NEET-PG 2023 முடிவுகளில் பூஜ்ஜிய சதவீத கட்ஆஃப் என்ற அதிர்ச்சியூட்டும் நிலைப்பாட்டை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) வன்மையாகக் கண்டிக்கிறது. மைனஸ் 40 மதிப்பெண்ணுக்குக் குறைவாக பெற்றவர்கள்கூட இதன் மூலம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர முடியும். இந்த மூர்க்கத்தனமான முடிவு, இந்தியாவின் மருத்துவக் கல்வியின் தரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
விண்ணப்பித்த அனைவரையும் சமரசம் செய்யும் இந்தச் செயல் ஆபத்தானது. முக்கியமான துறைகளில் நிபுணத்துவம் பெறுபவர்களையும், நாட்டின் சுகாதார அமைப்பின் தரத்தையும்கூட இது கேள்விக்குள்ளாக்குகிறது. மருத்துவக் கல்வியின் மீதான இந்த வெளிப்படையான அவமதிப்பு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆதாயத்தை அளித்து, பல கோடி ரூபாய்க்கு மருத்துவ இடங்களை விற்க வழிவகுக்கிறது. கல்வி வணிகமயமாக்கலை இது ஊக்குவிக்கிறது.
NeXt போன்ற தெளிவான, நிலையான விதிகள் இல்லாததால் தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) சமீபத்திய நடவடிக்கைகள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதி செய்வதற்கான அடிப்படையாகச் சொல்லப்பட்ட தரநிலை முறையை திடீரென தகர்ப்பதானது அரசியல் சார்பு மற்றும் ஊழலின் வெளிப்பாடே என SIO உறுதியாக நம்புகிறது. நாட்டின் மருத்துவக் கல்வியின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இப்படியான தீய முடிவுவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று SIO கோரிக்கை விடுக்கிறது.