2022 ஆண்டு அக்டோபர் 11 அன்று அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் டியர்பான் (Dear Born) நகரத்தில் வலதுசாரி அமெரிக்கர்கள் முஸ்லிம்களோடு இணைந்து போராடிய அற்புதம் நிகழ்ந்தது. பொதுவாக, அவர்கள் முஸ்லிம்களைத் தங்களின் எதிரிகளாகவும், தீவிரவாதிகளாகவும் கருதுபவர்கள். அப்படி இருந்தும் முஸ்லிம்களுடன் அவர்கள் கைகோர்க்கும் அளவுக்கு அங்கே என்ன ஆபத்து வந்துவிட்டது? எதற்காக, யாரை எதிர்ப்பதற்காக அப்போராட்டம்?
மனிதர்கள் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாக இருப்பது குழந்தைப் பருவத்தில் மட்டுமே. அதற்குக் காரணம், அப்பருவத்தின் அப்பாவித்தனம். குழந்தைகளுக்கு விளையாட வேண்டும், துள்ளிக் குதிக்க வேண்டும், இனிப்புகளை உண்ண வேண்டும். அவைதாம் அவர்களை மகிழ்விக்கும் செயல்கள். அவர்கள் வளரும்போது அவர்களின் உடல், மன தேவைகளும் வளர்ந்துவிடுகின்றன.
பருவ வயதை அடையும்வரை குழந்தைகளுக்கு காதல், காமம் தேவையில்லை. பிறப்புறுப்புகளின் உடலுறவு செயல்பாடுகளை அறிய வேண்டிய அவசியமில்லை. அதை அறியும்வரை மட்டுமே குழந்தைத்தன்மை அவர்களோடு பயணிக்கும். இப்படி இருக்கையில், யாரேனும் அப்பிஞ்சுகளிடம் பிறப்புறுப்புகளைப் பற்றியோ, உடலுறவைப் பற்றியோ பேசினால் அவர்களை மனம் பிறழ்ந்த காம மிருகங்களாகவே நாம் கருதுவோம். அவர்களை நம் குழந்தையின் அருகில்கூட நெருங்க விட மாட்டோம் அல்லவா?
பள்ளிக்கூடங்களில் இப்படியான ஆபாச அசிங்கங்கள் தம் குழந்தைகளுக்குப் பாடமாகப் புகட்டப்படுவதை அறிந்த பிறகுதான் வலதுசாரி வெள்ளையினவாதிகள் முஸ்லிம்களுடன் இணைந்து போராடும் நிலை ஏற்பட்டது. தங்களின் கருத்து வேறுபாடுகளை மூட்டைக்கட்டி ஒன்றாக இணைந்து போராட்டக் களத்தில் இறங்கினார்கள்.
சிறுவர் சிறுமியருக்கான ‘பாலின ஈர்ப்பு மற்றும் பாலின அடையாளம்’ (SOGI) பாடத்திட்டம்
SOGI (Sexual Orientation and Gender Identification) பாடத்திட்டத்தைக் கொண்டு குழந்தைகளின் மூளையில் ஆண், பெண் என்ற இரண்டு பாலினத்தைத் தாண்டி, எண்ணற்ற பாலினங்கள் உள்ளதாக ஆழமாய்ப் பதிய வைக்கப்படும். அதனால் குழந்தைகள் தங்களை ஆண், பெண் என்று மட்டும் கருதாமல் எண்ணற்ற பாலினங்களில் ஒன்றாகக் கருதுவார்கள். குறைந்தபட்சம் அதைத் தவறு, பொய் என்பதை உணர மாட்டார்கள். அவ்வாறு உணராதபோது அதை எதிர்க்கவும் மாட்டார்கள். இதுவே இந்தப் பாடத்திட்டத்தின் நோக்கம். இது மேற்குலகில் பரவலாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இது நடைமுறைக்கு வந்தால், ஆசிரியர்கள் குழந்தைகளிடம், “பல பாலினங்கள் உள்ளன. பெண்ணுறுப்பு இருப்பதால் மட்டுமே ஒருவர் பெண்ணாகிவிட முடியாது. அதேபோல, ஆணுறுப்பு இருப்பதால் மட்டுமே ஒருவர் ஆணாகிவிட மாட்டார். ஆண், பெண் என்பது உணர்வுகளைப் பொறுத்தது. உடலைப் பொறுத்ததல்ல” என்று கூறுவார்.
