நீங்கள் சமையல் விரும்பிகளாக இருப்பீர்களெனில்,
யூடியூப்பில் அதிகம் வலம் வருபவர்களாக இருப்பீர்களெனில்,
அவரை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.
அவர் தான் “நவாப் கிட்சன் ஃபுட் ஃபார் ஆல் ஆர்பன்ஸ்” (Nawab’s Kitchen Food For All Orphans) என்ற யூடியூப் சேனலை வெற்றிகரமாக நடத்திவரும் காஜா மொய்னுதீன் என்ற இளைஞர். இவர் ஒரு MBA பட்டதாரி. ஆனால் படித்த படிப்பிற்கான வேலையையை பார்க்காமல், அனாதை மற்றும் ஏழை குழந்தைகளின் பசியை போக்க பல இடங்களுக்கு சென்று உணவு சமைத்து குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். தமது பணியை பிரபல்யப்படுத்தி மக்கள் ஆதரவு பெறுவதற்காக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். ருசிமிக்க உணவுகளை தனது புன்முறுவள் பூத்த முகத்துடன், ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பசியை போக்கி வருகிறார் நவாப். இணையத்தில் இலட்சக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றியாளராய் சமூக வலைத்தளங்களில் தடம் பதித்திருக்கிறார்.
ஹைதராபாத்தை சேர்ந்த இவர் குழந்தைகளின் பசியை தீர்க்கும் இந்த உயர் இலட்சியத்தை அடைந்த கதை கவனிக்கத்தக்கது. சிறுவயதில் ஒருநாள் அவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தப் பொழுது, ஒரு காட்சியினை கண்டிருக்கின்றார். அதுவே அவர் வாழ்வின் திருப்புமுனையாய் அமைந்துள்ளது. இவரின் வயதை ஒத்த ஒரு சிறுவன் அங்கு சாப்பிட்டு மீதமிருந்த இட்லி துண்டை எடுத்து வேகமாக சாப்பிட, பசியால் வாடிய சிறுவன் அந்த இட்லியை சாப்பிட்ட வேகம், இவைகள் காஜாவின் ஆழ்மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. காலங்கள் ஓடினாலும் அந்த நிகழ்ச்சியின் சுவடுகள் அவரின் மனதை விட்டு நீங்கவில்லை. அது ஏற்படுத்திய தாக்கமே இன்று அவர் களம் காண முக்கிய காரணம் என்கிறார் காஜா.
இவர் தனது படிப்பிற்கான வேலையை விட்டுவிட்டு சமையல் களத்தில் தன் நண்பர்கள் இருவருடன் இறங்கும் பொழுது அதில் யாருக்குமே சமையல் தெரியாதாம். தன் குடும்பத்தினருடைய உதவிகள் மூலமே சமைக்க கற்றுக் கொண்டுள்ளார் என்பதும் சுவாரஸ்மான தகவல்.
காஜா மொய்னுதீனுடைய நண்பர்கள் இருவருமே வீடியோ எடிட்டர்கள் என்பதால் தாம் எடுக்கும் வீடியோக்களை அவர்களே எடிட் செய்து வெளியிடுகிறார்கள்.
யூடியூப் பக்கம் ஆரம்பம் செய்யும் பொழுது இவரின் நோக்கம் என்பது பணம் சம்பாதிக்க வேண்டும், அதன் மூலம் பிரபலம் அடைய வேண்டும் என்பதல்ல. மாறாக ஏழை மற்றும் அனாதை குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டும், வறுமையில் வாடும் அவர்களின் பசியை போக்க வேண்டும் என்பதே அவரின் உன்னத நோக்கமாக இருந்தது. அதனால் தான் இவரின் சேனலின் பெயர் கூட “நவாப்பின் சமையல் – அனாதைகள் அனைவருக்குமான உணவு” என பெயரிடப்பட்டுள்ளது.
இவருக்கென்று நவீனமயமான தனி சமையல் அறையெல்லாம் எதுவும் கிடையாது. திறந்த வெளியோ அல்லது மரத்தின் நிழல்களோ தான் இவரது சமையல் அறைகள். பெரும்பாலும் அனாதை இல்லங்களுக்கு அருகில் தான் சமையல் செய்து அவர்களுக்கு பரிமாறுகிறார்.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 40 பேருக்கு சமைப்பதன் மூலம், ஒரு மாதத்தில் 1200 குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது என்கிறார்.
அதே சமயம் தனது யூடியூப் தளத்திலும் அந்த வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இவரது ஸ்பெஷல் உணவுகளான சிக்கன் 65, பானிபூரி, பாஸ்தா போன்ற உணவு வகைகளுக்கு என்று தனிஒரு ரசிகர் பட்டாளமே உண்டு எனலாம். பொதுவாக இவர் ஒருமுறை சமைத்த உணவை மறுமுறை சமைப்பதில்லை. ஆனால் குழந்தைகள் விரும்பினால் அதற்கும் தனது புன்முறுவலுடன் தயாராக இருக்கிறார் காஜா மொய்னுதீன்.
இவ்வுலகம் எவ்வளவோ நல்ல மனிதர்களை தனக்குள் ஒளித்து வைத்திருக்கின்றது. அதில் காஜா மொய்னுதீனும் ஒருவராவார்.
காஜா மொய்னுதீன்கள் பெருகட்டும்..!
- திருச்சி ரஹ்மத்துல்லாஹ்