• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கட்டுரைகள்»உள்ளடக்கும் தேசியமும் விலக்கி நிறுத்தும் தேசியமும்
கட்டுரைகள்

உள்ளடக்கும் தேசியமும் விலக்கி நிறுத்தும் தேசியமும்

அ மார்க்ஸ்By அ மார்க்ஸ்June 1, 2021Updated:May 29, 2023No Comments14 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

தேசியம் எனும் கருத்தாக்கம் குறித்த புரிதல் நமக்குத் தேவை. குறிப்பாக, இந்திய தேசியமும் தமிழ்த் தேசியமும் பற்றிய புரிதல்கள் அவை எவ்வாறு, யாரால் வரையறுக்கப்படுகின்றன, அவற்றின் உள்நோக்கம் மற்றும் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள், தலித்கள் ஆகிய சிறுபான்மையினர் இதில் கவனம் செலுத்துதல் அவசியம்.


தமிழக அரசியல் சூழலில், 80களுக்குப் பிறகு ஈழப் போராட்டம் ஒரு முக்கியமான பங்கை வகித்தபோது, தேசியம் பற்றிய ஆரோக்கியமான விவாதங்கள் பல மேலெழுந்தன. தமிழ்த் தேசியம் வரையறுக்கப்படுவது தொடர்பான ஏராளமான நூல்களும் தமிழகத்திலும் இலங்கையிலும் வெளிவந்தன.


எனினும் இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மற்ற தமிழ் இயக்கங்களை ஒழித்துத் தனி ஒரு இயக்கமாக நின்றதற்குப் பின் இந்த ஆரோக்கியமான விவாதங்கள் இலங்கயில் மட்டுமின்றி தமிழகத்திலும் நின்று போனது.


தமிழகத்தின் ஒரு நூறாண்டு கால வரலாற்றை எடுத்துப் பார்த்தோமானால் தமிழ்த் தேசியத்தில் இரண்டு போக்குகள் தொடக்கம் முதல் இருந்தன.

  1. திராவிடக் கட்சிகள் முன்னெடுத்த தமிழ்த் தேசியம்: பெரியார், பிறகு திமுக முதலான திராவிடக் கட்சிகளால் மொழியப்பட்டது இது. தமிழ்நாட்டில் ஒரு 30 சதம் மொழிச் சிறுபான்மையர் உள்ளனர்; ஒரு 12 சதம் மதச் சிறுபான்மையர் உள்ளனர்; ஒரு 18 சதம் பட்டியல் சாதியினர் உள்ளனர். இவர்கள் யாரையும் ஒதுக்கிவிடாமல் உள்ளடக்கியது திராவிட தேசியம். வெறும் இரண்டரை சத அளவே உள்ள பார்ப்பனர்களைத்தான் அது வெளியில் நிறுத்தியது. அப்போது கூட அவர்கள் மீது வன்முறை யையோ, அவர்களை முற்றாக ஒதுக்க வேண்டும் என்றோ, அவர் களை வெளியேற்ற வேண்ரும் என்றோ யாரும்,பெரியார் உட்படச் சொன்னதில்லை. பார்ப்பனர்களுக்கும் கூட அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 2 சத ஒதுக்கீடு கொடுத்துவிடலாம், வரலாறு பூராவும் இருந்ததுபோல அனைத்துப் பதவிகளையும் அவர்களே ஆக்ரமிப்பது என்பதற்குத்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். என்று மட்டுந்தான் அவர் சொன்னார். சரியாகச் சொல்வதானால் அவர் பார்ப்பன ஆதிக்கத்தைத்தான் எதிர்த்தார். பார்ப்பனரை எதிர்க்கவில்லை. பின்னால் வந்த திமுகவோ இந்த பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பையும் கைவிட்டது. மொத்தத்தில் திராவிட தேசியம் என்பது தமிழர்கள் எல்லோரையும் உள்ளடக்குவதாக இருந்தது. எல்லாவகைச் சிறுபான்மை மக்களுடனும் அது மிகவும் நெருக்கமாக இருந்தது. முஸ்லிம் கட்சிகளுடன் அது கூட்டணி அமைத்தது. அது எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு Inclusive Nationalism,

  1. தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்னெடுத்த தமிழ்த் தேசியம்; இதற்கு ஒரு அடையாளமாக ம.பொ.சி எனப்பட்ட ம.பொ. சிவஞானத்தைச் சொல்லலாம். இவர் இங்குள்ள 30 சத மொழிச் சிறுபான்மையரையும் வெளியே நிறுத்தி Exclusive Nationalism ஒன்றை முன்வைத்தார். பார்ப்பனர்களை உள்ளடக்கினார். இந்து என்கிற அடையாளத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். மதச் சிறுபான்மையை பற்றி அவர் ஒன்றும் பேசவில்லையா யினும் அவரது பார்ப்பனீய ஆதரவு, இந்து மத அடையாளத்திற்கான அழுத்தம் என்பன இயல்பாகவே மதசிறுபான்மையினரை ஒதுக்கின.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்த இரண்டாவது போக்கு இன்னொரு பரிமாணம் எடுத்தது. பெங்களூரு குணா என்பவர் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்றொரு புத்தகம் எழுதினார். அப்பட்டமான வரலாற்றுப் புரட்டல்களுடன் கூடிய அந்த நூல் இங்கிருந்த கொடுமையான மன்னர் ஆட்சிகளை எல்லாம் பொற்காலம் என்றது. இங்குள்ள மொழிச் சிறுபான்மையினர்தான் தமிழ் மக்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிற ஒரு அப்பட்டமான பொய்யை முன்வைத்தது. அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்றெல்லாம்வெறுப்பைக் கக்கியது. வெறும் இரண்டரை சதமாக இருந்து கொண்டு பல மடங்கு அதிகமான அரசுப் பணிகளை எல்லாம் ஆக்ரமித்துக் கொண்டிருந்த பார்ப்பனர்களையும் பிற உயர்சாதியினரின் ஆதிக்கத்தையும் அது விமர்சிக்கவே இல்லை. ஏனென்றால் அவர்கள்தான் உண்மையான தமிழர்களாம்.