இதை விளக்குவதற்கு விதவித பொம்மைகள், ஓவியங்கள், வரைபடங்கள், புகைப்படங்கள் திரைப்படங்கள் பயன்படுத்துவார். உதாரணத்துக்கு, விளக்கப் படங்களில் சில குழந்தைகளுக்கு இரண்டு தந்தை இருப்பார்கள் தாய் இருக்க மாட்டார். சிலருக்கு தந்தையின்றி இரண்டு தாய் மட்டும் இருப்பார்கள். இப்படி காட்சிப்படுத்துவதன் மூலம் இவையெல்லாம் இயல்பானதே என மூளைச்சலவை செய்யப்படும்.
மேற்குறிப்பிட்ட போராட்டம் நடத்தப்படுவதற்கு வெகுகாலம் முன்னரே அமெரிக்காவில் SOGI பாடத்திட்டம் இருக்கிறது. அதற்கு எதிர்ப்பும் இருக்கிறது. போராட்டம் உருப்பெறுவதற்குப் பின்னணியாக அமைந்தது என்னவென்றால், பள்ளி நூலகத்தில் ஆபாசமான LGBTQIA+ நூல்கள் இருப்பதை பெற்றோர்கள் அறிந்தனர். இனியும் பொறுமையாக இருந்தால் நம் குழந்தைகளைக் காப்பாற்றவே முடியாது என்று அவர்களுக்கு உறுதியான பிறகே அவர்கள் போராடத் தொடங்கினர். ஆபாசமான ஆறு நூல்களை அப்புறப்படுத்த பள்ளி நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டனர். எனினும், அவற்றை விசாரித்த பள்ளி நிர்வாகம், இரு நூல்களை மட்டுமே அப்புறப்படுத்தியது. அது மீண்டும் பெற்றோரின் எதிர்ப்பைக் கிளப்பியது.
ஏன் பெற்றோர் இந்நூல்களை எதிர்க்கின்றனர்?
ஜூனோ டாசன் என்பவர் எழுதிய “திஸ் புக் இஸ் கே” (This Book is Gay) என்ற நூலை நாமும் வாசித்தோம். அந்தப் பெற்றோர்கள் எதிர்க்கும் 6 நூல்களில் இதுவும் ஒன்று. இந்நூலில் உள்ள ஆபாசங்கள், அசிங்கங்கள் பெரியவர்களையும் திருமணமானவர்களையும் கூட முகம் சுளிக்க வைக்கும்.
பெற்றோர்கள் இதை ஏன் எதிர்த்தார்கள் என உணர்த்த வேறு வழியின்றி நூலிலிருந்து சிலவற்றை நாம் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.
பாலினம் இரண்டல்ல எண்ணற்றவை என்று சாதாரணமாகத் தொடங்கும் இந்த நூல், ஓர் ஆண் மற்றொரு ஆணின் மலக்குழாயில் உடலுறவு கொள்வது எப்படி, உடலுறவுக்கு மலக்குழாயைத் தயார் செய்வது எப்படி, மலக்குழாய் புணர்வு எப்படி இயல்பான ஆண்-பெண் உடலுறவோடு வேறுபடுகிறது, இதில் எந்த ஆண் மலக்குழாயைத் தயார்ப்படுத்த வேண்டும் யார் ஆணுறுப்பை அதில் செலுத்த வேண்டும் என சில கார்ட்டூன் வரைபடங்களுடன் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.
அதேபோல, பெண்ணோடு பெண் புணர்வது எப்படி, புணர்வதைத் தவிர்த்து மற்ற உடலுறவு முறைகள் என்னென்ன, அவற்றை எவ்வாறு செய்வது, Sex Toys எனப்படும் சுய இன்பத்திற்கான சாதனங்களைப் பயன்படுத்தும் முறைகள், ஓரினச்சேர்கையாளர்கள் எங்கே எவ்வாறு பிற ஓரினச்சேர்கையாளர்களைச் சந்தித்து உறவை உருவாக்கிக் கொள்வது, ஓரினச்சேர்க்கையின் நன்மைகள், திருமணத்தின் தீமைகள் போன்ற ஏராளமான LGBTQIA+க்கு ஆதரவாக மூளைச்சலவை செய்யும் கருத்துகள், ஆபாச அசிங்கங்கள் அந்நூலில் இடம்பெற்றுள்ளன.
