ஃபலஸ்தீனர்கள் சியொனிச இஸ்ரேல் அரசின் ஆக்கிரமிப்பிற்கும் இனப்படுகொலைகளுக்கும் எதிராக நடத்திவரும் அறப்போராட்டம் நம்மை என்றுமே வியக்கவைத்துள்ளது. இத்தனை நாள் நாம் பார்த்த இஸ்ரேல் – ஃபலஸ்தீன் யுத்த வரலாறு என்பது இஸ்ரேலின் அத்துமீறல், தொடர்ந்து வரும் விமானப்படை தாக்குதல், ஃபலஸ்தீனர்களின் இருப்பிடங்கள் தரைமட்டமாக்கப்படுதல், பின் ஹமாஸ் இயக்கத்தின் ராக்கெட் பதிலடிகள், ஒரு சார்பாக ஏற்படும் உயிர் இழப்புகள், தொடர்ந்து சண்டை நிறுத்த உடன்படிக்கை என்ற தொடர்படியாக நடந்த வந்தது.
ஆனால் கடந்த அக்டோபர் 7 அன்று நடந்த ஹமாஸுடைய தாக்குதல் முன்னெப்போதையும் விட அதனுடைய வீச்சிலும், அது ஏற்படுத்திய தாக்கத்திலும் முற்றிலும் வேறுபட்டது. இப்போது நடந்துவரும் இந்த காஸா யுத்தத்தில் முதல் தாக்குதல் ஹமாசிடமிருந்து வந்தது. தூஃபான் அல் அக்ஸா (அல் அக்ஸா பெரு வெள்ளம்) என்று பெயரிடப்பட்ட ஹமாஸின் இந்த ஆபரேஷன் சியோனிச ஆக்கிரமிப்பு அரசையும் அதன் மேற்குலக ஆதரவாளர்களையும் வலுவாக உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இது சரியான தருணமா? இது சரியாகத் திட்டமிடப்பட்டதா? இப்போது ஃபலஸ்தீன மக்களுக்கு இது தேவையானதா? இவற்றை ஆராயும் முன், ஹமாஸின் இந்த நடவடிக்கை எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைப் பார்ப்போம்.
1974ஆம் ஆண்டு நடந்த நான்காம் அரபு-இஸ்ரேல் போர் அல்லது அக்டோபர் யுத்தம் என்று அழைக்கப்பட்ட போர் நடந்து சரியாக ஐம்பதாவது ஆண்டில் ஹமாஸின் இந்த அக்டோபர் 7 தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது உலகளவில் கிழக்கிலிருந்து மேற்கு வரை, அனைத்து மக்களையும், அனைத்து அரசு பீடங்களையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.
ஒரு கடுமையான முற்றுகைக்குள் சிக்கி இருக்கும் காஸா பிராந்தியத்திலிருந்து சிறு சிறு குழுக்களாக பிரிந்துச் சென்று தொடங்கப்பட்ட ஹமாஸுடைய இந்த ஆபரேஷன் துவங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தென் இஸ்ரேலில் உள்ள பல நகரங்களில் அது ஊடுருவியது. அங்குள்ள முக்கியமான இஸ்ரேலிய தளங்களை எல்லாம் கைப்பற்றி அங்குள்ள ராணுவத் தளவாடங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. தங்களைச் சுற்றி என்னதான் நடக்கிறது என்பதை இஸ்ரேலின் ராணுவம் சுதாரிப்பதற்கு முன்பாகவே ஒட்டுமொத்த இஸ்ரேலிய சதன் கமேண்டும் (Southern Command) ஹமாஸின் தாக்குதலால் செயலிழந்து நிர்மூலமாகிப் போனது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேற்றங்களுக்குள் ஊடுருவிய ஹமாஸ் வீரர்கள் அங்கிருந்த 240 பேரை பிணைக்கைதிகளாக காஸா கொண்டு வந்தனர். இதில் ராணுவ தளங்களிலிருந்து பிடிபட்ட இஸ்ரேலிய வீரர்களும் அதிகாரிகளும் உள்ளடக்கம்.
எல்லா நிலப்பரப்பையும் போன்ற சாதாரண நிலப்பரப்பு அல்ல ஃபலஸ்தீனில் உள்ள காஸா. இஸ்ரேலின் முழு முற்றுகைக்கும், கடுமையான கண்காணிப்புக்கும் அது உள்ளாகியிருக்கிறது. அம்மக்களுடைய வாழ்வின் அனைத்து சாராம்சங்களையும் கட்டுப்படுத்த அல்லது ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு சக்தியாகவே இஸ்ரேல் இருந்துவந்துள்ளது. அம்மக்களின் உணவு, குடிநீர், எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள், அடிப்படை உரிமைகள், கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கான மீன்பிடி உரிமைகள் என எல்லாவற்றையுமே கட்டுப்படுத்தக் கூடிய இடத்தில் இஸ்ரேல் உள்ளது.