இவர்கள் இலக்காக்கித் தாக்கியதெல்லாம் ஈந்த 30 சதம் அளவு உள்ள மொழிச் சிறுபான்மையினரைத்தான்.
சரி, யார் அந்த மொழிச் சிறுபான்மையினர்?
தெலுங்கு, கன்னடம் முதலான மொழிகளைப் பேசுகிற சாதியினர்; உருது மொழி பேசும் முஸ்லிம்கள்; மார்வாரிகள் முதலானோரைத்தான் அவர்கள் தமிழர்களின் வீழ்ச்சிக்குக் காரணமான மொழிச் சிறுபான்மையினர் என்றனர்.
இதில் ஒரு சிறு பகுதியாக உள்ள மார்வாரிகள் தவிர மற்றவர்கள் அவ்வளவு பேரும் தமிழகத்தையே பல காலமாகத் தாயகமாகக் கொண்டு இங்கு வாழ்ந்து வருகிற சாதாரண மக்கள். இவர்களில் பெரும்பாலோர் இப்போது தமிழையே தாய்மொழி யாகக் கொண்டு, தங்கள் பிள்ளைகளைத் தமிழ் மீடியத்திலேயே படிக்க வைத்து வாழ்ந்து வருபவர்கள். அவர்களைத் திருப்பி அனுப்புவது என்றால் எங்கே போவார்கள்?


நமது பண்பாட்டை ஏற்றுக் கொண்டு, நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மக்களில் பெரும்பாலோர் கூலிகளாகவும், சாதாரண பணிகளிலும் இருப்போர். பிற தமிழ்ச் சாதிகளாக இவர்களால் அடையாளம் காட்டப்படுகிறவர்களைப் போலவே பொருளாதார நிலை உடையவர்கள். இந்த மொழிச் சிறுபான்மையினரை இரண்டாம் தரக் குடிமக்களாக்க வேண்டும், இட ஒதுக்கீடு போன்ற பலன்கள் இவர்களுக்குச் சென்று சேரக் கூடாது என்கிறார்கள். இங்கே நம்மோடு வாழ்ந்து நமது மலத்தை அள்ளி, இங்குள்ள சாக்கடைகளைச் சுத்தம் செய்து வாழ நேர்ந்த நம் அருந்ததியர் இனச் சகோதரர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாதரெனச் சொல்கிறார்கள். குனா இதை வெளிப்படையாகச் சொன்னவர்.
அது மட்டுமல்ல தலித் மக்களின் விடுதலைக்காக முன்னின்று, உலக அளவில் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கருக்கு இங்கு ஊரெங்கும் சிலைகள் திறக்கப்படுவதை “அம்பேத்கராம் மராட்டி யருக்கு” இங்கு சிலைகள் ஏன் எனக் கேட்டவர்கள் இவர்கள். இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். மார்வாரிகளைப் பற்றியும் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அவர்களில் எல்லோரும் பெரிய வணிகர்களாக இருப்பதில்லை. அவர்களிலும் எளிய மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்குத் தெரிந்து என்னுடைய நண்பர் ஒருவர் BSNLல் வேலை செய்கிறார். அடித்தளச் சாதியைச் சேர்ந்தவர் அவர் மனைவி ஒரு மார்வாரி இனத்தைச் சேர்ந்தவர்.

நம்முடைய தமிழர்கள் இங்கிருந்து கூலிகளாகவும் வணிகர் களாகவும் சென்று எத்தனையோ நாடுகளில் வசிக்கின்றனர், இலங்கையில் மலையகத்தில் இருக்கிறார்கள, மலேசியாவில், மொரிஷியசில், சிங்கப்பூரில் எல்லாம் இருக்கிறார்கள். சிங்கப்பூரில் தமிழ் அரச மொழிகளில் ஒன்று. அவர்களை எல்லாம் அந்தந்த நாடுகள் திருப்பி அனுப்புவது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோமா?
கி.ராஜநாராயணன் என ஒரு தமிழ் எழுத்தாளரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழின் ஆக முக்கியமான எழுத்தாளர். நவீன தமிழுக்கு வளம் சேர்த்தவர். கரிசல் மண்ணில் புழங்கப்படும் தனித்துவமான தமிழ்ச் சொற்களுக்கு ‘அகராதி’ உருவாக்கிய தமிழறிஞர் அவர்.
அவருடைய மூதாதையர் எத்தனையோ தலைமுறைக்கு முன்னதாக இங்கு வந்தவர்கள். அவரை இன்று திருப்பி அனுப்புவது முடியுமா, சரியா, நியாயமா?
அல்லது அவரது குடும்பத்தாரை இரண்டாம் தர மக்களாக, உரிமையற்றவர் களாக நடத்துவது என்றால். எத்தனை கொடூரமான மனித உரிமை மீறல்கள் இவை.


