பாகிஸ்தானுக்கு ஓட்டமெடுப்பவர்கள்
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கடைசி பந்து வீசப்படும் வரை எந்த ஆட்டமும் முடிந்து விட்டதாக கருத முடியாது என்று சொல்வார்கள். எதிர்பாராத கடைசி நேர ஆச்சரியங்களைத் தரும் விளையாட்டாக (Game of Glorious Uncertainties) கிரிக்கெட் வர்ணிக்கப்படுகிறது. புதிய இந்தியாவைப் பொறுத்த மட்டிலும் கடைசி பந்து வீசப்பட்ட பிறகு தான் இங்கு ஆட்டமே தொடங்குகிறது. ஆட்டம் மொக்கையாக இருந்தாலும் திடுக்கிடும் திருப்பங்களும் சுவாரஸ்யமான சம்பவங்களும் ஆட்டம் முடிந்த பிறகு தான் அரங்கேறுகின்றன. அதுவும் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டமென்றால் கேட்கவே வேண்டாம். வெறுப்பு விளையாட்டு பாகிஸ்தானிலும் கன ஜோராக களைகட்டிவிடும். அங்கிருந்தே இதை கட்டுடைக்க ஆரம்பிக்கலாம்.
சமீபத்தில் துபையில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றவுடன் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத், “இது இஸ்லாத்தின் வெற்றி” என்று மார்தட்டிக் கொண்டார். கிரிக்கெட் போட்டியின் வெற்றிக்கும் மார்க்கத்திற்கும் என்ன சம்பந்தம்? அடிப்படை இஸ்லாத்தைக் கூட அறியாமல் மத வெறியில் உளறுபவர்களுக்கு மத்தியில் இந்தியாவில் வாழும் 20கோடி முஸ்லிம்கள் சிக்கிக் கொண்டு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த வெற்று முழக்கத்தகை் கேட்ட உவைஸி, “நல்லகாலம் எங்கள் மூதாதையர் பாகிஸ்தானுக்குப் போகவில்லை. இல்லாவிட்டால் இந்த மாதிரி பைத்தியங்களுடன் தான் நாங்களும் வாழ வேண்டியிருந்திருக்கும்” என்று குறிப்பிட்டார்.
இவராவது அரசியல்வாதி; மக்களை உசுப்பேற்ற எதையாவது சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர். ஆனால் பாகிஸ்தானின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரும் தற்போதைய பயிற்சியாளருமான வக்கார் யூனுஸ், முஹம்மது ரிஜ்வான் என்ற ஆட்டக்காரர் மைதானத்தில் தொழுகை நடத்தியதை குறிப்பிட்டு “என்னைப் பொறுத்தவரை இந்துக்ளுக்கு முன் எங்கள் வீரர் ஒருவர் தொழுகை நடத்தியதுதான் பெரிய விசயம்” என்றார். தொழுகையின் அடிப்படைக்கே முரணான விசயத்தைப் பெருமையாகப் பேசுமளவுக்கு பகையும் வெறுப்பும் கண்ணை மறைத்திருக்கிறது. தொழுகைக்காக நிற்கும் போதே மனதை ஒருமுகப்படுத்தி, இறைவனுக்காக தொழுகிறேன் என்று உறுதியேற்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. இதில் இந்துக்கு முன் தொழுதேன்… இளவரசனுக்கு முன் தொழுதேன் என்று பீற்றிக்கொள்ளும் அற்பத்தனத்தை என்னவென்று சொல்வது? திருக்குர்ஆனின் 107 வது அத்தியாயத்தில் ஒரு வியக்கத்தக்க வசனம்: “தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.. அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் அலட்சியமாக இருப்பார்கள். அத்தகையோர் (பிறருக்கு) காண்பிக்கிறார்கள்” வக்கார் பீற்றிக் கொள்ளும் ஜல்லியடியில் பல ஓட்டைகள் பல்லிளிக்கின்றன.
முதலில் ரிஸ்வான் தொழுகை நடத்திய மைதானமே இஸ்லாமிய நாட்டில் உள்ளது. அவர் ஆஸ்திரேலியாவிலோ, மேற்கிந்திய தீவுகளிலோ தனது இறைக் கடமையை நிறைவேற்றிவிடவில்லை. அங்கே குழுமிய கூட்டத்தில் 80% பேர் முஸ்லிம்கள். மேலும் டெஸ்ட் மேட்ச் போன்ற நாள் முழுதும் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களில் இவர்கள் ஏன் மைதானத்தில் தொழவில்லை என்ற கேள்வி எழாமலில்லை. தவிர தங்கள் அணியின் ஒரு வீரர் மைதானத்தில் தொழுதால் போதுமா? மற்றவர்கள் தொழாமல் இருப்பது சிறப்பான செய்கையாகிவிடுமா? வக்கார் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தொழுகையை விளம்பர சுவரொட்டி மாதிரி ஒரு முஸ்லிமும் பாவிக்க முடியாது. இவரது இந்த அலம்பலுக்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து, தான் அப்பட்டமான தவறை செய்துவிட்டதாகவும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருவதாகவும் அறிவித்தார். ஆனால் அதற்கு முன்பாக அளவிட முடியாத சேதாரத்தை நிகழ்த்தி விட்டார்.
