அரசு ‘மீலாது நபி’ தினத்தன்று விடுமுறை அளிப்பதை நாம் அறிவோம். மீலாது நபி என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த நாளுக்கு அப்படி என்ன சிறப்பு என்று யோசித்திருக்கிறீர்களா?
மைக்கேல் ஹார்ட் என்ற அறிஞர் உலகின் போக்கையே மாற்றியமைத்த, வரலாற்றில் செல்வாக்கு மிகுந்த நூறு ஆளுமைகளை The Hundred என்ற தனது நூலில் வரிசைப்படுத்தினார். அதில் ஓர் ஆளுமைக்கு அவர் முதலிடத்தைத் தந்தார். உலகில் சுமார் 15 கோடி மக்கள் அந்தப் பேராளுமையின் பெயரைத் தம் பெயராகக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இன்று அந்தத் தலைவர் நம்முடன் இல்லை என்றாலும், அவரின் வழிகாட்டல்கள் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கக்கூடியவையாக உள்ளன.
ஆம், அவர்தான் நபிகள் நாயகம் என்று அழைக்கப்படும் முஹம்மது நபிﷺ அவர்கள். அவரின் பிறந்தநாள்தான் மீலாது நபி என்று குறிப்பிடப்படுகிறது.
உலகில் வாழக்கூடிய ஏறத்தாழ 790 கோடி மக்களில் சுமார் 180 கோடி முஸ்லிம் மக்கள் இவரைத் தம் தலைவராகவும், வழிகாட்டியாகவும் கருதுகிறார்கள். இவரின் போதனைகளையும், வழிகாட்டல்களையும் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து வருகிறார்கள். தன் உயிரினும் மேலாக இவரை நேசிக்கிறார்கள். அந்த மாமனிதரின் சாதனை என்னவென்று நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
இன்று உலகில் ஏராளமான பிரச்சினைகளும் சிக்கல்களும் குடிகொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். மனிதன் ஆன்மிக வெறுமையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறான். ஒழுக்கச் சீர்கேடுகள் சமூகத்தை செல்லரித்துக்கொண்டிருக்கின்றன. மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் வழக்கம் பலமாக வேரூன்றியிருக்கிறது. அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன. மூட நம்பிக்கைகள் தலைவிரித்தாடுகின்றன. வலியவர்கள் எளியவர்களை சுரண்டிக் கொழுக்கும் நிலை இருக்கிறது. உலகில் அமைதியும் நீதியும் இல்லாமல் இருள் படர்ந்திருக்கிறது.
இதேபோன்ற சமூகத் தீங்குகள் நிரம்பி வழிந்த ஒரு பிரதேசத்தில்தான் நபிகள் நாயகம் தோன்றினார். ஒரே இறைவனை வணங்குங்கள் என்ற முழக்கத்துடன் வந்த அவர், ஒரு மாபெரும் சமூக, அரசியல் புரட்சியை நிகழ்த்திக் காட்டி மக்களை ஈர்த்தார். எல்லா விதமான அடிமைத்தளையிலிருந்தும் மனிதனை விடுவித்து இறைவனுக்கு மட்டுமே நாம் அடிபணிய வேண்டும் என்றார்.
இறைவன் ஒருவன் என்றால் மனித இனமும் ஒன்றுதான் என்று சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அவர் போதித்தார். தன் மனம் போன போக்கில் வாழ்ந்து ஒழுக்க வீழ்ச்சியில் சிக்கியிருந்தவர்களை உலக மோகத்தின் பிடியிலிருந்து அவர் மீட்டார். சமூக, பொருளாதார ரீதியில் சுரண்டலை ஒழித்து நீதியை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தை முன்னின்று வழிநடத்தினார். வட்டியை, போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலுமாகத் துடைத்தெறிந்தார்.
மொத்தத்தில், மனிதன் சக மனிதனுக்கு அடிமையாவது, பிற படைப்புகளுக்கு அடிமையாவது, தன் மன இச்சைகளுக்கு அடிமையாவது என எல்லா வகையான அடிமைத்தனத்திலிருந்தும் மனிதனுக்கு விடுதலை தந்தவர்தான் முஹம்மது நபிﷺ. இறைவன் தன் இறுதித் தூதராக அனுப்பிய முஹம்மது நபியின் கருத்துகள் ஒரு பெரும் சமூக மாற்றத்துக்கு வழியமைத்தன என்றால் அது மிகையல்ல.
நபிகளாரின் பொன்மொழிகளில் சில:
- வழிபாடுகளில் சிறந்தது மன இச்சைக்கு அடிமையாகாமல் இருப்பதுதான்.
- அரபி அல்லாதவரை விட அரபிக்கு மொழியால் எந்த மேன்மையும் இல்லை. கருப்பரைவிட வெள்ளையருக்கு நிறத்தால் எந்த மேன்மையும் இல்லை. உங்களின் இறையச்சமே உங்களை மேன்மைப்படுத்தும்.
- உண்மையில் மக்கள் ஒரு அடக்குமுறையாளரைக் கண்டபிறகும், தீமை செய்வதிலிருந்து அவரைத் தடுக்கவில்லை என்றால், இறைவன் அவர்கள் அனைவரையும் (தடுக்காதவர் உட்பட) தண்டிப்பான்.
- தொழிலாளியின் வியர்வை காய்வதற்குள் அவருடைய கூலியைக் கொடுத்து விடுங்கள்.
- உங்கள் மனைவியிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர்.
வெளியீடு – இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு, தமிழ்நாடு