இங்கு வாழும் பிற மொழியினர் எல்லோரும் தமிழகத்தைச் சுரண்டி வளம் கொழிப்பவர்கள் அல்ல. இவர்களால் ஒரிஜினல் தமிழர்கள் எனச் சொல்கிற எல்லோரும் இங்கு கூலி வேலை செய்து துன்புறுபவர்களும் அல்ல. எல்லா மக்களிலும் பணக் காரர்களும் உள்ளனர் ஏழை எளியோரும் உள்ளனர். குடந்தை, மதுரை போன்ற இடங்களில் சௌராஷ்டிரர்கள் உள்ளனர். மிகவும் அடித்தள நெசவாளிகள் அவர்கள். ஆம்பூர், வாணியம்பாடி முதலான பகுதிகளில் வசிக்கும் உருது முஸ்லிம்கள் எல்லோரும் தோல் தொழிற்சாலைகள் வைத்திருப்பவர்கள் அல்ல. தோல் தொழிற்சாலைகளில் பெரிய பதவிகளில் பெரும்பாலும் உயர்சாதி இந்துக்கள்தான் உள்ளனர். தோலைச் சுரண்டித் தூய்மைப் படுத்துவது முதலான, தூய்மைக் குறைவான வேலைகளில் எவ்வளவோ உருது பேசும் முஸ்லிம்கள் பணியில் உள்ளனர். இவர்களை எல்லாம் உருது பேசுபவர்கள் என்பதற்காகவே இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்குதல் நியாயமா?
இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இப்படி மொழிவாரி தேசியம் பேசும் ம.பொ.சி.குணா, சீமான், மணியரசன் போன்றோர் தமிழ்நாட்டில் தற்போது வாழ்கிற மக்களில் இப்படியான “தமிழர்கள் அல்லாதவர்களை” அடையாளம் காண என்ன வழியைக் கையாள்கிறார்கள்?
அது பெரிய கொடுமை. சாதி அடிப்படையில் அவர்கள் ஒரிஜினல் தமிழர்களை இனம் காண்கிறார்களாம். எந்தச் சாதிமுறை, தீண்டாமை ஆகிய வற்றை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அந்தச் சாதிமுறையை இவர்கள் இந்த நோக்கில் தூக்கிப் பிடிக் கிறார்கள்.
உன் சாதியைச் சொல் நீ தமிழனா, இல்லையா எனச் சொல்கிறேன் என்கிறார் சீமான். நீ ஒரு அருந்ததியன், சௌராஷ்டிர நெசவாளி, உருது பேசும் முஸ்லிம் என்றால் தமிழன் இல்லை. வீட்டில் தமிழ் மட்டுமே பேசினாலும் சாதியில் நீ நாயக்கராக இருந்தால் நீயும் தமிழன் இல்லை., மண்வெட்டிக் கூலி தின்னும் ஓட்டர்களாக இருந்தால் அவர்களும் தமிழர்கள் இல்லையாம். அவர்கள் எத்தனை ஏழைகளாக இருந்தாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு, இலவசக் கல்வி முதலியன கூடாதாம்.


மக்களை இப்படிச் சாதி அடிப்படையில் கூறு போடும் இவர்கள் மிகப் பெரிய வரலாற்றுப் புரட்டர்களாகவும் உள்ளனர். தமிழர்களின் பெருமிதம் எனச் சொல்லி இவர்கள் கொண்டாடுவது எல்லாம் காலங் காலமாகச் சாதிமுறையையும் பார்ப்பனீயத்தையும் முன்னிறுத்திய பழங்கால மன்னர்களைத்தான். இங்கு கொடுமை யான நில உடைமை முறைகள், சமஸ்கிருதக் கல்வி, தேவதாசி முறை ஆகியவற்றை எல்லாம் புகுத்திய ராஜராஜ சோழன்தான் இவர்களின்
திரு உரு (icon). கொடும் ஏற்றத் தாழ்வுகளும், சாதி முறையும், தீண்டாமையும் தலைவிரித்தாடிய சோழர் காலம் அவர்களைப் பொருத்த மட்டில் பொற்காலம்.
கூர்ந்து பார்த்தால் இவர்கள் தமிழுக்கும் உண்மையானவர்களாக இல்லை என்பது புலப்படும். எண்ணாயிரம் என்கிற இடத்தில் சோழர் காலத்தில் இருந்த கல்வி நிலையம் குறித்து எல்லோரும் பீற்றிக் கொள்வார்கள். அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத் திட்டம் எல்லாம் முழுக்க முழுக்க சமஸ்கிருதமாகவே இருந்தது.
இவர்கள் இப்படி மொழி அடிப்படையில் தமிழர்களைக் கூறு போடுவது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் மத அடிப் படையிலும் இவர்கள் தமிழர்களைப் பிரித்து நிறுத்துகிறார்கள்
பார்ப்பனீய ஒதுக்கல்களுக்கும், வருண சாதி ஏற்றத் தாழ்வு களுக்கும் எதிரக மலர்ந்த சீர்திருத்த மதங்களான பௌத்தம், சமணம் ஆகியவற்றை இவர்கள் வட இந்திய மதங்கள் எனப் புறந் தள்ளுகின்றனர். அதன் மூலம் வருண சாதி அமைப்பை வலியுறுத்திய சனாதனப் பார்ப்பன மதத்தையே இவர்கள் தமிழர்களின் மதமாக முன்வைக்கிறார்கள். பார்ப்பனீயமும் வடநாட்டிலிருந்து இங்கு வந்ததுதான் என்பதைப் பற்றி இவர்கள் இம்மியும் கவலைப் படுவதில்லை. இவர்களின் இந்தக் கணக்குப் படி இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியனவும் அந்நிய மதங்கள்தான். ஆனால் தமிழின் சிகரங்களாக உள்ள ஐம்பெரும் காப்பியங்கள் எனச் சொல்லப்படுபவையும், கிட்டத்தட்ட எல்லாத் தமிழ் இலக்கண நூல்களும் இவர்களால் வட இந்திய மதங்கள் எனச் சொல்லப்படக் கூடிய பௌத்த, சமணப் புலவர்களால் உருவக்கப்பட்டதுதான். கிறிஸ்தவம் இங்கு அச்சைக் கொண்டு வந்தது; நம் மக்களுக்குக் கல்வியைத் தந்தது. முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்புகள் குறித்து மதுரைப் பல்கலைக் கழகம் ஐந்து தொகுதிகளாக நூல்கள் வெளியிட்டுள்ளது.

இந்துமதம் தொன்மையான மதம் என்பது உண்மைதான். இஸ்லாம் ஆயிரத்தும் மேற்பட்ட ஆண்டுகளாக இங்கு நம்மோடு வாழும் மதம். கிறிஸ்தவம் ஐநூறு ஆண்டுகளாகத் தமிழிலிருந்தும் தமிழர்களிடத்திலிருந்தும் பிரிக்க இயலாமல் ஒன்று கலந்த மதம். இன்று தமிழகத்தில் தடம் இல்லாமற் போனாலும் பௌத்தம் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையும் செழித்திருந்த மண் இது. இன்று தமிழ் பவுத்தம் என்றொரு ஆய்வுத்துறையே உருவாகி யுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பின் குறியீடாக அண்ணல் அம்பேத்கரால் முன்மொழியப் பட்ட மதம் அது.


