முதலாம் உலக யுத்தம் 1914- ல் துவங்கியது. அதுவரை ஐரோப்பாவில் இருந்த சிறு அரசுகள் பல ஒன்றினைந்து தேசிய அரசுகளாக மாற்றம் கண்டிருந்தன. இயந்திரமயமாதலும் காலணியாதிக்கமும் அரசியல் மற்றும் பொருளாதார போட்டியை அவற்றிற்கு மத்தியில் உருவாக்கி இருந்தன. குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, ரஷ்யா போன்றவை தமது ஆதிக்கத்தை விரிவுப்படுத்த கடுமையாக முனைந்தன. ஐரோப்பா, வடஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை ஆட்சி புரிந்த உஸ்மானிய கிலாஃபத்தும் இந்த அதிகாரப்போட்டியில் தம்மை பாதுகாக்க உள்ளிழுக்கப்பட்டது.
உஸ்மானிய கிலாஃபத் இஸ்தான்புல்-ஐ தலைமையிடமாக கொண்டு 1517 ஆம் முதல் கிட்டதிட்ட 400 ஆண்டுகளாக மேற்கூறிய நிலபரப்பை ஆண்டது. 17-ம் நூற்றாண்டில் அது புவி நிலபரப்பின் 29% சதவீதத்தை தன் ஆளுகைக்கு கீழ் வைத்திருந்தது. அதுமட்டுமல்லாது இந்தியா உள்ளிட்ட முஸ்லிம் ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட பிற பகுதிகளும் உஸ்மானிய கிலாஃபத்தை ஏற்றிருந்தன. இதனால் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் தலைமை தாங்கும் அரசாகவும் முஸ்லிம்களின் தலைவராக உஸ்மானிய கலீஃபாவும் பார்க்கப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு பின்னர் நேர்வழி நின்ற கலிஃபாக்களிலிருந்து பின்வந்த ஆட்சியாளர்கள் வேறுபட்டாலும், மன்னராட்சியின் சாயலில் அவர்கள் செயல்பட்டிருந்தாலும் அந்த அரசுகள் முஸ்லிம் உம்மத்தை ஒரே தலைமையில் இணைத்தன. ஜும்ஆ குத்பாக்களில் கலீஃபாவின் பெயர் உச்சரிக்கப்பட்டு அவருக்காக துஆவும் கேட்கப்பட்டது. உலகத்தில் பல பகுதிகளிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் தம்மை ‘ஒரே உம்மத்’ என்ற ஆத்மார்த்தமாக உணர்ந்துக் கொள்ள இது வழி வகுத்தது. மேலும் பல்வேறு தருணங்களில் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் தமது நேரடி ஆளுகையின் கீழ் வாழாத முஸ்லிம்களையும் உஸ்மானிய கலிஃபாக்கள் காப்பாற்றியதற்கான வரலாற்று சான்றுகள் உண்டு. இவ்வாறு 13 நூற்றாண்டுகளாக உலக முஸ்லிம்களை ஆன்மீகத்தளத்திலும் அரசியல் தளத்திலும் ஒன்றினைத்து வைத்த அரசு ஐரோப்பிய அதிகார போட்டியினுள் உள்ளிழுக்கப்பட்டது.
கேந்திர முக்கியத்துவம், கனிம வளங்கள், பெருமளவில் உழைக்கும் மக்கள் தொகை என சகலமும் உள்ளடக்கிய இந்த அரசை காலி செய்து தமது காலணியாதிக்கத்துக்கு கீழ் கொண்டு வர ஐரோப்பிய காலணியவாதிகள் சூழ்ச்சிகள் செய்தனர். இதற்கு முதலாம் உலக யுத்தம் வெளிப்படை காரணமாக மாறியது. உலகப்போரின் நிகழ்வுகளை விவரமாக விவாதிப்பது இங்கு நம் நோக்கமன்று. ஆகவே ஃபலஸ்தீன் தொடர்பாக மட்டும் உலக போரின் போதும் அதற்கு பின்னரும் நடந்த நிகழ்வுகளையும் கிலாஃபா வீழ்ச்சிக்கும் ஃபலஸ்தீனில் இஸ்ரேல் என்னும் கள்ளதேசம் உருவானதற்கான தொடர்பையும் மட்டும் இங்கு விவாதிப்போம்.
