• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கட்டுரைகள்»வி.எஸ். நைபாலும் இஸ்லாமிய வெறுப்பு பயணங்களும்
கட்டுரைகள்

வி.எஸ். நைபாலும் இஸ்லாமிய வெறுப்பு பயணங்களும்

முஹம்மது சாதிக் இப்னு ஷாஜஹான்By முஹம்மது சாதிக் இப்னு ஷாஜஹான்October 4, 2025No Comments7 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

மேற்கத்திய நாடுகளில் வாழும் சில மக்களுக்கு இஸ்லாத்தின் மீதான “விசித்திரமான நிலைப்பாடு” தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. மேற்கத்திய நாகரிகமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் கலாச்சாரம், பண்பாடு கடந்து உலகம் முழுக்க வியாபித்துக் கொண்டிருக்க, இஸ்லாமிய கொள்கையின் மீது முஸ்லிம்கள் வைத்திருக்கும் திடத்தன்மை, இஸ்லாத்தை எதிர்க்க நினைக்கும் ஒவ்வொருவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தாமல் இல்லை. மேற்கில் வாழும் மக்களுடன் முஸ்லிம்கள் வாழ்வதை பார்த்து தூசி விழுந்தாலும் துடைக்க நேரமின்றி கண்களைத் திறந்து வைத்து எரிச்சல் அடைந்து கொண்டிருக்கும் இவர்கள், எங்கெல்லாம் இஸ்லாத்தின் ஸ்திரத்தன்மையை முடக்க வழி ஏற்படுகிறதோ அவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள தயங்குவதில்லை.

இஸ்லாத்தை எதிர்க்கும் சிலருக்கு, சமூகத்தின் மத்தியில் இஸ்லாத்திற்கு எதிரான விஷம கருத்துக்களை பரப்புவதற்கு மிகச்சிறந்த ஆளுமைகளின் உதவி தேவைப்படுகிறது. அவ்வகை ஆளுமைகள் பொதுவெளியில் மக்களிடையே புகழ்பெற்ற நற்பெயர்களை பெற்றிருந்தாலும் அதை வைத்து இஸ்லாத்தை எதிர்ப்பதில் தான் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அப்படி இவர்கள் செய்யும் சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது நமக்கு மிகவும் அவசியமாகிறது. ஏனென்றால் இவர்கள் எவ்வாறு முஸ்லிம் மக்கள் வாழும் வாழ்க்கை முறையை திரித்துக் கூறி மக்களை வழி கெடுக்கிறார்கள்; குழப்பங்களை விளைவித்து தங்களது கருத்துக்களை எப்படி மக்கள் மனதில் திணிக்கிறார்கள் என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு மிகப்பெரிய ஆளுமையாக மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அதேசமயம் இஸ்லாத்தை பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் ஆய்வுகள் மேற்கொண்ட முக்கியமான நபர்களுள் ஒருவர்தான் வி.எஸ். நைபால் எனும் எழுத்தாளர். இவரைக் குறித்தும், இவர் இஸ்லாத்தை குறித்து எழுதிய இரண்டு புத்தகங்கள் பொதுச்சமூகத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தியது என்பதையும் பார்க்கலாம்.

பிரிட்டிஷ் எழுத்தாளரான வி.எஸ். நைபால் மேற்கிந்திய தீவுகளில் உள்ள டிரினிடாடில் பிறந்தவர். இவர் பிரிட்டனில் வாழ்ந்த காலத்தில் தனது எழுத்து நடையால் உலக வாசகர்களிடையே மிகவும் பிரபலமான, திறமையான எழுத்தாளர் ஆனார். இவரது நாவல்கள் மற்றும் அனுபவம் சார்ந்த (பெரும்பாலும் பயணங்கள் சார்ந்தது) புத்தகங்களால் கொண்டாடப்படுகின்ற, நன்கு அறியப்பட்ட நபர்களுள் ஒருவராக தனது பெயரை இலக்கிய உலகில் நிலைநிறுத்தியுள்ளார். இவரது படைப்புகளுக்காக 2001ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு கிடைத்தது.

