இந்தியாவின் நீதித்துறையானது வெளிப்படையாக அபாயகரமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சமீப காலமாகவே இதுவரை வரலாற்றில் கண்டிராத செயல்பாடுகளையும், இருவேறு தீர்ப்புகளையும் வழங்கி வருகின்றனர்.
நேற்றைய தினம் ( Nov 7. 2022 ) உச்சநீதின்ற நீதிபதிகளாகிய தினேஷ் மகேஸ்வரி, பர்திவாலா, பேலா திரிவேதி ஆகியோர் ( EWS – Economic weaker section ) பொருளாதார அடிப்படையில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தனர். மேலும், யு.யு. லலித் மற்றும் ரவீந்திர பட் இது செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளார்கள்.
பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்பதே ஒரு வேடிக்கை தான். புரட்சியாளர் அம்பேத்கர் இடஒதுக்கீடை குறித்து தெளிவாக விளக்கிவிட்டார் ‘இடஒதுக்கீடு என்பது கல்வி மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்கள் அதாவது பின்தள்ளப்பட்டோர்களுக்கானது’. பொருளாதாரம் என்பது நிலையற்றது. இன்றைய செல்வந்தன் நாளைய ஏழையாக மாறலாம், இன்று ஏழையாக இருப்பவன் நாளைய செல்வந்தனாக மாறலாம்.
இவர்கள் EWS -ற்கு 10% இடஒதுக்கீடு என்று தீர்ப்பளித்தது மட்டுமின்றி யாரெல்லாம் EWS -ற்கு கீழே வருவார்கள் என்று ஒரு வரையறையை வெளியிட்டுள்ளனர். அதில்,
1. ஆண்டுவருமானம் 8 லட்சம் சம்பாதிப்பவர்களும் ஏழைகளாம்.
2. மேலும், 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களும் ஏழைகளாம்.
3. EWS -ல் SC/ST/OBC பிரிவினர்களுக்கு இடம் கிடையாது. இது முற்றிலும் மேல் சாதியில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியோருக்கு என்று வரம்பு விதித்துள்ளனர்.
இவற்றை கண்டாலே நீதித்துறையின் அநாகரிக போக்கு தெரிகிறது. முதலில், ஆண்டு வருமானம் 8 லட்சம் சம்பாதிப்பவர்கள் என்றால் மாதம் 66,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாம் மற்றும் 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் ஏழையாம்.
அதுமட்டுமின்றி மேல் சாதியினராகிய OC பிரிவினர்களுக்கு தான் இந்த இடஒதுக்கீடு என்றுள்ளனர். அப்படியென்றால், மற்ற பிரிவுகளில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்கள் ஏழைகள் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. இடஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாத போதே இவர்கள் பலவிதமான உயர்பதவிகளில் தான் உள்ளனர் இதில் 10% இடஒதுக்கீடு கொடுத்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாதி என்பது அழியாது.
இடஒதுக்கீடு என்பது பின்தங்கியவர்களின் நலனுக்காகவும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் வழங்கப்பட்ட ஒன்றாகும். ஆனால், இப்போது அந்த அடிப்படையையே இவர்களின் தீர்ப்பு தகர்த்தெறிகிறது.
இதனை காணும்போது அன்று தந்தை பெரியார் சொன்னது நினைவுக்கு வருகிறது, ‘நாம் போராடி சட்டங்கள் கொண்டுவரும் நாளில் பார்பனர்கள் நீதிபதிகளாக இருப்பார்கள்’. இப்படியே, நீதித்துறை நாட்டை படிப்படியாக அழித்துவிடும்
எழுத்தாளர் – இம்ரான் ஃபரீத்