சமூக ஊடகங்களின் திரையில் தொலைந்த சமுதாயம்!
இன்று நம்மில் பலருக்கும் சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கின்றார்கள். எங்கோ தொலைவில் இருக்கும் இந்த இணையவழி நண்பர்களின் பிறந்தநாளுக்கு ‘Happy Birthday’ என்று வாழ்த்து தெரிவிப்பதில் தொடங்கி, அவர்களின் கவனத்தையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்காக நம்முடைய அனைத்து அசைவையும் இணையத்தில் பதிவிடுகிறோம். Like, Comment,Share, Followers எண்ணிக்கையைப் பற்றி அவர்களிடம் நாம் பெருமையாகப் பேசுகிறோம். அதேநேரம், சற்றுச் சிந்தித்துப் பார்த்தால் இணையத்தில் மூழ்கிய பெரும்பாலான GEN Z தலைமுறையினருக்கு வீட்டின் இருபுறமும், மேலேயும் கீழேயும் வாழும் அண்டை வீட்டாரின் பெயர்கூட தெரிவதில்லை.
அவர்களின் வாழ்வில் என்ன நடக்கிறது, அவர்கள் நலம் விசாரிப்பது போன்ற அடிப்படை மனிதநேயப் பண்புகள் மெதுவாக மறைந்து வருவதை நாம் உணரத் தவறிவிட்டோம்.இது வெறும் சாதாரண சமூக மாற்றம் அல்ல. இது மனித உறவுகளின் மையக் கல்லான அண்டை வீட்டார் அன்பு சிதைந்துவிட்டதற்கான ஓர் அபாயகரமான அறிகுறியாகும். இணைய உலகம் நம்மை உலகத்துடன் இணைத்தாலும் நம்மைச் சுற்றி உடனிருக்கும் மனிதர்களிடமிருந்து நம்மைப் பிரித்துவிட்டது. உலகின் ஒரு பக்கத்தில் இருப்பவரை தெரிந்து வைத்துக் கொண்ட நாம், நம் வீட்டுக்கு அருகே உள்ளவர் யார் என்பதை தெரியாமல் இருக்கிறோம். இந்த முரண்பாடுதான் (Paradox) இன்றைய சமூகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக உள்ளது. இதை எதிர்கொள்ள பல வழிகள் இருந்தாலும். இஸ்லாத்தில் ஏற்கனவே உள்ள சில நேர்த்தியான தீர்வுகளை காணலாம்.
இஸ்லாம் காட்டும் உன்னதப் பாதை: ஈமானின் ஓர் அங்கம்!
அண்டை வீட்டாருடன் நல்லுறவு என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் வெறும் ‘சமூக மரியாதை’ (Social Courtesy) என்பதையும் கடந்தது. அது நம்முடைய ஈமானின் ஓர் அங்கம் என்று இஸ்லாமிய மார்க்கம் அழுத்தமாகக் கூறுகிறது.
அல்லாஹ் (ஸுப்ஹானஹூ வ தஆலா) அல்குர்ஆனில் தெளிவாகக் கூறுகிறான்:
அல்லாஹ்வை வணங்குங்கள், அவருடன் யாரையும் இணைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு, உறவினர்களுக்கு, அனாதைகளுக்கு, ஏழைகளுக்கு, அண்டை வீட்டாருக்கு நன்மை செய்க.
(திருக்குர்ஆன் 4: 36)
இந்த வசனத்தில், அல்லாஹ் அவனை வணங்குவதற்கு அடுத்தபடியாக பெற்றோர்கள், உறவினர்களுக்குச் சமமாக அண்டை வீட்டாருக்கும் நன்மை செய்யுமாறு கட்டளையிடுகிறான். இதில் அண்டை வீட்டாருக்கான அந்தஸ்து எவ்வளவு உயர்வானது என்பதை நாம் உணர வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை இதோ:
ஜிப்ரீல் (அலை) எனக்குத் தொடர்ந்து அண்டை வீட்டாரின் உரிமையைப் பற்றி அறிவுறுத்தியதால், அவர்கள் (நம்முடன்) பரம்பரை உரிமை (சம்பந்தமான) பெறுவார்கள் என்று நினைத்தேன்.
(புகாரி, முஸ்லிம்)
பரம்பரைச் சொத்தில் பங்கு கேட்கும் அளவுக்கு அவர்களின் உரிமைகளைப் பற்றி நபி (ஸல்) அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டதென்றால் இஸ்லாத்தில் அண்டை வீட்டாருக்கான இடம் எவ்வளவு மகத்தானது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே, அண்டை வீட்டார் மீது அன்பும் பொறுப்பும் காட்டுவது, நாம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவதன் வெளிப்பாடாகும் என்பது இதனால் தெளிவாகிறது.