முதலாம் உலகப்போர்:-
ஆஸ்திரியா இளவரசரை செர்பிய இளைஞர் ஒருவர் கொன்ற போது ஐரோப்பாவில் உருவான பதட்டமே இப்போருக்கு உடனடி காரணம் ஆயிற்று. ஆயினும் இதன் உண்மைக்காரணம் ஐரோப்பிய நிலவி வந்த அதிகாரப்போட்டியே! ஐரோப்பிய நாடுகள் இதற்கு முன்பும் தமக்கிடையே நூற்றுக்கணக்கான போர்களில் ஈடுபட்டிருக்கின்றன. ஆயினும் இப்போர் அளவிலும், அது ஏற்படுத்திய தாக்கத்திலும் பிரமாண்டமானதாகும். ஆஸ்திரியா ஹங்கேரி, ஜெர்மனி, பல்கேரியா மற்றும் உஸ்மானிய கிலாஃபா ஆகியவை ஒரு அணியாகவும்(மைய அணி), காலணியாதிக்கத்தில் முன்னணியில் நின்ற பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா போன்றவை எதிர் அணியிலும்(நேச அணி) போரிட்டன. போர்கள் ஐரோப்பாவில் மட்டுமல்லாது இவற்றின் ஆதிக்கத்தில் இருந்த ஆசிய மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளிலும் நடைப்பெற்றன. இதுவே இதனை உலகப்போர் என்று அழைக்கக் காரணமானது. பிந்தைய அணி அறிவியல் தொழில்நுட்பம், மனித வளம், பொருளாதாரம், ராணுவம் என எல்லாவற்றிலும் முந்தைய அணியைவிட வலிமையாக இருந்தது. இறுதியில் அதுவே வெற்றியும் கண்டது.
Sykes-Picot ஒப்பந்தம்:-
போர் நடந்துக் கொண்டிருக்கும் சூழலில் உஸ்மானிய கிலாஃபத்தை வீழ்த்திய பிறகு அதன் நிலபரப்புகளை எவ்வாறு பங்கீடு செய்வது என்பது தொடர்பாக இரகசிய பேச்சுவார்த்தையும் ஒப்பந்தமும் பிரிட்டன் மற்றும் பிரான்ஸுக்கு இடையே நடைப்பெற்றது. சரியாக சொல்ல வேண்டுமெனில் 1915-ம் ஆண்டு நவம்பரில் துவங்கிய இந்த ரகசிய பேச்சுவார்த்தை 1916 ஜனவரி மாதம் வரை நீடித்தது. பிரிட்டன் சார்பில் மார்க் ஸைக்ஸ் என்பவரும் பிரான்ஸ் சார்பில் பிரன்கோயில் பைகோட் என்பவரும் இப்பேச்சுவார்த்தையை துவங்கினர். ரஷ்யா இப்பேச்சுவார்த்தையை அங்கீகரித்து அமைதி பார்வையாளராக இருந்தது. வரலாற்றில் இது ஸைக்ஸ்-பைகோட் உடன்படிக்கை(Sykes-Picot Agreement) என்று அழைக்கப்படுகிறது. கிட்டதிட்ட 1100 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்களின் கைகளிலிருந்த ஃபலஸ்தீனம் ஐரோப்பாவின் ஆதிக்கத்தின் கீழ் செல்ல அடிப்படையாக இருந்தது இந்த உடன்படிக்கையே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த ஒப்பந்தப்படி, அரேபிய தீபகற்பத்தை(அதாவது இன்றைய சவூதி அரேபியா, கத்தார், ஓமன் போன்ற நாடுகள்) தவிர்த்து பிற அரபு நிலபரப்பையும் தென்கிழக்கு துருக்கியையும் தங்களுக்கிடையில் பிரித்துக் கொள்ளும் வகையில் ஸைக்ஸ்-பைகாட் எல்லைக் கோடுகள் வரையப்பட்டன. ஃபலஸ்தீன், ஜோர்டான், தெற்கு ஈராக் ஆகியவை பிரட்டனுக்கு சொந்தமாகும் என்றும் லெபானான், சிரியா, வட்க்கு ஈராக், தென்கிழக்கு துருக்கி ஆகியவை பிரான்ஸுக்கு சொந்தமாகும் என ஒப்பந்தம் செய்துக்கொண்டனர். உலகப்போர் முடிந்து உஸ்மானிய கிலாஃபத் தோல்வியுற்ற போது, 1920ம் ஆண்டு மேற்கண்ட உடன்படிக்கையின்படி இந்த நிலபரப்புகளை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தன. அதற்கு உலக அங்கீகாரம் பெறுவதற்கு காலணிய சக்திகள் தொடர் முயற்சி மேற்கொண்டன.
பால்ஃபர் அறிக்கை:-
இதற்கிடையே நிகழ்ந்த ஒரு சம்பவம் ஃபலஸ்தீனிலும் ஒட்டுமொத்த அரபுலகிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதை விவரிக்கும் முன்னதாக அப்போது நிலவிய சூழலை நாம் மனதில் கொள்வது இந்த விவகாரத்தை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள உதவும். சியோனிஸ் இயக்கமும் யூதர்களும் தங்களுக்குரிய யூத நாட்டை ஃபலஸ்தீனில் அமைக்க கடுமையாக முயற்சித்து வந்தன. இவற்றை சாதிப்பதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசுகளை அவை பலவகையிலும் பணியவைக்க முயற்சித்தன. இதே நேரத்தில் யூதர்கள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஃபலஸ்தீனில் தொடர்ந்து குடியேறிக்கொண்டே இருந்தனர். ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த சியோனிச நிதியுடன் தற்போது புதிதாக யூதர்களின் தேசிய நிதி(Jewish National Fund) நிறுவப்பட்டது. இந்த அமைப்பு ஃபலஸ்தீனில் குடியேறிய யூதர்களின் தொழில் மற்றும் நிறுவனங்களுக்கு பொருளுதவி செய்தது. யூதர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு சென்றது, கிட்டதிட்ட 20-25 ஆண்டுகளுக்குள்ளாக யூதர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்தது.
மேலும் அவர்கள் தங்களது பொருள்பலத்தின் மூலம் அரேபியர்களின் நிலங்களை தொடர்ந்து கையப்படுத்திக் கொண்டே சென்றனர். இது அங்கிருந்த முஸ்லிம்களுக்கும் அரேபிய கிருஸ்தவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாகவும் வெறுப்பூட்டுவதாகவும் இருந்தது. ஃபலஸ்தீனியர்களை தாக்குவதற்காக The Young Worker என்ற கூலிப்படையும் உருவாக்கப்பட்டது. யூதர்களின் இந்த அத்துமீறலையும் குற்ற குடியேற்றத்தையும்(Illegal Settlement) தடுக்க உஸ்மானிய கிலாஃபத் பெரிதும் முயன்றது. தம்மிடம் பேரம் பேச வந்த ஸியோனிச இயக்க நிறுவனர் தியோடர் ஹெர்சலிடம் ‘எனது உடல் துண்டகுவதை விரும்புவனே தவிர, ஃபலஸ்தீன் துண்டாகுவதை நான் விரும்பமாட்டேன். ஃபலஸ்தீனத்தில் சிறியத்துண்டு நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க முடியாது அது எனது நிலமல்ல. அது முஸ்லிம்களின் நிலம். அதற்காக அவர்களே இரத்தம் சிந்தியுள்ளனர்’ என்று காட்டமாக தெரிவித்தார் அப்போதைய கலிஃபா இரண்டாம் அப்துல் ஹமீது. துருக்கியினுள் விஷமத்தனம் செய்த சியோனிச இயக்கத்தை சார்ந்தவர்கள் கிலாஃபாத் அரசால் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். பலர் நாடுகடத்தப்பட்டனர். இது யூதர்களுக்கு கிலாஃபத் அரசின் மீதான வெறுப்பை அதிகப்படுத்தியது என்றே சொல்லலாம்.
ஃபலஸ்தீனத்தை தூரத்திலிருந்து துல்லியமாக கண்காணித்து வழிநடத்தும் அளவிற்கு அப்போது கிலாஃபத் அரசு பலம் பெற்றிருக்கவில்லை. கூடவே, முதலாம் உலகப்போர் ஆரம்பித்த போது யூதர்கள் உஸ்மானிய கிலாஃபத்திற்கு எதிராக நேச அணியுடன் சேர்ந்து போரிட்டனர். யூதர்கள் அன்றைய உலகப்பேரரசாக இருந்த பிரிட்டனை அதிகம் சார்ந்திருந்தனர். தங்களது உறவை பிரட்டன் அரசோடு வலிமைப்படுத்திக் கொண்டே சென்றனர். தொடர்ந்து தங்களுக்கான ஒரு நாட்டை ஃபலஸ்தீனில் உருவாக்கித்தர வேண்டும் என்று வலியுறுத்தவும் நச்சரிக்கவும் தவறவில்லை. வெயிஸ்மேன் போன்ற யூத விஞ்ஞானிகள் உலகப்போரின் போது பிரட்டன் அரசுக்கு ஆயுதத்தயாரிப்பில் பெரும் உதவிகள் புரிந்தனர். இந்த ஆயுதங்கள் போர்களில் பிரிட்டன் வெற்றிப்பெற பெரும் உதவியாக இருந்தது. யூத விஞ்ஞானிகளுக்கு நன்றியோடு இருக்க விரும்பிய பிரிட்டனிடம் தாம் செய்த உதவிக்கு பதிலீடாக வெயிஸ்மேன் கேட்டது ஃபலஸ்தீனில் யூதர்களுக்கான நாடு.!