LGBTQIA+ உடலுறவு முறைகளையும், அதை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கைமுறையையும் இயல்பாக்கம் செய்வதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
ட்ராக் குயின் மற்றும் ட்ராக் ஷோ (Drag Queen and Drag Show)
SOGI பாடத்திட்டத்தில் நூல்கள் மட்டுமின்றி, மேற்குலகின் ட்ராக் குயின் மற்றும் ட்ராக் ஷோ (Drag Queen and Drag Show) எனும் ஒரு கலாச்சாரமும் சிறுவர் சிறுமியர்களைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்டது.
பெண்களைப் போன்று ஆபாசமாக, அருவருப்பாக உடையணிந்து ஆபாச நடனமாடும் (ஓரினச்சேர்க்கை) ஆண்கள் ட்ராக் குயின் (Drag Queen) என்றழைக்கப்படுகிறார்கள். இவர்கள் அவ்வப்போது பள்ளிக்கூடங்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு சிறுவர் சிறுமியர்களிடம் பாலினம் என்பது இரண்டல்ல எண்ணற்றவை எனச் சொல்லி மூளைச்சலவை செய்வார்கள். மேலும், பொம்மைகளைக் கொண்டு குழந்தைகளிடம் ஆண்-ஆண், பெண்-பெண் உடலுறவைச் செயல்படுத்திக் காண்பிப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள்.
இது மட்டுமின்றி, குழந்தைகளுக்கான ட்ராக் ஷோ (Drag Show) எனும் ஆபாச நடனங்கள், சொற்பொழிவுகள், பிரச்சாரங்களில் ஈடுபடும் நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடத்தப்படும். இவை குழந்தைகளை பாலியல்வயப்படுத்தவும் (Sexualise), பாலியல் சுரண்டலுக்கு மனதளவிலும் உடலளவிலும் அவர்களைத் தயார்ப்படுத்துவதாகவே (grooming) உள்ளது.
குழந்தைகள் மீது பாலின ஈர்ப்பு மற்றும் அடையாளம் திணிக்கப்படுவது ஏன்?
13, 14, 15 வயதேயான சிறுவர் சிறுமியர்களிடம் மிகவும் ஆபாசமான, அருவருப்பான காட்சிகள், விளக்கங்களைக் கொண்ட நூல்கள் ஏன் திணிக்கப்படுகிறது?
இவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள் மனக் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். சக சிறுவர் சிறுமியர்களுடன் எவ்வித கவலையுமின்றி மகிழ்ச்சியாக விளையாட வேண்டிய காலத்தில் நானொரு பெண் உடலில் சிக்கிக்கொண்ட ஆணோ, ஆண் உடலில் சிக்கிக்கொண்ட பெண்ணோ என சந்தேகம் கொண்டு மன உளைச்சல் அடைகிறார்கள்.
குழந்தைகள் மீது இந்தக் கருத்துகள் திணிக்கப்படுவது, மூளைச்சலவை செய்யப்படுவதை எதிர்த்துப் போராடும் சமூக ஆர்வலர்கள் இந்தப் பாடத்திட்டத்தை சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல், சிறுவர் வதை (Child Abuse) என்கிறார்கள். இதைச் செயல்படுத்துவதற்கான காரணம், LGBT உடலுறவை இயல்பாக்கம் (Normalise) செய்வதும், அதிகரிப்பதும்தான் என்கிறார்கள்.
அடுத்த தலைமுறையில் பெரும்பான்மை மக்கள் ஓரினச்சேர்கையாளர்களாக இருக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம் எனலாம். அதில் ஏற்கனவே பெரும் வெற்றியடைந்துவிட்டார்கள். Gen Z எனப்படும் 1997-2012 இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களிடையே ஆறில் ஒருவர் தங்களை LGBTQவினாராக அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள்.
ஹெடோனிசம் (Hedonism) எனப்படும் உடல் சுகத்திற்காக வாழும் வாழ்க்கைமுறையை சமூகத்தின் இயல்பான நிலையாக மாற்ற வேண்டும் என்பன போன்ற வேறு பல நோக்கங்களும் இந்தக் கருத்தியல் திணிப்புக்குப் பின்னால் இருக்கிறது.