இத்தனையையும் ஒதுக்கிவிட்டு என்ன சொல்கிறார்கள் அவர்கள்? என்ன செய்கிறார்கள் அவர்கள் இவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் தமிழர்களை ஒன்றிணைக்கும் தேசியமல்ல. சாதி, மதம் ஆகியவற்றின் பெயரால் தமிழர்களைக் கூறுபோடும் தேசியம்.
இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து என ஊரெங்கும் சொல்லித் திரிந்த பெரியாரை இவர்கள் ஏன் கரித்துக் கொட்டுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களால் கொண்டாடப்படும் பார்ப்பனீயத்திற்கு உறுதியான எதிரியாக அவர் இருந்தார் என்பதுதான் அவர்களின் எரிச்சல்,
இவர்கள் பேசுவது மக்களைச் சாதி, மதங்களுக்கு அப்பால் ஒன்றிணைக்கும் தமிழ்த் தேசியம் அல்ல. மாறாக மக்களைச் சாதி, மத அடிப்படையில் கூறு போடும் தமிழ்ப் பாசிசம். இது இன்று இந்த நாட்டில் உருவாகி வரும் கொடூரமான மதவாத பாசிசத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்று.
இரண்டு
இந்திய அளவில் பார்க்கும்போதும், இது போலவே தேசியம் குறித்து இருவகையான அணுகல்முறைகள் உண்டு. ஆனால் அது இப்படி மொழி அடிப்படையிலானதல்ல. மத அடிப்படை யிலானது. இந்திய தேசியத்தை மிகத் தீவிரமாக வரையறுக்கும் இந்துத்துவ சக்திகள் முன்வைக்கும் தேசியம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காந்தி முன்வைத்த இந்திய தேசியம். காந்தி கொல்லப்படுவதற்குக் காரணமே அவருக்கும் இந்துத்துவ சக்திகளுக்கும் தேசிய வரையறை விஷயத்தில் இருந்த முரண்பாடுதான்.
என்ன முரண்பாடு அது?


இந்தியா, இந்திய தேசியம் என்கிற கருத்தாக்கமெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் இங்கு கிடையாது. பிரிட்டிஷ் ஆட்சி தான் இப்போது உள்ள இந்தியாவை ஒருங்கிணைத்து ஒரு மையப்படுத்தப்பட்ட ஆட் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. அப்போது கூட ஒட்டு மொத்தமான இந்தியா, இந்தியர் என்னும் கருத்தாக்கம் எல்லாம் உருவாகவில்லை. பிளாசிப் போருக்குப் (1757) பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா ஒருங்கிணைக்கப் பட்டதை அறிவோம். 1857ல் சிப்பாய்க் கலகம் அல்லது முதல் சுதந்திரப் போர் நடந்தபோதுகூட இந்தியா, இந்திய தேசியம் என்கிற கருத்து, உணர்வு எல்லாம் இங்கு உருவாகவில்லை. சிப்பாய்க் கலகம் அந்த அடிப்படையில் உருவாகவும் இல்லை. 1858க்குப் பின் இங்கு நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சி அறிவிக்கப்பட்டது. 1885ல் இந்தியத் தேசிய காங்கிரஸ் உருவான போதும் அது இந்திய தேசிய உணர்வுடன் தொடங்கப் பட்டதல்ல. அதைத் தொடங்கியதே ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்கிற ஒரு ஆங்கிலேயர்.
நம்முடைய இந்திய சுதந்திரப் போராட்டக் கவிஞரான மகாகவி பாரதியார் 1905ம் ஆண்டு இங்கே எப்படி தேசபக்தி என்கிற உணர்வு திடீரென உருவானது எனச் சொல்வார். அப்போது இந்திய கவர்னராக இருந்த கர்சான் பிரபு, ஒன்றாக இருந்த வங்க மாநிலத்தை இந்துக்களின் மேற்கு வங்கம் எனவும், முஸ்லிம்களின் கிழக்கு வங்கம் எனவும் இரண்டு மாநிலங்களாகப் பிரித்தார். அதற்கு எதிராக இங்கு உருவான எதிர்ப்பைத்தான் நாம் இந்திய தேசியத்தின் துவக்கப் புள்ளியாகக் கொள்ள முடிகிறது. இமயம் முதல் குமரி வரை என்பதுபோன்ற உணர்வுடன் இந்தியாவை இந்தியர்களே ஆளவேண்டும் என்கிற கருத்தெல்லாம் இப்போதுதான் ஏற்பட்டது. வங்கப் பிரி வினையை ஒட்டி “தேசபக்தி என்கிற நவீன மார்க்கம்” தோன்றி, “நல்லோர்கள் சிந்தையை எல்லாம் புளகிக்கச் செய்தது” என 1908ல் நம் பாரதியார் எழுதுவார். இந்த நேரத்தில்தான் காந்தியும் தன் முக்கிய நூல்களில் ஒன்றான ‘ஹிந்த் சுயராஜ்” நூலை (1909) எழுதினார். இந்திய சுதந்திரம் பற்றிய அவரது கருத்தாக்கத்தை அதில் அவர் விளக்கியிருந்தார்.

