தி கேரளா ஸ்டோரி எனும் திரைப்படத்தின் டீஸர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை அதா ஷர்மா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சுதிப்தோ சென் இதை இயக்கியுள்ளார். இப்படம் மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இதற்கு நாடு முழுக்க எதிர்ப்பு வலுத்துள்ளது.
எப்படி ஒரு சாமானிய இந்துப் பெண் சக மாணவியான தீவிரவாத முஸ்லிம் பெண்ணால் மதம் மாற்றப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணையக் கட்டாயப்படுத்தப்படுகிறார் என்று டீஸர் காட்டியுள்ளது. இப்படியாக 32,000 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாலியல் அடிமைகளாக, தீவிரவாதிகளாக மாற்றப்படுவதாகவும் டீஸர் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள ஒவ்வொரு காட்சியும் உண்மைச் சம்பவம் என்று முன்வைக்கப்படுகிறது.
கடந்த மார்ச் 2022ல் படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் (ANI) செய்தி தளத்திற்கு அளித்த பேட்டி The Print இணையதளத்தில் வெளியானது. இதில் இயக்குநர் தன்னுடைய விசாரணையின்படி கடந்த 2009ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை கேரளா, பெங்களூரிலிருந்து 32,000 இந்து, கிறிஸ்துவப் பெண்கள் இஸ்லாத்திற்கு மதம் மாறியுள்ளதாகவும், அதில் பெரும்பாலானவர்கள் சிரியா ஆப்கானிஸ்தான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ், ஹக்கானி அமைப்புகள் உள்ள இடங்களில் சிக்கியுள்ளதாகவும், இந்த உண்மையை அறிந்தும் ஐஎஸ்ஐஎஸ் மூலமாக உலக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சூழ்ச்சிக்கு எதிராக அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் இயக்குநர்.
32,000 பெண்களை எப்படிக் கணக்கெடுத்தீர்கள் என்று எழும்பிய கேள்விக்கு இயக்குநர் இந்தப் புள்ளிவிவரங்களை முன்னாள் கேரள முதல்வர் உமன் சாண்டி 2010ம் ஆண்டு கேரள சட்டசபையில் வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலம் எடுத்ததாகக் கூறியுள்ளார்.
உண்மையில் கேரள முன்னாள் முதல்வர் உமன் சாண்டி சமர்ப்பித்த அறிக்கையில், இந்துப் பெண்கள் தீவிரவாதிகளாக மாறினார்கள் என்றோ, அவர்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டார்கள் என்றோ குறிப்பிடப்படவில்லை. அவர் கூறியது, 2800 முதல் 3200 வரை பெண்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள் என்று மட்டுமே. வருடத்திற்கு 3200 என்ற கணக்கில் 10 ஆண்டுகள் பெண்கள் இஸ்லாத்திற்கு மதம் மாறியிருந்தால் அந்தக் கணக்கு 32,000ஆக இருக்கும் என்கிறார் இயக்குநர்.
ஆல்ட் செய்தித்தளம் இயக்குநரைத் தொடர்புகொண்டு இந்தப் புள்ளிவிவரங்கள் குறித்து ஆதாரங்களைக் கேட்டுள்ளது. அதற்கு இயக்குநர் முன்னாள் முதல்வர் உமன் சாண்டியின் 2010ம் ஆண்டு அறிக்கை குறித்த Times of Indiaவின் கட்டுரை ஒன்றை ஆதாரமாக அளித்துள்ளார். பிறகு, ஆல்ட் செய்தித்தளம் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உள்ள மதமாற்றம் குறித்தோ, நாடு கடத்தல் குறித்தோ ஏதேனும் வழக்குப் பதியப்பட்டுள்ளதா என்று விசாரித்துள்ளது. ஆனால் அப்படி எந்த வழக்கும் பதியப்படவில்லை.
டீஸரில் இது உலகளாவிய ஐஎஸ்ஐஎஸ்ஸின் திட்டம், அடுத்த 20 ஆண்டுகளில் கேரளா இஸ்லாமிய நாடாக மாறும் என்று எங்கள் முன்னாள் முதல்வர்கூட கூறியுள்ளார் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இது முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்த் அவர்களைக் குறிக்கிறது. அவர் 2010 ஜூலை 24 அம்ருதா டீவியில் வெளியிட்ட செய்தியில் இப்படிக் கூறியதாக இயக்குநர் பதிவு செய்கிறார்.
உண்மை என்னவெனில், வி.எஸ்.அச்சுதானந்தன், திட்டமிட்டு மதமாற்றம் நடைபெறுவதாகவோ, தீவிரவாத சதித்திட்டமாகவோ எங்கேயும் கூறவில்லை. மாறாக, அவர் தேசிய தினமான அக்டோபர் 15 அன்று இளைஞர்களுக்குப் பணம் கொடுத்து அணிவகுப்பில் கலந்துகொள்ள வைக்கப்படுகிறது என்று PFI இயக்கத்தைக் குற்றம்சாட்டினார். ஆனால், டீஸரில் உள்ள subtitleல் NDFஐ போல் PFI கேரளாவை அடுத்த 20 ஆண்டுகளில் இஸ்லாமிய நாடாக மாற்ற முயற்சி செய்கிறது என்று மாற்றி எழுதப்பட்டுள்ளது.
இஸ்லாம் முழுமையாகக் கட்டாய மதமாற்றத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எதிரானது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால், முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் தீவிரவாதத்துடன் சாரம்சப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது தன்னோடு பழகும், படிக்கும் சக முஸ்லிம்களைக்கூடச் சந்தேகப் பார்வையோடு ஒதுக்கி வைக்கும் போக்கை வார்த்தெடுக்கும்.
மேற்க்கூறியதைப்போல் , திரைப்படம் காட்டியுள்ள மிகப்பெரிய எண்ணிக்கையான 32,000 என்பது எந்த வகையிலும் பொருத்தமற்றது. ஏனெனில் உலகளாவிய அளவில் ஆண், பெண் அனைவரையும் சேர்த்து ஐஎஸ்ஐஎஸ் மொத்தமே 40,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது என்று Observer Research Foundation கூறுகிறது. அதிலும், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் வெறும் 66 நபர்கள் மட்டுமே. நாம் இதனைக் குறைந்த எண்ணிக்கை என்று மகிழ்வுறவில்லை. உலகில் எங்குத் தீவிரவாதம் இருந்தாலும் அதை நாம் எதிர்க்க வேண்டும். ஆனால், அண்டை வீட்டுத் தீவிரவாதியை விட்டுவிட்டு அடுத்த ஊர் தீவிரவாதியை மட்டும் குறைகூறுவது முரண்நகை.
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பிரச்சாரங்களும் தாக்குதல்களும் மிகத் தீவிரமாகப் பரவி வருகின்றன. இச்சூழலில், இதுபோன்ற புனைவுப் படங்கள் அதற்குப் பெருமளவில் வலுச்சேர்கின்றன.
தி கேரளா ஸ்டோரி போன்ற சமூக இணக்கத்தைக் குலைக்கும், துவேஷத்தை வளர்க்கும் படங்கள் தடை செய்யப்பட வேண்டும். மீண்டும் இப்படியான இஸ்லாமிய வெறுப்புத் திரைப்படங்கள் வெளிவராதபடி அரசாங்கம் சட்டம் இயற்றுவது காலத்தின் கட்டாயம்.
– சையத் ஷகீல் அஹ்மத்