இந்திய முஸ்லிம்களைப் பற்றித்தான் எந்த கவலையுமின்றி இவர்கள் உளறுவார்கள் என்றால், இந்த சம்பவத்தில் வக்கார் பணயப் பொருளாக வைத்த இஸ்லாத்தையும் அதன் சிறப்பாக தான் சிலாகித்தக் கடமையான தொழுகையையும் தனக்கு பிரச்சினை என்றவுடன் ஒருசேர கைகழுவி அவமானப் படுத்தியது குறித்து ஒருவரும் கவலைப்படவில்லை. இவை “இஸ்லாமியர் என்றாலே இப்படித்தான்” என்ற பொதுமையாக்கலுக்குத் தீனியாகி இந்தியாவின் வெறுப்புப் பிரச்சாரத் தூண்டிலாகி விடுகின்றன. இப்போது விளக்கை அப்படியே இந்த பக்கம் திருப்பினால், வக்காரின் இந்த உளறலைத் தூக்கிப் பிடித்து “இதையெல்லாம் ஒருத்தரும் கேட்க மாட்டீர்களா? எத்துணை குரோதத்துடன் இந்து வெறுப்பை வக்கார் பிரயோகிக்கிறார்” என்றெல்லாம் வெளுத்து வாங்க ஆரம்பித்து விட்டனர். வக்கார் மத துவேஷத்தை வைத்துத் தான் இந்திய மதச்சார்பின்மையை நெட்டக் குத்தாகத் தூக்கி நிறுத்த வேண்டிய அவலத்தை எங்கே போய் சொல்வது? சமய அடிப்படையில் அமைந்த நாட்டில் அப்படி பேசவில்லை என்றால்தானே ஆச்சரியப்பட வேண்டும்.
நிஜத்தில் அரசியல் தலைவர்களின் போலி தேசியவாதம், பெருமுதலாளிகளின் வணிக லாபவேட்கை, காட்சி ஊடகங்களின் மிகைப்படுத்தப்பட்ட பரபரப்பு என்று மூன்று பக்கம் வெறுப்புக் கடலால் சூழப்பட்ட தீபகற்பமாகத் தான் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானம் காட்சியளிக்கிறது. “போர்….ஆமாம்…போர்’ என்கிற ஊக்கொலியோடு போட்டி நடப்பதற்கு ஒரு வார காலத்திற்கு முன்பாக திட்டமிட்ட விளம்பரங்களும் பேட்டிகளும் அறிக்கைகளும் சாமான்ய மக்களுக்கு மத்தியில் விளையாட்டைக் கடந்த வெறியை ஏற்றுகிறது. இது ரசிக சண்டைகளை ஊக்குவிக்கிறது. சமூக ஊடகங்களின் காலம் அதிகார ஒட்டுண்ணிகளிடம் குவிந்துகிடக்கும் வெறுப்பரசியலை எல்லோருக்குமாக பந்திவைத்துப் பரிமாறுகிறது. ரணங்களைக் கீறி குணப்படுத்த வேண்டிய அறுவை கூடத்தில், நோயாளி வலியால் துடித்து அரற்றுகிறான் என்பதற்காக எந்த மருத்துவரும் குருவி ரொட்டியும் குச்சி மிட்டாயும் கொடுத்து வியாதியில் முனகுபவனை குஷிப்படுத்துவதில்லை.
