ஒரு மாதத்தைக் கடந்தும் தீவிரத்தைக் குறைக்காமல் இஸ்ரேல் அப்பாவி ஃபலஸ்தீனப் பொதுமக்களை இனப்படுகொலை செய்துவருகிறது. கடந்த ஒரு மாதமாக அங்கு என்னதான் நடந்து வருகிறது?
கடந்த அக்டோபர் 7 அதிகாலை நேரம் ஃபலஸ்தீனின் காஸா பகுதியை அதிகாரப்பூர்வமாக ஆட்சி செய்துவரும் ஹமாஸின் ராணுவ பிரிவான அல்-கஸ்ஸாம் படையணி (Al-Qassam Brigade)ஐச் சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தெற்கு இஸ்ரேல் எல்லையில் உள்ள பாதுகாப்பு வேலியைத் தகர்த்தும், மோட்டார் பொருத்தப்பட்ட பாராகிலேடர்கள் மூலமாகவும் தங்களின் பூர்விக நிலத்திற்குள் (இஸ்ரேலுக்குள்) நுழைந்தனர். அச்சமயம் காஸாவில் இருந்து ஏவப்பட்ட சில ராக்கெட்டுகளால் 1400 இஸ்ரேலியர்கள் இறந்தனர். 240 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதற்குப் பதில் தாக்குதல் நடத்தப் போவதாகக் கூறி இஸ்ரேல் அப்போதிலிருந்து இதுவரை கொடூரமான முறையில் வான்வெளித் தாக்குதல் நடத்தி அப்பாவி ஃபலஸ்தீனர்களை கொன்று குவித்து வருகிறது.
தற்போது வரை ஏறத்தாழ 10,022 மேற்பட்ட ஃபலஸ்தீனியர்களை காஸாவிலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 152 பேரையும் கொலை செய்துள்ளது. இதில் 4500க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் ஆவார். இது எந்த அளவிற்குக் கொடூரமானது எனில் 2019 முதல் இன்று வரை ஆண்டுதோறும் உலகளாவிய மோதல்களில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்கின்றது சேவ் தி சில்ட்ரன் (SAVE THE CHILDREN) அமைப்பு. அங்கு 40க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களை இஸ்ரேல் கொலை செய்துள்ளது.
தற்காப்புக்காக என்று கூறி ஐநாவினால் போர்க் குற்றம் என்று வரையறுக்கப்பட்ட அனைத்தையும் இஸ்ரேல் செய்து வருகிறது. உண்மையில் சொல்ல வேண்டும் எனில் பல தசாப்தங்களாகவே காஸா பகுதி இஸ்ரேலின் ஒரு திறந்தவெளிச் சிறைச் சாலையாகத் தான் வைத்திருந்தது. இன்று ஒரு படி மேலே சென்று அதனை ‘உலகின் நரகமாக’ மாற்றிவிட்டது. ஏன் சிறைச்சாலையிலிருந்து நரகம் என்று சொல்கிறேன் எனச் சற்று சிந்தியுங்கள்
சிறைச்சாலையிலாவது குடிக்கத் தண்ணீர், உண்ண உணவு, பிற அடிப்படைத் தேவைகள், மின்சாரம் போன்றவைக் கிடைக்கும். ஆனால் காஸாவை இஸ்ரேல் தாக்கத் தொடங்கியதிலிருந்து அங்குக் குடிதண்ணீர், உணவு, மின்சாரம், எரிபொருள், ஏன் மருந்துப் பொருட்களைக் இஸ்ரேல் கூட உள்ளே அனுமதிக்கவில்லை.