வி.எஸ். நைபாலை பொருத்தவரை அவர் மேலை நாடுகளில் வாழ்ந்து அதே சமயம் கீழ்த்திசை நாடுகளின் மொழி, கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை கற்று இருக்கும் நிபுணரோ அல்லது ஆபத்தான பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் உள்ளவரோ அல்ல. மாறாக, தேசிய விடுதலை இயக்கங்கள், அவர்களது புரட்சிகர இலக்குகள், காலனித்துவத்தின் தீமைகள் போன்ற கடினமான விஷயங்கள் பற்றிய அறிவை ஒருபோதும் கேட்டு அறிந்திராத மேற்கத்திய தாராளவாத வாசகர்களுக்காக பின்தங்கிய நாடுகளில் தங்கி கதைகளை அனுப்பும் பின் தங்கிய நாட்டைச் சேர்ந்தவர்.

இவர் தனது எழுத்துக்களால் மேற்கத்தியர்களிடையே அதிக வரவேற்பு பெற்றிருந்தாலும், இஸ்லாத்தின் மீதான தனது ஆதங்கத்தை தனது பயணங்களின் வாயிலாக வெளிப்படுத்தியதின் மூலமாகவே அதிகம் அறியப்படுகிறார். அதன் நீட்சியாகத்தான், இவர் அரேபியர் அல்லாத நான்கு இஸ்லாமிய நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டு தனது பயண அனுபவங்கள் பற்றி 1981ஆம் ஆண்டு ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாக அதே நான்கு இடங்களை வைத்து பயண அனுபவங்கள் பற்றிய ஒரு பெரிய அளவு (சுமார் 400 பக்கங்கள் கொண்ட) இரண்டாம் தொகுதியை நீண்ட கால இடைவெளிக்குப்பின் (1998ஆம் ஆண்டு) வெளியிட்டிருந்தார். முதல் புத்தகம் நம்பிக்கையாளர்களிடையே: ஒரு இஸ்லாமிய பயணம் (Among the believers: An Islamic Journey) என்பதாகும். இரண்டாவது புத்தகம் 18 ஆண்டுகள் கழித்து வெளிவந்த நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது: மதம் மாறிய மக்களிடையே இஸ்லாமிய சுற்றுலா (Beyond Belief: Islamic Excursions Among the Converted Peoples) என்பது. இதில் அவர் மேற்கொண்ட பயணங்கள் ஈரானில் தொடங்கி, பாகிஸ்தான், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்தது.

இந்த புத்தகங்கள் சென்ற எல்லா இடங்களிலும் குறிப்பாக மதிப்பு மிக்க ஆங்கில, அமெரிக்க பத்திரிகைகளினால் மதிப்பாய்வு செய்யப்பட்டு மிகச்சிறந்த ஆய்வு என புகழப்பட்டது. அறிவார்ந்த கூர்நோக்கினால், துல்லியமான விவரங்களைக் கொண்டு, இஸ்லாத்தின் கருப்பு பக்கங்களை வெளிப்படுத்திய  சிறந்த வல்லுனரின் படைப்பு என பாராட்டப்பட்டது. ஆம். இந்த புத்தகம் மேற்கத்தியர்களுக்கு இஸ்லாத்திற்கு எதிராக இருந்த கானல் பசியை போக்கியிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்று யாரும் கிறிஸ்தவம், யூத மதங்களை பற்றி பயணங்களை மேற்கொண்டு இதுபோன்ற புத்தகங்களை எழுத மாட்டார்கள். இவர்களுக்கு இஸ்லாம் என்பது ஒரு தங்க முட்டையிடும் வாத்து போன்றது. இஸ்லாத்திற்கு எதிராக எழுதும் எழுத்தாளர்களுக்கு இஸ்லாமிய மொழி, கொள்கைகள் குறித்தான அறிவு இல்லாமல் இருந்தாலும் அவர்கள் எழுதிய ஆக்கத்தை படிப்பதற்கும், அதற்காக அதிகம் செலவு செய்வதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.