தங்களைப் போன்ற ஒரு உளவு அமைப்பு உலகத்தில் எங்குமே இல்லை என்று மொசாத்தை வைத்து பெருமை கொள்ளும் இஸ்ரேல், ஹமாஸால் தங்களை மீறி தங்களுக்கு எதிராக ஒன்றும் செய்துவிட முடியாது என்ற கற்பனைக்கோட்டையில் வாழ்ந்து கொண்டிருந்த தருணத்தில் தான் இஸ்ரேலின் கனவுக் கோட்டையில் விழுந்த பெரும் இடியாக இந்தத் தாக்குதல் அமைந்தது. இஸ்ரேல் தனக்கு ஏற்பட்ட இழப்புகளின் அளவை கணக்கிடும் முன்பே அவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி ஹமாஸின் அறிவிப்பின் வாயிலாக வந்தது. தங்களது அனைத்து போராட்ட முன்னெடுப்புகளுமே ஆக்ஸிஸ் ஆப் ரெசிஸ்டன்ஸ் (Axis of Resistance) போராளிகளின் முழு ஒத்துழைப்புடன் நடப்பதாக அறிவித்தார்கள்.
ஆக்சிஸ் ஆப் ரெசிஸ்டன்ஸ் (அரபியில்: மிஹ்வார் அல் முக்கவுமா) என்பது மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளில் உள்ள ஆயுதக் குழுக்களுக்கு மத்தியிலான இராணுவக் கூட்டமைப்பாகும். இது அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு மத்திய கிழக்கில் உள்ள செல்வாக்கு, ஆதிக்கத்தை எதிர்க்கும் நோக்கில் ஒருங்கமைக்கப்பட்ட இராணுவக் கூட்டணியாகும். சரி ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்டத்திற்கும் இந்த கூட்டமைப்பிற்குமானத் தொடர்பு என்ன என்று நாம் வியக்கலாம் அதைப்பற்றி கொஞ்சம் விரிவாகக் காண்போம்.
இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாகத்தில் ஃபலஸ்தீனை மையமாக வைத்து அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் மத்தியில் நான்கு போர்களுக்கும் மேல் நடந்துள்ளன. இந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் உதவியோடு இஸ்ரேலின் கையே பெரும்பாலும் ஓங்கி இருந்தது.
21ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலகட்டத்தில் அமெரிக்கா மேற்கொண்ட பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரின் (Global war on terror) உள்ளடக்கமாக மத்திய கிழக்கில் மேற்கொண்ட பல்வேறு படையெடுப்புகளின் மூலம் அந்த பிராந்தியத்தில் அமெரிக்கா நிரந்தரமாகக் காலூன்றியது. குறிப்பாக மத்தியக் கிழக்கில் தன் ஆதிக்கத்தை நிறுவுவதற்கான கருவியாக இஸ்ரேலை வலுப்படுத்தியது. ஃபலஸ்தீன விடுதலைக்கான ஆதரவும் அரபு நாடுகளுக்கு மத்தியில் நீர்த்துப்போகத் துவங்கிய காலமும் இதுதான்.
ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு அரபுலகத்தில் ஆதரவு தொடர்ந்து குறைந்த போதிலும் அதற்கு இறுதி ஆணி அறையப்பட்டது அரபு இஸ்ரேலியக் கூட்டணியால்தான் (Arab Israel Alliance). இது மத்தியக் கிழக்கில் ஈரானிய ஆதிக்கத்தை மட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற கூட்டமைப்பு.
பல்வேறு காலகட்டங்களில் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் மத்தியில் அமைதி ஒப்பந்தங்கள் ஏற்பட்டிருந்தாலும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் கையெழுத்தான ஆபிரகாம் உடன்படிக்கை (Abraham Accords) இதன் போக்கை முற்றிலுமாக மாற்றியது. அமைதி உடன்படிக்கைகளையும் தாண்டி இது அரபு-இஸ்ரேல் கூட்டணியாக பரிணாமிக்க உதவியது. இதன் உச்சக்கட்ட விளைவு 2020ஆம் ஆண்டு UAE, பஹ்ரைன், மொரக்கோ ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேலுடனான உறவைச் சீரமைத்துக் கொண்டதாகும். சவூதி அரசோ சீரமைப்பை நோக்கிய பேச்சுவார்த்தையில் இருந்தது.