இஸ்ரேல் சற்றும் இடைவேளையின்றி ஏவும் ஏவுகணைகளுக்கு அப்பாவி பொதுமக்களின் குடியிருப்புகள், கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள், வழிபாட்டுத் தளங்கள் என அனைத்துமே இலக்குகளாக ஆகியுள்ளது. காஸாவில் மட்டும் ஏறத்தாழ 2.2 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் கிழக்கு, வடக்கில் உள்ள இஸ்ரேலுக்குள் செல்ல அனுமதி கிடையாது. தென்மேற்கில் காஸாவையும் எகிப்தையும் இணைக்கும் ரஃபா எல்லைப் பகுதி மட்டுமே காஸாவின் ஃபலஸ்தீன் மக்கள் வெளியேற ஒரே வழி ஆனால் அதனையும் எகிப்து திறப்பதில்லை. கடந்த 30 நாட்களில் மட்டும் 1.5 மில்லியன் ஃபலஸ்தீனர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
அல் அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். காஸாவின் ஒரே புற்றுநோய் மருத்துவமனை மின்சாரம் இல்லாததால் மூடப்பட்டது. இஸ்ரேலின் தீவிர தாக்குதலால் காஸா மாணவர்களின் இந்த ஆண்டுக் கல்வி பறிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், தூய நீர், போன்றவை இல்லாத காரணத்தினால் அங்குள்ளப் பெண்கள் மாதவிடாயைத் தாமதப்படுத்தும் மாத்திரைகளைப் பயன்படுத்துகின்றனர். காஸாவில் மட்டும் 50,000 கர்ப்பிணிப் பெண்கள் இருக்கின்றனர். அதில் ஒவ்வொரு நாளும் 180 பிரசவம் நடைபெறுகின்றன என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
ஒருபுறம் கொடூரமாகக் குடியிருப்புகளைத் தாக்கி அப்பாவி குடிமக்களை இஸ்ரேல் கொலை செய்கின்றதே என வருத்தப்படும் வேளையில்; அதை மிஞ்சும் அளவிற்கு வீடு இன்றி அனாதைகளாக அகதிகள் முகாம்களில் இருப்பவர்களைக் கூட இஸ்ரேல் வைக்கவில்லை. உலகிலேயே மிகப்பெரிய அகதிகள் முகாமான காஸாவில் உள்ள ஜபாலியா (Jabalia) அகதிகள் முகாம் ஏறத்தாழ 1,16,011 மக்களை உள்ளடக்கிய அந்த முகாமில் ஏவுகணை தாக்குதலை நடத்தி 195 நபர்களைக் கொலை செய்துள்ளது, மட்டுமின்றி மகஜி (Maghazi) அகதிகள் முகாமையும் விட்டுவைக்கவில்லை. அகதிகள் முகாம்களில் தாக்குதல் நடத்துவது ஒரு போர்க் குற்றம் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ஹமாஸ் போராளிகள் 40 இஸ்ரேலியக் குழந்தைகளைத் தலைவெட்டி கொன்றுவிட்டனர் என்று பொய் செய்திப் பரப்பின. பின்னர் அது பொய் என்று கண்டறியப்பட்டதும் அவர்களே அதனை மறுத்து விட்டனர். இதைத் துளியும் ஆராயாமல் உலக வல்லரசு என்று தன்னை மார் தட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் அதிபர் இஸ்ரேல் சொன்ன பொய்யைக் கிளிப்பிள்ளையைப் போலச் சொல்லி வந்தார். பின்னர் அதை மறுத்து விட்டார்.
மேற்கண்ட அனைத்தையும் வாசிக்கும் பொழுது உக்ரைன் – ரஷ்யா போரில் கொதிந்து எழுந்த உலக நாடுகள் இவ்வளவு கொடூரமாக இஸ்ரேல் அப்பாவிகளை இனப்படுகொலை செய்யும் பொது மட்டும் மெளனமாக இருப்பது ஏன்? என்கிற கேள்வியை எழுப்புகிறது.
இது மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுவில் 120 நாடுகளின் ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட உடனடி போர் நிறுத்தம் நிறைவேற்றப்பட்ட பின்பும் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்யவில்லையே அதை ஏன் எந்த பெரிய நாடுகளும் கேள்வி எழுப்பவில்லை. இவை வல்லாதிக்க நாடுகளின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தி விட்டது.