வறுமை, வேலையின்மை, குறைந்த கல்வியை கொண்ட அதேசமயம் மேற்கத்திய சிந்தனைகளான தொழில்மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் பற்றி அதிகம் அறிந்திராத ஆப்பிரிக்க, ஆசிய நாட்டு மக்களின் கவலைக்குரிய நிலையை மறுகட்டமைக்கக் கூடியதாக நைபாலின் எழுத்துக்கள் இல்லை. அவர் தனது புத்தகம் ஒன்றில் கூறுகிறார், “இந்த மக்கள் தொலைபேசியைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள், ஆனால் அதைச் சரிசெய்யவோ அல்லது கண்டுபிடிக்கவோ முடியாதவர்கள்” என்பதாக விமர்சிக்கிறார். முரண் என்னவென்றால் இவரைத்தான் மூன்றாம் உலகத்தின் (பின்தங்கிய நாடுகளின்) முன்மாதிரி நபராகக் குறிப்பிடுகிறார்கள்.

டிரினிடாட்டில் பிறந்தவர் என்றாலும் அவரின் முதல் அடையாளம் இந்து இந்திய வம்சாவளி என்பதுதான். 1950களில் தனது மேற்படிப்பை தொடர பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த நைபால், பிரிட்டிஷ் ஸ்தாபனத்தின் மூத்த உறுப்பினராகி, நோபல் பரிசுக்கான இலக்கிய வேட்பாளராக, எப்போதும் பேசப்படுபவராக தன்னை நிலைநிறுத்தினார். பின்தங்கிய நாடுகளைப் பற்றிய உண்மையைச் சொல்ல எப்போதும் மேற்கத்தியர்களால் நம்பியிருக்கக்கூடிய ஒருவராகவும் உள்ளார்.

வி.எஸ். நைபாலை பொறுத்தவரை, இஸ்லாமிய மதம் என்பது பின்தங்கிய நாடுகளில் இருக்கும் வறுமை சார்ந்த மற்ற பிரச்சனைகளை விட மிக மோசமானது. தான் இந்து வழி வந்த வம்சாவளி என உணர்ந்திருந்த அவர், இந்திய வரலாற்றின் மிக மோசமான பேரழிவாக இஸ்லாத்தின் வருகையும், பிற்கால பிரசன்னமும்தான் இருந்தது என்று வலுவாக நம்பினார். பெரும்பாலான எழுத்தாளர்களைப் போலல்லாமல், அவர் இஸ்லாமிய மதம், அதன் மக்கள் மற்றும் அது தெரிவிக்கும் கருத்துக்கள் மீதான தனது ஆழ்ந்த எதிர்ப்பை உறுதிசெய்வதற்காக இஸ்லாத்திற்காக ஒன்றல்ல, இரண்டு பயணங்களை இரு வேறு காலகட்டங்களில் மேற்கொண்டார்.

இஸ்லாம் பற்றி தான் இரண்டாவதாக எழுதிய “நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது” என்ற புத்தகத்தை அவரது முஸ்லிம் மனைவி நாதிராவுக்கு அர்ப்பணித்தார். முதலாவதாக எழுதிய புத்தகத்தில் அவர் பயண அனுபவங்களாக எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. நைபாலுக்கு இஸ்லாத்தைப் பற்றி ஏற்கனவே தெரிந்த ஒன்றை தான் முஸ்லிம்கள், மீண்டும் அவருக்கு நிரூபித்தார்கள். அதாவது, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு அதிலிருந்து பின்வாங்குவது ‘அறியாமையை’ நோக்கி நம்மை இட்டுச் செல்லும் என்பதை.

