இந்தியாவில் ‘தேவைக்கு அதிகமான ஜனநாயகம்’ இருப்பதுதான் இங்குச் சீர்திருத்தச் செயல்பாடுகளைச் செய்யத் தடையாக உள்ளது என நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் புலம்பி மூன்று வருடமாகிறது. இவர் இப்படிச் சொல்வதற்கு முன்பே (மத்தியிலும் மாநிலத்திலும்) இரு தேர்தல் முறை தான் வளர்ச்சிப் பணிகளுக்குத் தடையாக இருக்கிறது எனக் கண்டுபிடித்த கட்சிதான் பாஜக. இப்போது அவர்கள் அந்தத் தடையை நீக்குவதற்காக முனைப்பான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். ‘ஒரு நாடு ஒரே தேர்தல்’ என்ற பாஜகவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஒன்றிய அரசு அதனைக் குறித்து ஆய்வு செய்ததற்கான குழுவை நியமித்துள்ளது
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் எட்டு நபர்களை உள்ளடக்கிய குழுவிற்கு ஆய்வு செய்ய வேண்டிய விஷயங்கள் நிர்ணயிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதுதான் இலட்சியம். அதற்காக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலும் தேர்தல் சட்டங்களிலும் நடைமுறைகளிலும் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதை அக்குழு அறிவுறுத்தும்.
ஒரு வாக்காளர் பட்டியல், ஒரு வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி அனைத்து தேர்தலையும் ஒரேயடியாக நடத்தினால் அது செலவைக் குறைத்து; அரசிற்கு இன்னும் கூடுதல் சௌகரியத்தையும் தொடர் ஆட்சியையும் அளிக்கும் என்பன போன்றவை இதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. வாக்காளர்களுக்கும் அதுதான் வசதியாக இருக்குமாம்! தேர்தல் செலவுகளை வைத்துத்தான் பிரதமரும் இதனை வலியுறுத்தினார். 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும் 60,000 கோடி செலவிட்டுள்ளார்கள் என்று கணக்கு கூறப்படுகிறது. ஆனால் உண்மையான செலவு இதை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஒரே தேர்தலை நடத்தினால் 4,500 கோடி ரூபாய் மட்டும்தான் செலவாகும் என்று தேர்தல் ஆணையம் கணக்குப் போட்டுள்ளது. இந்தச் செலவுக் கணக்கு தேர்தல் ஆணையத்திற்கு மட்டும்தான் என்று கருதினாலும் இதனுடைய அதிகாரப்பூர்வத் தன்மை ஐயத்திற்குரியதே! செலவுகளைக் கட்டுப்படுத்துவதிலும் செயல் முனைப்பிலும் திறன் மிக்கதாக இருந்த டிஎன் சேஷன் கால தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இன்று இல்லை என்றால் அதற்குக் காரணம் இன்றைய தேர்தல் ஆணையத்தின் பொடுபோக்குத்தனம் மட்டும் தான். ஆணையம், அதிகாரிகளுக்கான செயல்பாட்டு ஆதாயங்கள், ஃபாசிஸ பாஜகவின் அரசியல் இலட்சியம் – இவை இரண்டுமே ஒரே நேர்கோட்டில் சந்திக்கிறது என்பதே இப்புதிய முன்னெடுப்பிற்கான முக்கிய காரணம் என்பதில் எவ்வித தர்க்கமும் இல்லை.
‘தேவைக்கு அதிகமான ஜனநாயகம்’ இருந்தும் கூட, இப்படிப்பட்ட ஒரு திருத்தம் தேவையா என்ற ஆலோசனை நாடாளுமன்றத்திலோ பிற சபைகளிலோ நடத்தப்படவில்லை. ஒரு நாடு ஒரே தேர்தல் என்பதன் தேவையைக் குறித்து ஆலோசிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்படவில்லை. அது தேவைதான் என்று தீர்மானிக்க, அதனை நடைமுறைப்படுத்துவது எப்படி என்பதை ஆராயவே அக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக விரோதமான இந்தத் திணிப்பு முறை குழு அமைக்கப்பட்டதிலும் அதனுடைய தன்மையிலும் வெளிப்படையாகத் தெரிகிறது. எட்டு பேர் கொண்ட குழுவில் பாஜக எதிர் நிலைப்பாடு கொண்ட ஒரே ஒரு நபராக நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அதீர் ரஞ்சன் சவுத்ரியே நியமிக்கப் பட்டுள்ளார். அவரும் அக்குழுவிலிருந்து விலகி விட்டார்.
