தென்னிந்திய சினிமாவானது வணிகத்தை மையப்படுத்திய ‘ Pan India ‘ சினிமா எனும் பிரம்மாண்டமான, இயல்பிற்கும் மண்ணிற்கும் சம்பந்தமில்லாத, வரலாற்று திரிபுகளையும், RSS-ன் அஜன்டாக்களையும் உள்ளடக்கிய பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் குறிப்பிடத்தக்க சில திரைப்படங்கள் மட்டுமே மக்களுக்கானதாகவும், மண்ணிற்கானதாகவும் வெளிவருகின்றன. அப்படி தற்பொழுது வந்திருக்கும் திரைப்படம்தான் “ஜன கண மண”.
கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும், வெற்றியையும் பெற்று தற்போது OTT தளத்தில் வெளியாகி அதிக கவனத்தை பெற்று பேசுபொருளாகி உள்ளது இத்திரைப்படம்.
திரைப்படம் குறித்தும் அது கூறும் அரசியல் குறித்தும் பார்ப்போம்.
கர்நாடகாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றும் சபா மர்யம் (மம்தா மோகன்தாஸ்) வாகன விபத்தில் கொல்லப்படுகிறார். கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுகின்றனர். அப்போராட்டத்தில் காவல்துறையால் வன்முறை உருவாக்கப்படுகிறது. இந்நிலையில் இக்கொலை வழக்கை விசாரிக்க ஏசிபி சஜ்சன் குமார் (சூரஜ் வெஞ்சரமூடு) விசாரனை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். ஏசிபி சஜ்சன் குமார் தலைமையிலான குழு குற்றவாளிகளை கண்டுபிடித்தனரா? விசாரணை நேர்மையாக நடைபெற்றதா? நீதி வழங்கப்பட்டதா? என்பதை சுவாரஸ்யமான திருப்புமுனைகளுடன் படம் நகர்கிறது.
திரைப்படத்தின் முதல் பாதி முழுவதும் போலீஸ் விசாரணையும் இரண்டாம் பாதி முழுவதும் கோர்ட் ரூம் ட்ராமாவாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இத்திரைப்படம் இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளையும், பேசுபொருள்களையும், இந்திய மக்களின் பொதுப்புத்தியையும் காட்சிப்படுத்தியுள்ளது.
திரைப்படம் பேசியுள்ள அரசியல்:
* இந்தியாவின் புகழ்பெற்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் படர்ந்து காணப்படும் சாதியம், அதனால் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்களின் நிலை.
* கல்வி வளாக படுகொலைகள் விபத்துகளாகவும், தற்கொலைகளாகவும் அதிகார, அரசியல் வர்க்கத்தினரால் எப்படி மாற்றப்படுகிறது.
(இவை ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமூலா, சென்னை IIT மாணவி ஃபாத்திமா லத்தீஃப் கொலைகளையும், சமீபத்தில் சென்னை IIT-ல் விலகிய பேராசிரியர் விபின்-இன் கருத்துக்களையும் நினைவூட்டுகிறது)
* மாணவர்களின் போராட்டத்தில் காவல்துறை, ஆளும் கட்சியை சேர்ந்த நபர்களால் வன்முறை நடத்தப்பட்டு போராட்டத்தை மட்டுப்படுத்துவதிலும், திசைதிருப்புவதிலும் ஈடுபடுதல்.
(இவை JNU தாக்குதல்கள், ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழக நூலகம் சூறையாடல் போன்றவற்றை நினைவூட்டுகிறது).
* உண்மை குற்றவாளிகள் மறைக்கப்பட்டு போலியாக குற்றவாளிகள் உருவாக்கப்படுவது.
* என் கவுண்டர்களை நியாயப்படுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் (2019 ஹைதராபாத் என்கவுண்டர்) இவற்றின் மூலம் பொதுமக்களை திருப்தியுடன் செய்வது. அதன் மூலம் மக்களின் உணர்வுகளை ஓட்டாக்குவது மற்ற பிற அரசியல் லாபங்கள் குறித்து திரைப்படத்தில் பேசப்பட்டது.
* அரசு கட்டமைப்பின் தோல்விகளை மறைக்க அதிகார வர்க்கத்தை வைத்து மேற்கொள்ளப்படும் திசைதிருப்பல்கள்.
* ஊடகங்கள்களை நம்மை எப்படி வழிநடத்துகின்றன. ஊடகங்களின் அரசியல் பங்களிப்பு.
* பெண்ணுரிமை பேசுவோரின் ஒருபக்கச் சார்பு நிலையை கேள்விக்கு உட்படுத்துதல்.
* சாதி,மத, அடையாளங்களை வைத்து மனிதர்களை மதிப்பிடுவது. (படத்தில் நீதிபதி கூறும் ‘அவங்கள பார்த்தாலே யார் என்று கண்டுபிடித்து விடலாம்’ என்னும் வசனமானது பிரதமரின் ‘ஆடையை வைத்தே அடையாளம் காணலாம்’ என்பதை நினைவு படுத்துவதாகும், பார்ப்பனியம் கூறும் வர்ண முறைகளை நினைவுபடுத்துவதாகம் உள்ளது)
* வட இந்தியாவில் மாட்டிறைச்சி பெயரால் நடக்கும் கொலைகள், பெனிக்ஸ்,ஜெயராஜ் கொலை வழக்கு, கேரளாவில் உணவுக்காக அடித்தே கொல்லப்பட்ட மனு போன்றவற்றை குறித்தான வசனங்கள்.
* அழகு குறித்து 2-ஆம் வகுப்பு புத்தகத்தில் இடம்பெற்ற ஓவியம் அது குழந்தைகளிடம் ஏற்படுத்தும் உளவியல் மாற்றங்கள் என்று ஒவ்வொரு காட்சியிலும் அலுப்புத் தட்டாமல் சுவாரசியமான காட்சியமைப்புகளும், சமரசமற்ற நேரடி வசனங்களும் மக்களை நோக்கியும் அரசியல் அதிகார வர்க்கத்தை நோக்கியும் வீசப்படுகின்றன.
திரைப்படத்தில் பல கருத்துக்கள் தொடர்ந்து பேசப்பட்டு வந்தாலும் சுவாரசியம் குன்றாமலும் படத்தில் இருந்து பார்வையாளர்கள் விலகாமலும் படத்துடன் இணைந்து பயணிக்க வைக்கிறது சிறப்பான திரைக்கதை அமைப்பு.
நடிகர், நடிகைகளின் தேர்வும் அவர்களின் நடிப்பும் படத்தில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. நடிகராகவும் (அட்வகேட் அரவிந்த் சுவாமிநாதன்) தயாரிப்பாளராகவும் நடிகர் பிரித்திவிராஜிற்கு முக்கிய படமாகும். கதை, திரைக்கதை, வசனத்தின் மூலம் முழு படத்தின் ஆணிவேராக இருக்கிறார் ஷாரிஸ் முஹம்மத். ஷாரீஸ் முஹம்மதின் திரைக்கதைக்கு இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனியின் இயக்கம் இன்னும் வலு சேர்த்துள்ளது. ஒளிப்பதிவும், இசையும் படத்தை இயல்பாக நகர்த்திச் சென்றுள்ளது.
மிகச்சிறந்த பொலிடிக்கல் திரில்லர் படமாக வந்துள்ள இப்படம் அனைவருக்கும் புரியும் வகையிலும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பார்க்கும் வகையில் வந்துள்ளது. படம் NETFLIX ஓ.டி.டி. தளத்தில் கிடைக்கிறது. (தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது)
தெளஃபீக் – எழுத்தாளர்