அவரது புத்தக பதிப்பாளர்கள் மூலம் நைபால் நல்ல ஊதியம் பெறுகிறார். இதில் முக்கியமானது என்னவெனில் நல்ல ஊதியத்தை அவர் பெற விரும்புவதால் மட்டும் இவ்வகை ஆய்வுகளை அவர் மேற்கொள்ளவில்லை. மாறாக, முஸ்லிம்கள் அவருக்கு தங்களது சொந்த கதைகளை வழங்குகிறார்கள், அதை அவர் “இஸ்லாத்தின்” நிகழ்வுகளாக உடனே பதிவு செய்துவிடுகிறார்.

இந்த இரண்டு புத்தகங்களிலும் மிகக் குறைந்த அளவே நற்கருத்துகளும் இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் எழுதிய முதல் புத்தகம் வெள்ளைத் தோலில்லாத முஸ்லிம் மக்களின் வாழ்க்கை என்பது, நைபாலுடைய பிரிட்டிஷ், அமெரிக்க மக்களாலும், இஸ்லாத்தைக் குறித்தான அறிமுகமே இல்லாத வாசகர்களாலும் படிக்கப்படுகிறது என்பது தான்.

ஒவ்வொரு முறையும் முஸ்லிம்கள் தங்களது பலவீனங்களைக் காட்டும்போது மூன்றாம் உலகின் பிரதிநிதி நைபால் உடனடியாக அங்கு ஆஜராகி விடுகிறார். ஓர் ஈரானியரால் மேற்கு நாடுகளுக்கு எதிரான சில வெறுப்புக் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டபோது, அதனை நைபால் இவ்வாறு விளக்குகிறார், “இது உயர் – இடைக்கால கலாச்சாரத்தின் மக்களுக்கும், எண்ணெய்க்கும் – பணத்திற்கும், அதிகாரத்திற்கும் –  விதிமீறலுக்கும் மற்றும் மிகச்சிறந்த அறிவினால் சூழப்பட்ட புதிய நாகரிகத்திற்கும் (மேற்கு) – விழிப்புணர்வு இல்லாத மக்களுக்குமான (கிழக்கு) குழப்பமாகும். ஒன்று அவர்கள் இதை நிராகரிக்க வேண்டும்; ஆனால் அதே நேரத்தில் அவர்கள் அதை சார்ந்திருப்பதை தவிர வேறு வழியில்லை” என்றும் குறிப்பிடுகிறார்.

கடைசி வாக்கியத்தை கவனியுங்கள்; ஏனென்றால் நைபால் உலக அளவில் வைக்கும் கண்ணோட்டம் இதுதான், “மேற்கு என்பது அறிவையும், திறனாய்வையும், தொழில்நுட்ப அறிவையும், செயல்படும் நிறுவனங்களையும் கொண்டிருக்கும் இயங்குதளம். இஸ்லாம் மக்களிடையே பயத்தை பரப்புக் கூடிய, சீற்றம் கொண்ட, அறிவு குன்றிய சார்பின்மையால் அதிகாரத்தை கைப்பற்றும் மிக குறைந்த வாய்ப்பை கொண்ட நிலையில் பின்தங்கி இருக்கும் தோல்விகரமான மாதிரி. மேற்கத்திய நாடுகள் தான், வெளியில் இருந்து அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பல நல்ல விஷயங்களை இஸ்லாத்திற்கு வழங்குகின்றன, ஏனெனில், இஸ்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வெளிப்படையான வாழ்க்கை அதன் இயல்பிலிருந்து வந்ததல்ல” என்பது. இவ்வாறு ஒரு பில்லியன் முஸ்லிம்களின் இருப்பு ஒரு சொற்றொடரில் சுருக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுவிடுகிறது.

