(7-10-1957 அன்று சென்னை கடற்கரையில் நடைபெற்ற நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தநாள் விழாவில் அண்ணா ஆற்றிய சொற்பொழிவு)
நபிகள் நாயகத்தை ‘மகான்’ என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால் இந்த 1957ஆம் ஆண்டில் சமுதாய விழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச் சொன்னால், எங்களை ஓட ஓட விரட்டுகிறார்கள் என்றால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு தெய்வங்களை வணங்கிய மக்களிடம் மிகவும் விவேகமான முறையில் அண்ணலார், “நீ வணங்க வேண்டிய கடவுள் இது அல்ல!” என்று கூறினார். அந்த மக்களிடம் தம் கொள்கையை நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னார். அதுதான் அவரை ‘மகான்’ என்று கொண்டாடக் காரணமாயிருக்கின்றது. அப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம்தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறதென்றால் அது ஆச்சரியமில்லை.
‘மார்க்கம்’ என்பது மக்களை ஒன்றுபடுத்துவது – மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது; மக்களை ஒற்றுமைப்படுத்துவது; அரிய பந்தங்களை ஏற்படுத்துவது; நல்ல தோழமையை வளர்ப்பது; சிறந்த விழிப்புணர்ச்சியை உண்டு பண்ணுவது. ‘மதம்’ என்பது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும்; அதற்குப் போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால், மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.
மதத்தின் பயன் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பது பற்றி நமக்குள் வேறுபாடு இருக்கலாம். ஆகையினாலே யாராவது சிலர் நாத்திகர் என்றும், சிலர் ஆத்திகர் என்றும் கருதப்பட்டால்; அந்தப் பட்டம் ஆத்திகர் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள்; தங்களுக்கு அவர்களைப் பிடிக்காத காரணத்தால் அவர்களுக்கு இட்ட பெயர்தானே தவிர வேறு ஒன்றுமில்லை. அதைத் தவிர நாஸ்திகம் என்பது இருந்தததுமில்லை; இனி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
அப்படியிருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் நாஸ்திகக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை இப்புனித நாளில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் ஆஸ்திகம் என்பது இயற்கை. இயற்கைக்கு மாறுபட்டு யாரும் இருக்கமாட்டார்கள்.
இஸ்லாம் மார்க்கத்தின் மாண்புகளை வேறு நாடுகளில் மேலேயிருப்பவர்கள் கீழேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்வார்கள். ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரையில், கீழே இருப்பவர்கள் தான் மேலே இருப்பவர்களுக்கு உபதேசம் புரிய வேண்டும்; அப்பொழுதுதான் கடவுள் தன்மையை எல்லோரும் அறிந்தவர்கள் ஆவார்கள்.
ஏன் இவ்வாறு சொல்கிறேனென்றால் புகைவண்டி நிலையத்திலிருந்து நாம் வீட்டுக்குக் குதிரை வண்டியில் வருகிறோம். நாம் முதலில் இறங்க வேண்டிய இடத்தைச் சொல்லி வண்டிக்காரனிடம் வாடகை பேசுகிறோம்.
வாடகையைக் வண்டிக்காரன் நாம் குறிப்பிட்ட தூரம் வந்ததும் அவன் தான் நினைத்ததைவிடத் தூரம் அதிகமாக இருப்பதாகக் கருதி கொஞ்சம் கூடுதலாகக் கேட்கிறான். அப்பொழுது பலர் இயற்கையாகவே என்ன கூறுகிறார்கள்? “அப்பா! கடவுளுக்குப் பொதுவாக நட…!” என்கிறார்கள். ஆனால் உண்மையாகவே அதிக தூரம் வந்து நாம் வாடகையைக் குறைத்துக் கொடுத்தால், அப்பொழுது அவர், ஐயா, கடவுளுக்குப் பொதுவாக நடவுங்கள் என்றால், அதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? உங்களை மனமார எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.
‘கடவுளுக்குப் பொதுவாக’ என்பதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? ஆகையினாலேதான் நமது நாட்டைப் பொறுத்த வரையில் கீழேயிருப்பவர்கள் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் புரிய வேண்டும் என்றுதான் நான் சொல்லுகிறேன்.
