சமூகத்தின் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை கல்வி, பயிற்சி, சீர்திருத்தம், போதனை, கலாச்சார விழிப்புணர்வு ஆகியவற்றை வழங்குவதோடு, நம்பிக்கை, நெறிமுறைகள் மற்றும் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கின்றன.
விளையாட்டும் கேமிங் துறையும்
21ஆம் நூற்றாண்டில் பல மாற்றங்கள் இவ்வுலகில் ஏற்பட்டுள்ளன. ஒரு காலத்தில் உடல்நலத்துடன் இணைத்து பார்க்கப்பட்ட விளையாட்டு எனும் செயல்பாடானது இன்று தொழில்நுட்பம் மற்றும் முதலாளித்துவத்தின் தாக்கத்தின் காரணமாக அதன் கருத்தே மாற்றம் கண்டுள்ளது.
வீடியோ கேமிங் தொழில்துறையின் தோற்றம், தொலைபேசிகள் மற்றும் கணினிகள் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் ஏற்பட்டது. மக்கள் பிளேஸ்டேஷன் போன்ற சாதனங்களில் விளையாடத் தொடங்கியபோது, கேமிங் துறை வேகமாக வளர்ச்சி கண்டது. இணையப் புரட்சியானது தொலைபேசி மற்றும் கணினியின் அணுகலை எளிதாக்கி கேமிங்கை மேலும் பரவலாக்கியது. ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் தொலைபேசிகளில் இலவசமாக எண்ணற்ற புதிய விளையாட்டுகள் கிடைக்கத் தொடங்கியதால், ஆன்லைன் கேமிங் மிகவும் எளிதாக அணுகக் கூடிய ஒன்றாக மாறியது.
கேமிங் துறையின் எழுச்சி
இன்றைய கேமிங் துறை, ரியல் எஸ்டேட் போன்ற பிற தொழில்துறைகளுக்கு இணையான ஒரு பெரும் தொழில்துறையாக மாறியுள்ளது. குறிப்பாக, பலர் ஒரே நேரத்தில் இணைந்து விளையாடும் வீடியோ கேம்கள் (MMORPGs) உருவானதன் பிறகு, ஆன்லைன் கேமிங் வேகமாகப் பரவியது. இந்த “இணைப்பு யுகம்” (Era of Convergence) ஆன்லைன் கேமர்களை அதிகப்படித்தியதன் மூலம் அடிமைத்தனத்தையும் அதிகரித்தது.
இந்தியாவில், குறிப்பாக COVID-19 தொற்று காலத்திலும் அதற்குபின்னரும், கேமிங் துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டது. கடந்த ஒரு தசாப்தமாக அது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. சில நிபுணர்களின் கணிப்பின் படி, 2028க்குள் உலக மக்கள் தொகையில் முக்கால் வாசி மக்கள் கேமிங் உலகில் ஈடுபாடு அதிகம் உள்ளவர்களாக இருப்பர். வீடியோ கேமிங் துறையுடன் இசை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளும் தற்போது பெரும் வருமானம் ஈட்டும் துறைகளாக மாறியுள்ளன.
முன்பு தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் விளையாட்டுகளுக்கான விளம்பரங்களை வழங்கின; ஆனால் இப்போது அது தலைகீழாக மாறிவிட்டது. மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா (MENA) பகுதிகளில் உள்ள நாடுகள் தற்போது e-gaming நிறுவனங்களில் பெரிய அளவில் முதலீடு செய்து வருகின்றன. புதிய விளையாட்டுகளை உருவாக்குதல், பழையவற்றை மேம்படுத்தல் ஆகியவற்றின் மூலம் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.
MENAவில் தரவுத்தள பகுப்பாய்வு (Data Analytics) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றை பயன்படுத்தி, விளையாட்டு அனுபவத்தை மேம்படுத்துவது, மோசடிகளைத் தடுப்பது, தனிப்பட்ட உள்ளடக்கத்தைவழங்குவது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. AIஆல் இயக்கப்படும் chatbotகள் மற்றும் மெய்நிகர் உதவியாளர்கள் (virtualassistants) தற்போது கேமர்களின் கேள்விகளுக்குத் தீர்வு அளிப்பதில், உடனடி உதவிகளை வழங்குவதில், மற்றும் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.
மனநலமும் சமூக விளைவுகளும்
இன்றைய கேம்கள் கற்பனைச் சூழலை உருவாக்கி, நேர்மறை உணர்வுகளைத் தூண்டினாலும், அவை விளையாட்டு வீரர்களின் மனநிலையை பாதிக்கவும் செய்கின்றன. உலக சுகாதார நிறுவனம் (WHO) “Gaming Disorder” எனும் மனநல குறைபாடாக இதை அடையாளப்படுத்தியுள்ளது. இது குடும்பம் மற்றும் சமுதாயத்துடன் தொடர்பு இழப்பு, நேரமின்மை, எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை உருவாக்குகிறது.
