மௌலானா அபுல் அஃலா மௌதூதி 1969 – இலண்டனுக்கு வருகை தந்தார். அப்போது முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு (FOSIS) அவருக்கு வரவேற்பு அளித்தது. அங்கு அவருடன் நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வின் போது அவரிடம் மாணவர்கள் எழுப்பிய கேள்வியும் அதற்கு மௌலானா மெளதூதி அளித்த பதிலும்.
ஆயுதப் புரட்சி மூலம் இஸ்லாமிய அரசை நிறுவ முடியுமா? மௌலானா மௌதூதி ஒரு கணம் கூட யோசிக்காமல் கூறினார். “நம்மை ஊக்கப்படுத்த இது சரியான வழி என்று நான் நினைக்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு கொள்கை எவ்வித பயனையும் அளிக்காது. அதுமட்டுமின்றி, அது மிகப்பெரிய ஆபத்தாக முடியும் வாய்ப்பும் உள்ளது. ஒருவேளை ஆயுதப் புரட்சியின் மூலம் நீங்கள் ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்கினீர்கள் என்றே வைத்துக் கொண்டாலும், இஸ்லாமிய அடிப்படையில் அந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது.
ஏனென்றால், இஸ்லாம் எதிர்பார்க்கும் தார்மீக மாற்றத்திற்கு சமூகம் சரியாகத் தயாராக இருக்காது. மேலும் ஆயுதமேந்திய கிளர்ச்சி என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு வழியாக மற்றவர்களுக்கு முன்னாலும் கதவுகளை திறந்து வைக்கும். புரட்சி, எதிர்ப்புரட்சி, சூழ்ச்சி, எதிர்ச் சூழ்ச்சி என்ற ஒரு சீர்குலைவு வட்டத்திற்குள் முஸ்லிம் தேசங்கள் சிக்கிவிடும் என்பதுதான் இதன் இறுதியான சோக முடிவாக இருக்கும்.
நீங்கள் ஆயுதக் குழுக்களாக இயங்குகின்ற பொழுது, அந்த குழுக்கள் இரகசிய இயக்கங்களின் தன்மைகளை மேற்கொள்ள வேண்டியது வரும். அத்தகைய இயக்கங்கள் தங்களுக்கென சில குணாதிசயங்களைக் கொண்டுள்ளனர். அத்தகைய இயக்கங்கள் ஒருபோதும் பிரிவினையை பொறுத்துக் கொள்ளாது. மேலும் அவை தங்களுக்கு எதிராக உருவாகும் விமர்சனக் குரல்களை அடக்குவார்கள். இதன் விளைவாக, சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விவாதங்களுக்கு அங்கு இடமிருக்காது. மேலும் இதுபோன்ற இரகசிய அமைப்புகள் பொய், ஏமாற்றுதல், வேஷம் போடுதல், இரத்தக்களரி போன்ற இஸ்லாம் அனுமதிக்காத பலவற்றைச் செய்ய தனது இயக்க செயல்பாட்டாளர்களுக்கு அனுமதி அளிக்கும். மேலும் புரட்சி என்பது துப்பாக்கிக் குழலால் கொண்டு வரப்பட்டதால், அதை துப்பாக்கிக் குழலால் மட்டுமே நிலைநிறுத்த முடியும் என்பதும் அதன் இயற்கையான தன்மைகளில் ஒன்றாகும். அமைதி வழிச் செயல்பாடுகளுக்கு இடம் இல்லாமலாகிவிடும் ஒரு சூழல்தான் இத்தகைய செயல்பாடுகள் மூலமாக கிடைக்கும் இறுதி பயன்களாக இருக்கும்……
(ஜியாவுதீன் சர்தாரின் ‘டெஸ்பரேட்லி சிட்டிங் பாரடைஸ்’ என்ற புத்தகத்தில், பக்கம் 29.)