ஷதியா அபூ கஸ்ஸாலே (Shadia Abu Ghazaleh) என்ற இளம்பெண்ணை பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் போர்கள் என்றாலே ஆண்கள் முன்னணியில் இருப்பதும், உயிர்த்தியாகிகளின் பெயர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிரான ஃபலஸ்தீனர்களின் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த முதல் பெண்மணிதான் இந்த ஷதியா அபூ கஸ்ஸாலே.
1949ஆம் ஆண்டு நாப்லஸ் (Nablus)இல் பிறந்த ஷதியா அபூ கஸ்ஸாலே, ஃபலஸ்தீன விடுதலை போராட்டங்களில் பங்காற்றிய ஆரம்பகால பெண் போராளிகளில் ஒருவர். ஷதியா 1964ஆம் ஆண்டு அரபு தேசியவாத இயக்கத்தில் (ANM) தன்னை இணைத்துக் கொண்டு ஃபலஸ்தீன விடுதலைக்காக போராட தனது வாழ்வை அர்ப்பணித்தார். பின்னர் 1967இல் ஃபலஸ்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் (PFLP) இயக்கத்தின் ஆரம்ப கால உறுப்பினராகவும் இருந்தார்.

இராணுவப் பயிற்சிகளிலும், இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்வதிலும், மற்றவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை உருவாக்கக் கற்றுக் கொடுப்பதிலும் அவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. இவை மட்டுமன்றி விடுதலைக்கான ஆயுதமாக கல்வியையும் அறிவையும் முன்னிருத்தினார்.
1968ஆம் ஆண்டில், தனது 20ஆவது வயதில், இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக அவர் உருவாக்கிக் கொண்டிருந்த வெடிகுண்டு தற்செயலாக வெடித்ததில் ஷதியா உயிர்த்தியாகம் அடைந்தார்.அவரது தியாகம் ஒரு சக்திவாய்ந்த அடையாளமாக மாறியது. பல ஃபலஸ்தீன பெண்களை விடுதலைப் போராட்டங்களில் சேரத் தூண்டியது. ஷதியா ஃபலஸ்தீனர்களின் தைரியம், எதிர்த்துப் போராடும் திறன், மன உறுதி ஆகியவற்றின் சின்னமாக இருக்கிறார். ஆண், பெண் பேதமற்ற ஃபலஸ்தீன விடுதலை இயக்க எழுச்சிப் போராளிகளின் அடையாளங்களில் ஒருவராகவும் ஷதியா அபூ கஸ்ஸாலே வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார்.