• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கட்டுரைகள்»கேரளத்து வெள்ளம் வெளிப்படுத்திய இரண்டு வகையான இந்தியா!
கட்டுரைகள்

கேரளத்து வெள்ளம் வெளிப்படுத்திய இரண்டு வகையான இந்தியா!

டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்By டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்August 31, 2018Updated:June 1, 20232,367 Comments4 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

வரலாறு காணாத வெள்ளத்தால் கேரளத்து மக்கள் புரட்டிப் போடப்பட்டதிலிருந்தே நாடு முழுவதும் சூடான விவாதம் ஒன்று நடந்து வருகின்றது. இந்த விவாதத்தை நீங்கள் கட்டுரைகளிலோ, பதிவுகளிலோ, விவாத மேடைகளிலோ அவ்வளவாகப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இது சொற்களால் நடத்தப்படுகின்ற விவாதம் அல்ல. செயல்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற விவாதம்தான் இது.

 

இரண்டு வகையான இந்தியாவைக் குறித்துதான் விவாதமே. இரண்டு வகை இந்தியாக்களும் ஒன்றுக்கொன்று நேர் முரணான, முழுக்க முழுக்க நேர் எதிரான வடிவங்களையும் மணங்களையும் கொண்டவை. வெகு விரைவிலேயே அவற்றில் ஒன்றை ஏற்றுக்கொண்டாக வேண்டிய கட்டாயத்துக்கு நாம் அனைவரும் தள்ளப்படலாம்.

முதல் வகையான இந்தியா எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்கு அந்தக் கேரளத்து மண்ணில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, நிலைகுலைந்து, தத்தளித்து நின்ற எண்ணற்ற மனிதர்களுக்கு உதவுவதற்கும் ஒத்துழைப்பதற்கும் துயர் துடைப்பதற்கும் களம் இறங்கிய எண்ணற்ற மனிதர்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். நீர் மட்டம் உயர, உயர, வீடுகள் ஒவ்வொரு தளமாக மூழ்க, மூழ்க, வாழ்வாதாரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் எண்ணற்ற மீனவர்கள் தங்களின் படகுகளுடன் கடலுக்குப் பதிலாக உள்நாட்டுக்குள் விரைந்தோடி வந்தார்கள். மலப்புரத்தைச் சேர்ந்த ஜெய்சல் என்கிற கிறித்துவ மீனவர் குனிந்து தன்னுடைய முதுகையே படிக்கட்டாக ஆக்கி மீட்புப் படகில் பெண்களை ஏறுவதற்கு உதவிய காட்சி நாட்டு மக்களின் மனத்திரையில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

 

நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் – காஷ்மீரிலிருந்தும் – ஊழியம் செய்வதற்காக துயர் துடைப்பு முகாம்களில் குவிந்தார்கள். வெள்ளத்தால் அவ்வளவாக மோசமாகப் பாதிக்கப்படாத உள்ளுர் மக்களோ ஓனம் பண்டிகைக்காக ஷாப்பிங் செய்வதைத் தவிர்த்து விட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருள்களை வாங்கி அனுப்புவதற்காக வரிசையில் நின்றார்கள். ஆயிரக்கணக்கானோர் கேரள முதல்வர் அறிவித்த நிவாரண நிதிக்காக நன்கொடை அளித்தார்கள். மிதிவண்டி வாங்குவதற்காக சிறுகச் சிறுக சேமித்திருந்த எட்டு வயது சிறுமி ஒருத்தி தன்னுடைய சேமிப்புப் பணம் முழுவதையும் சல்லிக் காசு விடாமல் அள்ளிக் கொடுத்தாள். சண்டிக்கொப்பா என்கிற நகரத்தில் பள்ளிவாசலும் கோவிலும் சர்ச்சும் ஒன்றையொன்று ஒத்துழைக்கின்ற நிவாரண முகாம்களாய் மாறிவிட்டன. மத வேறுபாடுகள் மறைந்து மனிதமே மிகைத்து நின்றது.

 

எந்த வகையான இந்தியாவைப் பற்றிய சித்திரம் இது? இந்தியர்களாகிய நாம் எல்லோரும் ஒரே மக்கள் என்கிற சிந்தனையின் வெளிப்பாடுதான் இது. இனம், மதம், மொழி போன்ற வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைக் கொண்டாடத்தான் செய்கின்றோம். ஆனால் நம்மைப் பிரிக்கின்ற சக்திகளைக் காட்டிலும் நம்மைப் பிணைக்கின்ற சக்திகள் வலுவானவை, வீர்யம்மிக்கவை என்பதுதான் உண்மை. இந்தச் சிந்தனையால் உருப்பெறுகின்ற இந்தியாவில் நீர் மட்டம் உயர, உயர மக்கள் உங்களின் மதம் என்னவென்றோ, மொழி என்ன வென்றோ, குலம், கோத்திரம், சாதி என்னவென்றோ, எந்த மாநிலம் என்றோ, உணவுப் பழக்கம் என்னவென்றோ, சித்தாந்தம் என்னவென்றோ விசாரிக்க மாட்டார்கள். தங்களிடம் இருப்பதையெல்லாம் உங்களுக்குக் கொடுத்து உதவவே விரும்புவார்கள் – அது பணமாக, படகாக, மிதிவண்டியாக இருந்தாலும் சரியே.