பொது அவையில் திறந்த, வெளிப்படையான விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு உருவாக்க வேண்டிய விஷயங்களை இப்படி மறைமுகமாகவும் பின் வாசல் வழியாகவும் திணிக்கின்றனர். நிகழ்ச்சி நிரல் என்ன என்பதைச் சொல்லாமலேயே நாடாளுமன்ற கூட்டம் கூட்டப்படுகின்றனர். தேர்தல் சீர்திருத்தம் வேண்டும் என்று தன்னிச்சையாகவே தீர்மானித்து, தன்னிச்சையாகவே ஆய்வுக் குழுவை நியமிக்கிறார்கள். சட்ட உருவாக்கத்திற்கு முன்பாக உருவாக்கப்பட வேண்டிய அரசியல் சமரசங்களையும், கருத்துகளையும் குறித்து அனைத்தையுமே சில நபர்களும் அதிகாரிகளும் தீர்மானிக்கிறார்கள். இதுபோன்ற திணிப்புகளையே பல விஷயங்களிலும் நாடு எதிர்கொண்டு வருகிறது.
‘ஒரு நாடு ஒரே தேர்தல்’ என்பது தேவையில்லாமல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்டுபவர்களுக்கு; பெருநிறுவனங்களின் கடன்களையும் வரி பாக்கியையும் கண்ணை மூடித் தள்ளுபடி செய்பவர்களுக்கு; விளம்பரத்திற்காகப் பல்லாயிரம் கோடியைச் செலவிடுபவர்களுக்கு – இவற்றில் ஒரு சிறிய தொகையைத் தேர்தலுக்காகச் செலவிடுவது வீண் விரயமாகத் தெரிகிறது. இந்த சீர்திருத்தங்களின் முக்கிய இரை மாநிலங்களும் கூட்டாட்சி தத்துவமும் தான் என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமம் இல்லை. இந்தித் திணிப்பு, ஜிஎஸ்டி போன்ற சீர்திருத்தங்களின் மூலமாக வெளிப்படையாகவே மாநிலங்களின் பொருளாதார சுயத்தன்மைக்கு வேட்டு வைக்கிறார்கள். ஆளுநர்கள் மூலமாக மாநிலங்களின் கூட்டாட்சி அதிகாரத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர், டெல்லியில் மாநிலத்தின் அடிப்படை சுயத்தைத் தகர்க்கக் கூடிய சட்டங்களை உருவாக்குகிறார்கள்.
‘ஒரே தேர்தல்’ என்பது வட்டாரம், மொழி, கலாச்சார ரீதியான பன்மைத்தன்மைகளை ஒழித்துக் கட்டி ஒற்றைத் தன்மையைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளின் ஒரு நீட்சிதான் செலவின், செயல்பாட்டு வசதிகளின் பெயரைச் சொல்லி, ‘ஒரு நாடு’ என்ற முழக்கத்தை முன்னிறுத்தி மாநிலத் தேர்தல்களையும், ஏன் தேவையெனில் மாநிலங்களையும் வேண்டாம் என்று சொல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதுதான் இந்த தேர்தல் சீர்திருத்தங்களின் எல்லை.! அதே நோக்கத்தைச் சொல்லி, தேர்தலுக்காகும் செலவு, உழைப்பு போன்றவற்றைச் சுட்டிக்காட்டி ஒரு காலகட்டத்தில் தேர்தலையே வேண்டாம் என்று சொல்லக்கூடிய நிலைமையும் வரும் என்பதில் ஐயமில்லை. ஜனநாயகமும் தேர்தல்களும் இருப்பதுதானே இன்று நாடு எதிர் கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை?
கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகத்திற்கு வேட்டு வைக்க நினைக்கும் பாசிச பாஜகவின் திட்டங்களை 2024 தேர்தலில் முறியடிக்க வேண்டியது நம் அனைவர் மீதும் கட்டாய கடமை. ஒன்றிணைவோம்! இந்தியாவை மீட்டெடுப்போம்!!
K.S. அப்துல் ரஹ்மான், மாநிலத் தலைவர், வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு