந்தவர். இந்துத்துவத்திற்கு எதிரான ஆழமான விமர்சனங்களை முன்வைத்தவர். மேற்சொன்ன அவரது நூலில், கல்வி திட்டத்தை இந்துத்துவவாதிகள் தன்வயப்படுத்துவது பற்றிய பல கூர்மையான அவதானங்களை முன்வைக்கிறார். அவற்றைத் தழுவி சில விஷங்களை இங்கே தருகிறேன்.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் ஏதாவது ஒரு சில நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கும். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் நில சீர்திருத்தங்கள் போன்ற செயல்திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அதுவே தலித் கட்சிகள் என்றால், இடஒதுக்கீடு அமலாக்கம், சமூக அரசியல் மட்டங்களில் தலித்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆனால், இந்துத்துவவாதிகள் மட்டும் கல்வி திட்டத்தை (குறிப்பாக வரலாற்று நூல்களை) மாற்றியமைப்பதிலேயே முனைப்பாக இருப்பார்கள். BJP மத்தியில் ஆட்சியைப் பிடித்ததில் இருந்து இதற்கான வேலைகளில் அவர்கள் கவனமாக ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த காலங்களில் BJP ஆட்சியிலிருந்த வட மாநிலங்களில் இதற்கான முன்னோட்டங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
ஏன் கல்வி அமைப்பில் அவர்கள் குறிவைக்கிறார்கள் எனும் கேள்வி இங்கு எழலாம். கல்வி அமைப்பை தங்களின் கருத்தியலுக்குத் தக்க வடிவமைப்பதன் வழியாகத்தான் மாணவர்கள் மத்தியில் இந்துத்துவ சமூக பண்பாட்டை திணிக்க முடியும் என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள். இது குறித்த விரிவான பார்வையை ஒரே பத்தியில் சுருக்கமாக பாலகோபால் இப்படிச் சொல்கிறார் :
“பாஜக வெறும் அரசியல் லட்சியங்களைக் கொண்ட கட்சியல்ல. அது இந்து சங் பரிவாரத்தின் பகுதி. சங் பரிவாரம் இந்த தேசத்தை தாம் நம்பும் இந்து தர்மம், சித்தாந்தம் அடிப்படையில் கட்டியமைக்க எண்ணுகிறது. இந்த நாட்டில் ஒவ்வொரு நபரும் ‘நான்’ என்பதை இந்து அடுக்கின் பகுதியாக வரையறுத்துக் கொள்ளவேண்டும். இந்துத்துவம் எனப்படும் சமூக பண்பாடு அனைவரின் சிந்தனைகளையும் ஆளுமைகளையும் திருத்தி அமைக்கவேண்டும். இது எதற்கோ சாதனம் அல்ல. இதுவே அவர்களின் லட்சியம். இதற்கு அவர்கள் கல்வித் துறையை, பண்பாட்டு மற்றும் தகவல் தொடர்பு துறைகளை முக்கிய சாதனங்களாக தேர்வு செய்கின்றனர்.”
இப்படியான சூழ்ச்சிகள் வழியாக, இந்தியாவில் தொன்றுதொட்டு நிலவிவரும் பன்மைத் தன்மையை ஒழித்து, பிராமணிய பண்பாட்டு மதிப்பீட்டில் ஒற்றைக் கலாச்சாரத்தை கட்டியமைக்க முனைகிறார்கள். இந்த ஆபத்தான இலக்கு சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாமல் நாட்டின் பெரும்பான்மையான மக்களின் பண்பாடுகளுக்கும் உலை வைக்கும் என்பது கவனம் கொள்ளத்தக்கது.
இந்துத்துவவாதிகள் வரலாற்றை மாற்றி எழுதுவதில் அக்கறை கொள்வதை இந்தப் பின்னணியிலிருந்து நம்மால் புரிந்துகொள்ள முடியும். வகுப்புவாதிகள் தங்களின் நிகழ்கால அரசியல் செயல்திட்டங்களுக்கு ஏற்றாற்போல் பழங்காலத்தைக் கட்டமைக்கிறார்கள். சிறுபான்மையினர் எதிரியாக அடையாளப்படுத்தப் படுவதும் இந்த வழிமுறையில்தான். அவர்கள் வாதங்களுக்கு வரலாற்றுச் சான்று என்றெல்லாம் நாம் கேட்டுவிடக் கூடாது. அது அவர்களின் அரசியலுக்காக உருவாக்கப்பட்ட வரலாறு. “நமக்கான வரலாற்றை நாமே உருவாக்கிக் கொள்ளவேண்டும்” என வெளிப்படையாக சொல்கிறார் ஆர்.எஸ்.எஸ்.-இன் குருஜி கோல்வாக்கர்.
