இன்றைய சமூகத்தில் தனித்தன்மை பற்றிய கருத்து தீவிரமாக வளர்ந்து வருகிறது. மிகக் குறிப்பாக ‘செல்ஃபி’ கலாச்சாரத்தின் வளர்ச்சியால் மேலும் அதிகரித்துள்ளது. ஒரு நபரின் அடையாளமும் அவரின் மீதுள்ள மதிப்பும் அவர் தன்னை எப்படி சமூக ஊடகங்களின் வழி காட்சிப்படுத்துகிறார் (Digital Representations) என்பதை வைத்தே அளவிடப்படுவதாக மாறியிருப்பதை இந்த அதிகப்படியான செல்ஃபி கலாச்சாரம் நமக்கு உணர்த்துகிறது. லைக்ஸ், கமெண்ட்ஸ் வழியாக தன்னை வெளிக்காட்ட நினைக்கும் இச்சிந்தனையை குறித்து பேசுகிறது இந்த கட்டுரை. இந்த செல்ஃபி கலாச்சாரமானது தற்போது உள்ள தனிமனித அடையாளத்தை பற்றிய புரிதலை மாற்றி அமைப்பது மட்டுமல்லாமல் உளவியல் மற்றும் சமூகவியல் சார்ந்த விளைவுகளிலும் தாக்கம் செலுத்துகிறது.மேலும், தன் மீதான அதீத கவனம் மற்றும் மனநல பாதிப்புகள் போன்ற காரணிகளை மட்டுப்படுத்துகிறது.
டிஜிட்டல் உலகில் ‘நான்’: சுயத்திலிருந்து காட்சிப் பொருளாக
வரலாறு நெடுகிலும், தனிமனித சுயம் என்பது மெய்யை உணர்வதும் தனிப்பட்ட நபரின் வளர்ச்சியாகவுமே பார்க்கப்பட்டு வந்துள்ளது. இது அவனுடைய இயலாமை, அறியாமை ஆகிய வரம்புகளை கடந்து, தன்னை குறித்த ஆழ்ந்த புரிதலை நோக்கி நகர்த்திச் சென்றது. ஆனால், இந்த டிஜிட்டல் காலத்தில், ‘நான்’ என்பது காட்சி பொருட்படுத்தப்பட்டுள்ளது. எனது மதிப்பானது ஆன்லைனில் பிறரால் என் வெளிப்புற தோற்றத்திற்கு தரப்படும் அங்கீகாரம் மற்றும் வரவேற்பை வைத்து கணக்கிடப்படுகிறது.
இந்த மாற்றம், எப்படி தனிமனிதன் தன்னைத்தானே புரிந்து கொள்கிறான் மற்றும் தன்னை வெளிப்படுத்துகிறான் என்பதை காட்டுவதோடு உள்ளார்ந்த தேடலில் இருந்து வெளியில் பிறரிடம் தன் மதிப்பை தேடுவதை நோக்கி நகர்ந்துள்ளதை காட்டுகிறது.
டிஜிட்டல் காலத்தில் அங்கீகாரத்தின் மீதான ஆசை
மனித சமூகத்தில் பன்னெடுங்காலமாகவே அங்கீகாரத்திற்கான ஏக்கம் இருந்து வருகிறது. இது ஒருவரின் சிந்தனைகள் அல்லது சாதனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்றைய செல்ஃபி கலாச்சாரம் இதை அடிப்படையிலேயே மாற்றியமைத்துவிட்டது. அதாவது, அங்கீகாரம் இன்று உடனடியான நேராக அந்த நபருக்கே கிடைக்கிறது. இது அவரின் சாதனைகளை மையப்படுத்தி அல்லாமல் மாறாக அவரின் புறத் தோற்றத்தை மட்டுமே மையப்படுத்தி உள்ளது.
சமூக ஊடகங்கள் இதை மேலும் பூதாகரப்படுத்தியுள்ளன. ஆன்லைனில் உருவாக்கியுள்ள தனது பிம்பத்தின் வழி அங்கீகாரம் தேடும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. ‘செல்ஃபி’ இதில் மிகவும் முக்கியமான ஒன்று. செல்ஃபியினால் கிடைக்கும் அங்கீகாரம் ஒருவருடைய எதிர்கால வளர்ச்சி அல்லது மாற்றத்தை நோக்கியதாக இல்லாமல், உடனடியாக கிடைக்கக் கூடிய அற்ப அங்கீகாரமாக உள்ளது. இப்படிப்பட்ட அங்கீகாரம் சுய வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், தற்போதைய நிலையை மதிப்பிடுதல், வரைமுறைப்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து கவனத்தை திசைத் திருப்புகிறது.