பல மேற்கத்திய நாடுகளில் குழந்தை பிறந்தவுடன் அதன் பாலினத்தை ஆண் என்றோ பெண் என்றோ பெற்றோர்கூட முடிவு செய்யக்கூடாதாம், அதை எவ்வித பாலின முன்முடிவுகளுமின்றி (Gender Neutral) வளர்க்க வேண்டுமாம். பிறகு அக்குழந்தையே வளர்ந்து அதன் பாலினம் என்னவென்பதைக் கண்டறியுமாம். அவ்வாறு கண்டறியும் வேளையில் ஆண் குழந்தை தன்னை பெண்ணாக அடையாளப்படுத்திக் கொண்டு தன் பாலினத்தை மாற்ற நினைத்தால், சட்டப்படி 12 வயது முதலே அதற்கான சிகிச்சைகளைப் பெற்றோர்/வளர்ப்போர் சம்மதத்துடன் தொடங்கிவிடலாம். பெற்றோர் சம்மதிக்க மறுத்தால் 15 வயது முதல் பெற்றோர் சம்மதமின்றி சிகிச்சையைச் செயல்படுத்தலாம் எனும் அவலநிலை இருந்துவருகிறது.
ஒரு குழந்தையால் தன் வாழ்வின் எவ்வித முக்கியமான முடிவுகளையும் எடுக்க இயலாது எடுக்கவும் கூடாது. ஒரு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குக்கூட குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும். ஆனால், மேற்குலகில் குழந்தைகள் சிறு வயதிலேயே தங்களின் பாலினத்தை மாற்றிக் கொள்ளலாமாம்! Puberty Blockers எனப்படும் ஹோர்மோன் செயல்பாடுகளைத் தடுத்து வயதுக்கு வருவதைத் தடுக்கும்/தள்ளிப்போடும் மருந்துகளைக்கூட அவர்கள் உட்கொள்ளலாமாம்.
14 வயது சிறுமியை ஆணாக ஏற்காததால் தந்தையை சிறையிலடைதல்
விவரம் தெரியாத, நல்லது கெட்டது அறியாத குழந்தைகள் தாம் காண்பதையெல்லாம் வாங்கித் தரும்படி பெற்றோரிடம் அடம்பிடிப்பார்கள். பெற்றோர் முதலில் பொறுமையாகக் குழந்தைகளிடம் அது தேவையற்றது, தவறானது என எடுத்துச் சொல்வார்கள், அப்போதும் கேட்கவில்லையெனில் கண்டிப்பார்கள். இதுவே உலகம் முழுவதர்க்குமான நாமறிந்த வழக்கம்.
குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற மறுத்தால் அரசு பெற்றோரைச் சிறையிலடைக்கும் என்பதை ஏதோ திரைப்படங்களில் வரும் கற்பனை என்றுதானே எண்ணுவோம், ஆனால் இன்றைய மேற்கில் இது நடைமுறை உண்மை.
கனடாவில் 14 வயதே ஆன சிறுமி திடீரென்று தன்னை ஆண் எனவும் ஆண்பால் பெயர், ஆண்பால் வார்த்தைகளைக் கொண்டே அழைக்கவேண்டும் எனவும் தன் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார். இதைக் கண்டித்த தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். பிரச்சனையின் ஆரம்பத்தில், பள்ளியின் உதவியை நாடலாம் என்று பள்ளிக்கூடத்தை அணுகியபோதுதான் அவருக்குத் தெரிந்துள்ளது. அச்சிறுமியை மூளைச் சலவை செய்ததே பள்ளி தான் என்பது.
Handsome and Majestic என்ற transgender (மாறிய பாலின) ஆதரவு படத்தைச் சிறுவர் சிறுமியருக்குப் பள்ளிக்கூடம் காண்பித்துள்ளது, அதைப் பார்த்ததிலிருந்துதான் தன் மகள் தன்னை ஆணாக அடையாளப்படுத்திக் கொள்கிறாள் என்பதை அவர் அறிந்துள்ளார். மேலும் பள்ளி நிர்வாகம் ஆண்பால் பெயரைக் கொண்டே அச்சிறுமியை அழைத்துள்ளது.
அவருக்கு எதிராகச் சிறுமியின் தாய், பள்ளி நிர்வாகம், அரசு, உச்ச நீதிமன்றம் என அனைவரும் ஒன்று சேர்ந்துவிட்டதால் “என்னுடைய ஆரோக்கியமான மகள் puberty blockers, டெஸ்டெஸ்டெரோன் ஹோர்மோன் ஊசிகள், மார்பகத்தை அப்புறப்படுத்தும் அறுவை சிகிச்சை, பெண்ணுறுப்பை நீக்கி ஆணுறுப்பை விதைக்கும் அறுவை சிகிச்சை போன்ற உடல் துன்பங்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் ஆளாவதை என்னால் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிந்தது” எனப் புலம்பியுள்ளார்.
மேலும் “உடலுறவு கொள்ளச் சம்மதம் (consent) தேவைப்படுகிறது, வயதுக்கு வராத குழந்தைகளை உடலுறவில் ஈடுபடத் தடையுள்ளது. ஆனால், அதே குழந்தைகள் தம் பாலினத்தை, ஹார்மோன்களை, உடல் உறுப்புகளை மாற்ற மட்டும் சம்மதம் தேவையில்லையா? சம்மதமளிக்க அவர்களுக்கு ஒரு வயது வரம்பு தேவையில்லையா?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபோன்ற பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கள் (Gender Affirmation Surgery) குழந்தைகளுக்கு மூன்று அல்லது நான்கு வயதிலிருந்தே தொடங்கப்பட்டு விடுகின்றது. ஹோர்மோன் ஊசிகள், மார்பகத்தை அப்புறப்படுத்துவது போன்ற சிகிச்சைகள் அமெரிக்காவில் 16 வயதிலேயே அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு அறுவைசிகிச்சை செய்து பாலினத்தை மாற்றியதற்கக்காக பலர் வாழ்நாள் முழுவதும் வருந்துகிறார்கள், சிலர் மீண்டும் தங்களது முந்தைய பாலினத்திற்க்கே மாறிவிடுகின்றனர். இவர்கள் Detranstioners என அழைக்கப்படுகிறார்கள்.
ஆபாச நடனமாட வைக்கப்படும் பதினோரு வயதேயான சிறுவன்
ஆணோ பெண்ணோ வயிற்றுப்பசிக்காக தங்கள் உடலை விற்றாலும் ஆபாச நடனமாடினாலும் அது தவறே. அவ்வாறிருக்கச் சிறுவர்கள் ஆபாசமாக நடனமாட வைக்கப்படுவதை நம்மால் சில வருடங்களுக்கு முன் வரை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஆனால் இதுவும் இன்று “சரி” என்றாகிவிட்டது.
பதினோரு வயதே ஆன ஒரு சிறுவன் தன்னை பெண்ணாக அடையாளப்படுத்திக் கொண்டு ட்ராக் குயின் (Drag Queen) வேடமணிந்து “கர்வம்” (PRIDE) என்னும் அணிவகுப்புகளிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் பங்குபெற்று ஆபாசமாக நடனமாடுகிறான். அந்த சிறுவனின் ஆபாச நடனத்தை மக்கள் கைதட்டி ரசிக்கிறார்கள். இது pedophilia எனும் சிறுவர்கள் மீது பாலியல் இச்சை கொள்வது; வன்புணர்வு செய்வது போன்ற மனநிலையை ஒத்துள்ளது.
அந்த சிறுவன் இவற்றைத் தன் “தைரியமான” முடிவு எனக் கர்வமாகப் பேசுகிறான், அதை அந்த சிறுவனின் பெற்றோரும் நிகழ்ச்சியின் பார்வையாளர்களும் ஏயாதோ அவன் பெருய சாதனைச் செய்ததுவிட்டதைப் போல் கைதட்டி ஊக்கமளிக்கின்றனர். இந்த சிறுவனின் பெற்றோர் அவன் இரண்டு வயதுக் குழந்தையாக இருந்ததிலிருந்தே Drag Show தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பித்து வளர்த்துள்ளனர். ஓரினச்சேர்க்கை ஆண்கள் கூடும் கிளப்புகளுக்குச் சென்று அவர்கள் பணத்தை வாரி இரைக்க சிறுவன் நடனமாட வைக்கப்படுகிறான்.
“குழந்தை பிரியர்” எனும் Pedophilia-வை இயல்பாக்கம் செய்தல்
Pedophile எனப்படும் குழந்தைகள் மீது பாலியல் இச்சை, வன்புணர்வு செய்பவர்களை LGBTQIA+ குழுவில் சேர்க்கவும் அதனை இயல்பாதாக மாற்றுவதே இதுபோன்ற குழந்தைகளை வைத்து நடத்தப்படும் ட்ராக் ஷோ (Drag Show) நிகழ்ச்சிகளின் குறிக்கோள் எனச் சிலர் கருதுகின்றனர்.