வன்முறை விளையாட்டுகள் (Violent Games) குழந்தைகளின் மனநிலையைபாதித்து, குற்றச் செயல்களை இயல்பானதாகக் காட்டுகின்றன. இதன் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுதல், சொத்துக்களை சேதம் செய்தல், சண்டை போன்றவற்றில் ஈடுபடுதல் பெருமையாக நினைக்கப்படுகின்றன. இவை புகை, போதைப் பொருள் பயன்பாடு, திருட்டு, ஆபாசம், பொருள்முதல்வாதம் போன்ற தவறான பழக்கங்களையும் ஊக்குவிக்கின்றன. இதன் மூலம் இஸ்லாம் அற்ற கலாச்சாரம் ஊக்குவிக்கப்பட்டு சமூக சீரழிவுக்கான பாதை திறக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் ஆக்கபூர்வமான மற்றும் அழிவுகரமான நோக்கங்களுக்காக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மூளைச்சலவை செய்வதற்கும், எதிரி நாடுகளின் மீது தவறான பிம்பத்தை உருவாக்கவும், ஆபாசத்தையும் நிர்வாணத்தையும் பரப்புவதற்கும், சமூகங்களின் தார்மீகக் கட்டமைப்பை அழிப்பதற்கும் வீடியோ கேம்கள் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. தனிநபர்களிடையே பிளவுகளை உருவாக்கி, உண்மையான பிரச்சினைகளிலிருந்து அவர்களை திசைதிருப்புவதில் சில மேற்கத்திய ஊடக நிறுவனங்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது.
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் கேமிங்
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில், ஆன்லைன் கேமிங் மூன்று விளைவுகளை உருவாக்குகிறது:
1. அளவுக்கு மீறிய சுயநலம்
2. அலட்சியம் / கவனக்குறைவு
3. தீய ஆசைகளைப் பின்பற்றுதல்
அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கை நடைபெறுவதையோ பார்த்தபோது அவற்றின் பக்கம் பாய்ந்து சென்றுவிட்டார்கள். மேலும் உம்மை நின்ற நிலையில் விட்டுவிட்டார்கள். (அவர்களிடம்) கூறும்: அல்லாஹ்விடம் இருப்பவை விளையாட்டு, வேடிக்கை மற்றும் வியாபாரத்தைவிடச் சிறந்தவையாகும். மேலும் அல்லாஹ் அனைவரைவிடவும் சிறந்த வாழ்வாதாரம் வழங்குபவனாக இருக்கின்றான்.
(திருக்குர்ஆன் 62:11)
அல்லாஹ் மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அறிந்தவன். விளையாட்டுகள் அல்லாஹ்வை நினைவு கூறுவதை விட்டும் அவனது கடமைகளை பின்பற்றுவதை விட்டும் திசைதிருப்புகின்றன. இந்த வர்த்தகம் (விளையாட்டு மற்றும் சூதாட்டம்) மற்றும் அதன் லாபத்திற்கு முன்னுரிமை அளிப்பது குறிப்பிடத்தக்க இழப்பிற்கு வழிவகுக்கும், இருப்பினும் மக்கள் அதை உணராமல் இருக்கின்றனர்.
நீங்கள் அவனை விடுத்து யார் யாரையெல்லாம் விரும்புகின்றீர்களோ அவர்களை வணங்கிக் கொண்டிருங்கள். கூறுவீராக: “மறுமை நாளில் யார் தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் இழப்பிற்குள்ளாக்கினார்களோ, அவர்கள்தாம் உண்மையில் திவால் ஆனவர்கள்.” நன்கு கேட்டுக் கொள்ளுங்கள்! இதுதான் அப்பட்டமான திவால் ஆகும்.
(திருக்குர்ஆன் 39:15)
இந்த வசனம் அடிமைத்தனத்தின் தீங்கை வெளிக்காட்டுகிறது. அவர்கள் தங்கள் ஆன்மாவின் பெரும்பகுதியை அதில் இழக்கின்றனர். குறிப்பாக இறை நினைவில் இருந்து விலகிச் செல்கின்றனர்.
மேலும், அல்லாஹ் குர்ஆனில் எச்சரிக்கின்றான்:
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், கேளிக்கையும் அன்றி வேறொன்றுமில்லை. நிலையாக வாழ்வதற்கான இல்லம் மறுமை இல்லம்தான்! அந்தோ, இவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!
(திருக்குர்ஆன் 29:64)
கேமிங் துறையானது, பொருள்முதல்வாதம் என்ற கண்ணாடி வழியாக மக்களுக்கு இவ்வுலகை காட்டுகிறது. அதன் மூலம் அவர்கள் இவ்வுலகை கவர்ச்சிகரமானதாகவும் வியக்கத்தக்க ஒன்றாகவும் காண்கின்றனர். மறுமையை மறந்து விடுகிறார்கள்.
மக்கள் உலக வாழ்வின் புறத்தோற்றத்தை மட்டுமே அறிகின்றனர். மறுமையைப் பற்றி அவர்கள் அலட்சியமாக இருக்கின்றனர்.
(திருக்குர்ஆன் 30:7)
அல்லாஹ்விடம் கிடைக்கும் வெகுமதிகளை மறந்து உலகில் கிடைக்கும் அற்ப லாபங்களின் பக்கம் மக்கள் அழைத்துச் செல்லப்படுவதை குறித்து இந்த வசனம் பேசுகிறது.
