• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கட்டுரைகள்»தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்!
கட்டுரைகள்

தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்!

AdminBy AdminDecember 15, 2021Updated:May 27, 2023No Comments4 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

.

தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உணராமல், அதற்கான எந்த அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர்களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர் தான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியத்தினுடைய அனைத்துக் கூறுகளுக்கும், தன்னுடைய சிந்தனையில் இடம் தந்தவர்தான் தந்தை பெரியார்.

அப்படியானால், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே  பொருளில் அவரால் சொல்லப்பட்டது. அவரால் சொல்லப்பட்டது என்றால், தந்தை பெரியார் சொல்வதற்காக நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்த அதிகம் படித்தவர்கள் சொல்வார்களேயானால், தமிழ்நாட்டு வரலாற்றில் மிகப்பெரிய அறிஞன் என்று நாம் இன்றளவும் கொண்டாடக்கூடிய, இன்னும் நூறாண்டுகள் ஆனாலும், இப்படி ஒரு தமிழறிஞன் பிறந்து வர முடியாது என்கின்ற பெருமை ஒரு தமிழறிஞருக்கு இருக்குமானால், அது மொழிஞாயிறு தேவநேய பாவாணர் அவர்கள்தான். பாவாணாருடைய கருத்தும் அதுதான், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரு பொருள் தரக்கூடிய இரு வேறு சொற்கள் என்பதுதான்.

பெரியாரைப் படிக்காதவர்கள், நீங்கள் பெரியாரைக் கூட படிக்கவேண்டாம்; இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் முதலில் மொழி ஞாயிறு தேவநேய பாவாணருடைய ‘திராவிடத்தாய்’ என்ற நூலையும், அவருடைய ‘ஒப்பியன் மொழி நூல்’ என்ற நூலையும் படித்துவிட்டு, அதற்குப் பிறகு நீங்கள் தமிழ்த் தேசியம் பேசுங்கள்.

பாவாணர் சொல்வது என்னவென்றால்,

‘இக்கால மொழியியலும், அரசியலும் பற்றி தமிழும், அதனின்று திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் ‘திராவிடம்’ என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே” இது ஒப்பியன் மொழி நூல் என்ற நூலில், 15 ஆம் பக்கத்தில் எழுதியவர்  தந்தை பெரியார் அல்ல, பாவாணர்தான் எழுதியிருக்கிறார்.

‘தமிழ் என்பதுதான் – தமிழம் என்றும் – த்ரமிள என்றும் – திரமிட என்றும்- திரவிட என்றும் – த்ராவிட என்றும் – இறுதியில் திராவிடம்’ என்று உச்சரிக்கப்பட்டது’ என்று எழுதியவர் பாவாணர் அவர்கள்.

பெரியார் அவருடைய தொடக்க காலத்தில் எழுதிய அனைத்துக் கட்டுரைகளிலும், ‘திராவிட’ என்று எழுதினால், ஒரு அடைப்புக் குறியில் ‘தமிழ்’ என்று எழுதுவார். ஒரு கட்டுரையில், ‘தமிழ்’ என்று எழுதினால், அதற்கு அடுத்து அடைப்புக் குறியில் ‘திராவிட’ என்று எழுதுவார். எனவே, பெரியார் அந்த சொல்லை இனச் சொல்லாகவோ அல்லது மொழிச் சொல்லாகவோ ‘திராவிடம்’ என்கின்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. அதில் முதலில் நமக்கே ஒரு தெளிவு வேண்டும்.

‘திராவிட இனம்’ என்று பெரியார் தன்னை அழைத்துக்கொள்ளவில்லை. திராவிட மொழிக் கூறுகளைச் சேர்ந்த நாம், திராவிட மொழி பேசுபவர்கள் என்பதற்காகவும் சொல்லவில்லை. திராவிடம் என்பதை நான் ஒரு அரசியல் சொல்லாகப் பயன்படுத்துகிறேன் என்று பெரியார் எழுதியிருக்கிறார்.

