ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை’ என்ற வாதம் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தொழிற்துறை வர்த்தகர்களால் வைக்கப்படும் என்று தெரிகிறது. தாங்கள் மீண்டுவிட்டோம் என்றும், நம்பிக்கையான திட்டங்கள் உள்ளன என்றும் அவர்கள் மூச்சு விட்டுக்கொள்ளலாம். ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஏனெனில், இந்த அரசு வழக்கம்போல் தொழிற் நிறுவனங்களுக்கான திட்டங்களை முன்மொழிந்துள்ளது, தனியார்மயமாதலில் தனது ஈடுபாட்டை வெளிப்படையாகக் கையாண்டுள்ளது. தொழிலாளர்கள் மறுசீரமைப்பு, கொரோனா பெருந்தொற்றுக்கான நிவாரணம் மற்றும் பல்வேறு அடிப்படைத் தேவைகள் இருக்கும்போது கார்ப்பரேட்களுக்கான உதவித்தொகை வழங்குவதிலேயே கவனமாக உள்ளது.
பெருந்தொற்று பல மில்லியன் மக்களின் (பெரும்பாலும் ஏழைகள்) வாழ்வாதாரத்தைச் சிதைத்த பிறகு வழங்கும் முதல் பட்ஜெட் இது. அதில் ஏதும் தமக்கான ஆச்சரியம் இருக்குமா என்று அவர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். அவை, அவர்களின் பெரும் பாதிப்புக்கான நிவாரணமாகவும், மற்ற அனைத்து நாடுகளிலும் செய்ததைப் போல் அவசரக்கால உதவித்தொகையாகவும், பேரிடர் காலத்தால் பாதிக்கப்பட்ட அவர்களின் கல்வியைப் பலப்படுத்தும் விதமாகவும், சிறு குறு தொழில்களின் சீரமைப்பாகவும் அல்லது கடந்த ஒரு வருடமாக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட முறைசாரா தொழிலாளர்களின் மேம்பாடாகவும் இருக்கலாம் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் இதையெல்லாம் இந்த அரசிடம் எதிர்பார்ப்பது உங்களுக்கு அதிகமாகத் தெரியவில்லையா என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது வியாபாரத்திற்கானது, வழக்கம்போல் கல்வியிலும் வாழ்வாதாரத்திலும் பின்தங்கிய ஏழைகள், பெண்கள், விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் உண்மையில் குடிமக்கள்தான். நாம் இத்தகைய பட்ஜெட்டை எதிர்பார்த்தோமா அல்லது எதிர்பாராத ஒன்றா என்று சீரியஸாகவே கேட்டுக்கொள்ளுங்கள்.
பெருந்தொற்றுக்கு பிறகு கல்வித்துறை கண்டுள்ள சவால்களைக் குறிப்பிட்டு, அதனை அரசு சிறிதாவது கவனம் செலுத்துமா என்று எதிர்பார்த்தேன். மாறாக, முற்றிலுமாக விலக்கப்பட்டுள்ளது. ‘கல்விக்கான பேரழிவு’ என்று ஐநாவின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டும், உலகம் முழுவதுமுள்ள நாடுகள் நெருக்கடிக் கால கல்விக்கான முதன்மை கவனத்தைச் செலுத்தும் வேளையில், இங்கு மோசமான விளைவை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது. இன்று இந்தியாவில் பள்ளிகள் மூடப்பட்டு ஓராண்டாகிறது. பல மில்லியன் மாணவர்களால் ஆன்லைன் கல்வியைப் பெற முடியவில்லை. மீண்டும் பள்ளிகள் திறப்பதைப் பற்றி இன்னும் யோசிக்கக் கூட இல்லை. பலரும் அதனை ஏற்காமல் கூட இருக்கலாம். ஆசிரியர்கள் பற்றாக்குறை, ஆன்லைன் வகுப்புகளுக்கான போதாமை மற்றும் பன்முக உரையாடல்களுக்கான தேவை போன்றவை பள்ளிகள் திறக்கும் வரை இருக்கும். இதனால் ஏற்படும் சமூக உளவியல் பிரச்சனைகளும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், நீண்டகால விளைவை ஏற்படுத்தும்படியாக இருக்கும்.
ஆனால், அரசுப் பள்ளிகளின் கல்வியை மேம்படுத்தும் சர்வ சிக்ச அபியான் திட்டத்திற்கு அரசு ஒதுக்கிய தொகை 31,050 கோடி. இது போதாமையாக ஒதுக்கப்பட்ட கடந்த ஆண்டின் பட்ஜெட்டை (38,751 கோடி) விடக் குறைவு. மதிய உணவுத் திட்டத்திற்குக் கடந்த ஆண்டு 12,900 கோடி ஒதுக்கிய வேளையில் இந்த ஆண்டு மிக மிகக் குறைவாக 11,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கல்வி உட்பட முழுவதுமான தேசிய கல்வித் திட்டத்திற்கான ஒதுக்கீடு 38860.50 கோடியிலிருந்து 31300.16 கோடியாகச் சரிந்துள்ளது.