ஒரு சராசரி ஃபலஸ்தீனரின் இடத்தில் உங்களைக் கொஞ்சம் நிறுத்தி கொண்டு இதைப் பாருங்கள். உங்களுடைய போராட்டத்திற்குத் தேவையான நிதி உதவி, ஆயுதங்கள், தார்மீக ஒத்துழைப்பு போன்ற எல்லாவற்றிற்கும் அரபுகளை, குறிப்பாகச் சுன்னி அரபு சக்திகளை நம்பி இருக்கையில், அவர்கள் ஃபலஸ்தீனை ஆக்கிரமித்து தன் மக்களை இனப்படுகொலை செய்யும் எதிரியோடு உறவைச் சீரமைப்பதென்பது (Normalisation of relations) அவர்களை எப்பேர்ப்பட்ட கையறு நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கும். இந்தப் பின்னணியின் காரணமாகத் தான் ஃபலஸ்தீன் விடுதலை போராட்டத்தில் முன்னிலையில் இருக்கும் ஹமாஸ் ஈரானின் உதவியை நாடுகிறது.
ஈரான், ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் உள்ள ஹமாஸிற்கு பொருளாதார, ஆயுத உதவிகளைச் செய்தது. முழு முற்றுகையில் இருந்த காஸாவிற்கு ஆயுதங்கள் அனுப்பமுடியாத சூழல் இருந்த போது, அதை காஸாவிலேயே உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை ஈரான் வழங்கி பயிற்சியும் அளித்தது.
ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்டத்தில் ஈரானுடைய உதவி எவ்வளவு இன்றியமையாதது என்பதை ஹமாஸுடைய காஸாவின் தலைவர் யஹ்யா சின்வரின் வார்த்தைகளில் பார்ப்போம். “எங்களது உம்மத் (அரபுகள்) எங்களைக் கைவிட்டது, ஈரானின் ஆதரவு இல்லையென்றால், எங்களிடம் ஏவுகணை திறன்கள் இருக்காது.”
இந்த புவிசார் அரசியல் போட்டிகளில், ஈரானின் பங்கைத் தெளிவாக அறிந்து கொள்ள நாம் பிராக்சி காண்ஃபிளிக்ட் (Proxy war/conflicts) என்றழைக்கப்படும் இரண்டு மறைமுக மோதல்கள் பற்றி ஆராய வேண்டும். பிராக்சி காண்ஃபிளிக்ட் என்பது இரண்டு வல்லாதிக்க சக்திகள் தாங்கள் நேரடியாக மோதிக் கொள்ளாமல் தங்கள் சார்பாக ஆயுத குழுக்களை வைத்து மோதி தங்கள் இலக்குகளை அடைவதாகும். கிட்டத்தட்டப் பனிப்போரைப் போன்றதுதான்.
முதலில் சவூதி-ஈரான் மோதல் (Iran–Saudi Arabia proxy conflict) சிரியா, எமன் உள்நாட்டுப் போர்களில் இந்த இரு சக்திகள் தலையிட்டு மறைமுக மோதல்களில் ஈடுபட்டனர். இரண்டாவது ஈரான்-இஸ்ரேல் மோதல் (Iran–Israel proxy conflict). லெபனான், ஃபலஸ்தீனில் தலையிடுவதன் மூலம் இஸ்ரேலுடன் ஈரான் மறைமுகமாக மோதிக்கொண்டது.
எந்த ஓர் சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும் தன்னுடைய அண்டை நாடு தனக்குச் சார்பானதாகவோ, தன்னால் ஆதிக்கம் செலுத்தும் இடத்திலோ, அல்லது குறைந்தபட்சம் யாரையும் சாராமல் நடுநிலையாகவாவது இருக்க விரும்பும். இதற்கு மாறாக அது தன் எதிரியோடு கூட்டணி சேருவதை உணர்ந்தால் தன் சக்தியைப் பயன்படுத்தி அதைத் தடுக்கும். இதையே ஐரோப்பாவில் பார்த்தோம்.
உக்ரைன் நேட்டோவில் இணைவது தங்களுடைய ரெட் லைனை (Red line) மீறுவது என்று ரஷ்யா தெளிவாகப் பிரகடனம் செய்தது. தன் எல்லையில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ(NATO) முகாமிடுவதை விரும்பாத ரஷ்யா என்ன செய்தது என்பதை நடப்பில் காண்கிறோம்.
