ஃபலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலின் இன அழிப்பானது கடந்த 700 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை, இந்த இனப்படுகொலையில் அப்பாவி ஃபலஸ்தீனர்கள் 64,000க்கும் மேற்பட்டோர் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்களின் புனித தலமான மஸ்ஜீதுல் அக்ஸாவை மீட்பதற்கான போராட்டத்தில் ஃபலஸ்தீனர்கள் தங்களின் உயிரையும் உடைமைகளையும் தியாகம் செய்து போராடி வருகின்றனர்.
இஸ்ரேலிய ஜியோனிச பயங்கரவாதிகளால் உலக நாடுகளின் உதவிகளோடு நம் கண்முன்னே அறங்கேற்றப்படும் இந்த இனப்படுகொலையைத் தடுக்க ஃபலஸ்தீனர்களின் போராட்டத்தில் நம்மையும் ஈடுபடுத்திக் கொள்வது நம் அனைவரின் கடமையாகும். நம்மை விட்டு பல்லாயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் நடக்கக்கூடிய இந்த இன அழிப்பிற்கு பிரார்த்தனையைத் தவிர நம்மால் ஏதும் பண்ண முடியாது என்ற எண்ணம் மக்களிடையே பரவலாக காணப்படுகின்றது.
ஆனால் உண்மையில் மக்களால் இஸ்ரேலின் இந்த அட்டூலியத்தைத் தடுத்து நிறுத்த முடியும். ஒரு நாட்டிற்கு அடிப்படைத் தூணே பொருளாதாரம் தான். அந்த பொருளாதார பலத்தை வைத்து தான் அந்த நாடு போர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் செய்கின்றது; அதே போல் தான் இஸ்ரேலிய அரசும். பொருளாதார பலத்தின் உதவியால் இத்தனை நாட்கள் ஃபலஸ்தீன் மீது இராணுவக் கொடூரங்களைக் கட்டவிழ்த்து வருகிறது. அமெரிக்காவும் இதற்கு முழு ஒத்துழைப்பை நல்கி வருகிறது.
தற்பொழுது நாம் பொருளாதார ரீதியாக இஸ்ரேலிய அரசை பலவீனப்படுத்துவதன் மூலம் அந்த நாடு திவாலாகிவிடும் வாய்ப்பு உள்ளது. நாம் நம் பகுதிகளில் விற்பனையாகும் இஸ்ரேலிய பொருள்களை வாங்குவதை நிறுத்துவதன் மூலம் இஸ்ரேலிய அரசுக்கு மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்த முடியும்.
இது எப்படி சாத்தியமாகும் என்ற எண்ணம் நமக்கு எழலாம். ஆம், கண்டிப்பாக சாத்தியம் ஆகும். நாம் பல கோடி பேர் இங்கு வாழ்கிறோம், நாம் அனைவரும் சேர்ந்து இஸ்ரேலிய பொருளாதாரத்தில் பங்காற்றும் நிறுவனங்களின் பொருட்களை வாங்க, உபயோகிக்க மறுத்தால் அந்த நிறுவனம் மூடப்படும், இது இஸ்ரேலின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேபோல் இஸ்ரேலுக்கு பொருளாதார உதவி செய்யும் நிறுவனங்களின் பொருட்களை தடை செய்வதன் மூலமும், மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் ஜியோனிச அரசை தள்ள இயலும். சாமானிய மக்களால் செய்ய முடியும் ஒரு சிறிய எளிய செயல் இது. இதுபோன்ற இஸ்ரேலிய பொருட்களை அடையாளம் காண்பதற்கு பல செயலிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. அதில் “No Thanks” எனும் செயலி முக்கியமானதும் பயன்படுத்துவதற்கு எளிமையானதும் ஆகும். இதன் மூலம் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேலிய பொருட்களை அடையாளம் கண்டு அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

 
									 
					