மேலதிகமாக, மீண்டும் பள்ளிகள் பாதுகாப்பாகத் திறக்கப்படுவது பற்றியோ, பெருந்தொற்று நெருக்கடிக்கு பிறகான அணுகுமுறைக்கு ஆசிரியர்களை தயார்ப்படுத்துவது குறித்தோ, மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பது மற்றும் உருவாகவிருக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்தோ ஏதும் குறிப்பிடவில்லை. ஏன், கடந்த ஆண்டு முழுவதும் தங்கள் நிலையை இழந்து போராடும் மாணவர்கள் குறித்து நிதியமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒரு வார்த்தை கூட..
அடுத்த பத்தாண்டுகளுக்கு அரசு இரட்டிப்பாகச் செலவு செய்ய இருக்கும் புதிய கல்விக்கொள்கை (NEP) இந்தாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், நிதியமைச்சர் தனது பேச்சு முழுவதும் புதிய கல்விக்கொள்கையின் மூலம் 15,000 பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்றே கூறினார். ஆனால், இந்த 15 ஆயிரம் என்பது நாடு முழுவதுமுள்ள பள்ளிகளில் வெறும் 1% மட்டுமே. மீதமுள்ள பள்ளிகளுக்கு புதிய கல்விக்கொள்கையின் சலுகைகள் இல்லையா?, எந்த 15 ஆயிரம் பள்ளிகளை இதில் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள்?…
இதற்கிடையில், வெளிப்படையாகப் பேசாத போதும் ஆவணங்கள் கூறுவது என்னவெனில், கேந்திரி வித்யாலயா பள்ளிகளுக்கான ஒதுக்கீடு 6434.8 கோடியிலிருந்து 6800 கோடியாகவும், நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கான ஒதுக்கீடு 3480 கோடியிருந்து 3800 கோடியாக அதிகரிக்கிறது. ஆதலால், புதிய கல்விக் கொள்கைக்கான மேம்பாடு என்று கூறுவதெல்லாம் இந்த பள்ளிகளுக்கானதுதான் என்று தெரிகிறது. ஆனால், ஏற்கனவே இந்தப் பள்ளிகள் முன்னுரிமையான பொருளாதார ஒதுக்கீடுகளையும், நல்ல கட்டமைப்பையும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அதிக சலுகைகளைக் கொண்டே செயல்படுகின்றன.
மற்றொருபுறம், தனியார் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உதவியோடு 150 ராணுவப் பள்ளிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் நிதியமைச்சர். இந்த நெருக்கடிக் காலத்தில் எதற்கு ராணுவப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த அரசு நடப்பில் உள்ள பிரச்சனைகளைப் பேசவோ அல்லது எண்ணிப்பார்க்கவோ கூட இல்லையென்று பின்னர் தெரியும். நிதியமைச்சரின் பேச்சைக் கவனித்துப்பாருங்கள், சிறிய அரசு, பெரிய நிர்வாகம் என்பதன் இன்றைய அர்த்தம் மறைந்த அரசு, தனியார்களின் நிர்வாகம் என்பதை உணர்வீர்கள். நிவாரணங்கள் சமூக இயக்கங்களாலும், அரசு சாரா அமைப்புகளாலும் கொடுக்கப்படுகிறது, பொதுச்சொத்துக்கள் தனியார்மயமாக்கப்படுகிறது, பொதுத்துறை வங்கிகளின் முதலீடுகள் நீக்கப்படுகிறது, ராணுவப்பள்ளி முதற்கொண்டு தனியாரால் தொடங்கப்படவுள்ளது. ‘ஆத்மநிர்பார் பாரத்திற்கு’ இந்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது. பிறகு, யாருக்காக அல்லது எதற்காக இந்த பட்ஜெட்?.
கல்விக்கான கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்தும் எழ ஆரம்பித்துள்ளது. தரமான தனியார் கல்வி உறுதியாகாதபோதும் விளிம்புநிலை பெற்றோர்கள் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியைக் கல்விக்காகச் செலவு செய்கிறார்கள். கல்வி நிறுவனங்களின் மோசமான நிலைமை ஆசிரியர்களுக்கும் முதல் தலைமுறை மாணவர்களுக்கும் சவாலாகவே உள்ளது. ஒவ்வொரு வருடமும் கல்வித்துறை பரிந்துரைக்கும் நிதியிலிருந்து பட்ஜெட்டில் குறைத்தே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் 1,03,676.66 கோடி கேட்டதற்கு 93,224 கோடியே அரசு ஒதுக்கியுள்ளது. பிறகு, இந்தியாவில் ஆத்மநிர்பாரை எவ்வாறு எதிர்பார்க்க முடியும். உண்மை என்னவெனில், கொஞ்சம் விழிப்படைந்து இந்த ஆத்மநிர்பாரின் அம்சங்களுக்கும் கல்விக்கும் இடையே உள்ள தொடர்பைக் கவனித்தோம் என்றால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமிருக்காது.
கிரண் பாட்டி,
ஆராய்ச்சி திட்டங்களுக்கான மூத்த உறுப்பினர், புது டெல்லி.
தமிழில்; அப்துல்லா.மு
Courtesy; The Wire.