அவர் திராவிடம் என்கின்ற வார்த்தையைத் தேர்ந் தெடுக்கின்ற காலகட்டத்தில் அவர் சொன்னது, ‘‘ஆரியம் என்பதற்கு எது எதிர் என்றால், திராவிடம். அதனால், நான் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டுகிறேன். திராவிடர் கழகம்’ என்று நான் பெயர் வைக்காமல் போயிருந்தால், வேறு என்ன பெயர் வைத்திருப்பேன் என்று சொன்னால், சூத்திரர் கழகம் என்று வைத் திருப்பேன்” என்றார். இதுதான் தந்தை பெரியார்.

1956 ஆம் ஆண்டுகளில் மொழிவாரி மாகாணங்கள் பிரிந்த பிறகு, தமிழ்நாடு சென்னை மாகாணமாக உருவாகிய பிறகு, கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் பிரிந்த பிறகு, இப்பொழுதாவது நீங்கள் தமிழர் கழகம் என்று சொல்லக்கூடாதா? என்று கேட்டபொழுது, 1955 ஆம் ஆண்டு இறுதிக் காலகட்டத்தில், நவம்பர் அல்லது டிசம்பரில் அவர் எழுதிய தலையங்கத்தில், ‘‘ஆரியனுக்கு, திராவிடன் என்று சொன்னவுடன் எவ்வளவுக் கோபம் வருகிறதோ, அவ்வளவுக் கோபம் தமிழன் என்ற வார்த்தையைச் சொல்லும்பொழுது எப்பொழுது வருமோ, அப்போது நான் தமிழர் கழகம் என்று வேண்டுமானால் பெயர் சூட்டத் தயாராக இருக்கிறேன்” என்கிறார்.

அப்படியானால், தன்னுடைய அரசியல் தத்துவத்திற்கு எந்த வார்த்தை சரியான வார்த்தையாக இருக்கும் என்று அவர் நினைத்தாரோ, அந்த வார்த்தையை அவர் தேர்ந்தெடுத்து திராவிடர் கழகம் என்று பயன்படுத்தினார்.

தனித்தமிழ் தந்தை மறைமலையடிகள்!

இந்த நோக்கத்தை, பெரியாருடைய நோக்கத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்டவர் – தனித்தமிழ் தந்தை என்று சொல்லப்படுகின்ற மறைமலையடிகள் அவர்கள். 1940-களில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் அல்லது 1948 இல் தந்தை  பெரியார் கூட்டிய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டு மறைமலையடிகள் பேசும்போது சொன்னார்,

‘நான் 25, 30 ஆண்டுகளாக எழுதினேன், ஆரியத்திற்கு எதிராக. என்னை அழிப்பதற்கு ஆரியம் பல்வேறு வழிகளில் முயற்சித்தது; பல்வேறு தமிழறிஞர்களும் அந்தக் காரியத்தை செய்தார்கள். ஆனால், பெரியாருடைய இயக்கம் என்று வந்ததோ, அதற்குப் பிறகுதான் என்னுடைய நூல்கள் அதிகமாக விற்க ஆரம்பித்தன. என்னுடைய இயக்கத்தை, என்னுடைய நூல்களை, என்னுடைய சிந்தனையை மிக அதிகமாகப் பரப்பியவர்கள் பெரியார் இயக்கத்தவர்களே” இதுதான் பெரியாருக்கும், தமிழ்தேசியத்திற்கும் உள்ள உறவின் வீச்சு.

தந்தை பெரியாரைவிட தமிழ்த் தேசியவாதி இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?

1955 இல் பெரியார் எழுதுகிறார்:

தமிழ், தமிழ்நாடு என்று பெயர்கூட இந்த நாட்டிற்கு இருக்க இடமில்லாத நிலை ஏற்பட்டுவிடுமானால், என்னுடைய வாழ்வு எதற்காக இருக்கவேண்டும்? என்று எழுதிய தந்தை பெரியாரைவிட தமிழ்த் தேசியவாதி இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா? தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரிகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால், தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையும் இழந்தான் என்று 1939 இல் பேசியவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். இதைவிட தமிழ்த் தேசியத்திற்கான கூற்று வேறு என்ன வேண்டும்?