1917 வரை இதில் வெளிப்படையாக யூதர்களின் பக்கம் சாயாமல் இருந்த பிரிட்டன் அரசு, 1917-ம் ஆண்டு அதன் போக்கில் மாற்றம் செய்தது. பிரிட்டிஷ் வெளிநாட்டு அமைச்சர் ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபேர், யூதர்களின் தலைவர்களில் ஒருவரான வால்டர் ராத்ஸைல்ட் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் ஃபலஸ்தீனத்தில் யூதர்களுக்கு ஒரு நாடு அமைய பிரட்டன் உதவும் என்று குறிப்பிட்டார். இது பால்ஃபேர் அறிக்கை(Balfour Declaration) என்று அறியப்படுகிறது. இந்த செய்தி வெளிவந்தவுடன் யூதர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தங்களது கனவை நிறைவேற்ற உலகப்பேரரசு உறுதியளித்துள்ளதை எண்ணி உளக்கழிப்பு கொண்டனர். இதை தங்களது கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாக பார்த்ததோடு ஃபலஸ்தீனத்தில் குடியேற்றத்தை இன்னும் அதிகரிக்க துவங்கினர். அதேசமயம், ஃபலஸ்தீனியர்களும் மற்ற அரபுகளும் இதை கடுமையாக எதிர்த்தனர். 87% அரபுகள் வாழும் பகுதியில் அவர்களுடைய ஒப்புதலின்றி, அவர்கள் எதிர்த்துக் கொண்டிருக்கும் போதே- அநியாயமாக குடியேறியவர்களுக்கு ஒரு நாடு உருவாக்கப்படும் என்று எங்கோ ஒர் மூலையில் உட்கார்ந்துக் கொண்டு அறிக்கை வெளியிட்டார் பிரிட்டன் அமைச்சர் பால்ஃபர். இதை பிரட்டன் அரசாங்கம் தமது கொள்கை முடிவாகவே ஏற்றது. 1918 ஆம் ஆண்டு உலகப்போர் முடிவில் பிரிட்டிஷ் படை ஜெருஸலமிற்குள் புகுந்தது. அந்த நொடியில் ஃபலஸ்தீனில் கிலாஃபத் ஆட்சி முடிவுற்று காலணிய பிரிட்டன் ஆட்சி துவங்கியது. ஸலாஹுத்தீன் அய்யூபி(ரஹ்) அவர்களினால் சிலுவை போரில் கிருஸ்துவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஜெருஸலம், மீண்டும் அதே சிலுவை யுத்த வெறிப்பிடித்தவர்களின் கைகளுக்கு சென்றது.! யூதர்களுக்கு தனி நாடு உருவாக்கப்படும் என்று தாம் அளித்த வாக்குறுதியை பிரிட்டிஷ் அரசு நிறைவேற்றி விடுமோ என்கிற அச்சம் அரபுலகம் எங்கும் பற்றிக்கொண்டது.
உலக நாடுகளின் சங்கம்:-
முதலாம் உலகப்போர் ஓய்ந்த பின்பு, 1917-ம் ஆண்டு வரை இப்போரில் பெரிய ஈடுபாட்டு காட்டாமல் ஆயுதத்தை மட்டும் விற்று வருமானம் பார்த்த அமெரிக்கா, உலகில் இது போன்றதொரு போர் மீண்டும் நடைப்பெறுவதை தவிர்க்கும் பொருட்டு ஒரு உலகளாவிய கூட்டமைப்பை துவக்கத் திட்டமிட்டது. உலக அமைதியை நிலைநாட்டுவதே இதன் நோக்கமாக கொள்ளப்பட்டது. நாடுகள் தமக்கிடையேயான பிரச்சனைகளை ராணுவ நடவடிக்கையின்றி பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனக்கூறப்பட்டது. இப்படி துவங்கப்பட்ட அமைப்பு தான் League of Nation எனப்படும் உலக நாடுகளின் சங்கம். இது ஐ.நாவிற்கு முந்தையதாக உருவாக்கப்பட்ட பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பு. என்னதான் இதன் பெயர் உலக நாடுகளின் சங்கம் என இருந்தாலும், இது முழுக்கவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா காலணிய சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்த ஒரு கூட்டமைப்பாகவே இருந்தது. பிரட்டனும் பிரான்ஸும் சைக்ஸ்-பைகாட் ஒப்பந்தப்படி தாம் பங்குப்போட்ட பகுதிகளை ஆளுவதற்கான ஒப்புதலை இந்த அமைதியை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட உலக நாடுகளின் சங்கத்தில் பெற்றன. 1922 ஆம் ஆண்டு ஜுலை மாதம், ஃபலஸ்தீனம் உலக அங்கீகாரத்துடன் பிரிட்டனின் கீழ் வந்தது. இதை ஆங்கிலத்தில் British Mandate (பிரிட்டிஷ் நியமணம்) என்பார்கள். அதாவது அங்கு ஆட்சி செய்யும் பொறுப்பு உலக நாடுகளால் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அர்த்தம். இதே காலத்தில் பெயரலவில் நீண்டு கொண்டிருந்த கிலாஃபத் நவீன துருக்கிய தேசியவாதிகளின் துணைக்கொண்டு ஒழிக்கப்பட்டதாக அறிவிப்பும் செய்யப்பட்டது.