ஆனால் ஆட்சியின் விடுதல்களை, தொடுதல்களை – அத்துமீறல்களை – மக்கள் மீதான வஞ்சகச் செயல்களை எதிர்த்து எழும் குரல்களை சில நிவாரணிகளைக் காட்டியே மடை மாற்றத் தெரிந்த “மட” தலைவர்கள் (மடம் – அடக்கம், மென்மை) நம்மை ரட்சிக்கும் மறவர் பூமியாயிற்றே இது? அதற்காக என்ன செய்யலாம்? கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக மட்டுமே பார்க்காத அளவிற்கு என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்யலாம். இந்திய அணி மற்ற அணியோடு மோதும் போது இந்திய அணி வீரர்களும் அந்த எதிரணி வீரர்களுமே விளையாட்டில் பங்கேற்பார்கள். ஆனால், இந்தியா பாகிஸ்தானுடன் மோதும் போது மட்டும் இந்திய, பாகிஸ்தான் வீரர்களுடன் அந்தந்த நாட்டு அரசியல்வாதிகளும் பிரபலங்களும் அணிபிரிந்து மோதிக்கொள்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் நடுவர்களாக மோதியும் இம்ரான் கானும் நிற்கிறார்கள். சுவாரஸ்யத்திற்கு கேட்கவா வேண்டும்? 1986ல் ஷார்ஜா மைதானத்தில் ஜாவித் மியான்தாத் கடைசி பந்தில் அடித்த ஆறு ரன்கள் இணையத்தில் 1000 கோடிக்கும் மேலாக பார்க்கப்பட்டிருக்கிறது என்றால் இதன் பின்னால் இருநாடுகளிலும் ஏற்றப்படும் தேசிய வெறி எத்தகையது என்று புரிந்து கொள்ளலாம்.
இந்த வெறித்தனமான போதையில் இந்தியாவின் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுமே இருத்தலியல் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறார்கள். அதனால் தான் ஒரு முஸ்லிம் பாகிஸ்தான் நன்றாக விளையாடினாலும் கைதட்டி பாராட்ட முடியவில்லை. அவர்களை தேச பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே தூக்கிப் போடுவோம் என்று மிரட்டுகிறார் யோகி. பாகிஸ்தான் வெற்றி பெற்றவுடன் இந்திய அணியின் தலைவர் கோலி பாகிஸ்தான் வீரர்களைத் தட்டிக்கொடுத்து கட்டியணைத்து பாராட்டுகிறார். யோகியின் தேச பாதுகாப்புச் சட்டம் யாரைக் குறிவைக்கிறது என்பதற்கு விளக்கவுரைத் தேவையில்லை.
விளையாட்டில் விருப்பமான அணியை அல்லது சிறப்பாக விளையாடும் அணியை பாராட்டுவது, கொண்டாடுவது விந்தையல்ல. இதேபோன்று 1999. ஆம் ஆண்டு இந்தியா -பாகிஸ்தான் இடையே உச்சகட்ட உரசல் காணப்பட்ட நேரம் ஜனவரி மாதத்தில் வாசிம் அக்ரம் தலைமையில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட வருகிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. வழக்கமான இருதுருவ ரசிக மனோபாவத்திற்கு மாற்றமாக, பாகிஸ்தான் சிறப்பாக ஆடியபோது, தமிழ்நாட்டு ரசிகர்கள் பெரும் ஆராவாரம் செய்தனர். சக்லைன் முஷ்டாக் 5 விக்கெட் எடுத்ததற்கு எழுந்து நின்று கைத்தட்டினர். இந்திய அணியால் இந்த போட்டியில் வெல்ல முடியவில்லை. பாகிஸ்தான் வெறும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனாலும் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்து தெரிவிக்க ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் எழுந்து நின்று கைத்தட்டி கூச்சலிட்டு ஆராவாரம் செய்தது. பாகிஸ்தான் என்பதற்காக வெறுக்க வேண்டும் என்ற எண்ணம் சென்னை ரசிகர்களிடம் இல்லை. இதுதான் நாடுகளுக்கிடையில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளின் நோக்கம்.
அரசியல் தட்பவெட்பம் உஷ்ணமாக இருக்கும் வேளைகளில் நாடுகளுக்கு இடையில் கீறிச்சுடும் உராய்வுகளை மட்டுப்படுத்தும் நல்லெண்ணத் தூதுவர்களாகவே விளையாட்டு வீரர்கள் திகழ்கிறார்கள். விளையாட்டில் லயித்துப்போய் ரசிக்கும் இரு நாட்டு ரசிகர்களும் தங்கள் பகையை மறக்கக் கூடிய தருணங்களாக போட்டிகள் அமைய வேண்டும். சென்னை டெஸ்ட் அப்படி அமைந்ததால் தான் 21 வருடங்கள் கழித்து இப்போது நிருபர்கள் வாசிம் அக்ரமிடம், ‘இந்தியா – பாகிஸ்தான் மோதலில் உங்களுக்கு பிடித்தமான நிகழ்வு எது?’ என்று கேட்டதும் அந்த சென்னை டெஸ்ட்டையும் ரசிகர்களின் உற்சாகத்தையுமே தனக்கு மிகவும் பிடித்தமான “டேஸ்ட்டாக” கூறமுடிகிறது.