ஒவ்வொரு நாடும் தங்கள் பாதுகாப்பை வெவ்வேறு வழிகளில் உறுதிப்படுத்துகின்றனர். பெரும்பாலான அரபு நாடுகள் தங்கள் பாதுகாப்பை அமெரிக்காவிடம் அவுட்சோர்சிங் செய்து ஒப்படைத்துள்ளது. இதற்குப் பகரமாக தங்கள் நிலங்களை அமெரிக்க ராணுவ தளங்களுக்குத் தாரை வார்த்தது. இவர்கள் இப்படி இருக்க ஈரான் இவர்களிலிருந்து தனித்து நின்றது, அது சுயமான ஒரு பாதையைக் கையில் எடுத்தது. 1979ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சிக்கு பின்பிருந்து சமீபமாக 2022 வரை அமெரிக்காவால் உலகிலேயே அதிகம் பொருளாதாரத் தடைக்கு (Sanctions) உட்படுத்தப்பட்ட நாடாக இருந்தது ஈரான் தான். இருந்தபோதிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பம் ஊடாக ஏவுகணைகளையும், ஆளில்லா விமானங்களையும் (Drones), மற்ற முக்கியமான இராணுவத் தளவாடங்களையும், அணுசக்தி தொழில்நுட்பத்தையும் சுயமாகவே உருவாக்கியது.
தன் நாட்டைச் சுற்றி அமெரிக்க ராணுவ தளங்கள் இருப்பதைக் கண்ட ஈரான், தன் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒரு வித்தியாசமான உத்தியைக் கையாண்டது. அதாவது மத்தியக் கிழக்கில் ஷியாக்கள் அதிகமாக அல்லது ஆட்சியில் இருக்கும் இடங்களிலுள்ள ஆயுதக் குழுக்களை வலுப்படுத்தி, அவர்களுக்கு நவீன ஏவுகணைகளையும் இன்ன பிற தளவாடங்களையும் கொடுத்தது போன்றவை இவர்களைக் கொண்டு பிராந்தியத்தில் அமெரிக்க, அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கு எதிரான ஓர் எதிர்ப்பு வளையத்தை உருவாக்கியது. அதுவே இன்று ஆக்சிஸ் ஆப் ரெசிஸ்டன்ஸாக உருவாகி நிற்கின்றது.
ஆக்சிஸ் ஆப் ரெசிஸ்டன்ஸ் என்போர் யார்? யெமன் ஹுதிகளை உள்ளடக்கிய அன்சாரல்லா, லெபனானின் ஹிஸ்புல்லா, ஃபலஸ்தீனின் ‘ஃபலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத்’ (PIJ), ஈராக்கின் ‘பாப்புலர் மொபிலைசேஷன் போர்சஸ்’ (PMU) இன்னும் சிரியா, அசர்பைஜன், என பல்வேறு நாடுகளில் வேரூன்றியுள்ள போராட்டக் குழுக்கள் இதில் உள்ளடக்கம். இத்தகைய ஓர் வலுவான கூட்டமைப்பைப் பல ஆண்டுகால முயற்சியில் கடும் நெருக்கடிக்கு மத்தியில் கச்சிதமாக நிர்மாணித்ததன் விளைவாகத்தான் இன்று ஈரான் அமெரிக்காவுக்கு வெளிப்படையாகச் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது.
என்ன சவால் அது? “அமெரிக்கா ஈரானின் இருப்பை அச்சுறுத்தினால் மத்தியக் கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்க இராணுவத் தளங்களையும் ஈரான் ஆதரவு ஆக்சிஸ் ஆப் ரெசிஸ்டன்ஸ் படை தாக்கும்.” இந்த எச்சரிக்கையில் பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேலோ அல்லது பிராந்தியத்தில் உள்ள பிற அமெரிக்கப் பினாமி அரசுகளோ குறிப்பிடப்படவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். காரணம், ஈரான் தெளிவாக விளங்கியுள்ளது இவர்களைத் தக்க வைப்பதும் பாதுகாப்பதும் அமெரிக்கா தான்.
மெய்யாகவே இது அமெரிக்கர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுத்துள்ளது. அதிபர் ஜோ பைடனும் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிலிங்கனும் சமீபத்தில் மத்தியக் கிழக்கில் மேற்கொண்ட இடைவிடாத பயணங்கள் இதற்குச் சான்று. அரசாங்கங்களை விலைக்கு வாங்குவது, அது சாத்தியப்படாத போது ஆட்சியைக் கவிழ்ப்பது, போர் தொடுப்பது என தனக்கே உள்ளான பணித்திட்டதில் சென்று கொண்டிருந்த அமெரிக்கா, உக்கிரேனில் ரஷ்யாவைத் தோற்கடிப்பது, இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் சீனாவுடன் மோதி அவர்களைச் சரி கட்டுவது என பிசியாக இருந்தது. ஆனால் இப்போது அமெரிக்கா ஈரான் விரித்த வலையில் வசமாகச் சிக்கி உள்ளது.