அதே ஆண்டில் தாளீந்துத்துவத்தின் முன்னோடிகளில் முக்கியமானவரான வினாயக் தாமோதர் சாவர்கரும் (1883 1966) தன் “முதல் சுதந்திரப் போர்” என்னும் நூலை எழுதினார். அது 1857ல் நடந்த ‘சிப்பாய்க் கலகம்’ எனச் சொல்லப்பட்ட பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்ட வரலாறு. ‘எரிமலை’ எனத் தமிழிலும் அது மொழி பெயர்க்கப்பட்டது. அந்த நூலை வாசித்தால் இன்று இந்துத்துவவாதிகள் முன்வைக்கும் முஸ்லிம் வெறுப்பு எதுவும் அதில் இருக்காது. மாறாக இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து நின்று அந்நியர்களான பிரிட்டிஷ் காரர்களை எதிர்ப்பது என்பதுதான் அதன் அணுகல்முறையாக இருக்கும். ஆக, அந்நியர்கள் என்றால் வெளிநாட்டிலிருந்து வந்து நம்மை அடிமைகளாக்கி ஆளும் ஆங்கிலேயர். இந்தியர்கள் என்றால் அது முஸ்லிம்கள் உட்பட எல்லோரையும் உள்ளடக்கும் ஒரு கருத்து என்பதுதான். ஆக அப்போது அது எல்லோரையும் உள்ளடக்கும் ஒரு inclusive தேசியமாகத்தான் இருந்தது.


ஆனால் போகப் போக சாவர்கரின் தேசியம் முஸ்லிம்களை வெளியே நிறுத்தும் exclusive தேசியமாக மாறியது. வெள்ளையர்களை அந்நியர்களாகவும், எதிரிகளாகவும் பார்ப்பதற்குப் பதிலாக அவர் முஸ்லிம்களை அந்நியராகவும் எதிரியாகவும் கட்டமைக்கத் தொடங்கினார். இப்போது வெள்ளையர்களுக்கும் இந்தியா களுக்கும் உள்ள முரண்பாட்டைக் காட்டிலும் இந்தியர்களுக்கு உள்ளே இருந்த இந்து X முஸ்லிம் முரண்பாடே பெரிதாகப் பட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் இந்திய மக்களின் எதிரியாக அந்நிய ஆட்சியை முன்வைப்பதற்குப் பதிலாக இந்தியாவுக்குள்ளேயே முஸ்லிம்களை எதிரியைச் சுட்டிக்காட்ட இந்துத்துவம் தொடங்கியது. இந்த அடிப்படை யில்தான் “இந்துத்துவம் : இந்து என்பது யார்?” எனும் குறு நூலை (Hindutva : Who is a Hindu) சாவர்கர். 1923ல் வெளியிட்டார்.
இந்துத்துவவாதிகள் தேசியத்திற்கான தம் வரையறையை சாவர்க்கரின் இந்த நூலில் இருந்துதான் எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்து என்பவன் யார் என்கிற கேள்வியை எழுப்பி சாவர்க்கர் இப்படிப் பதிலளிப்பார்: “யார் ஒருவனுக்கு இந்தியாவே தந்தையர் நாடாகவும், புனித பூமியாகவும் உள்ளதோ அவனே இந்து. அது மட்டுமல்ல அவனுக்கே இந்தியர்களில் நாடான இந்தியா உரியது.” ஒரு Exclusive Nationalism என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு சாவர்க்கரின் இந்த விஷம் தோய்ந்த கருத்து. அதாவது இந்தியாவில் பிறந்தால் மட்டும் ஒருவர் இந்தியராக முடியாது. இந்தியாவே அவரது புனித பூமியாகவும் இருக்க வேண்டும். அவர்களின் இறைத்தூதர்கள் அல்லது இறைமகன்கள் தோன்றிய இடமாகவும் அதுவே இருக்க வேண்டும். அந்த வகையில் ஏசுவைக் கும்பிடும் கிறிஸ்தவர்களும், மக்காவைப் புனித மண்ணாகக் கருதும் முஸ்லிம்களும் இந்தியர்கள் அல்ல. இந்திய தேசியத்திற்கு உரியவர்கள் அல்ல இதுதான் இந்துத்துவம் அடிப்படையில் சொல்லும் சேதி.
இன்றளவும் பவுத்தர்கள், ஜெயின்கள், சீக்கியர்கள் எல்லோ ரையும் ஏற்றுக் கொள்ளத் தயாரக இருக்கும் இந்துத்துவவாதிகள் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் முக்கிய எதிரிகளக்கப் பார்ப்பததன் பின்னணி இதுதான்.