 

இரண்டாவது வகையான இந்தியாவோ வெறுப்பும் கோபமும் வன்மமும் பகையும் நிறைந்தது. மாதவிடாய்க்காளான பெண்களை சபரி மலையில் இருக்கின்ற அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய அனுமதித்ததுதான் இந்த அளவுக்கு பேரழிவுக்கும் வெள்ளத்துக்கும் காரணம் என்று சற்றும் மனம் நோகாமல் சொன்னார் ஒருவர். இது கேரளத்தில் கேரளத்து மக்கள் இந்துக்களாக அல்லாமல் முஸ்லிம்களாய், கிறித்துவர்களாய் இருக்கின்ற காரணத்தினால் இறைவன் அவர்களுக்கு விதித்த தண்டனை என்றார் இன்னொருவர். இந்து அமைப்புகளுக்கு மட்டுமே நன்கொடைகளை அளியுங்கள். அப்போதுதான் இந்துக்களுக்கு நிவாரணம் சென்று சேரும் என்றார் வேறொருவர்.

 

கேரளத்துக்கு நேர்ந்த இந்த அவலத்தை நினைத்து சந்தோஷப்படுவதோடு நிற்காமல் கேரள மக்களுக்கு எந்த வகையான உதவியும் கிடைக்கக்கூடாது என்றும் கொக்கரித்தார் ஒருவர். கேரளத்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பணக்காரர்கள்தாம். எனவே அவர்களுக்கு எந்தவிதமான உதவியும் அளிக்க வேண்டாம் என ஒருவர் காணொளியாகப் பதிவு செய்து பரப்ப அந்தக் காணொளி வாட்சப், முகநூல், ட்விட்டர் என இணைய உலகில் வைரலாகப் பரவியது. பிற்பாடு அந்தக் காணொளியைப் பரப்பியவர் பா.ஜ.க வின் இணையப் பிரிவை (ஐகூ ஞிஞுடூடூ) சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதே போன்றதோர் செய்தியை இராணுவச் சீருடை அணிந்தவரும் பதிவேற்ற, அவர் இராணுவத்தைச் சேர்ந்தவர் அல்லர் என இந்திய இராணுவமே கறாராக அறிவிக்க வேண்டியக் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது.

 

இந்த வெறுப்புப் பரப்புரையில் இந்துத்துவ வாட்சப் பேக்டரிகள் மும்முரமாக இயங்கின. ஆர்.எஸ்.எஸ்காரர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகின்ற காட்சிகளை இவை பெரும் அளவில் பரப்பின. அந்தப் படங்களில் இருந்த காட்சிகள்  அனைத்தும் ஃபோட்டோ ஷாப் செய்யப்பட்டவை என்பதும், அவற்றில் இருந்த துயர் துடைப்பு ஊழியர்கள் கம்யூனிஸ்ட்கள் என்பதும், அது மட்டுமின்றி முந்தைய ஆண்டுகளில் குஜராத்திலும் வங்கத்திலும் நடந்த நிகழ்வுகள் தொடர்பான காட்சிகள் என்பதும் இணையத்தில் மிக வேகமாக உண்மைகள் வெளியாகின. உதவவும் மாட்டோம். பிறர் உதவுவதைத் தடுப்போம். மற்றவர்கள் உதவுகின்ற காட்சிகளுக்கான கிரெடிட்டை நாங்களே ஏற்றுக்கொள்வோம் என்பதுதான் இவர்களின் ஸ்டைல். மத்திய அரசாங்கத்தின் பாணியும் இதற்குச் சற்றும் குறையாததாய்த்தான் இருந்தது.

 

கேரள அரசாங்கம் உதவி கேட்டபோது அதில் இம்மியளவு பங்கைத்தான் மத்திய அரசாங்கம் கொடுக்க முன் வந்தது. இன்னும் சொல்லப்போனால் இதே போன்ற அவலங்களுக்கு மற்ற மாநிலங்கள் ஆளான போது அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதை விட மிக மிகக் குறைவானதாகத்தான் கேரளத்துக்குத் தரப்படுவதாக அறிவிக்கப்பட்ட தொகை இருந்தது. ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிவாரணம் அளிப்பதாகச் செய்தி பரவிய போது, மோடியின் அரசாங்கம் அதனைத் தடுத்தது. நன்கொடையாளர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி சென்று சேர விடமாட்டோம் எனச் சொல்வதாக இருந்தது மோடி அரசாங்கத்தின் நடத்தை. நிதர்சனமான உண்மை அது.