ஆனால் இங்கே என்ன நடக்கிறது? பாகிஸ்தான் உடனான ஆட்டம் என்றில்லை. ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரனாகவும் ரசிகனாகவும் இந்திய முஸ்லிம் தொடர்ந்து கண்காணிக்கப் படுகிறான். சமீபத்திய உலக கோப்பபை ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஏறுமுகமாய் இருந்த பாகிஸ்தான் ஆட்டத்தைப் பாராட்டி சமூக ஊடகங்களில், பாகிஸ்தான் சிறப்பாக ஆடுவதாக தொடர்ந்து வந்த நிலைத் தகவல்களில் மருந்துக்குக் கூட முஸ்லிம்கள் பெயரில் இல்லை. சார்ஜா மைதானத்தில் கடைசி பந்தியில் மியான்டாட் சிக்சர் அடித்தபோது, கோவை கரும்புகடை முஸ்லிம்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள் என்று ஒரு செய்தியைப் பரப்பினார்கள் . தீர விசாரித்த பொழுது நாய் கடித்து செத்து போன ஒரு குடிகாரன் பிணத்தை அவனின் சொந்தங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக பட்டாசு வெடித்து பாலக்காடு ரோட்டில் உள்ள மயானத்திற்கு கொண்டு போன சம்பவம் தான் இப்படித் திரிக்கப்பட்டது எனத் தெரியவந்தது . இப்போது நம் கேள்வி என்னவென்றால், பாகிஸ்தான் விளையாட்டு வீரரின் திறமையை பாராட்டுவதற்கான நியாயமான உரிமைகூட இங்கே வாழும் முஸ்லிமுக்கு இல்லையா? எத்தனை இந்திய அணியின் தலைவர்கள் இம்ரான்கானை, அப்துல்காதிரை, ஜாகிர் அப்பாஸை, சயீத் அன்வரை, அப்ரிடியை பாராட்டி இருக்கிறார்கள். அவர்களின் தேசபக்திக்கு அளவுகோல் எது? மேற்கண்ட புரளி எழுந்த பொழுது கௌதம் கம்பிருக்கு ஐந்து வயது, சேவாக்குக்கு ஏழு வயது. ஆக 35 ஆண்டுகள் கடந்த பிறகும் எதுவும் இங்கு மாறவில்லை. சொல்லப் போனால் அதே வெறுப்பு புதிய புதிய அரிதாரங்களைப் பூசிக்கொண்டு இந்திய முஸ்லிமுக்கு முன் நிர்வாணமாக ஆட்டம் போடுகிறது.
இந்நிலையில் இஸ்லாமிய குடி பிறப்பு அடையாளத்தை மட்டுமே வைத்து சங்பரிவாரங்களால் பொதுவெளியில் இஸ்லாமியர்களை அன்னியப்படுத்த ஓயாமல் வேலை செய்ய முடிகிறது. இதில் அணியில் இருக்கும் முஸ்லிம், ஆட்டத்தை வேடிக்கை பார்க்கும் முஸ்லிம் என்ற பாராபட்சம் ஏதுமில்லை. ஆட்டத்தின் ஏதாவது ஒரு அம்சத்தை வைத்தே எந்த ஒரு இஸ்லாமியனையும் தேச துரோகியாக சித்தரித்து தெருவில் நிறுத்தலாம். இப்போது சிசு மந்திர் என்று ஆரம்பித்து இந்த பயிற்சியைப் பிஞசு மனங்களிலேயே விதைக்க ஆரம்பித்துவிட்டார்கள். முஸ்லிம் என்ற அடையாளம் மட்டும் இருந்தால் போதும், ஒருவனை பாகிஸ்தான் ஆதரவாளன் என்று சொல்லி வாய்க்கு வந்தபடி வசை பாடலாம்; சட்டத்தைக் காட்டி சிறைக்குள் தள்ளி குதூகலிக்கலாம்: கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு நையப் புடைக்கலாம். இதைத்தான் ஆங்காங்கே காஷ்மீர் மாணவர்களுக்கு இப்போது நடத்திக் காட்டியிருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்றில்லை. ஒரு முஸ்லிம் சிக்கினால் போதும். திரும்ப எழவிடாமல் மரண அடி அடிப்பதற்கு இங்கு யாரும் தயங்குவதில்லை. தோனி, சச்சின் என்ற முன்னணி வீரர்கள் உள்ளிட்ட பலர் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. அதற்குப் பிறகும் அவர்கள் விளையாடிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அசாருதீன் என்றவுடன் துலுக்கப் பயலுக்கு வாய்ப்புக் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும் என்றார்கள்.