ஃபலஸ்தீனர்களின் எதிர்ப்பு:-
ஃபலஸ்தீனம் பிரிட்டிஷ் அதிகாரத்தின் கீழ் வந்தது அங்கிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையின்மையை அதிகரித்தது. யூதர்களின் குடியேற்றம் அதிகமாகலாம் என அவர்கள் அஞ்சியதற்கு ஏற்ப யூதர்களும் பெரும் அளவில் ஃபலஸ்தீனிற்கு வரத்துவங்கினர். 1919ம் ஆண்டு முதல் அரபு மாநாடு ஜெருசலமில் கூட்டப்பட்டது. இதில் அரபு பிராந்தியத்தின் பல பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். பிரிட்டிஷ் நியமணத்தில் இருக்கும் ஃபலஸ்தீனத்தையும், பிரான்ஸ் நியமணத்தில் இருக்கும் சிரியாவையும் சேர்த்து ஒரு அரபுநாடாக உருவாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த தீர்மானம் இரண்டு அரசாலும் பொருட்படுத்தப்படவில்லை. ஃபலஸ்தீனியர்கள் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலை சந்திக்க முடிவுசெய்தனர். இருப்பினும் அவர் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. தொடர்ந்து ஃபலஸ்தீனியர்கள் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பிரிட்டிஷ் அரசாங்கத்தை பால்ஃபேர் அறிக்கையை திரும்பப் பெறும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் இந்த கோரிக்கையை ஒட்டுமொத்தமாக பிரிட்டிஷ் அரசாங்கம் நிராகரித்தது. இதற்கு ஒருபடி மேல் போய், 1922ம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் யூத நாடு உருவாக்கப்படும் என்று மீண்டும் ஒருமுறை வாக்குறுதி அளித்தார். ஆயினும் முழு ஃபலஸ்தீனும் அவர்களுக்கு வழங்கப்படாது எனக்கூறி முஸ்லிம்களை சமாதானப்படுத்த முயன்றார். இருப்பினும் முஸ்லிம்கள் யூத நாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக நின்றனர்.
அதிகரித்த யூதக்குடியேற்றம்:-
1921-ல் பாலஸ்தீன உருவாக்க நிதி என்ற பெயரில் புதிதாக ஒரு நிதி லண்டனில் உருவாக்கப்பட்டது. ஃபலஸ்தீனில் குடியேறும் பொருளாதார பலமில்லாத யூதர்களுக்கு பொருளாதார உதவி செய்து அவர்களின் விவாசயத்தை வலுப்படுத்துவதற்காக இது உருவாக்கப்பட்டது. ஐரோப்பாவிலிருந்து ஆயிரக்கணக்கில் யூதர்கள்
ஃபலஸ்தீனத்தில் குடியேறிக்கொண்டே இருந்தனர். பிரிட்டிஷ் அரசு இவர்களுக்கு சார்பாகவே இருந்ததால் அவர்களது குடியேற்றத்தில் எந்த தடையுமிருக்கவில்லை. பொருளுதவி உலகம் முழுவதுமிருந்து கிடைத்தது. குடியேறிய யூதர்கள் அறிவியல் தொழில்நுட்பம் தெரிந்தவர்களாக இருந்ததால், தொழிற்சாலைகள், மின் நிலையங்கள், சாலைகள் உருவாக்கப்பட்டன. ஹீப்ரு மொழி புதுப்பிக்கப்பட்டது. ஹீப்ரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. சாரை சாரையாக நிகழ்ந்த யூதயேற்றம் அரேபியர்களின் கோபத்தை கிளரியது. கொந்தளிப்பான தருணம் தோன்றும் போதெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதை போல ஒரு சில கட்டுப்பாடுகளை கொண்டுவரும். சில நாட்களிலேயே அவை காற்றில் பறக்கவிடப்படும். குடியேற்றம் தொடரும். இதுவே அப்போதைய நிலையாக இருந்தது. 1924-26 வரையிலான இரண்டு ஆண்டுகளில் மட்டும் 63,000 யூதர்கள் புதிதாக குடியேறினர். 