மதத்தின் மார்க்கத்தில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது. ஆனால், மார்க்கம் நடைமுறையில் வரும்பொழுது அது மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்குச் சுற்றுச் சார்பும் சூழ்நிலையும் அமைய வேண்டும். சூழ்நிலையை மனிதன் உண்டாக்குகிறான். ஆனால், சுற்றுச்சார்பு எப்படி இருக்கின்றதோ அப்படியே…. அதன் வழியே செல்பவர்கள் கொஞ்சம் சுற்றுச் சார்பு அறிந்தவர்கள்.
ஆனால் சுற்றுச் சார்புக்கு மாற்றமாக நாம் நடந்தால் தனக்குத் தீமையே விளையும் என்பதைத் தெளிவாக அறிந்தும், கெட்டுக்கிடக்கும் சுற்றுச் சார்புகளை அழித்து, நல்ல சுற்றுச் சார்புகளை ஏற்படுத்துகிறவர்களைத்தான் ‘மகான்’ என்று நாம் அழைக்கிறோம்.
ஆனால் அத்தகைய மகான்கள் நமக்கு எப்பொழுதும் கிடைப்பதில்லை. அவர்கள் கிடைக்கும் பொழுது நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட மகான் களின் ஒருவர் நபிகள் நாயகம்; அவரைப் போன்ற மகான்கள் நம்மிடையே அடிக்கடி தோன்றுவதில்லை. ஆகையினால் அத்தகையவரின் சிறந்த கருத்துக்களை நாட்டில் பரப்ப நல்ல சுற்றுச் சார்புகள் உருவாக வேண்டும். சுற்றுச் சார்பு நல்ல முறையில் அமைவதற்கு மக்களிடையே நல்ல கல்வி முறையும், நல்ல கல்விமுறை ஏற்பட நல்ல ஆட்சியும், நல்ல ஆட்சிமுறை ஏற்படுவதற்கு நல்ல ஆட்சியாளர்களும் வேண்டும். நல்ல ஆட்சியாளர்களை ஏற்படுத்த நல்லவர்களை வாழவிட வேண்டும்.
நபிகள் போதித்த இஸ்லாம் மார்க்கம் வைரம் போன்றது. நல்ல வைரத்தைப் பட்டை தீட்டி அதைக் கையிலே மோதிரமாகவும் செய்து போட்டுக்கொள்ளலாம். காதில் கடுக்கனாகவும் அணிந்துகொள்ளலாம். அதே வைரத்தை விற்று, கிண்டி குதிரைப் பந்தயத்தில் வைத்தும் ஆடலாம்.
ஆனால் வைரத்தைப் பயன்படுத்துவதிலிருந்துதான் அந்தப் பயனின் தரத்தை நாம் அறிந்துகொள்ள முடியும். அதைப் போல இஸ்லாம் மார்க்கம் என்ற வைரம் யாருக்கு எந்த இடத்திலே எப்படி பயன்படுகிறது என்பதிலேதான் மாண்பு உணரப்படும். இதை எண்ணும் போது நல்லவர்கள் கிடைப்பது என்பது கூட எளிதாகிவிடும். ஆனால் அவர்கள் சொல்லிச் சென்ற கருத்துக்களைப் பயன்படுத்துவதிலேதான் அதன் மதிப்பு உயரும்.
இஸ்லாத்தின் உயர்ந்த மார்க்கம் இன்று யாருக்குப் பயன்படுகிறது? இதை எண்ணிப் பார்க்கவேண்டும். ஆதிக்கக்காரர்களுக்குப் பயன்படுமானால், ஏழையை “ஐயோ!” என்று கதற வைப்பவர்களுக்குப் பயன்படுமானால் அதில் இந்த உயரிய மார்க்கத்தின் பயன் இல்லை. இவ்வுயரிய மார்க்கம் அக்ரமத்தை அழிக்கப் பயன்பட வேண்டும். என்றைக்கு இந்நோக்கங்களுக்குப் பயன்படுகிறேதோ அன்றைக்குத்தான் மார்க்கத்தின் முழுப் பயன்களையும் அடைய முடியும்.