இஸ்லாத்தில் இருக்கும் குறைபாடு “அது தோன்றிய காலத்திலிருந்து இருக்கிறது என்றும் அது எழுப்பிய அரசியல் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாகவோ அல்லது நடைமுறை தீர்வையோ இஸ்லாம் வழங்கவில்லை என்றும் அது வெறுமனே நம்பிக்கையை மட்டுமே வழங்கியது; அது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் நபியை மட்டுமே வழங்கியது; இஸ்லாம் பேசும் அரசியல் அதன் இயல்பான தன்மையில் கடுமையையும், அராஜகத்தையும் கொண்டிருக்கிறது” என்று தனது வெறுப்புகளை கொட்டுகிறார்.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏன் அவர் முதல் புத்தகம் போன்ற அதே அளவில் இரண்டாவது எழுத முன்வரவேண்டும்? இதில் இருக்கக்கூடிய வெளிப்படையான ஒரே பதில் என்னவென்றால், இஸ்லாம் பற்றிய ஒரு முக்கியமான புதிய நுண்ணறிவு, தான் பெற்று விட்டதாக அவர் நினைத்திருக்கிறார். நீங்கள் ஒரு அரேபியராக இல்லாவிட்டால் (அவரைப் பொறுத்தவரை இஸ்லாம் அரேபியர்களின் மதம்) நீங்கள் மதம் மாறியவர் ஆவீர்கள். இஸ்லாமியர்களாக மதம் மாறிய மலேசியர்கள், பாகிஸ்தானியர்கள், ஈரானியர்கள் மற்றும் இந்தோனேசியர்கள் நம்பகத்தன்மை இல்லாத ஒன்றினை நம்பி அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் என்பது ஒரு பெறப்பட்ட மதமாகும், இது மக்களின் பாரம்பரிய நடைமுறைகளில் இருந்து அவர்களைத் துண்டித்து, இங்கேயும் அல்லாமல், அங்கேயும் அல்லாமல் விட்டுவிடுகிறது. நைபால் தனது புதிய புத்தகத்தில் பதிவு செய்ய முயல்வது என்னவெனில், மதம் மாறியவர்களின் தலைவிதி என்பது, அவர்கள் தங்கள் பழங்கால நடைமுறைகளை இஸ்லாமிய மதம் மாறுவதால் கிடைக்கும் சிறிய பலனுக்காக இழந்து, அதனால் இப்பொழுது முன்பிருந்ததைவிட அதிக குழப்பத்தையும், அதிக மகிழ்ச்சியின்மையும், அதிகமான (மேற்கத்திய வாசகருக்கு) நகைச்சுவைத் திறனில்லாத நிலையையும் ஏற்படுத்திகொண்டனர். இவையனைத்தும் இஸ்லாத்திற்கு அவர்கள் மாறியதால் வந்த விளைவு என்கிறார்.

இந்த அபத்தமான வாதம் இவரை எங்கு இட்டுச் சென்றிருக்கிறது எனில், ரோமை பூர்வீகமாக கொண்ட மக்கள் மட்டுமே ஒரு நல்ல ரோமன் கத்தோலிக்கராக இருக்க முடியும்; மற்ற கத்தோலிக்க இத்தாலியர்கள், ஸ்பானியர்கள், லத்தீன் அமெரிக்கர்கள், பிலிப்பைன்ஸ் அனைவருமே தங்களது தாய் மதத்திலிருந்து மதம் மாறியவர்களாகவும் நம்பத்தகாதவர்களாகவும் மற்றும் அவர்களின் பாரம்பரிய விஷயங்களிலிருந்து துண்டிக்கப்பட்டவர்கள் என்கிறார். ஆங்கிலேயர்கள் அல்லாத மற்ற மக்கள் மதம் மாறியவர்கள் என்றும் அவர்களும், மலேசியன் அல்லது ஈரானிய முஸ்லீம்களைப் போலவே, தாய் மதத்திலிருந்து மாறியவர்கள் என்பதால், ஏதோ ஒரு போலி சாயலில் தான் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார்.