1929ல் ஸியோனிஸ்ட் ஏஜென்ஸி ஜெருசலமில் தமது கிளையை துவக்க அனுமதிக்கப்பட்டது. ஏற்கனவே யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நிலவிய பதற்றத்தை இது இன்னும் அதிகப்படுத்தியது. இருதரப்பிலும் நிகழ்ந்த மோதலில் 130க்கும் மேற்பட்ட யூதர்களும் ஆறு அரேபியர்களும் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்திலும் கூட பிரிட்டிஷ் அரசாங்கம் யூதர்களுக்கு சாதகமாகவே நடந்தது. 110 அரேபியர்களை கொன்றும் 230 பேரை காயப்படுத்தியும் தம் சார்பு நிலையை வெளிப்படுத்திய பிரிட்டிஷ் காவல்துறை, யூதர்களுக்கு தங்களால் எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொண்டது. இதன் பிறகும் கூட யூத குடியேற்றம் ஓயவில்லை. 1932 மற்றும் 1939க்கும் இடையே மட்டும் 1,75,000 யூதர்கள் ஐரோப்பாவில் இருந்து இங்கு வந்து குடியேறினர். அதேப்போல் 1930ல் 6000 ஆக இருந்த யூதர்களின் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 14,000 ஆக உயர்ந்தது. தொழிலாளிகளின் எண்ணிக்கையும் மூன்று மடங்கு உயர்ந்து 55000 என்ற எண்ணிக்கையை தொட்டது. புதுப்புது நகரங்கள் தோற்றம் பெற்றன. டெலவிவ், ஹைஃபா, ஜெருஸலம் என பல நகரங்களில் யூதர்களின் எண்ணிக்க கூடிக்கொண்டே சென்றது. தொழில் மற்றும் விவசாயம் இரண்டிலும் யூதர்கள் அடைந்த பலம் அங்கிருக்கும் ஃபலஸ்தீனியர்களை பெரிதும் பாதித்தது. அவர்களது பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக முடங்கியது என்றே சொல்லலாம். விவசாய நிலங்களை அரேபியர்களிடமிருந்து வாங்கிய யூதர்கள், அரேபியர்களை அங்கு வேலைக்கு கூட அமர்த்தவில்லை. அரபியர்களின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு பிரிட்டிஷ் அரசு இவ்வாறு செய்யக்கூடாது என்று யூதர்களுக்கு தடைவிதித்தும் எந்த பலனுமில்லை. அரேபியர்கள் நிலங்களை இழந்ததோடு மட்டுமின்றி தங்களது வேலையையும் இழந்து தவித்தனர். மற்றொரு புறமோ, யூதத்தீவிரவாதிகள் அரபுகளை தாக்கி அவர்களது வீடுகளையும் நிலங்களையும் அபகரித்துக் கொண்டிருந்தனர்.
இவை எல்லாம் யூதர்கள் மீது மட்டுமின்றி அவர்களை கட்டுப்படுத்த தவறிய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீதும் மக்கள் கோபம் கொண்டு வெகுண்டெழச் செய்தது. ஃபலஸ்தீனியர்களின் மீதான இர்கான் தீவிரவாதக்குழுக்களின் தொடர் தாக்குதல்கள் கிளர்ச்சியை இன்னும் அதிகப்படுத்தியது.
பீல் கமிஷன்:-
அரபுகளிடம் (முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்தவர்கள்) உருவாகியிருந்த இந்த கிளர்ச்சிக்கான காரணத்தை கண்டறிந்து அவற்றை களைவதற்கான ஆணையம் ஒன்றை 1936 ஆம் ஆண்டு லார்டு பீல் என்பவர் தலைமையில் பிரிட்டிஷ் அரசாங்கம் அமைத்தது. லண்டனிலிருந்து ஃபலஸ்தீனிற்கு வந்த அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள் மற்றும் யூதர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டங்களை பல்வேறு பகுதிகளில் நடத்தி அவர்களின் கருத்தை கேட்டறிந்தனர். 1937 ஆம் ஆண்டு பீல் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் பீல் பரிந்துரைத்திருப்பது குறித்து எழுதும் எழுத்தாளர் நாகேஸ்வரி அண்ணாமலை, பீல் கீழ்கண்டவாறு அதில் பரிந்துரைப்பதாக தமது கருத்தை பதிவு செய்கிறார்.