 

இதுதான் இரண்டாவது வகையான இந்தியா. இதில் இந்தியர்களாகிய நாம் மதம், சாதி, மொழி, உணவுப்பழக்கம், வட்டாரம் ஆகியவற்றால் பிளவுபட்டு நிற்கின்றோம். மற்றர்களின் அவலங்களைப் பார்த்து அவர்களுக்காக அனுதாப்படுவதற்குப் பதிலாக அவர்களின் வேதனையைப் பார்த்து குதூகலிக்கின்ற குரூர மனம் கொண்டவர்களாய் நாம் சுருங்கிப் போகின்றோம். இது ஒருவகையில் ஜீரோ-சம் கேமாக (ஙூஞுணூணி-ண்தட் ஞ்ச்ட்ஞு) மற்றவரின் நட்டத்தைத் தன்னுடைய இலாபமாக ஆக்கிக் கொள்கின்ற செயற்பாட்டாக இதனைத் தாழ்த்திக் கொண்டிருக்கின்றோம்.

 

நான் இதனை இந்தியாவுக்கான துக்டே-துக்டே விஷன் – துண்டு துண்டாக நாட்டைச் சிதறடிக்கின்ற சிந்தனையாகத்தான் பார்க்கின்றேன். மக்களை வெவ்வேறு அடையாளங்களில் கூறு போட்டு, பிளவுபடுத்தி, சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக வெறுப்பையும் வன்மத்தையும் கக்குகின்ற இந்த மனிதர்களை தேச விரோதிகள் என்றல்லாமல் வேறெப்படி அழைப்பது? மக்களை ஒருங்கிணைக்கின்ற இந்துமதம், இந்தியா போன்ற சிந்தனைக்குத் துரோகம் இழைப்பவர்கள்தாம் இவர்கள். எல்லைக்கப்பாலிலிருந்து வருகின்ற பயங்கரவாதத்தை விட இவர்களைத்தான் நான் நாட்டின் மிகப்பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கின்றேன்.

 

இந்திய அரசியல் எல்லாமே அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டவைதாம் என்பது உண்மையே. இது வரை இருந்த அரசாங்கங்கள் அனைத்துமே, இன்று களத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் அனைத்துமே நாட்டு மக்களை கைவிட்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மையே. ஆனால் இந்த ஆளுங் கட்சியினரும் இவர்களின் ஒட்டுமொத்த இந்துத்துவ இயக்கத்தினரும் கேரளத்து மக்களுக்குக் கிடைக்கின்ற உதவிகளைத் தடுத்து நிறுத்துகின்ற அளவுக்கு மிகப்பெரும் பாதாளத்தில் வீழ்ந்துவிட்டிருக்கின்றார்கள். இந்த அளவுக்கு வன்மமா? ஏன்?

 

இவர்கள் கேரளத்து மக்களையா ஏமாற்றியிருக்கின்றார்கள்? கைவிட்டிருக்கின்றார்கள்? ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையும் கைவிட்டிருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். நாடு முழுவதும் – நாட்டின் பிற பகுதிகளிலும் மக்கள் அனைவரும் இவர்களின் இந்தக் கூப்பாட்டையும் நடத்தையையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். எந்த வகையான இந்தியாவைத் தேர்ந்தெடுப்பது என்பதை அவர்கள்தாம் தீர்மானிப்பார்கள். செயல்களைக் கொண்டு இந்த விவாதம் நடந்துகொண்டிருப்பதைப் போன்றே இந்த விவாதத்துக்கான முடிவையும் நாம் செயல்ரீதியாகவே அளிப்போம். அடுத்த முறை அறிவார்ந்த முறையில் வாக்களிப்போம்.

 

– அமித் வர்மா

தமிழில் : டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

டைம்ஸ் ஆஃப் இந்தியா 26 ஆகஸ்ட் 2018

 

 

Loading

Fascist Opposition Helping Hands Kerala Flood
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

Related Posts

தனி அடையாளத்தை கெடுக்கும் செல்ஃபி கலாச்சாரம்

November 4, 2025

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025

வி.எஸ். நைபாலும் இஸ்லாமிய வெறுப்பு பயணங்களும்

October 4, 2025

நபிகள் நாயகம் ஒரு மகான்

September 6, 2025

சாதியப் பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெற காரணங்களும் தீர்வும்

August 27, 2025

சூப்பர் மேன் திரைப்படம் பேசுபொருளானது ஏன்?

July 26, 2025

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

தனி அடையாளத்தை கெடுக்கும் செல்ஃபி கலாச்சாரம்

November 4, 2025

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025

வி.எஸ். நைபாலும் இஸ்லாமிய வெறுப்பு பயணங்களும்

October 4, 2025

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.