மீண்டும் கிரிக்கெட் மைதானத்துக்குள் அவர் காலடி வைப்பதே பகல் கனவாகிப் போனது. உண்மையில் முஸ்லிம்களுக்கு யாரும் தாம்பாளத்தில் வைத்து எந்த வாய்ப்பையும் தருவதில்லை. புறக்கணிக்கவே முடியாத திறமை கொண்ட முஸ்லிம்கள் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகிறார்கள். அதற்குப் பிறகும் அவர்களைக் கண்கொத்திப் பாம்பாக கண்காணிக்கிறார்கள். மைதானத்திற்கு உள்ளும் புறமுமாக அவர்களின் செயல்திறனும் நடவடிக்கைகளும் நுண்நோக்கியின் கீழ் வைத்து கவனிக்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற எந்தவொரு முஸ்லிம் வீரரும் இந்த நிபந்தனைகளுக்குட்பட்டே தனது இடத்தைத் தக்கவைக்க கடினமாக உழைத்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செல்லப் பிள்ளைகளாக எத்தனையோ பேர் கழுத்தைப் பிடித்துத் தள்ளும் வரை ஆணியடித்த மாதிரி அணியில் இருந்திருக்கிறார்கள். மருந்துக்குக் கூட அப்படி ஒரு முஸ்லிமை யாரும் காட்ட முடியாது.
இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் வசிம் ஜாபர். கடந்த செப்டம்பரில் நியுசிலாந்தும் அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தும் தத்தம் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை ரத்து செய்தபோது, “கொரானா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி வருவதற்கு முனபாகவே பாகிஸ்தானும் மேற்கிந்திய தீவுகளும் துணிச்சலுடன் இங்கிலாந்திற்கு கிரிக்கெட் விளையாட வந்தன. அப்படிபட்டவர்களை இப்படி காலை வாரிவிடுவது அநியாயம்?” என்று தனது கருத்தை டிவிட் செய்திருந்தார். உடனே நெட்டிசன்கள் வாசிமுக்கு எதிராக கச்சைக் கட்டினார்கள். ஒருவர் “பாகிஸ்தான் என்ற பெயர் கொண்ட தாலிபான் ஆதரவு நாட்டை ஆதரிக்கும் வாசிம்” என்றார். “விளையாட்டின் ஜீவன் என்ற பெயரில் பாகிஸ்தானை ஆதரிக்கும் கருங்காலி” என்றார். எதைக் கொண்டு அடித்தால் நெற்றிப் பொறி கலங்கும் என்ற வித்தை தெரிந்தவர்கள். இருப்பினும் வாசிம் 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் தான் அடித்த 202 ஓட்டங்களை சுட்டிக்காட்டும் விபரக் குறிப்பை பதிவிட்டு அனைவரின் வாயையும் அடைத்தார்.
சர்வதேச கிரிக்கெட் ஆட்டக்காரராக இருக்கும் ஒருவர் பிற நாடுகளின் கிரிக்கெட் நிலவரம் குறித்து கருத்து சொல்ல ஏதாவது தடை இருக்க முடியுமா? அதே சமயத்தில் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த பாகிஸ்தானுக்கு எதிரான சுற்றுபயணத்தை நிறுத்தியது கவலை அளிக்கிறது என்று நியுசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். உடனே இவரை தாலிபான் ஆதரவாளராக சித்தரிக்க முடியுமா? வாசிம் என்ற பெயர் இவர்களின் வக்கிரத்துக்கு வடிகாலாக ஆகிவிடுகிறது. இதே வாசிம் உத்தர்கான்டு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தபோது அணி தேர்வில் அரசியல் தலையீடு உள்ளதாக போர்க்கொடி உயர்த்தினார். உயர்த்தியவர் இந்துவாக இருந்தால் எப்படி சமாளிப்பது என்று யோசித்திருப்பார்கள். முஸ்லிமாக இருப்பதால் இவர் ஒரு வகுப்புவாதி. தன் இனத்தைச் சார்ந்தவருக்கு அநுகூலமாக இருக்கிறார். வீரர்களின் ஓய்வறையில் மௌலவிகளைக் கொண்டுவந்து பிரார்த்தனை செய்கிறார். என்று அடுக்கடுக்காக குற்றப் பத்திரிகை வாசித்தனர். இவை அனைத்தையும் மறுத்து வாசிம் பதிலளித்தார்.
அவருக்கு ஆதரவாக அனில் கும்ப்ளே, இர்பான் பதான் இருவரைத் தவிர சக ஆட்டக்காரர்கள் யாரும் வாய் திறக்கவில்லை. அவருடன் நீண்ட காலம் விளையாடிய அஜிங்கிய ரஹானேவிடம் இது குறித்து கேட்கப்பட்ட போது, “எனக்கு அது பற்றிய விபரம் எதுவும் தெரியாது” என்று நாசூக்காக நழுவிவிட்டார். அப்பட்டமான அநீதி என்ற போதிலும் முஸ்லிம் பிரச்சினை என்றால் கூடவே இருந்தவனையும் கைகழுவி விட்டு ஓடுவதற்குத் தான் இந்த சமூகம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. எத்தகைய குரூரங்களை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனையே பெருஞ்சமூகத்திற்கு இல்லாமல் போவது நம் காலத்தின் பேரவலம்.