அது என்ன வலை? தன்னை மத்திய கிழக்கின் ஒரே சனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளும் இஸ்ரேல், உண்மையில் ஃபலஸ்தீனர்கள் மீது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்க்கும் ஓர் இனவெறி பிடித்த சக்தியாகவே இருந்துள்ளது. தன்னை ஓரு சாதாரண நாடாக விளம்பரம் செய்ய பெரும் முனைப்புக் காட்டக்கூடிய இஸ்ரேல், இன்று ஹமாசிற்கு பதிலடி என்ற பெயரில் ஃபலஸ்தீனர்கள் மீது கட்டவிழ்க்கும் அநியாயங்களை உலகம் காண்கின்றது. சியோனிசத்தின் அசல் ரத்த வெறியும் வன்மமும் இன்று அம்பலப்பட்டு நிற்கின்றது.
‘இந்த சியொனிச கூட்டத்தை அமெரிக்கா கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சியோனிஸ்டுகளுக்கு ஆக்சிஸ் ஆப் ரெசிஸ்டன்ஸ் முடிவு கட்டும்.’ இதுவே ஆக்சிஸ் ஆப் ரெசிஸ்டன்ஸின் அறைகூவல். இந்த முயற்சியில் அமெரிக்கா தலையிடுமானால் மத்தியக் கிழக்கின் அனைத்து அமெரிக்கத் தளங்களும் தாக்கி அழிக்கப்படும் என்பதே இவர்களின் எச்சரிக்கை.
இஸ்ரேலை கட்டுப்படுத்தி மத்தியக் கிழக்கில் மீண்டும் ஓர் பிராந்தியப் போர் ஏற்படுவதைத் தடுக்கும் வாய்ப்பு அமெரிக்காவிற்கு இருந்தது, ஆனால் சியோனிசப் படைகளை காஸாவில் சுதந்திரமாக அழிவைக் கட்டவிழ்த்து விட அனுமதித்ததன் மூலம், அமெரிக்கா போரையே தேர்ந்தெடுத்துள்ளது.
அமெரிக்கர்களின் கர்வம் தங்களை ஒரு பெரும் சக்தியாக 2000த்தின் அமெரிக்காவாகவே 2023இலும் இருப்பதாக நினைக்க வைக்கின்றது. ஆனால் அமெரிக்கர்களின் எதிரிகளோ 2000த்தில் இருந்தது போன்று இன்று இல்லை. அவர்களின் எச்சரிக்கைகளும், அச்சுறுத்தலும் இதையே காட்டுகின்றன.
இந்த எச்சரிக்கைகள் எவ்வளவு உண்மையானது? எவ்வளவு தூரம் எதார்த்தத்தில் ஊன்றி உள்ளது என்பதை அறிய மூன்று நாடுகளை புவிசார் அரசியல், பொருளாதாரம், இராணுவ ரீதியாக நாம் ஆராய வேண்டும்.
முதலில் அமெரிக்கா. நாம் முன்பே கூறியது போல அல் அக்ஸா பெருவெள்ளம் ஆபரேஷன் அமெரிக்காவிற்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியே. அவர்கள் உக்ரைனில் ரஷ்யாவை எதிர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு சம அளவு சக்தி படைத்த (Near peer powers) ஓரு ராணுவத்துடன் இதுவரை நேரடியாக அமெரிக்கா போரிட்டதில்லை. இதே காலகட்டத்தில் தாங்கள் ஈடுபட்ட பெரும்பாலான போர்களில் தோல்வியையே சந்தித்துள்ளனர். கடைசியாக நடந்து முடிந்த ஆப்கானிஸ்தான் வரை. இப்போது அமெரிக்கா மனித வளத்தைத் தவிர்த்து தனது அனைத்து வளங்களையும் முதலீடு செய்துள்ள இந்த ரஷ்யா உக்ரைன் போரானது, இதற்கு ஓரு விதிவிலக்காகும். ராணுவ ரீதியாக உலகின் முதல், இரண்டாம் சக்திகளாக அறியப்பட்ட அமெரிக்கா, ரஷ்யாவுடைய செயல் திறன்களில் உள்ள பல குறைபாடுகளை இந்த போர் உலகிற்கு வெளிக்காட்டியது.
குறிப்பாக ஒரு மிகப்பெரிய சக்திக்கு எதிராக நீண்ட நாட்கள் நீடிக்கக்கூடிய ஓரு கன்வென்ஷனல் வார்ஃபேரை (Conventional Warfare) தக்க வைப்பதற்கு போதுமான உற்பத்தித் திறன் தங்களிடம் இல்லை என்பதை அமெரிக்க, நேட்டோ நாடுகளுக்கு இப்போர் வெளிப்படுத்தியது. போருக்கு மிகவும் அடிப்படையாகத் தேவைப்பட்ட 155mm பீரங்கி செல்கள் (Artillery shells), டியூப் ஆர்டிலெரிகள் (Tube artillery), கவச வாகனங்களைக்கூட ஒழுங்காக விநியோகிக்க முடியாமல் அமெரிக்க – ஐரோப்பிய நேட்டோ நாடுகள் திணறின. தென் கொரியா, இஸ்ரேல், பாகிஸ்தானின் கையிருப்பிலிருந்த செல்களைப் பலவந்தமாகப் பெற்று உக்ரைனுக்கு விநியோகித்தது இதன் வெளிப்பாடாகும்.