மேலும் உண்மை யாதெனில், ஜின் மற்றும் மனித வர்க்கத்தில் பெரும்பாலோரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆயினும், அவற்றால் அவர்கள் சிந்தித்துணர்வதில்லை; அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள்; ஏன் அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள்! அவர்கள்தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள்.
(திருக்குர்ஆன் 7:179)
ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையானவர்கள் தங்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், மற்றவர்களிடம் பாராட்டும் அங்கீகாரமும் பெறுவதில் கவனம் செலுத்துவர்.
எவர்கள் தம்முடைய இறைவனின் திருப்தியை நாடி காலையிலும் மாலையிலும் அவனை அழைக்கிறார்களோ, அவர்களுடன் சேர்ந்து இருப்பதில் உமது மனத்தைத் திருப்தி கொள்ளச் செய்வீராக! ஒருபோதும் உமது பார்வையை அவர்களைவிட்டுத் திருப்ப வேண்டாம். உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நீர் விரும்புகிறீரா என்ன? நம்மை நினைவுகூர்வதை விட்டும் எவனது இதயத்தை நாம் அலட்சியம் கொள்ளச் செய்துள்ளோமோ எவன் தன் இச்சைப்படி வாழும் நடத்தையை மேற்கொண்டிருக்கிறானோ எவன் தன் செயல்முறைகளில் வரம்பு மீறிச் சென்று கொண்டு இருக்கிறானோ அவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்!
(திருக்குர்ஆன் 18:28)
இந்த வசனம் நேரடியாக நம்மை எச்சரிக்கிறது.
மனிதர்களே! திண்ணமாக, அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. எனவே, உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திட வேண்டாம். மேலும், அந்தப் பெரும் ஏமாற்றுக்காரனும் உங்களை அல்லாஹ்வின் விஷயத்தில் ஏமாற்றிவிட வேண்டாம்.
(திருக்குர்ஆன் 35:5)
பின்வரும் அடிமைத்தனத்தின் விளைவுகள் பொதுச் சமூகத்திலும் முஸ்லிம் இளைய தலைமுறையிலும் பல இழப்புகளுக்கு வழிவகுக்கிறன:
நற்பண்பின்மை (துணிவு, கடின உழைப்பு, பொறுமை ஆகியவை இல்லாது இருத்தல்).
மற்றவரை இழிவுபடுத்துதல் (கேலி, விமர்சனம்) – இதை பொழுதுபோக்காகக் கருதுதல்.
நல்லொழுக்கத்தை (நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது, உண்மையையும் நேர்மையையும் பரப்புவது) ஊக்குவிப்பதன் நோக்கம் இழக்கப்படுதல்.
தனியுரிமை பாதுகாப்பு அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டல்.
அதீத அடிமைத்தனம் இறைக் கட்டளைகளுக்கு கீழ்படிவதில் இருந்து மக்களை தூரப்படுத்துகிறது.
அல்லாஹ்வின் நினைவு இல்லாத எந்த ஒன்றும் வீணானதே. நான்கு செயல்களைத் தவிர. அவைகள்:
1 . (அம்பெறிவதற்காக) இரு இலக்குகளை குறிபார்க்க நடப்பது.
2 . தனது குதிரைக்கு பயிற்சியளிப்பது.
3 . தனது மனைவியோடு விளையாடுவது.
4 . (பிறருக்கு) நீச்சல் அடிக்க கற்றுத் தருவது.
(நஸாயி)
சிறந்த மாற்றீடுகளையும் மற்றும் சமூக பொறுப்புணர்வையும் ஊக்குவித்தல்
சமுதாயக் குழுக்கள், முஸ்லிம் சமூகங்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் பொறுப்புள்ளகுடிமக்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை இத்தகையகுழப்பங்களில் இருந்து பாதுகாத்து, அவர்களின் சமூக ஒழுக்கம், உளவியல் வளர்ச்சி மற்றும் உணர்வுகளை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். வாழ்க்கையின் நோக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமூக மரியாதை, பிரச்சினைகள் மற்றும் உரிமைகள் குறித்து அவர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும்.
சீரான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்தும் கற்றுக் கொடுக்க வேண்டும். உடல், மன நலன் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடச் செய்ய வேண்டும். மேலும், ஆரோக்கியம் மற்றும் விளையாட்டுகள் குறித்தான இஸ்லாமிக் கண்ணோட்டத்தை எடுத்துக் கூற வேண்டும். மார்க்கக் கட்டளைகளை அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துச் சொல்ல வேண்டும்.
கூடுதலாக, சமூக ஆரோக்கியத்தை அமைதியாக அழித்து வரும் e-gameகளுக்கு எதிராக பிரச்சார இயக்கங்களை தொடங்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. அடிமைத்தனத்திலிருந்து காப்பாற்றி நல்ல வழிகாட்டல்களை ஊட்டக் கூடிய அறிவை வளர்க்கக் கூடிய மாற்று விளையாட்டுகளை கண்டுபிடிக்க வேண்டும்.
(தமிழாக்கம்: முகமது உசைன்)

 
									 
					