நார்சிசமும் செல்ஃபி கலாச்சாரமும்
நார்சிசிஸ்டிக் பெர்சனாலிட்டி டிஸார்டர் (Narcissistic Personality Disorder) என்பது மனநல குறைபாடாக 1968ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்த வார்த்தை மனோ பகுப்பாய்வு கோட்பாட்டிலிருந்தும் (Psychoanalytic Theory) தன் பிரதிபலிப்பின் மீது மயங்கிய இளைஞனான நார்சிசஸ் எனும் கிரேக்க இளைஞனுடைய கதையிலிருந்து தோன்றியது. நார்சிசம் என்பது அதீத சுய விருப்பம், தற்பெருமை ஆகியவற்றை அடையாளப்படுத்த பயன்படுகிறது. இன்றைய நவீன கலாச்சாரத்தில், செல்ஃபி எடுத்தல் மற்றும் பகிர்தல் அதிகரித்ததன் விளைவாக நார்சிசம் சாதாரணமான ஒன்றாக மக்களோடு கலந்துவிட்டது.
செல்ஃபிகளைப் பற்றிய உளவியல் ஆய்வுகள், அவற்றை எடுத்து பகிர்வதற்க்கான காரணங்களாக பல விஷயங்கள் இருப்பதாக கூறுகின்றன. குறிப்பாக தன்னம்பிக்கை அதிகரித்தல், சமூகப் போட்டியில் ஈடுபடுதல், கவனத்தை ஈர்த்தல், மனநிலையை மாற்றுதல் மற்றும் சமூக நெறிகளுடன் ஒத்துப்போதல் ஆகியவற்றை குறிப்பிடுகிறன. இந்த உந்துதல்கள், அதிகரித்துவரும் தனிநபர்களின் வெளிப்புற அங்கீகாரம் மீதான அதீத நம்பிக்கை எனும் உளவியல் போக்கை வெளிப்படுத்துகின்றன.
செல்ஃபி கலாச்சாரத்தின் மனநல விளைவுகள்
செல்ஃபி கலாச்சாரத்தில் நார்சிசத்தை (Narcissism) இலகுவாக ஏற்றுக்கொள்வதும், தொடர்ந்து வெளிப்புற அங்கீகாரத்தை நாடும் மனப்போக்கும் மனநலத்திற்கு ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் ஆகியவற்றில் அங்கிகாரத்தை தேடுவது பதட்டம் (Anxiety), மனச்சோர்வு (Depression) போன்றவற்றை உருவாக்குகின்றன. மேலும், நிலைதடுமாறக்கூடிய ஒரு தன்னம்பிக்கை உருவத்தை (Fragile Self-concept) உருவாக்குகிறது. இது சமூக ஊடகங்கள் மூலம் வழிநடத்தப்படும்.
பிறர் கவனத்தை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தீவிர போக்காக மாறியுள்ளது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகியுள்ளது. குறிப்பாக தன்னைத்தானே துன்புறுத்தல் (self-harm) என்பது ஒரு அதிர்ச்சியூட்டும் நடைமுறையாக சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ளது. சிலர் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொள்வதை நேரலையில் (live-stream) காட்டுவது, தற்கொலையை அழகுபடுத்தும் படங்களை (romanticize suicide) பதிவிடுவது போன்றவற்றின் மூலம், ‘உண்மையான என்னை வெளிக்காட்டுகிறேன்’ என ஓர் அவலமான கலாச்சார மாற்றத்தை உருவாக்கிவருகிறார்கள்.