” 404 பக்கங்கள் கொண்ட நீண்ட அறிக்கையில், யூதர்கள் பழங்காலத்திலிருந்தே பாலஸ்தீனத்தோடு அவர்களுக்கிருந்த தொடர்பால் அதற்கு உரிமைக் கொண்டாடுவதும், அரேபியர்கள் பதின்மூன்று நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்து வருவதால் அவர்கள் அதற்கு உரிமை கொண்டாடுவதும் சரியே என்றும் வாதிட்டு, இருவருக்கும் பாலஸ்தீனத்தைப் பகிர்ந்து கொடுப்பதே சரியான தீர்வு என்றும் அப்படிச் செய்வதன் மூலம்தான் அங்கு ஏற்படும் கலவரங்களுக்கு முடிவு காணமுடியும் என்றும் கூறுகிறார்”
மேலும் இந்த அறிக்கை வளம் மிகுந்த வட மேற்கு பகுதியை அதாவது முழு ஃபலஸ்தீனத்தில்
20 சதவீத்தத்தை யூதர்களுக்கும், மீதிப்பகுதியை அரபுகளுக்கும் வழங்க பரிந்துரைத்தது. ஜெருஸலம் உள்ளிட்ட புனித பகுதிகளை பொதுவான பிரதேசங்களாக(Neutral Territory) அறிவிக்கக் கூறியது. மேலும் அரபுகளின் பகுதியை பின்னர் ட்ரான்ஸ் ஜோர்டனோடு(தற்போதைய ஜோர்டான்) இணைக்கும் திட்டமும் பிரிட்டிஷ் அரசங்கத்திற்கு இருந்தது. இவ்வாறாக பிரிட்டிஷ் அரசின் ஆசிர்வாதத்தில் யூத நாட்டின் எல்லைக்கோடுகளும் நிர்ணயம் பெற்றன. ஆரம்பத்தில், ஜெருஸலம் யூதர்களுக்கு வழங்கப்படாததை காரணம் காட்டி யூதர்களில் பலரும் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும் ஹிட்லர் ஜெர்மனியில் அதிபரானதும் யூதர்களின் எதிர்காலத்தை குறித்து கவலைக்கொண்ட யூதர்கள் பீலின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
முழு ஃபலஸ்தீனும் தங்களுக்கு வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஃபலஸ்தீனியர்களும் அரபுகளும் இந்த திட்டத்தை ஏற்க மறுத்தனர். அரபுகள் தங்கள் நிலத்தை யூதர்களோடு பங்குப்போட கொஞ்சமும் விரும்பவில்லை. அரபுகள் கடுமையாக எதிர்த்ததால் பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றொரு குழுவை அமைத்து பீலின் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்த அறிய உத்தரவிட்டது. அரபுகளின் எதிர்ப்பு அதிகமாக இருப்பதை காரணம் காடி, இக்குழு பீலின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் சாத்தியக்கூறுகள் இல்லை எனக்கூறியது. பிரிட்டிஷ் அரசும் இந்த ஆலோசனையை ஏற்று பீல் திட்டத்தை கைவிட்டது. தங்களுக்கு சொற்பமான பகுதிகள் ஒதுக்கப்பட்டதாக நினைத்த யூதர்கள் பீல் திட்டம் கைவிடப்பட்டதில் மகிழ்ச்சி அடைந்தனர்.
1930 ஆண்டு தொட்டே அரபு முஸ்லிம்களும் கிருஸ்துவர்களும் தொடர்து போராட்டங்களில் ஈடுபட்டே வந்தனர். 1936-39 வரை மூன்று ஆண்டுகள் அரபுக்கலகம்(Arab Revolt) நடைப்பெற்றது. முழு அடைப்பு போராட்டங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் கட்டுமானங்கள் மீதான தாக்குதல்கள், யூத குடியேற்றத்திற்கு எதிரான போராட்டங்கள், அரசுக்கு எதிராக ஆயுதப்போராட்டம் என பல வடிவங்களில் இக்கலகம் நடைப்பெற்றது. ஜெருஸலமின் முஃப்தியாக இருந்த முஹம்மது அமீன் அல் ஹுசைனின் விடுத்த அழைப்பை ஏற்று நடைப்பெற்ற பொது வேலைநிறுத்தம் இதில் முக்கியமானது. ஆறு மாதக்காலம் நீடித்த இவ்வேலை நிறுத்தம் ஃபலஸ்தீனை முடக்கிப்போட்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுரமான முறையில் இப்போராட்டங்கள் அனைத்தையும் ஒடுக்கியது.
இக்காலங்களில் ஃபலஸ்தீனில் அதிகம் உச்சரிக்கும் பெயராகவும், இளைஞர்களை அதிகம் கவர்ந்த போராளியாகவும், ஒட்டுமொத்தப் போராட்ட குறியீடாகவும் மாறி இருந்தவர் ஷஹீத்.இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம்(ரஹ்). யார் இந்த
இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம்? வாருங்கள் ஓர் போராளியின் வாழ்வை சுருக்கமாக காண்போம்.
