இயக்குனர் ஜேம்ஸ் கன் எழுதி இயக்கியுள்ள புதிய சூப்பர் மேன் படம் உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலேயே வெளியாகியுள்ளது. ஏனெனில் ஜேம்ஸ் கன், “சூப்பர் மேன் படம், அரசியல் மற்றும் அறம் பற்றியது, அதில் சூப்பர் மேனின் பயணம் என்பது புலம்பெயர்ந்த ஒருவனின் கதை” என்ற தி டைம்ஸ் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் இருந்து கதை குறித்தான ஆர்வம் மக்களை இன்னும் அதிகப்படுத்தியது.
பொதுவாக சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் கதாநாயகனின் பாத்திரத்தன்மையும் பண்பு நலன்களும் மக்களுக்கு சாதகமாகவும் அவர்களை எதிர்க்கக்கூடிய அல்லது இடையூறாக இருக்கக்கூடிய விஷயங்களுக்கு எதிரானதாகவும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். உள்ளூர் திரைப்படமான கேஜிஎஃபில் இருந்து உலகத் திரைப்படமான சூப்பர் மேன் வரை இந்த சூத்திரமே கதாநாயகனை சூழ்ந்திருக்கிறது. மற்றொரு கதாபாத்திரமான வில்லனின் தன்மை நாயகனின் தன்மைக்கு எதிரானதாக இருக்கும்.
இந்த ஹீரோ vs வில்லன் கதைகளில் வில்லனின் சூழ்ச்சிகளும் அடக்குமுறைகளும் கதாநாயகனால் அடையாளம் காணப்பட்டு முறியடிக்கப்படுவதாகவும் அல்லது கதாநாயகனின் பாத்திரத்தன்மை பிடிக்காமல் வில்லன் அவரைச் சுற்றி சூழ்ச்சி செய்வதாகவும் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். சூப்பர் மேன் படத்தின் கதைக்களம் இது இரண்டையுமே அடிப்படையாகக் கொண்டது. சூப்பர் மேன் படத்தின் சுருக்கப்பட்ட கதை என்னவென்றால், அவர் வேற்றுலகத்திலிருந்து வந்திருக்கிறார் என்பதற்காகவே வெறுக்கும் வில்லன் லெக்ஸ் லூத்தர் நாயகனுக்கு இருக்கும் மக்கள் ஆதரவினை அவருக்கு எதிராக திருப்ப முயற்சி செய்கிறான். இதை சூப்பர் மேன் எப்படி எதிர்கொள்கிறா என்பதே மீதிக் கதை.
இங்கு படத்தின் விமர்சனம் இல்லாமல் அது தற்பொழுது பேசுபொருளாகி இருப்பதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.
இந்தப் படம் பொராவியா, ஜர்ஹான்பூர் ஆகிய இரண்டு கற்பனை நாடுகளுக்கு இடையிலான மோதலை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இதில் பொராவியா என்பது அமெரிக்காவின் நட்பு நாடாகவும் ஒரு சக்தி வாய்ந்த அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவத்தைக் கொண்டுள்ளதாகவும் அதேசமயம் ஜர்ஹான்பூர் என்பது பொராவியாவுக்கு எல்லையில் அமைந்திருக்கக்கடிய ஏழை நாடாகவும் பாதுகாப்பற்ற வறுமையில் வாழக்கூடிய மக்களை கொண்டிருப்பதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே சூப்பர் மேன் ஜர்ஹான்பூர் மீது அடக்கு முறையை ஏவிக் கொண்டிருக்கும் பொராவியாவின் தந்திரங்களையும் அதனோடு சேர்ந்து அங்கு நடந்த போரையும் தடுத்து நிறுத்துகிறார். அதிலிருந்து கதை தொடங்குகிறது.
பொதுவாகவே சூப்பர் ஹீரோக்கள் என்றால் இதுநாள் வரை அமெரிக்காவில் வாழ்பவர்களாகவும், அவர்கள் எதிரிகளிடம் இருந்து உலகை (அவர்களுக்கு உலகம் என்பது அமெரிக்கா மட்டுமே!) காப்பவர்களாகவும், அவர்களின் எந்தவொரு முடிவுகளும் நடவடிக்கைகளும் பெரும்பாலும் அமெரிக்காவின் நலனுக்காகவும் உள்ளதாகவே வரையறுக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்படத்தில் வரும் சூப்பர் மேன் சுதந்திர மனிதனாக தன்னை நிலைநிறுத்துகிறார். அவர் யாருடைய கைப்பாவையாகவும், யாருடைய முடிவுகளுக்கும் உட்பட்டு அவர்களின் பிரதிநிதியாகவும் இருக்க விரும்பவில்லை. அவருடைய விருப்பம் மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதாக உள்ளது.
ஜர்ஹான்பூர் vs பொராவியா : காஸா vs இஸ்ரேல் சில ஒப்பீடுகள்
- காஸா மீது இஸ்ரேல் நடத்தும் போர்கள் உலக அரங்கில் மக்கள் மத்தியிலும், அனைத்து நாட்டு தலைவர்கள் என அனைவருக்கும் தெரிந்த பரிச்சயமான நிகழ்வுகள் தான். காஸா என்பது சொந்த குடிமக்களை கொண்ட மிகவும் சிறிய நிலமாகும். தற்போது அங்கு வாழக்கூடிய மக்கள் தொழில்நுட்ப ரீதியாக எந்தவித உதவியும் ஏன் அடிப்படை தேவைகளான உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் இருக்கின்றனர். ஆனாலும் அநீதிக்கு எதிராக போராடக்கூடிய மக்களாகவும், அதேசமயம் அவர்கள் மீது அடக்கு முறையை மேற்கொள்ளும் இஸ்ரேல் தொழில்நுட்ப ரீதியிலும், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலும் பல நாடுகளின் உதவியோடு குறிப்பாக வல்லரசு நாடு என தன்னை பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவின் நேரடி உதவியினை பெற்று காஸாவில் பல மக்களைக் கொன்று குவித்துவருகிறது.