இங்கே உங்களூக்கு ஒரு கேள்வி தோன்றலாம். இந்த சாவர்கர் தான் கோட்சேயின் கையில் துப்பாகியைக் கொடுத்துக் காந்தியைக் கொல்வதற்குக் காரணமாக இருந்தவர். காந்தியும் இராமனைக் கடவுளாகக் கொண்டாடியவர்தான். தன்னை இந்துவாக அறிவித்துக் கொண்டவந்தான். ராமராஜ்யம் ஒன்றை உருவாக்குவதைத் தன் லட்சியமாகச் சொன்னவந்தான். பின் அவரை ஏன் இவர்கள் சுட வேண்டும்? இன்றளவும் முக்கிய எதிரியாக முன்னிறுத்த வேண்டும் வேறொன்றும் இல்லை. காந்திக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் உள்ள பகை எல்லோரையும் உள்ளடக்கும் தேசியத்திற்கும், ஒரு சாரரை வெறுத்தொதுக்கும் தேசியத்திற்கும் இடையிலான பகைதான்.
காந்தி தன்னை இந்துவாகச் சொல்லிக் கொண்டாலும் இந்த நாடு இந்துக்களுக்கு மட்டுமே உரித்தானது எனச் சொன்னதே இல்லை. இது இந்த நாட்டில் பிறந்த முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட எல்லோருக்குமான நாடு என்றார் அவர். தான் இராமனை வணங்குபவன் எனவும் ராமராஜ்யம் அமைய வேண்டும் எனவும் சொன்ன அவரிடம், “இராமன் அயோத்தியில் பிறந்தானா?” எனக்கேட்டபோது உடனடியாக மறுத்தவர் அவர். “என் இராமன் ஒரு இலட்சிய மனிதன். அவன் ஒரு வரலாற்று மனிதன் அல்ல” என்றார்.
நம்பிக்கையை வரலாற்றிலிருந்து பிரித்து. அணுகியவர் அவர். என்னுடைய மதம் எனக்கு எப்படிப் புனிதமானதோ அதேபோல உன்னுடைய மதம் உனக்குப் புனிதமானது என அறிவேன். என்னுடைய நம்பிக்கைகாக்கப் போராடுவது போலவே உன்னுடைய நம்பிக்கைகளுக்காகவும் போராடுவேன் என வாழ்க்கையையும் அரசியலையும் அணுகியவர் அவர்.
1947 ஆகஸ்டு 15 அன்று செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய கையோடு பசுவதைத் தடைச் சட்டத்தை அறிவிக்க வேண்டும் என கட்சிக்குள்ளிருந்து அவருக்கு அழுத்தம் வந்த போது, “நான் சிறு வயதுமுதல் கோமாதாவை வணங்கி வருபவன். ஆனால் என்னுடைய மதம் எப்படி இன்னொருவருடைய மதமாக ஆக முடியும்?” எனக் கேட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் அவர். நிறையச் சொல்லலாம். என்னுடைய புத்தகங்களில் இது குறித்து நிறைய எழுதியுள்ளேன். வாய்ப்பிருந்தால் படித்துப் பாருங்கள்.
அவர் தென் ஆப்ரிகாவில் 22 வருடங்கள் இருந்தார். அவருக்கு அங்கு ஆண்டு வருமானம் 6000 பவுண்டு. பெரிய தொகை அவர் அங்கு பிற இந்தியர்கள் எல்லோரையும் சேர்த்து இரண்டு ‘கம்யூன்களை அமைத்தார். அந்தக் கம்யூன்களில் இந்துக்கள், முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், குஜராத்திகள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், கூலிகள் தமிழர்கள் எனப் பலரும் ஒன்றாக வாழ்ந்தனர், எல்லொருடைய ஊதியமும் ஒன்றாக்கப்பட்டுச் சமமாள வசதிகளுடன் வாழ்ந்தனர். மலம் அள்ளுவது உட்பட அனைத்து வேலைகளையும் சமமாகப் பகிர்ந்து செய்தனர். அவர் எந்நாளும் வருணாசிரமத்தைக் கடைபிடித்ததில்லை.
தென் ஆப்ரிக்காவிலிருந்து இந்தியா வந்தவுடன் உடனடியாக அரசியலில் அவர் ஈடுபடவில்லை. இரண்டாண்டுகள் முழுமை யாக இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு, எல்லா மக்கள் போராட்டங்களிலும் கலந்து கொண்டுவிட்டு அவர் முதன் முதலில் அறிவித்த போராட்டம். ‘கிலாஃபத் இயக்கம்’. முஸ்லிம் பிரச்சினைகளுக்கான ஒரு இயக்கம். அலி சகோதரர்களும் மகாத்மா காந்தியும் கரம் கோர்த்துக் களத்தில் நின்றனர், உலகில் மிகபெரிய அளவு முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டில் எந்த ஒரு அரசியலும் அவர்களை உள்ளடக்காது சாத்தியமில்லை என அதன்மூலம் அவர் உலகுக்கு உணர்த்தினார். இனிய மாணவர்களே! எல்லோரையும் உள்ளடக்கிய inclusive nationalism என்பதை நீங்கள் புரிந்து கொள்வதற்கு மகாத்மா காந்தியைக் காட்டிலும் உங்களுக்கு எந்த எடுத்துக்காட்டும் கிடையாது.
காந்தி இங்கு வருவதற்கு முன் தேசியப் போராட்டம் என்பது உயர்சாதி இந்துக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. திலகர், அரவிந்தர். இப்படி. அதை விவசாயிகள். தொழிலாளிகள் எல்லோரும் இணைந்த மிகப் பெரிய மக்கள் போராட்டமாக மாற்றியது அவர்தான். அன்று தொடங்கி மகாராஷ்டிர சித்பவன் பார்ப்பனர்கள் அவரைக் கொல்ல முயற்சித்தனர். ஏழுமுறை முயற்சித்து இறுதியில் சாவர்க்கர் வழிகாட்டலில் ஒரு உயர்சாதி வன்முறைக் கும்பல் அவரைச் சுட்டுக் கொன்றது.

மூன்று,
தேசியம் பற்றிய கோட்பாட்டாளர்களில் ஒருவரான எர்னஸ்ட் கெல்னர், “தேசியப் போராட்டங்கள்தான் தேசத்தை உருவாக்குகிறதே ஒழிய, தேசம் தேசியப் போராட்டங்களை உருவாக்குவதில்லை” என்பார். இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இந்திய தேசியம்தான். முன்னதாக இந்திய தேசம் என ஒன்று இருந்ததில்லை. 1905ல் இங்கு உயர்சாதி மேட்டிமைச் சக்தியினரின் தலைமையில் உருவாக்கப்பட்ட தேசியப் போராட்டம்தான் இந்தியா என்கிற கருத்தாக்கத்தை உறுதி செய்தது. காந்தியின் இடையீடு அதை வெகுமக்கள் மயமாக்கியது. அப்படியாக உருவாக்கப்பட்ட தேசம் இங்கு இந்துக்கள் முஸ்லிம்கள், பார்ப்பனர்கள், தலித்கள், ஏழைகள், பணக்காரர்கள் என எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என காந்தி முயன்றார்.இன்னொரு பக்கம் இதை இந்துக்களுக்கான நாடாக மாற்றுவது என்பதில் இந்துத்துவவாதிகள் மிகத் தீவிரமாக முயன்றனர். பெரும்பான்மை மத உணர்வை அவர்கள் எளிதாகத் தூண்டினர். ஆனால் காத்தி என்கிற மனிதருக்கு இருந்த மக்கள் ஆதரவும், அவரிடமிருந்து வெளிப்போத்த அற தோக்கும். அவர்களின் முயற்சியை முறியடித்தன. அவர் உயிருடன் இருந்த வரை இது எல்லோருக்குமான தேசம் என்கிற கருத்தாக்கத்தை அவர்களால் தகர்க்க முடியவில்லை. கடைசியாக அவரைக் கொன்று தீர்த்தார்கள். அடுத்த சில மாதங்களில் பாபர் மசூதிக்குள் இராமர் சிலை வைக்கப்பட்டது. பல வட மாநிலங்களில் பசுவதைத் தடைச்சட்டங்கள் இயற்றப் பட்டன. பாரதீய ஜனசங் கட்சி உருவாக்கப்பட்டது.
அடுந்த சுமார் முப்பதாண்டுகளில் அவர்கள் பெரிய அளவில் மக்கள் திரள் செயல்பாடுகளில் இறங்காவிட்டாலும் மிகத் தீவிரமாக அமைப்பு ரீதியில் செயல்பட்ட அவர்கள் 1982 மீனாட்சிபுர மதமாற்றத்துக்குப் பின் தீவிரமாக வெளிப்போந்தார்கள். இடையே 1961 முதல் மீண்டும் மதக் கலவரங்கள் ஆங்காங்கு அரங்கேறின. விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் எனப் பலவாறான இயக்கங்கள் உருவாயின. 1992ல் பாபர் மசூதி இடிப்பு, 2002ல் குஜராத படுகொலைகள், 2004ல் மத்தியில் ஆட்சி. என இங்கு முஸ்லிம்களை இரண்டாம் தரக் குடிமக்களக ஒதுக்கி நிறுத்தும் exclusive natioralism இந்திய அளவில் தலை தூக்கியது.