உண்மையில், 400 பக்கங்கள் கொண்ட நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது என்ற இவர் எழுதிய புத்தகம் முட்டாள்தனமான, இஸ்லாத்தை அவமதிக்கும் கோட்பாட்டைத் தவிர வேறு எதையும் அடிப்படையாகக் கொண்டது இல்லை. கேள்வி, இங்கு இது உண்மையா இல்லையா என்பது அல்ல, மாறாக வி.எஸ். நைபால் போன்ற புத்திசாலித்தனமும் திறமையும் கொண்ட ஒரு எழுத்தாளரால் எப்படி இவ்வளவு முட்டாள்தனமான, சலிப்பான புத்தகத்தை எழுத முடிந்தது? அதே பழமையான, அடிப்படைக் கூறுகளுடன் திருப்தியற்ற ஊகங்களை கொண்டு பெரும்பாலான முஸ்லிம்கள், “மதம் மாறியவர்கள்” என்பதால் அவர்கள் எங்கிருந்தாலும் இஸ்லாம் அவர்களுக்கு ஏற்படுத்தும் துன்பத்தை அவர்களுக்கு பிடித்தாலும், பிடிக்கவில்லையானாலும் அனுபவித்தாக வேண்டும் என்ற ரீதியில் எழுதியிருக்கிறார். வரலாறு, அரசியல், தத்துவம், புவியியல் போன்றவற்றை அவர் கண்டு கொள்ளவில்லை. அவரது கருத்து அரேபியர்கள் அல்லாத முஸ்லிம்கள், இந்த மோசமான, தவறான இலக்குகளை கொண்ட உண்மையற்ற மதத்திற்கு, மதம் மாறியவர்கள் என்பது. இஸ்லாம் மீதான அவரது ஆவேசம் எப்படியோ அவருடைய சிந்திக்கும் திறனை நிறுத்தி, அதற்கு பதிலாக ஒரு வகையான மன நோயாக மாறி, அதே ஃபார்முலாவை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

இங்கு சோகமான விஷயம் என்னவென்றால் நைபாலின் இஸ்லாம் பற்றிய இந்த இரண்டு புத்தகங்களும் உலக அளவில் இரண்டாவது பெரிய மதத்தை பற்றிய விளக்க உரை போல மேற்கத்தியர்களால் கருதப்படுகிறது. இவரது கருத்துக்களை தான் சில அறிவிலிகள் இஸ்லாத்துக்கு எதிராக கருத்துக்களை பரப்புவதற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். மேலும் அதிகமான முஸ்லிம்கள் இவரது கருத்துப் பிழையால் பாதிக்கப்படுவார்கள், அவமதிக்கப்படுவார்கள் என்பதுதான் பெரிய பரிதாபம். மேலும் இதன் மூலமாக அவர்களுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி இன்னும் அதிகரித்து கொண்டே தான் செல்லும். அனேகமாக நிறைய புத்தகங்களை விற்பனை செய்யும் பதிப்பாளர்களும், நைபாலும் நிறைய பணம் சம்பாதித்ததை தவிர இவ்வகை புத்தகங்களினால் வேறு யாருக்கும் பயனில்லை.

இஸ்லாமிய வெறுப்பு இஸ்லாமோஃபோபியா
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
முஹம்மது சாதிக் இப்னு ஷாஜஹான்

Related Posts

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025

நபிகள் நாயகம் ஒரு மகான்

September 6, 2025

சாதியப் பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெற காரணங்களும் தீர்வும்

August 27, 2025

சூப்பர் மேன் திரைப்படம் பேசுபொருளானது ஏன்?

July 26, 2025

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025

வி.எஸ். நைபாலும் இஸ்லாமிய வெறுப்பு பயணங்களும்

October 4, 2025

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025

ஷதியா அபூ கஸ்ஸாலே: ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் உயிர்த்தியாகி

September 10, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.