இஸ்ஸத்தின் அல் கஸ்ஸாம்(ரஹ்):-
இவர் சிரியாவில் ஜப்லா என்னும் ஊரில் 1882ஆம் ஆண்டு பிறந்தார். அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கையில் பட்டம் பெற்ற இவர் இஸ்லாமிய அறிஞராக விளங்கினார். பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்கள் முஸ்லிம்களின் நிலங்களான சிரியா மற்றும் ஃபலஸ்தீனை பங்குப் போட்டுக் கொள்வதை ஏற்க இயலாத அல் கஸ்ஸாம் அவர்கள், இந்த அரசுகளின் இராணுவங்களோடு போராட முடிவு செய்தார். ஆங்கிலேயர்கள் மற்றும் பிரஞ்சுக்காரர்களோடு சிரியா, ஃபலஸ்தீன் போன்ற பகுதிகளில் பல்வேறுக் குழுக்களின் மூலம் ஆயுதப்போராட்டத்தை துவங்கினார். 1911-12 ஆகிய ஆண்டுகளில் லிபியாவில் இத்தாலி இராணுவம் புகுந்த போது, இத்தாலி இராணுவத்திற்கு எதிராக ஜிஹாத் செய்ய மக்களுக்கு ஆர்வமூட்டினார். தாமும் ஜிஹாதிற்காக புறப்பட்டார். இருப்பினும் உஸ்மானிய கிலாஃபத் இவரின் சேவையை ஏற்க மறுத்து அவரது சொந்த ஊருக்கு செல்ல அறிவுறுத்தியது. 1930-31 ஆகிய காலங்களில் ஃபலஸ்தீனில் பல சிறிய குழுக்கள் ஸியோனிசவாதிகளுக்கு எதிராக கலகம் செய்ய தோன்றின. இவற்றை முறையாக ஒன்றிணைத்தார் அல் கஸ்ஸாம். இதில் ஆச்சரியம் என்னெவெனில் ஒருங்கிணைக்கபட்ட எந்த ஒரு குழுவிற்கும் மற்றொரு குழுவை குறித்து தெரியாது. கஸ்ஸாம் இக்குழுக்களை ஸியோனிஸவாதிகளை மட்டும் எதிரியாக கருதாமல் அதற்கு வளைந்துக் கொடுத்து சேவகம் புரிந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் எதிராகவும் ஆயுதப்போராட்டத்தை திசைப்படுத்தினார். அவரது குழுக்கள் நாடு முழுவதும் பரவி தாக்குதல்கள் நடத்தி அரசை கதிகலங்கச் செய்தன.
அல் கஸ்ஸாம் வெறும் போராளி மட்டுமல்ல மாறாக அவர் அடிப்படையில் ஆலிம். ஆலிம் என்பவர் மற்றவரை பயிற்றுவிப்பவர் தானே! அல்கஸ்ஸாம் தமது படைவீரர்களை குர்ஆனிய ஒளியில் வார்த்தெடுக்க அதிகம் அக்கறை செலுத்தினார். ஆயுதப்பயிற்சி தவிர்த்து பண்பாட்டு பயிற்சியையும் கடமையாக்கினார். இவரின் செயல்பாடுகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தை கோபப்படுத்த, பொய்யானதொரு குற்றச்சாட்டில் இவரை சுட்டுக்கொன்றது பிரிட்டிஷ் காவல்துறை. ஷஹாதத்தை இலக்காகக் கொண்ட அந்த மாவீரர் தமது இலக்கை அடைந்து சுவனத்து பறவையாய் இன்று சுற்றிக்கொண்டிருப்பார்.
பிரிட்டிஷ் காவல்துறையின் இந்த படுகொலை நிகழ்வு ஃபலஸ்தீனம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 1935-ல் நிகழ்ந்த இக்கொலை அரபுக்கலகத்திற்கு வழிவகுத்தது. பல்வேறு புதியக்குழுக்கள் இவரது பெயரில் தோற்றம் பெற்று காலணிய அரசாங்கத்தையும் ஸியோனிசவாதிகளையும் தாக்கின. இஹ்வானுல் கஸ்ஸாம் என்பது அவரது மாணவர்களால் துவக்கப்பட்ட இயக்கமாகும். பின்னர், ஃபத்தாஹ் கட்சி ஆரம்பமாகும் போது கஸ்ஸாமியூன்(கஸ்ஸாமின் படை) என்று அழைத்துக் கொள்ள விரும்பியது இருப்பினும் அப்பெயர் சூட்டப்படவில்லை. இன்று இஸ்ரேலை கதிகலங்கச் செய்யும் ஹமாஸ் இயக்கத்தின் இராணுவப்பிரிவு இஸ்ஸத்தின் அல் கஸ்ஸாம் படை என்ற பெயரிலேயே இயங்குகிறது. ஹமாஸ் உருவாக்கிய ஏவுகணைக்கு கூட கஸ்ஸாம் ஏவுகணை என்றே பெயரிட்டது.
ஷஹீதானவர்களை இறந்துவிட்டார்கள் என்று கூறதீர்கள் என்ற குர்ஆனின் வாக்கு எவ்வளவு உண்மையானது. அல்கஸ்ஸாம்(ரஹ்) உலகை விட்டு மறைந்து 85 ஆண்டு காலம் கடந்தாலும் மக்கள் மனதில் என்றும் உயிர்ப்போடு வாழ்கிறார். அல்லாஹ்வின் பூமியை குஃப்பார் கூட்டத்திடமிருந்து மீட்கும் வேட்கையை எப்போதுமே அணையாச்சுடராக போராளிகளின் உள்ளத்தில் ஏத்திவிட்டு சென்று இருக்கிறார். இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம்(ரஹ்) அவர்களது படை இலக்கை எட்டும் வரை ஓயாது இன்ஷா அல்லாஹ்.
அஸ்லம்
எழுத்தாளர்