நான்கு:
தேசிய உருவாக்கத்தின் அடிப்படை என்ன என்பதை.எல்லா நாடுகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும் பொதுவாக வரையறுத்து விட முடியாது. ஒரு நாட்டில் தேசிய உருவாக்கத்தின் அடிப்படை யாக மதம் முன்வைக்கப்படலாம். இந்துத்துவ தேசியம் மத அடிப்படையில் கட்டமைக்கப்படுவதைப் பார்த்தோம்.சரி, மதம்தான் தேசியத்திற்கு அடிப்படையாக இருக்குமா என்றால் அப்படியும் இல்லை. இரண்டு நாடுகளிலும் ஒரே மதத்தினரே வாழ்ந்தபோதும் பாகிஸ்தானும், வங்கதேசமும் ஒன்றாக இருக்க முடியவில்லை. பெரும் இரத்தக் களறியுடன்தான் அவை பிரிந்தன.


இதோ இலங்கையில் நம் தமிழ் பேசும் மக்கள் ஒரே மொழி பேசக் கூடியவர்களாக இருந்த போதும் இன்று மூன்று தேசங் களாகப் பிரிந்து கிடக்கின்றனர். தமிழகத்தில் கூட தமிழ் பேசுகிற முஸ்லிமகள் தவிர உருது பேசுகிற முஸ்லிம்களும் கொஞ்சம் உள்ளனர். முற்றிலும் தமிழ் மட்டுமே பேசும் இலங்கை முஸ்லிம்கள் தம்மைத் தமிழர்களிடமிருந்து பிரித்துத் தனித் தேசியமாக முன் வைக்கின்றனர். இங்கே மதம் என்பது தேசியத்தின் அடையாளமாக அமைகிறது. அதே நேரத்தில் மலையகத் தமிழர்கள், அவர்கள் பெரும்பாலும் இந்துக்களாக இருந்தபோதிகும், தமிழ் பேசுபவர் களாக இருந்தபோதும், யாழ்ப்பாணத் தமிழர்களிலிருந்துத் தனித்து ஒரு தேசிய இனமாக உணர்கின்றனர். எனவே மதமோ, மொழியோ இங்கு தேசியத்தின் அடிப்படையாக இல்லை. பஞ்சாபிலும் மொழிக்கு அப்பாற்பட்ட தேசியத்தைப் பார்க்க முடிகிறது. அங்கு வாழும் சீக்கியர்களும், இந்துக்களும் பஞ்சாபி என்கிற ஒரே மொழி பேசுபவர்களானாலும் அவர்கள் தனிதனித் தேசியமாக உணர்கின்றனர்.


அவர்களை ஒரே இனமாக உணரவைக்க மொழிக்கு அங்கே சக்தியில்லை. பாகிஸ்தாளையும் வங்கதேசத்தையும் ஒரே தேசிய உணர்வுக்குள் இணைப்பதற்கு அங்கு மதத்தால் முடியவில்லை. ஒன்றாக இருந்த விசால ஆந்திர மாநிலத்தில் ஒரே மொழி (தெலுங்கு) ஒரே மதம் என இருந்தும் அது ஒற்றை அலகாக நிலைக்க முடியவில்லை. தெலங்கானா தனியாகப் பிரிந்து நான்காண்டுகளுக்கு மேலாகிவிட்டன. தெலங்கானா பிரிவினையின் அடிப்படையாக ‘வளர்ச்சி’ (development) என்பது இருந்தது. எங்கள் நாட்டின் ஊடாகத்தான் எல்லா நதிகளும் பாய்ந்தாலும் வளர்ச்சியில் உரிய பங்கு எங்களுக்கு இல்லைஎனத்தெலங்கான பிரிவினை இயக்கத்திற்குத் தலைமை ஏற்றவர்கள் வாதிட்டு வெற்றி பெற்றனர்
ஆக ஒரு தேசம் அமைவதற்கு மொழி, இனம், பிரதேசம், மதம் என்றெல்லாம் இயற்கையான காரணி என ஏதுமில்லை. காரணங்கள் என்பன உருவாக்கப்படுபவை; கட்டமைக்கப்படுபவை. (consructed). அந்தந்தச் சமூகங்களில் உள்ள பெரும்பான்மை ஆதிக்க சக்திகளே அதைத் தீர்மானிக்கின்றன. இதன் பொருள் அவ்வாறு உருவாக்கப்படும் காரணிகள் பொய்யானவை என்பதல்ல, இந்தியாவில் முஸ்லிம்களும் இந்துக்களும் தனித்தனி மதந்தினர் என்பது ஒரு உண்மை. முஸ்லிம்களின் புனிதத் தலம் மெக்காவிலும், இந்துக்களுக்கு அது காசியிலும் உள்ளதென்பதும் சாவர்க்கர் சொன்னது போல ஒரு உண்மைதான். ஆனால் ஒரு தேசம் உருவாவதற்கு இதெல்லாம் தடையில்லை என்றார் காத்தி. அது ஒன்றே ஜனநாயகம் தழைப்பதற்கான, எல்லோரும் இன்புற்றிருப்பதற்கான ஒரே வழி என்றார் அவர். இல்லை இந்துக்களும் முஸ்லிம்களும் வெவ்வேறு மதத்தினர். ஒன்றாக இருக்க முடியாது, நாம் இருவரும் எல்லாவற்றிலும் நாம் வேறு வேறு என வாதிட்டு ஒரு பெரிய இரத்தக் களறியையும் உருவாக்க முடியும் என்பதற்கு சாவர்க்கரின் இந்துத்துவ தேசியம் ஒரு எடுத்துக்காட்டு.