அவர்களைப் பொறுத்தவரை, இந்த தேச வரலாறு ஆரியர்களுடன் தொடங்குகிறது (உண்மையில், ஆரியர்களும் அவர்களின் ரிக் வேதமும் வெளியிலிருந்து வந்தது நிரூபிக்கப்பட்ட வரலாறு). இந்து தேசம் என ஒன்று இருந்தது. பின்னாளில் அந்நியர்களின் ஆக்கிரமிப்பால் அது அழிக்கப்பட்டது என்கிறார்கள். அவர்கள் அந்நியர்கள் எனச் சொல்வது முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ ஆட்சியாளர்களைத்தான் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. மேலும், அஹிம்சையைப் பரப்பியதால் அசோகர் போன்ற மன்னர்களையும் அவர்கள் தவறாக சித்தரிப்பார்கள். ஏனெனில், நாட்டு மக்கள் இந்த அந்நியர்களாலும் சில உள்நாட்டு ஆட்சியாளர்களாலும்தான் வலு இழந்தனர் என்பது இந்துத்துவவாதிகளின் வாதம். இவை மட்டுமல்ல, வர்ண அமைப்பு இறுகிப் போனதற்கும், பெண் அடிமைத்தனம் வேரூன்றியதற்கும் முஸ்லிம் ஆட்சியாளர்களையே இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் உண்மை இதற்கு முற்றிலும் புறம்பானது. வழக்கமாக எல்லா அரசர்களையும் போலத்தான் அவர்களும் ஆட்சி புரிந்துள்ளனர். இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் உள்ளது. இந்திய பண்பாட்டின் மீது அக்கால கட்டத்தில் இஸ்லாத்தின் செல்வாக்கும் தாக்கம் செலுத்தியிருக்கிறது. அறிஞர் பாலகோபால் “கருத்தாயுதம்” நூலில் குறிப்பிடுகிறார்,
“இந்துத்துவ வரலாற்றாளர்கள் இஸ்லாம் வருகைக்குப் பிற்காலத்தை ‘இருண்டயுகம்’ எனக் கூறலாம். ஆனால் இந்த மக்கள் வாழ்வில் மட்டும் அது வந்த பிறகே சற்று வெளிச்சம் வந்தது. முதலில், இஸ்லாம், பிறகு கிறிஸ்தவம் சாதியின் காரணமாக இறுகிய இந்து சமூக அமைப்பை சிறிதளவேனும் ஜனநாயகப்படுத்தப் பயன்பட்டன. அது எவ்வாறு இருண்டயுகம் என்பதை அந்த வார்தையைப் பயன்படுத்துபவர்கள் விளக்கவேண்டும்.”
மேலும் சொல்கிறார், “12ஆம் நூற்றாண்டிற்குப் பின் வந்த பக்தி இயக்கங்களில் பிராமணிய சிந்தனை வகைகளின்பால் வெளிப்பட்ட கண்டனத்தின்மீது இஸ்லாமின் செல்வாக்கு இருக்கிறது.”
புதிய கட்டிடக்கலை, நிர்வாக முறை என பல்வேறு துறைகளிலும் முஸ்லிம் ஆட்சியாளர்களின் பங்களிப்பு இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்துத்துவவாதிகள் உருவாக்கும் வரலாறு வகுப்புவாத தன்மை கொண்டது என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.
இவர்களின் கல்விக் கொள்கையின் மூலம் என்ன மாதிரியான மனிதர்களை உருவாக்க நினைக்கின்றனர்? வெறுப்பு, துவேஷம், உள்நாட்டு மக்களையே எதிரியாக கருதும் மனோநிலை உள்ளிட்ட குணங்களைத் தருவதுதான் கல்வியின் நோக்கமா? அல்லது மனித தன்மையும் ஜனநாயக விழுமியங்களும் கொண்ட ஆளுமையை உருவாக்குவது அதன் நோக்கமா?
நவீனத்துவவாதிகள் உருவாக்கிய இன்றைய கல்வி திட்டத்தில் எவ்வளவு குறைகள் இருந்தாலும், அதையும் வகுப்புவாதிகள் உருவாக்க முனையும் கல்விமுறையையும் நாம் சமப்படுத்த முடியாது. இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும். இன்றைய கல்விமுறையிலும் வகுப்புவாதிகளின் கையாடல் இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், அவர்கள் ஒட்டுமொத்தமாக தங்களின் செயல்திட்டங்களுக்குத் தகுந்தாற்போல் அதை மாற்ற வேலை செய்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது. அவர்களை எதிர்த்து நாட்டு நலனில் அக்கறையுள்ள ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து அரசியல் தளத்தில் மட்டுமின்றி, கருத்துத் தளத்தலும் அவர்களை வீழ்த்த வேண்டியிருக்கிறது