Pedophilia-வை ஆதரிப்பவர்கள் “அது தவறில்லை எப்படி LGBT மக்கள் பிறப்பிலேயே அதுபோன்றதொரு ஆசையை, பாலின ஈர்ப்பை (Sexual Orientation) கொண்டுள்ளார்களோ; அவர்களால் அதை மாற்ற இயலாதோ; அது போலவே pedophile மக்களும் தங்களின் பிறப்பிலேயே குழந்தைகள் மேல் பாலின ஈர்ப்பைக் கொண்டுள்ளனர். எனவே அதை மாற்ற இயலாது. அவர்களையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் அவர்களும் மனிதர்கள் தானே, அதுவும் காதல் தானே” என Tedx Talks போன்ற பிரபலமான மேடைகளிலும் வாதிடப்படுகின்றது.
மேலும், நம்மூரில் மது அருந்தும் தவறான பழக்கம் உள்ளவர்களை நல்லவர்களாகவும், அதை இயல்பான விஷயமாகவும் சித்தரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் “மதுபிரியர்கள்” எனும் வார்த்தையைப் போல மேற்கில் pedophile-களை ஆதரிகக்க, அந்த வன்மம் நிறைந்த இச்சையை இயல்பாக்கம் செய்ய, அதை நல்ல செயலாகச் சித்தரிக்க அவர்களை “குழந்தை பிரியர்” (Minor Attracted People) என்று அழைக்கின்றனர்
சமீபத்தில்…
சமீபத்தில் Balenciaga என்ற fashion நிறுவனம் குழந்தைகளை பாலியல் சுரண்டலில் ஈடுபடுத்தும் தொழிலை (Child Pornography) ஆதரிக்கும் விதமாக BDSM எனப்படும் வன்முறையான ஆபாசத்தில் ஈடுபடுவதைப் போன்ற குழந்தை பொம்மைகளைத் தயாரித்தனர். பலர் இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்நிறுவனம் முதலில் அதை நியாயப்படுத்த முயன்று பின் மன்னிப்பு கோரியது.
Bestiality என்னும் மிருகங்களை காதலித்து புணரும் “மிருக பிரியர்கள்”
ஜெர்மனியில் நடந்த “PRIDE” ஓரினச்சேர்க்கை பிரச்சாரத்தில் மிருகங்களைக் காதலித்து மிருகங்களுடன் புணரும் Zoophilie என்னும் ‘மிருகப்பிரியர்’களுக்கான முதல் PRIDE பிரச்சாரம் அண்மையில் நடைபெற்றது. அதில் தன் நாயைக் காதலித்து அதைப் புணரும் நபரின் பெட்டியையும் காணமுடிந்தது. அதனையும் காதல் காதல்தானே (Love is Love) என்கிறார்கள்.
பிறருக்கு உடல்ரீதியான துன்பம் இழைக்காத அளவில் ஒருவர் என்னவேண்டுமானாலும் செய்யலாம். அதில் தவறில்லை என்பதே மேற்கை வழிநடத்தும் தாராளவாத கருத்தாக்கத்தின் சாரம். இதை முழுமையாக ஏற்றுப் பின்பற்றுவதால் அவர்கள் மிருகப் புணர்ச்சியையும் சரி என்றே கருத வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அபாயம் வெகு தொலைவில் இல்லை
சரி, இதுவெல்லாம் மேற்கில் தானே நிகழ்கிறது, நமக்கென்வேன்று நாம் நினைக்கலாம். மேற்கைத் தான் இன்றைய வளரும் நாடுகள் பின்பற்றுகின்றன. (அவ்வாறு பின்பற்றாதவர்களை பிற்போக்கு நாடுகள் என முத்திரை குத்தி ராணுவத்தைக் கொண்டு மேற்குலகம் அவர்களை நாகரிக்காகப்படுத்தும்.) குறிப்பாக இந்தியாவின் கடுமையான வலதுசாரி இந்துத்துவ ஆட்சியிலும் கூட மேற்கத்தியக் கொள்கைகள் (policies) பல இயற்றப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.