இந்த நிலையைத்தான் தேசியம் என்பது ஒரு “கற்பிதம் செய்யப்பட்ட சமூகம்” (imagined commiunity) என பெனடிக்ட் ஆன்டர்சன் குறிப்பிடுவார். இதன் பொருள் தேசியம் என ஒன்றில்லை என்பதோ. அல்லது அது ஒரு மாயை என்பதோ அல்ல. தேசியத்தின் பெயரால் மக்கள் ஒருங்கிணைப்பு சாத்தியமாகிறது. தேசியத்தின் பெயரால் ஒருவன் அல்லது ஒருத்தி ஒரு அடையாளத்தைப் பெறுகிறார்கள். தான் முகம் பார்த்தறியாத எங்கோ இருக்கும் ஒருவரைத் தனது தேசத்தவர் என உணர்ந்து ஒரு ஒற்றுமை உணர்வை (solidarity) வெளிப்படுத்துவதை அது சத்தியமாக்குகிறது. இன்னொரு பக்கம் தேசியத்தின் பெயரால் போர்கள் நடக்கின்றன, கொலைகள் நடக்கின்றன, புதிய நாடுகள் உருவாகின்றன. நாடுகள் பிரிகின்றன. நாடுகள் இணைகின்றன. எந்த அடிப்படையில் நாடுகள் பிரிகின்றன அல்லது இணைகின்றன என்பதைப் பொருத்தமட்டில் வரலாறும் அரசியலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரியாரும் ம.பொசியும் தமிழகத்தை வெவ்வேறாகக் கட்டமைத்தனர், காந்தியும் சாவர்க்கரும் இந்திய தேசத்தை அவ்வாறே வெவ்வேறாகக கட்டமைத்தனர். யார் எப்படிக் கட்டமைக்கின்றனர் என்பது அவரவர்களின் அரசியலைப் பொருத்து அமைகிறது. அறம் சார்ந்த பார்வையுடன் எல்லோரையும் உள்ளடக்கும் தேசியமே எல்லோருக்குமானது. சமாதானத்திற்கும் ஒற்றுமைக்கும் வழிகோலுவது. காந்தியும், பெரியாரும் அந்த வகையில் நமக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

இன்றைய உலகில் ஒற்றை இனம் அல்லது மொழி, அல்லது மதம் முதலான வடிவங்களில் தேசம் அமைவது சாத்தியமில்லை. பல்வேறு வேறுபாடுகளுடன் உருவாகிற சமூகங்களில், இத்தகைய அடையாளங்களின் அடிப்படையில் நாடுகளைப் பிரிப்பதற்கான புவியியல் சாத்தியங்கள் எல்லா நாடுகளிலும் இருப்பதும் இல்லை.அவரவர் அடையாளம், அவரவர் மொழி, மதம், பண்பாடு அவரவர்க்கு முக்கியம். அதே போல அடுத்தவர் பண்பாடு, மொழி, மதம் முதலானவை அவர்களுக்கு முக்கியம் என்கிற உணர்வு எல்லோருக்கும் வேண்டும். இதற்கு எதிரான அரசியல் பாசிசத்திற்கே வழி வகுக்கும். பாசிசம் எந்தச் சிறுபான்மைக்கு எதிராக வடிவம் கொள்கிறதோ அந்தச் சிறுபான்மையை மட்டும் ஒடுக்குவதில்லை. எந்தப் பெரும்பான்மையின் பிரதிநிதி எனத் தன்னைக் காட்டிக் கொள்கிறதோ அந்தப் பெரும்பான்மையின் உரிமைகளையும் அது பறிக்கும். அது இறுதியில் ஒரு அதிகாரக் கும்பலின் கொடூரமான ஊழல் ஆட்சியாகவே அமையும். உலகெங்கிலும் பாசிசச் சர்வாதிகாரிகள் அப்படித்தான் நடந்துள்ளனர். இந்தியாவும் சரி, தமிழகமும் சரி பல்வேறு பன்மை அடையாளங்களைச் சுமந்து நிற்பவை. இந்தப் பன்மைத்துவத்தைக் காப்போம். பன்மைத்துவத்திற்கு எதிரான சக்திகளை அடையாளம் கண்டு எதிர்ப்போம். பாசிசம் எதோ ஒரு சமூகத்திற்கு மட்டும் கேடல்ல. அது எல்லோருக்கும் கேடு. தேசிய உணர்வு கூடாது என நான் சொல்லவில்லை. ஆனால் தேசியத்திற்கும் பாசிசத்திற்குமான எல்லைக் கோடு துல்லியமாக வரையறுக்கப்பட வேண்டும். எல்லோரையும் உள்ளடக்குவது ஒன்று தான் தேசியம் பாசிசமாக மாறாமல் இருப்பதற்கான ஒரே வழி.

பேராசிரியர் அ. மார்க்ஸ்

(06.09.2010 அன்று சென்னையில் நடந்த 5io பயிற்சி முகாமில் ஆற்றிய உரை)

Loading

இந்தியா தேசியம்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
அ மார்க்ஸ்
  • Website

Related Posts

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025

நாம் ஏன் மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும்?

February 22, 2025

Why You Should Study in Central Universities?

February 20, 2025

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.