இதே நிலைதான் இன்று முகம்மது சமிக்கும்… சில முன்னாள் வீரர்களைத் தவிர இந்தியாவிற்காக சிறப்பாக விளையாடிய ஒரு ஆட்டக்காரனை அவமானப்படுத்தி பாகிஸ்தானுக்கு ஓடு என்று எடுத்தெறிவதை கண்டித்து யாரும் வாய் திறக்கவில்லை. கடைசியாக விராட் கோலி, “என்னைப் பொருத்தவரை யாரையும் மத ரீதியாக கட்டம்கட்டி தாக்குவது மனிதர்கள் செய்யும் கேவலமான காரியம்…. முகம்மது சமி போன்றவர்கள் இந்தியாவிற்காக விளையாடுவதில் காட்டும் பேரார்வத்தையும் உணர்வையும் கொச்சைப் படுத்துபவர்களுடன் நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாங்கள் 200% சமிக்கு பின்னால் நிற்கிறோம்” என்றெல்லாம் பரிந்து நின்றது பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால் பாகிஸ்தான் போட்டி நடந்து முடிந்த ஒருவார காலத்திற்கு பின்னால் தான் அவரால் திருவாய் மலர்ந்தருள முடிந்தது. அதற்கு முன்பாக சமியைக் கூறுபோட்டு குற்றுயிரும் குலையுயிருமாக்கி விட்டார்கள்.
விராட்கோலியின் ஆறுதல் வார்த்தைகள் கூட நியுசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் சமி இடம்பெறுவதை நியாயப்படுத்தும் தன்னல யுக்தியாகத் தான் பார்க்க முடியும். இவ்வளவுக்குப் பிறகும் நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் முன்பைவிட கேவலமாக இந்தியா தோற்றுப் போனபோது தேசபக்த மூஞ்சூறுகள் மறைத்துக்கொள்ள மூஞ்சியே இல்லை. ஒரு வேளை சமி மட்டுமே சரியாக விளையாடாமல் போய், அதன் காரணமாகவே இந்தியா தோற்றிருந்தாலும் அணியிலிருந்து அவரைத் தூக்க முடியுமே தவிர அவரை பாகிஸ்தானுக்குப் போகச் சொல்ல யாருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? ஆனால் இதை கேட்பதற்கு யாருக்கும் நா எழவில்லை. நியாயம் பேச வருபவர்களும் ஒருவர் மாற்றியொருவர், சமி அற்புதமான ஆட்டக்காரர். தனது அபாரமான பந்துவீச்சால் இந்தியாவிற்காக பல வெற்றிகளை மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பெற்றுக் கொடுத்துள்ளார். அதனால் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இப்படியெல்லாம் பேசாதீங்கப்பு என்று குழைகிறார்களே தவிர நாட்டை விட்டு வெளியேறு என்று முகத்தில் உமிழப்படும் வெறுப்பை வேரறுப்பதற்கு யாருமில்லை.
சரி. இப்படி வைத்துக் கொள்வோம். இந்தியாவிற்கு என்று எந்த பெரும் சாதனையையும் செய்யாத ஒரு சாமான்ய முஸ்லிமை ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டை விட்டு ஓடிப்போ என்று சொல்வார்களேயானால் அவர்கள் பின்னால் நிற்க நடுநிலை இந்துக்களுக்கு எந்த நியாயமான காரணமும் இருக்காதா? அக்லாக் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மாட்டுக்கறி குழம்புன்னு சோதனைக்கு அனுப்பினார்கள் அல்லவா? முடிவில் “இல்லை இல்லை.. அது ஆட்டுக்கறி தான்’ என்று அரசாங்கமே சொன்னதற்கு என்ன அர்த்தம்? மாட்டுக்கறியாக இருந்தால் அடிச்சுக் கொல்லலாம் தப்பில்லை என்று அதிகாரப்பூர்வமாக உணர்த்துவதாகத் தானே இது ஆகிறது. பாகிஸ்தானுக்கு ஓட்டமெடுங்கள் என்று அறைகூவும் தேச பக்தர்களும் தங்களுக்கு வசதியென்றால் பாகிஸ்தானுக்காக ஓட்ட(ரன்)மெடுக்கவும் தயங்குவதில்லை.