தன்னைத்தானே துன்புறுத்துதல் மற்றும் தற்கொலையை அழகுபடுத்தலின் சமூக-கலாச்சார சூழல்
சமூக ஊடகங்கள் மூலம் தன்னைத்தானே துன்புறுத்தும் மற்றும் தற்கொலையை அழகுபடுத்தும் கலாச்சாரம் எனும் முக்கியப் பிரச்சனை குறித்து இந்த கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது. இவை சமூக அழுத்தங்களுக்கும், ஆன்லைன் சமூகத்தில் அங்கீகாரம் பெறும் கவர்ச்சிக்கும் எளிதில் ஆளாகக்கூடிய இளம் தலைமுறையினரிடையே அதிகமாக காணப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள், மக்கள் படங்களையும் கதைகளையும் பகிரும் இடங்களாக மட்டுமல்லாமல், தன்னைத்தானே துன்புறுத்தும், தற்கொலையை அழகுபடுத்திக்காட்டும் அரங்குகளாக மாறிவிட்டன. இவை அலட்சியமாக பார்க்கப்படுவது, மிகப்பெரிய சமூக தீங்காக இவை வலுப்பெற்று மற்றவர்களும் இதன் மூலம் ஈர்க்கப்படும் சூழலை உருவாக்கும். இந்தச் செயல்களுக்கு பின்னுள்ள உந்துதல்கள் பெரும்பாலும் தனிப்பட்ட வாழ்க்கை போராட்டங்களை நாடகமயமாக்கி (dramatize) பொதுமக்களிடம் வெளிப்படுத்துவதன் மீதுள்ள விருப்பமாக உள்ளன. இவை, இன்றைய ‘தன்னிருப்பு’ மற்றும் ‘அடையாள உருவாக்கம்’ என்ற கருத்துகளில் செயல் வடிவமாக உள்ளன.
சுயத்தின் எதிர்காலத்தைப் பிரதிபலித்தல்
தன்னிலிருந்து செல்ஃபி நோக்கி நகரும் மாற்றம், மனிதனின் தனிப்பட்ட அடையாளத்தின் மீதான கலாச்சார மாற்றத்தை குறிக்கிறது. உண்மைத்தன்மை (Authenticity) மற்றும் தன்னிறைவு (Self-actualization) நோக்கி செல்லும் முயற்சியிலிருந்து விலகி, பொருள்மயமான (Objectivity) மற்றும் வெளிப்புற அங்கீகாரத்தின் (External Validation) நோக்கி நகரும் இப்போக்கு, தனிநபர் வளர்ச்சியிலும் மனநல ஆரோக்கியத்திலும் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும். நார்சிசம் (Narcissism) சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படுவதும், சமூக ஊடக அங்கீகாரத்தை சார்ந்திருப்பதும், பலவீனமான மற்றும் மற்றவர்களை சார்ந்திருக்கும் ஒரு தன்னுணர்வை (self-concept) உருவாக்குகிறது. இது பதட்டம், மனச்சோர்வு மற்றும் தீவிரமான நடத்தைகளை உருவாக்குகிறது.
சமூகம் இந்த சிக்கல்களை சமாளித்து, ஒரு சமநிலையான தன்னுணர்வை வளர்ப்பது மிக அவசியம். வெளிப்புற அங்கீகாரத்திலிருந்து அல்லாமல், தன்னிலிருந்து அங்கீகாரம் பெறும் மனப்போக்கை ஊக்குவிப்பது, செல்ஃபி கலாச்சாரம் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைத் தணிக்க உதவும். அதேபோல், மனநல விழிப்புணர்வு வழங்குதல், நார்சிசம் மற்றும் தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல் போன்றவற்றில் இருந்து வெளிவர போராடுபவர்களுக்கு ஆதரவளித்து, ஊக்கம் கொடுத்து இச்சவால்களை எதிர்கொள்ள உதவ வேண்டும்.
முடிவாக, டிஜிட்டல் யுகத்தில் ‘தான்’ என்ற கருத்தின் மாற்றமானது, நாம் நம் அடையாளத்தை எவ்வாறு புரிந்துகொள்கிறோம், வளர்த்தெடுக்கிறோம் என்பதைக் குறித்து மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. அதிகமான தற்பெருமை (vanity) மற்றும் வெளிப்புற அங்கீகாரத்தின் அபாயங்களை உணர்வதன் மூலம், நாம் அங்கீகாரம் பெறுதல் மற்றும் சுய வளர்ச்சிக்கும் இடையே சமநிலையைப் பேணும் ஒரு ஆரோக்கியமான, உறுதியான தன்னுணர்வை உருவாக்க முடியும்.
(தமிழாக்கம்: அப்துல் ஹமீது)