தந்தை பெரியாரின் மூன்று முக்கிய கொள்கைகள்!

‘திராவிடர் கழகம்’ எனது தலைமைக்கு வந்த பிறகு, மூன்று முக்கிய கொள்கைகளை சொல்லி வருகிறேன்.

  1. மனிதன் இழிவு நீங்க வேண்டும்.
  2. எனது தமிழ்நாடு தனியாக ஆகவேண்டும்.
  3. அதுவரை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும்.

நமக்கு ஆகவேண்டியதெல்லாம் இந்த மூன்று கொள்கைகள் வெற்றியடைய வேண்டும் என்பதே” என்று 1951 இல் சொன்ன தந்தை பெரியாரே, தமிழ்த் தேசியத்தினுடைய மூலவர்.

‘இந்தி மொழியால் தமிழ்க் கெட்டுவிடும் என்று நான் வருத்தப்படவில்லை. இந்தி மொழியால் மட்டுமல்ல, வேறு எந்த மொழியாலும் நம் மொழி கெட்டுவிடாது. ஆனால், நான் இந்தி மொழியை எதிர்க்கக் காரணம், இந்தியால் நம்முடைய கலாச்சாரம் அடியோடு அழிந்து விடும். இப்போதே வடமொழி நாட்டில் புகுந்து, நம்முடைய கலாச்சாரம் எவ்வளவோ கெட்டுவிட்டது. அதற்காக நாம் இந்தியை எதிர்த்துப் போராடவேண்டியது இருக்கிறது” என்று, 1948 இல்  இந்தித் திணிப்பை தமிழர்களின் மீது நடந்த பண்பாட்டுப் படையெடுப்பாக உருவகப்படுத்தியதைப்போல, ஒரு தமிழ்த் தேசிய சிந்தனை என்பது இருந்திருக்க முடியுமா?

‘உண்மையைச் சொல்லவேண்டுமானால், ஆரியம் ‘‘சமயத்” துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலேயே, தமிழர்களுக்கு இன உணர்ச்சி பலப்படவில்லை, குறைந்துவிட்டது” என்று, தனது இறப்புக்கு ஓராண்டிற்கு முன்பு 1972 இல் சொன்னவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். இப்படி தமிழ்த் தேசியத்தினுடைய அனைத்துக் கூறுகளுக்கும், தன்னுடைய சிந்தனையில் இடம் தந்தவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.

போலித் தமிழ்த் தேசியவாதிகளிடைய பரப்புரையில், நமக்கே ஒரு மயக்கம் ஏற்பட்டுவிட்டது. ஒருவேளை பெரியார், தமிழுக்கு எதிராக இருந்தாரோ? தமிழினத்திற்கு எதிராக இருந்தாரோ? என்று. சில இளைஞர்களுக்கு அதுபோன்ற மயக்கங்கள் ஏற்படுகின்ற சூழ்நிலையில், பெரியாருடைய தமிழ்த் தேசிய சிந்தனைகளை மீண்டும் நாம் புதுப்பித்து நாடெங்கும் பிரச்சாரம் செய்யவேண்டிய காலகட்டமாக இந்தக் காலகட்டம் அமைந்திருக்கின்றது.

கலாச்சாரம் தமிழ் தேசியம் திராவிடம் பெரியார் மக்கள் மண்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
Admin
  • Website

Related Posts

இனப்படுகொலையை நோக்கி நகரும் இந்தியா

January 12, 2026

சிறை: பொதுப்புத்தி மீதான ஒரு விசாரணை

January 2, 2026

அண்டை வீட்டார் உரிமைகள்

November 22, 2025

தனி அடையாளத்தை கெடுக்கும் செல்ஃபி கலாச்சாரம்

November 4, 2025

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025

வி.எஸ். நைபாலும் இஸ்லாமிய வெறுப்பு பயணங்களும்

October 4, 2025

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

இனப்படுகொலையை நோக்கி நகரும் இந்தியா

January 12, 2026

சிறை: பொதுப்புத்தி மீதான ஒரு விசாரணை

January 2, 2026

அண்டை வீட்டார் உரிமைகள்

November 22, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.