பொருளாதார ரீதியாக அமெரிக்கா மீண்டும் மந்தநிலை (Recession) நோக்கிச் செல்ல இருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். Standard and Poor’s போன்ற சர்வதேச கடன் தர மதிப்பீடு ஏஜென்சிகள் (Credit rating agencies) அமெரிக்க அரசிற்கான மதிப்பீட்டைத் தரம் இறக்கி உள்ளனர். பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த பைடன் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கின்றார்.
சீனாவோடு அவர்கள் தொடுத்த வர்த்தகப் போரால் (Trade war) அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக ஏறி கடைசியில் தங்களுக்கே பின்னடைவாக அமைந்தது. அமெரிக்காவிற்கு பணமீட்ட உதவும் முக்கியக் கருவியான கருவூல பில் (Treasury Bills) இன்று சந்தையில் விலை போகாத நிலையில் உள்ளது. சர்வதேச நாடுகள் இந்த கடன்பத்திரத்தை வாங்கத் தயக்கம் காட்டுகின்றனர்.
அமெரிக்க ராணுவமோ ஒரு மிகப்பெரிய ஆட்சேர்ப்பு நெருக்கடியை (Recruitment crisis) சந்தித்துள்ளது. தங்களை ராணுவத்தில் இணைத்துக் கொள்ளும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. குறிப்பாக இப்போது கொந்தளிப்பில் உள்ள மத்தியக் கிழக்கில் அமெரிக்காவின் சென்ட்காம் (CENTCOM)இன் கீழ் 45 ஆயிரம் அமெரிக்கத் துருப்புகள் வெவ்வேறு மத்தியக் கிழக்கு நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாட்டில் 4000 துருப்புகள் வரை இருக்கலாம். ஒர் ஒப்பீட்டிற்கு நாம் பார்ப்போமேயானால் ஈராக்கில் உள்ள ரெசிஸ்டன்ஸ் படையினர் மட்டுமே கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். எனவே மீண்டும் ஒரு முழு மத்தியக் கிழக்கு போரை, தரையில் படைகளை இறக்கி அமெரிக்கா நடத்துவதற்கு போதுமான சக்தி அதனிடம் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
விமானம் தாங்கிக் கப்பல்களைக் கொண்ட கேரியர் குரூப் (CSG -Carrier Strike Group) அமெரிக்க விமானப்படைகளைக் கொண்டே தங்கள் எதிரிகளைத் தடுத்து (Deterrence) விடலாம் என்ற கனவில் அமெரிக்கா உள்ளது. ஆனால் மிகவும் பாதுகாக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பல்களையும்கூட கடலுக்கு அடியில் அனுப்பக்கூடிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளையும் (Anti ship missiles), நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளையும் ஈரான் தன் கைவசம் பெருக்கி வைத்துள்ளது. ஈரான், லெபனானின் கடல் எல்லைகளில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவு தள்ளியே அமெரிக்க கேரியர் குரூப் ரோந்து பணியில் ஈடுபடுவதிலிருந்து நாம் இதை அறிந்து கொள்ளலாம்.
இரண்டாவதாக இஸ்ரேல். இஸ்ரேலைப் பொறுத்தவரை அவர்களுக்கு எல்லாம் மிகச் சிறப்பாகப் போய்க்கொண்டிருந்தது. எத்தனை ஐநாவின் தீர்மானங்களை வேண்டுமானாலும் அவர்கள் மீறலாம், யாரும் கேட்க முடியாது. அண்டை நாட்டின் மீது அந்நாட்டின் இறையாண்மையை மீறி அதில் தாக்குதல் நடத்தலாம், யாரும் கேட்க முடியாது. அண்டை நாடுகளில் இவர்களுக்கு எதிரியாகக் கருதப்பட்டவர்கள் அமெரிக்காவின் உதவியோடு ஒன்று பலவீனப்படுத்தப்பட்டார்கள் (சிரியா) அல்லது ஆட்சிக் கவிழ்க்கப்பட்டார்கள் (எகிப்து).
தங்களது இருப்பை மேலும் உறுதிப்படுத்த மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து ஓர் பொது எதிரியை முன்னிறுத்தினர். அரபு முடியாட்சி நாடுகளோடு சேர்ந்து ஓர் மிடில் ஈஸ்ட் நேட்டோ (Mideast NATO) ஒன்றை ஈரானுக்கு எதிராக நிறுவும் வேலையில் இறங்கினார்கள். இதற்கு அடித்தளம் இடும் வகையில் அரபு நாடுகளோடு உறவைச் சீரமைக்கும் (Arab Israeli Normalisation) வேலைகள் மிகத் தீவிரமாக நடந்தது.
இஸ்ரேலோடு உறவைச் சீரமைக்கும் அரபு நாடுகளுக்கு அமெரிக்காவிடம் மிகுந்த செல்வாக்கும், வணிக ஒப்பந்தங்களில் முன்னுரிமைகளும், இன்ன பிற சலுகைகளும் கிடைத்தது. இதற்கு ஐக்கிய அமீரகமும் (UAE) மொறொகோவும் (Morocco) இணங்கிய நிலையில், சவூதி அரசுடனும் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தத்தை நிறைவேற்றும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
எல்லாம் இவர்களுக்குக் கைகூடி வரும் இந்த நேரத்திலேயே ஹமாஸ் அக்டோபர் 7 ஆப்பரேஷனை அரங்கேற்றியது. ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்டத்தின் இந்தப் புது பக்கம் இஸ்ரேலிய சீயோனிஸ்ட்களின் கனவைச் சிதைக்கும் பக்கமாக அமைந்துவிட்டது. இதற்குப் பிறகு இஸ்ரேலியர்களுடன் உறவைச் சீரமைத்துக் கொள்ளும் ஓர் அரபு நாடானது ஃபலஸ்தீனர்களின் பிணங்களின் மீதே ஒப்பந்தத்தைக் கையெழுத்திடுவர். இதற்கான எதிர் விளைவுகளை தங்களுடைய நாடுகளில் சந்திக்க இவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதைநாம் கூடிய விரைவில் பார்ப்போம்.
போர் துவங்கி ஒரு மாதம் கழிந்தும் கூட இன்று வரை வெற்றி என்று எதையும் காட்ட முடியாத நிலையில் இஸ்ரேலியர்கள் உள்ளனர். அமெரிக்கர்களோ ரஷ்யாவை எதிர்ப்பதற்கு உக்ரைன் என்ற பகடைக்காய் கிடைத்தது போல மத்திய கிழக்கிலும் தங்களது சண்டைகளைப் போடுவதற்கு ஓர் பகடைக்காய் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இஸ்ரேலோ எப்படியாவது அமெரிக்கர்களை இந்த போரில் இழுத்து விடலாம் என்று திட்டம் தீட்டுகிறது. இஸ்ரேலை கைவிட்டு மத்திய கிழக்கில் தனக்கு எஞ்சியிருக்கும் செல்வாக்கையும் இருப்பையும் தக்க வைப்பது அல்லது முழுமையாகத் தன்னை இராணுவ ரீதியாக ஈடுபடுத்தி இஸ்ரேலை காப்பாற்றுவது என்ற இந்த இரண்டில் அமெரிக்கா எடுக்கவிருக்கும் முடிவிலேயே இஸ்ரேலின் எதிர்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.
மூன்றாவது ஈரான். 40 ஆண்டுக் கால பொருளாதாரத் தடைகளையும் தாண்டி பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் தன் இருப்பை ஈரான் மிகவும் வலுப்படுத்தி உள்ளது. ரஷ்யாவுடனான இராணுவ ஒத்துழைப்புகள், சீனாவுடன் பிஆர்ஐ (Belt Road Initiative) ஒப்பந்தங்கள் மூலமும் ஓர் தொலைநோக்குத் திட்டத்தை வகுத்துள்ளார்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரே அச்சுறுத்தல் மத்தியக் கிழக்கில் உள்ள அமெரிக்காவுடைய இருப்பும், அரபு இஸ்ரேலிய ஒத்துழைப்பும் ஆகும். அக்டோபர் 7க்குப் பிறகு காஸா மீது இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல்களைத் துவங்கிய சில மணி நேரத்திலேயே சவூதி அரேபியா இஸ்ரேலுடனான உறவு சீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைக்கின்றோம் என்று வெளியிட்ட அறிக்கை இதில் முக்கியமானது.
ஈரான் தலைமையிலான ரெசிஸ்டன்ஸ் படையினரின் எச்சரிக்கையை இதன் பின்னணியிலிருந்து நாம் அணுகுவோம். அது ஓர் வலுவான எச்சரிக்கை. ஒரு சில ஹமாஸ் போராளிகள் எப்படி அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேலில் உள்ள இராணுவத் தளங்களை மிகைத்துக் கைப்பற்றினார்களோ, அதே போன்ற ஓர் நடவடிக்கையை மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க சென்ட்காம் தளங்களில் ரெசிஸ்டன்ஸ் போராளிகள் அரங்கேற்றச் சக்தி பெற்ற நிலையிலேயே உள்ளனர்.