மேற்கில் நடப்பதைப் போல LGBT Pride March நம்மூரிலும் அதே அளவு கடுமையாக நடைபெறுகிறது, அங்கே வெளியாகும் திரைப்படங்கள், தொடர்களில் LGBT கதாபாத்திரங்கள் உண்மையிலுள்ள LGBTQ மக்கள் தொகை சதவிகிதத்தை விடப் பல மடங்கு அதிகமான அளவில் சித்தரிக்கப்படுகிறது. அதுபோலவே நம்மூர் சினிமாவிலும் LGBTQ கதாபாத்திரங்கள் இடம்பெறத் தொடங்கிவிட்டன.
எனவே, இந்த பாடத்திட்டங்கள் ஓரிரு அல்லது ஐந்து வருடங்களில் நம்மூரிலும் வந்துவிடும் என்ற அபாயத்தின் அடிப்படையிலே தான் இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கினோம். ஆனால், அதைச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கருத்து பரிமாற்றத்தில் மேற்குக்கும் நமக்கும் உள்ள கால இடைவெளியை இணையம் முற்றாகத் தகர்த்துவிட்டதன் விளைவே. நம் குழந்தைகள் மீதும் ஆபாச அசிங்கங்கள் திணிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
LGBTQ பாடத்திட்டம் இங்கு வந்தாலும் அங்குள்ள அசிங்கங்கள் இங்கெ நடைபெறாது என நீங்கள் கருதலாம். அவர்களின் பாதையைப் பின்பற்றுகிறோம் ஆனால் அடையும் இலக்கு மட்டும் வேறாக இருக்கும் என்று கற்பனை செய்வது முட்டாள்தனம் தானே?
ஏற்கனவே மேற்கில் PRIDE March-இல் நடக்கும் அசிங்கங்கள் நம்மூர் PRIDE March -களிலும் நடக்க ஆரம்பித்துவிட்டது. எனவே, LGBTQ பாடத்திட்டம் இங்கே வந்தால் அதோடு சேர்ந்து ஆபாச நூல்களும் Drag Queen-களும் Drag Show-க்களும் வந்துவிடும். அதைத் தொடர்ந்து குழந்தை பிரியர்களையும், மிருக பிரியர்களையும் இயல்பாக்கம் செய்வதும் எளிதாகிவிடும்.
வரலாற்றிலிருந்து படிப்பினை பெறுவோம்
மேற்கத்திய நாடுகளில் வாழும் பெற்றோர் இந்த பாடத்திட்டத்தைத் தொடக்கத்தில் எதிர்க்காமல் விட்டுவிட்டார்கள். இன்று அது எடுத்திருக்கும் விஸ்வரூபத்தை அவர்கள் அன்றே கணித்திருக்கவில்லை. LGBTQ கருத்து திணிப்பை எதிர்ப்பவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருப்பினும் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறார்கள். பொது நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்படுகிறார்கள், சமூக வலைத்தளங்களில் தடைசெய்யப்படுகிறார்கள், இறுதியாக தங்கள் வேலையையும் இழக்கிறார்கள்.
திரும்பும் இடமெல்லாம் LGBTQ திணிக்கப்படுவதால் ‘நடுநிலையாளர்களும்’ வலதுசாரிகளிடம் தஞ்சம் அடைகிறார்கள். எனினும் அவர்களால் அரசின் கொள்கையில் செயல்பாட்டில் இந்த திணிப்புக்கு எதிராக எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. எனவே, தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூட மூளைச்சலவையிலிருந்து பாதுகாக்க Home-Schooling-ஐ தேர்வு செய்கிறார்கள். ஆனால், பிரான்ஸ் போன்ற நாடுகளில் அதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, வலது,இடது என இதை எதிர்க்கும் அனைவரும் மேற்கிலிருந்து வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்வதைப் பற்றிப் பேசுகிறார்கள்.
நாமும் இதையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியாமல் வளரவிட்டால் பின்னர் வருந்த மட்டுமே முடியும்.
ஸலாஹுத்தீன் அய்யூபி(ரஹ்) சொன்னது போல ஒரு நாகரிகத்தில் ஆபாசம் பரவலாகிவிட்டால் அந்த நாகரிகமே அழிந்துவிடும். ஓரினச்சேர்க்கையே ரோமாபுரி சாம்ராஜ்யம் அழிந்ததற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. வரலாற்றிலிருந்து படிப்பினை பெறாதவர்கள் வரலாற்றிலிருந்து துடைத்தெறியப்படுவார்கள்.