இன்றைய முஸ்லிமின் சவால்கள்
இன்றைய காலக்கட்டத்தில் இணையம், நகரமயமாக்கப்பட்ட வாழ்க்கை, அடுக்குமாடிக் குடியிருப்புக் கலாசாரம் ஆகியவை இந்த உறவைச் சிதைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
- அறியாமை மற்றும் பயம்: நமக்கு அருகே யார் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக, நம்முடைய வாசலில் ஒரு கேமராவை வைத்துக்கொள்வதையே பாதுகாப்பாக உணர்கிறோம். ‘யார் நல்லவர், யார் கெட்டவர்?’ என்ற பயம் மனிதர்களை ஒருவருக்கொருவர் பேச விடாமல் தடுக்கிறது.
- வேலைப்பளு: காலையில் சென்று இரவில் திரும்பும் இயந்திர வாழ்க்கை அண்டை வீட்டாருடன் ஒரு நிமிடம் பேசுவதற்கான நேரத்தைக் கூட நமக்குத் தருவதில்லை.
- சுயநலம்: அண்டை வீட்டார் பசியோடு இருக்க, நாமோ சமூக ஊடகத்தில் ‘Food Vlogs’ பார்த்து உடனே “online food delivery”இல் ஆர்டர் செய்து வயிறை நிரப்பிக்கொள்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்:
அண்டை வீட்டார் பசியோடு இருக்க, நீ நிறைந்திருப்பாயானால் – நீ உண்மையான ஈமான்வான் அல்ல!
(அல் அதப் அல் முஃப்ரத் – புகாரி)
இந்த ஹதீஸ் நம் மனசாட்சியை எழுப்பும் ஒரு விழிப்பு. ஈமானை வார்த்தைகளால் சொல்வது எளிது; ஆனால், அண்டை வீட்டாருக்குக் கைகொடுக்காத உள்ளம், பசியுள்ள ஈமானைக் குறிக்கிறது.
நாகரிகம் தொடங்குவது வாசலிலிருந்து: சிறிய செய்கைகளே போதும்!
ஒரு நல்ல சமூகம் அரசியலால் அல்ல, அண்டை வீட்டார்களிடையேயான அன்பால் தான் உருவாகும். வீட்டின் வாசலுக்கு அப்பால் உள்ள மனிதன் உனக்குத் தெரியாதவராக இருக்கக் கூடாது. நாம் வாழ்க்கையில் உயர்வது போலவே, நம் அண்டை வீட்டாரும் உயர்வதற்கு நாம் உதவ வேண்டும். கீழ்க்காணும் சிறு செய்கைகள்கூட பெரும் மாற்றத்தை உருவாக்க வல்லன.
- ஒரு புன்னகை மற்றும் சலாம்: வாசலில் சந்திக்கும் போது முகத்தை திருப்பிக் கொள்ளாமல், ஒரு புன்னகையுடன் கூடிய சலாம் (அஸ்ஸலாமு அலைக்கும் – உங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக) சொல்வது உறவுப் பாலத்தின் முதல் செங்கல்.
- பங்கீடு (Sharing): சமைத்த உணவில் ஒரு பங்கு உணவு கொடுத்தல் மட்டுமன்றி, அவர்களுக்குத் தேவையான சிறு உதவிகள்.
- அக்கறை நலம் விசாரிப்பு: அவர்கள் வீட்டில் ஒரு விசேஷம் என்றால் வாழ்த்துவது, அல்லது ஒரு துக்கம் என்றால் ஆறுதல் சொல்வது. குறிப்பாக, அண்டை வீட்டாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் உடனே சென்று விசாரிப்பது.
இவைதான் சமூக ஒற்றுமையின் விதைகள். நாம் நம்முடைய வாசல் கதவைத் திறக்கும்போது, அங்கு நாம் காணும் மனிதர்களுடன் கொண்டுள்ள உறவுதான், நாம் யார் என்பதையும், நம் சமூகத்தின் பக்குவத்தையும் தீர்மானிக்கும்.
ஈமானின் சுவையை மீட்டெடுப்போம்!
இஸ்லாம் கற்றுக்கொடுத்த மனிதநேயம் என்பது “வழிபாடு” மற்றும் “உறவு” இரண்டையும் சமமாக மதிக்கிறது. அண்டை வீட்டார் மீது அன்பு காட்டுவது, அவர்களுக்கு நன்மை செய்வது, நமக்கு அல்லாஹ்வின் அருளைப் பெறும் ஒரு மகத்தான வாய்ப்பு. அண்டை வீட்டாருடைய உரிமைகளைப் பற்றிச் சிந்திக்காத ஒரு சமூகம், இஸ்லாம் காட்டிய வழியில் இருந்து விலகிச் செல்கிறது.
சமூகத்தில் மாற்றம் தொடங்க வேண்டிய இடம் – நம் வாசல்! சமூக ஊடகங்களில் எத்தனை நண்பர்கள் இருந்தாலும், நம்முடைய அசல் சமூகம் நம்முடைய தெருவில் தான் உள்ளது. அண்டை வீட்டாரின் உரிமைகள் காப்போம், ஈமானின் சுவையை மீட்டெடுப்போம்!