இன்றைக்கு இந்தியா அரையிறுதிக்குச் செல்ல வேண்டுமானால் பாகிஸ்தான் மற்ற அணிகளுக்கு எதிரான அனைத்து ஆட்டங்களிலும் நல்ல வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். என்று வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். நியுசிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் ஜெயிக்க வேண்டும் என்று தாலிபானை ஆதரிக்கிறார்கள். இந்த அலங்கார மாறுவேட தேசப் பக்தர்கள்தான் சமியின் தேசப்பற்றை உப்புத்தாள் வைத்துத் தேய்க்கிறார்கள். இன்று முஹம்மது சமிக்கு எதிராக குரோதத்தை கக்கும் சங்கிகள், 2019 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி ஓவரை மறந்து இருக்க மாட்டார்கள்.
ஏறத்தாழ தோற்கும் நிலையில் தான் இருந்த இந்திய அணியை மீட்டு, அந்த ஓவரில் வெறும் 4 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார் சமி. அன்று மற்றுமொரு முஸ்லிம் நாட்டை எதிர்த்து இந்தியா வெற்றிபெற உதவிய சமி இந்தியன், இன்று துலுக்க துரோகியா? நல்லா இருக்கு உங்க நியாயம். கிரிக்கெட் என்றில்லாமல் இந்தியாவில் எந்த துறையிலும் பிரபலமாக இருக்கும் ஒரு முஸ்லிம் இப்படிபட்ட கடுமையான உளவியல் நெருக்கடியில் தான் தொடர்ந்து நிறுத்தப்படுகிறான்.
நிறுவன மயமான தாக்குதல்கள், முஸ்லிம் அதிகாரிகள் திட்டமிட்டு பழிவாங்கப்படுதல், அடித்துக் கொல்லுதல், ஆள்தூக்கி சட்டங்கள், தனிமைப்படுதல் உள்ளிட்ட எதற்காகவும் இவர்கள் குரல் கொடுக்க முடியாது. அவர்களின் ஒவ்வொரு மூச்சும் பெரும்பான்மை கலாச்சார தேசியத்தின் உரைகல்லில் உரசிப் பார்க்கப்பட்டே ஏற்பு வழங்கப்படும். அப்படி ஏற்கப்பட்டவர்களே “நல்ல” முஸ்லிம் என்ற வட்டத்திற்குள் நிற்க முடியும். அதற்காக நேர்மாற்றமான கருத்தியலைக் கூட கசப்பு மருந்தாக விழுங்க வேண்டிய நிர்பந்தத்தில் தான் முஸ்லிம் பிரபலங்கள் இருத்தப்பட்டுள்ளனர். இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உச்சத்தில் இருந்த போது இந்த மருந்தைக் கண்ணை மூடிக்கொண்டு பருகியிருக்கிறார். அப்படி பருகியதற்கு பின்தான் 2012 குஜராத் தேர்தலில் நரேந்திர மோடியை ஆதரித்து பிரச்சாரம் செய்யவும் துணிந்தார். இதைவிட 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஜாகிர்கான், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் “பால் தாக்கரே தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு நல்ல தலைவர்” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்து தன் விசுவாசத்தை நிரூபித்தார்.
பெரும்பான்மைவாத மேலாதிக்க உணர்வுகளுக்கு அடிபணிந்து போவதற்கு இதைவிட ஒரு அப்பட்டமான சரணாகதியை நாம் எங்கேயும் கண்டடைந்துவிட முடியாது. இவ்வளவுக்குப்பிறகும் ஜாகிர்கான் நிம்மதியாக மூச்சுவிட முடியவில்லை. சகாரிகா காட்கே என்ற நடிகையை அவர் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தவுடன் இந்துத்துவ சுற்றுச்சூழலில் அவர் லவ் ஜிகாதியாக உடனடியாக முத்திரைக் குத்தப்பட்டார். ஏதோ விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், வணிகர்கள் ஆகியோருக்குத்தான் இந்த நிலை என்றில்லை. மிகச் சிறந்த அறிஞர், பெரும் கல்வியாளர், இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஹமீத் அன்சாரி, “தேசியம் இந்தியாவை பாதுகாப்பற்ற நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறது” என்று தன் ஆதங்கத்தை சொன்னதுதான் தாமதம். அவரை உண்டு இல்லையென்று ஒரு வழி பண்ணிய பிறகுதான் ஓய்ந்தது இந்திய ஊடகம். பெரும்பான்மைவாத அருவருப்புகளுக்கு முன் எந்த சாதனைகளும் பங்களிப்புகளும் இங்கு யாருக்கும் பொருட்டாக இருப்பதில்லை. இதில் கிரிக்கெட் வீரர்கள் எம்மாத்திரம்?
