வாழ்க்கையில் இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்கிற நிலையில் தனிமரமாக இருக்கும் ஒருவனுக்கும், தன் இறுதி நாட்களை தான் அறியாமலயே கடந்து கொண்டிருக்கும் நாய்க்குமான பாச பிணைப்பை பயணங்கள் வழியே அழகியலாக கொடுக்க எடுத்த முயற்சியே இந்த “777 சார்லி”.
முதல் இருபது நிமிடங்கள் நாயகனின் கதாபாத்திர அடர்வை ஆழப்படுத்துகிறேன் பேர்வழி என்று இயக்குனர் பார்வையாளனை சற்றே சோதிக்கிறார். இருந்தாலும், அந்த மூன்று இட்லிகள், வயதான தம்பதி, ஆதிகா, காயின் பாக்ஸ் உரையாடல் என்று ஆங்காங்கே இருக்கும் ‘க்யூட்’ மொமண்ட்களும், ராஜ் பி.ஷெட்டியின் அறிமுகக் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன.
மேலும், அந்த நாய் ஒரு அசாதாரண சூழலில் வாழும் காலத்தில் அதற்கு ‘கீட்டன்’ என்ற பெயரையும், தன்னை ஒரு சுதந்திர உயிரியாக உணரும் தருணத்தில் அதற்கு ”சார்லி” என்ற பெயரையும் பயன்படுத்திய விதத்தில் இயக்குனரின் இந்த “பஸ்டர் கீட்டன் – சார்லி சாப்ளின்” கருத்தாக்கத்தை நாயின் வாழ்வோடு பொருத்தியது அழகியல்.
பொதுவாக, மனிதர்களின் அரவணைப்பான செயல்களால் மட்டுமே நாய்களை ஈர்க்க முடியும் என்பதே நாய்களின் உளவியல். ஆனால், சார்லியோ தர்மாவை வியந்து ரசிக்கிறது;அவனின் இறுக்கமான முகபாவனைகள், காட்டுக்கத்தல்கள் என அத்தனையையும் தாண்டி அவனிடம் ஈர்ப்பாகவே இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு ஹீரோயினுக்காக எழுதிய திரைக்கதையில் கால்ஷீட் பிரச்சினையால் இயக்குனர் நாயைப் பொருத்தியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.
வெறுமை வதைக்கும் ஒருவன் ஒரு வளர்ப்புப் பிராணியால் நேசிக்கப்பட்டு உலகத்தையே உறவாக்கிக் கொள்ளும் டெம்ப்ளேட் ஹாலிவுட் தொடங்கி உலக சினிமா வரை அடித்து துவைக்கப்பட்ட ஒன்று. அந்த ஃபார்மேட்டை இதில் பார்க்கும் போது ‘பருத்தி வீரன்’ படத்தில் ப்ரியா மணி ‘வீரா..! என்ன கொன்னுற்ரா…’ என்று கதறுவது போல் அந்த டெம்ப்ளேட்டே கதறுவதாகத்தான் தோன்றுகிறது.
இயல்பில் ‘ஃபில்ம் மேக்கர்கள்’ தவறுவது எங்கெனில் இதனைப் போன்ற வளர்ப்புப் பிராணிகள் மையப்படும் பெரும்பாலான படங்களில் காட்சிகளை விலங்குகளின் மனோநிலையிலிருந்து அணுகுகாமல் அந்த விலங்கை ஒரு மனித கதாப்பாத்திரமாக அணுகும் இடத்தில்தான்.
இதனைத் தவிர்த்துப் பார்க்கும் போது, ஆரம்பத்தில் தட்டுத் தடுமாறும் திரைக்கதை பயணங்கள் தொடரும் போது ஓரளவு தொய்விலிருந்து மீள்கிறது.இருப்பினும் பாபி சிம்ஹா வரும் காட்சி, Dog show போன்ற யூகிக்க முடிந்த காட்சிகளால் மீண்டும் தடுமாறுகிறது.
சார்லியின் உணர்வுகளை நமக்குக் கடத்துவதில் பெரும்பங்கு இசையமைப்பாளருக்கும், ஒளிப்பதிவாளருக்குமே இருக்கிறது.இதில் முடிந்தவரை தனக்கான பகுதியை திறம்பட செய்திருப்பவர் ஒளிப்பதிவாளர் மட்டுமே. இயல்பாக பயணங்கள் தொடர்பான படங்களில் ஒளிப்பதிவாளருக்கான வாய்ப்புகள் அதிகம்.அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
மனித – விலங்கு உறவு தொடர்பான உரையாடல்கள் தற்காலத்தில் புறந்தள்ள முடியாத ஒன்று. அதைத் தொடங்குவது என்பது மனித இயல்புகளிலிருந்து விலங்குகளை அணுகுவது என்கிற முறையால் சாத்தியப்படாத ஒன்று என்று இயக்குனர் புரிந்திருந்தால் படம் நிச்சயம் நிறைய விவாதங்களுக்கான தொடக்கப்புள்ளியாக இருந்திருக்கும். எனினும் இப்படமும் தமிழ் சினிமா ரசிகனுக்கு ஒரு புது அனுபவம்.
மு காஜாமைதீன்