போர்க்களத்தில் எதிரிகளை அடையாளம் காணத் தெரியாமல் சொந்த மக்களையே சுட்டுக் கொண்டிருக்கும் இஸ்ரேலிய படையினர் ஒரு பக்கம் இருக்க, ரெசிஸ்டன்ஸ் படையினரோ அது ஹெஸ்புல்லாவாக இருந்தாலும் சரி, ஈரானின் ஐஆர்ஜிசி (IRGC) படைகளாக இருந்தாலும் சரி, ISIS பயங்கரவாதிகளுக்கு எதிராக ஈராக், சிரியாவில் போரிட்டு மிக்க போர் அனுபவம் வாய்ந்த வீரர்களாக இன்று களத்தில் உள்ளனர்.
இது உண்மையில் இஸ்ரேல், அமெரிக்காவின் மத்திய கிழக்கு இருப்பிற்கான ஓர் சவாலே!
இவை இப்படி இருக்க, நாம் எத்தனை அனுமானங்களை முன் வைத்தாலும், இந்த புவிசார் அரசியல் போட்டிகளில் சிக்கிக் கொண்டிருப்பது ஃபலஸ்தீனர்களும் அவர்களது விடுதலைப் போராட்டமும் தான். ஆயிரக் கணக்கில் மக்களைப் பலி கொடுத்துத் தான் தங்கள் சுதந்திரத்திற்கான கோரிக்கையை இந்த உலகத்தின் குருட்டுப் பார்வைக்குக் கொண்டு செல்ல முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த விலையும் இதற்கு மேலான விலையையும் தங்கள் சுதந்திரத்திற்குப் பகரமாக ஹமாஸும் ஃபலஸ்தீனர்களும் தருவதற்குத் தயாராக உள்ளனர். அக்டோபர் 7 தாக்குதல் மூலம் ஃபலஸ்தீனர்கள், தங்கள் விடுதலை கருத்தில்கொள்ளப்படாமல் இஸ்ரேல், அமெரிக்க இந்தப் பிராந்தியத்தில் தங்களுக்குச் சார்பான ஓர் புவிசார்-அரசியல் ஒழுங்கை நிறுவமுடியாத சூழலை உருவாக்கியுள்ளார்.
ஆனால் இஸ்லாமிய உலகமும், இஸ்லாமிய நாடுகளும் காட்டக்கூடிய மௌனமும் அல்லது வெற்று வார்த்தைகளும் அந்த மக்களின் இழப்பை மேலும் கொச்சைப்படுத்துவதாக உள்ளது. குறிப்பாகச் சுன்னி இஸ்லாமியச் சக்திகளின் நிலையே மிக்க வேதனை அளிக்கின்றது. இஸ்ரேலுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கும் இதே நாடுகள் ஏன் ஈரானோடும் பிற ஷியாக்களோடும் ஒத்துழைத்து ஓர் பாதுகாப்பு கட்டமைப்பை (Security Architecture) உருவாக்கி மத்தியக் கிழக்கில் நிரந்தர அமைதியையும் ஃபலஸ்தீனியர்களுக்கான விடுதலையும் சாத்தியப்படுத்த முடியாது என்ற கேள்வி நம்மிடையே எழுகின்றது.
அப்படியான ஓர் ஒத்துழைப்பைச் சாத்தியப்படுத்திக் கொடுக்க வேண்டிய விலை என்ன என்று நாம் வியக்கிறோம். ஒருவேளை ஒட்டுமொத்த ஃபலஸ்தீனர்களின் தியாகமும் தான் அதற்கான விலையா? அதற்கான விலையைத் தான் இன்று அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களா?
இஸ்ரேலின் தாக்குதல்களில் பலியாகக் கூடிய ஃபலஸ்தீனர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்க அந்த இழப்புகளை உதாசீனப்படுத்துவது மேற்கத்திய நாடுகள் மட்டுமல்ல இஸ்லாமிய நாடுகளும் தான் என்ற எதார்த்தமே அந்த மக்களுக்கு ஒரு மிகப்பெரிய சோகத்தைத் தருகின்றது. ஆனால் அந்த மக்களின் உண்மையான போராட்டத்தையும் தியாகத்தையும் வரலாற்றின் சரியான பக்கத்தில் இருக்கக்கூடிய மக்களால் என்றென்றும் நினைவு கூறப்படும். ஃபலஸ்தீன் நிச்சயம் வெல்லும்.