இருப்பினும் இதில் ஒரு வியக்கத்தக்க நகைமுரண் என்னவென்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் முதல் பந்தை வீசியவர் ஒரு முஸ்லிம். 1932 சூன் 25 ஆம் நாள் இந்த டெஸ்ட் போட்டி தொடங்கிய சற்று நேரத்தில் இங்கிலாந்தின் துவக்க ஆட்டக்காரர்களான ஹோம்ஸ், சட்கிளிஃப் இருவரையும் வேகப் பந்து வீச்சாளர் முஹம்மது நிசார் கூடாரத்திற்கு திருப்பியிருந்தார். போட்டி நடந்த ஒரு வார காலத்திற்கு முன்புதான் உள்ளூர் ஆட்டத்தில் இருவரும் இணைந்து 555 ஓட்டங்களை எடுத்து இமாலய சாதனை புரிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டம் தொடங்கிய 20 நிமிடத்திற்குள் இங்கிலாந்து 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைப் பறி கொடுத்திருந்தது. ஒட்டுமொத்த இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரம் ஆச்சரியத்தில் உறைந்தது. அந்த இன்னிங்ஸில் நிசார் 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். உடன் விளையாடிய மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளர் ஜஹாங்கீர் கான் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மட்டையாளர்கள் இன்னும் கொஞசம் கவனத்தோடு விளையாடியிருந்தால் முதல்போட்டியிலேயே இந்தியா வெற்றி பெற்றிருக்கும். ஒருங்கிணைந்த இந்திய கிரிக்கெட் அணியில் அப்போது நான்கு முஸ்லிம்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் மிகச் சிறந்த வீரர்கள் என்ற தகுதியும் ஆட்டத்திறனின் காரணமாகவுமே அணியில் இருந்தனர்.
பிரிவினைக்குப் பிறகு இந்திய அணிகளில் இடம்பெற்ற இஸ்லாமியர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே மணிக்கு 145 கிமீ வேகத்திற்கும் மேலாக பந்து வீசிய 15 பேர்களில் ஐந்து பேர் இஸ்லாமியர்கள். புறக்கணிக்க முடியாத திறமை ஒன்றைத் தவிர இவர்கள் அணியில் இடம் பெறுவதற்கு வேறு காரணங்களே இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்தி சொல்வோம். இந்த ஐந்து பேரில் ஒருவரான ஜாகிர்கானைப் பற்றிக் குறிப்பிடும் போது சவுரவ் கங்கூலி, “எப்போதெல்லாம் ஆட்டம் இக்கட்டான நிலையில் இருந்ததோ அப்போதெல்லாம் நான் பந்தை ஜாகிர் வசம் தருவேன். அவர் என்னை எப்போதும் ஏமாற்றியதில்லை” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார். இந்த வரிசையில் பரூக் இன்ஜினியர், சையது கிர்மானி ஆகியோரை விஞ்சிய விக்கெட் காப்பாளர்கள் அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் இல்லை. மகேந்திர சிங் தோனிக்கு அடுத்த நிலையில் இன்று வரை மிகச் சிறந்த வெற்றிகளைக் குவித்து தந்த அணித் தலைவராக செயல்பட்ட முகமது அசாருதீன், மோசமான தோல்விகளை சந்தித்து வந்த காலங்களில் இந்திய அணியை வெற்றிப் பாதைக்குத் திருப்பி, சுனில் கவாஸ்கர் அவர்களால் மிகச் சிறந்த அணித் தலைவராக போற்றப்பட்ட டைகர் பட்டௌடி ஆகியோர் இந்தியாவிற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடி பெருமை சேர்த்தவர்களாவர்.
கடின உழைப்பால் தங்கள் திறன்களை நிரூபித்து வாய்ப்புகளைப் பெற்ற இவர்கள் இடம் இந்திய அணியில் எந்நாளும் உறுதியாக இருந்ததில்லை. ஒரு சில ஆட்டங்களில் மோசமாக விளையாடினால், முஸ்லிம் வீரர் என்ற மத அடையாளத்தை வைத்து குறிவைத்து தாக்கும் கேவலமான புத்தி, மிகச் சிறந்த மட்டையாளர்கள், பந்து வீச்சாளர்கள் (முஸ்லிம் என்ற காரணத்திற்காக புறக்கணிக்கப்பட்டு) அணியில் இடம்பெறாத வகையில் செயலாற்றத் தொடங்கியிருக்கிறது. இவர்கள் இந்திய வெற்றிக்குக் குழிபறித்து விட்டு பாகிஸ்தானுக்காக ஓட்டம் எடுக்கிறார்கள் என்பதே நிஜம். அந்த புற்றுநோய் இந்தியர்களின் ஊனிலும் உதிரத்திலும் அவர்கள் அறியாத வகையில் வெகுவேகமாக பரவி வருகிறது.
– கோட்டை கலீம் – எழுத்தாளர்
.