- பொராவியாவின் இராணுவப் படைகள், பீரங்கிகள் மற்றும் துப்பாக்கி ஆயுதங்களுடன் மக்களை நோக்கி படையெடுக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் ஜர்ஹான்பூரைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களை பாதுகாக்க எதுவும் இல்லாத நிலையிலும், நீரில்லாத வறண்ட நிலப்பரப்பு, உணவு, குடிநீர் தட்டுப்பாடு இவற்றுடன் போராடுவதற்கு வாய்ப்பில்லாத போதும் மக்கள் இராணுவத்தின் துப்பாக்கிகளை எதிர்கொள்கிறார்கள்.
- பொராவியாவின் மக்கள் வெள்ளையர்களாகவும் அதே நேரத்தில் ஜர்ஹான்பூர் மக்கள் நிறத்தில் சற்று குறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
- ஜர்ஹான்பூரில் குடி கொண்டிருக்கும் சொந்த மக்களை அப்புறப்படுத்திவிட்டு அவர்களது இடத்தை ஆக்கிரமித்து எல்லையை விரிவாக்கும் முயற்சியை கொண்டதாக பொராவியாவின் காலனியாதிக்க கொள்கை இருக்கிறது.
- ஜர்ஹான்பூர் பொதுமக்களுக்கு எதிராக ஆயுதங்கள் பரிசோதிக்கப்படுகிறது.
- பொராவியாவின் அதிபர் அமைதியை பற்றி பாடம் எடுக்கிறார்; அதேசமயம் அவர்களின் நடவடிக்கை ஜர்ஹான்பூரில் வேறு விதமாக இருக்கிறது.
- பொராவியா மற்றும் ஜர்ஹான்பூர் இடையிலான போரை உலக நாடுகள் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
- படத்தின் ஓரிடத்தில் உண்மை என்னவென்று உலக மக்கள் அனைவரும் அறிந்திருந்தாலும், ட்ரோல் பண்ணைகள் போல குரங்குகளை வைத்து நாயகனுக்கு எதிரான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படும். இது நேரடியாக, காஸாவின் மக்கள் அடக்குமுறைப்படுத்தப்பட்டாலும் கொல்லப்பட்டாலும் அவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்கள் மீது வெறுப்பை உமிழும் இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளையும் பரப்பும் விஷமிகளை அடையாளப்படுத்துவதாக உள்ளது.
- பொராவியாவின் அதிபராக காட்சிப்படுத்தப்பட்டிருப்பவர் இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகுவை பிரதிபலிக்கிறார். நிலத்தைத் திருடுவது, அதன் எண்ணெய், எரிவாயுவை எடுத்துக்கொள்வது, அதன் ஒரு பகுதியை பணக்கார மக்களிடம் ஒப்படைப்பது, மீதமுள்ளதை அதிக பணம் செலுத்த விரும்புவோருக்கு விற்பது என்ற தனது நோக்கத்தை அவர் வெளிப்படையாகக் கூறுகிறார்.
இயக்குனர் ஜேம்ஸ் கன்னோ, தயாரித்த டிசி ஸ்டுடியோவோ அல்லது படத்தில் வரும் நடிகர்களோ படம் இஸ்ரேல் மற்றும் காஸா குறித்தானது என்பதை வெளிப்படையாக கூறவில்லை. ஆனால், படத்தில் பொராவியா, ஜர்ஹான்பூர் மீது நடத்தும் அடக்குமுறையை இஸ்ரேல் ஃபலஸ்தீனத்தின் மீது நடத்தும் அடக்குமுறையுடன் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. மேற்குறிப்பிட்டவர்கள் இந்த ஒப்பீட்டை ஏற்காவிட்டாலும் திரைப்பட பார்வையாளர்களும் விமர்சனங்களும் இது குறித்து வெளிப்படையாக பேசத்தான் செய்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான மக்கள் சூப்பர் மேன் படத்தினை ப்ரோ ஃபலஸ்தீன் படமாக கொண்டாடிக் கொண்டிருக்க கூடிய சூழ்நிலையில், தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலும் பல இஸ்ரேலிய ஊடகங்களும் சூப்பர் மேன் படம் காஸா இஸ்ரேல் போரினை பிரதிபலிக்கிறதா? என்பது போன்ற கட்டுரைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
இஸ்ரேலிய ஊடகங்கள், ஸியோனிச ஆதரவு கருத்து உடையவர்கள் இப்படத்தை எதிர்ப்பதற்கு மிக முக்கிய காரணம் இப்படத்தை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக ஆக்கப்பட்டுள்ள ப்ரோ ஃபலஸ்தீன கருத்து மீதான ஓர் அச்சமே.
அதேசமயம் காஸா மீதான இஸ்ரேலின் இன் அழிப்பு குறித்தான அனைத்து வகை செய்திகளும் தகவல்களும் இஸ்ரேலிய ஸியோனிசவாதிகள் மீதான எதிர்ப்பும் மெல்ல மெல்ல அனைந்து வருவதாக அவர்கள் பெருமூச்சுவிட்டிருந்த வேளையில், சூப்பர் மேன் படத்தின் வாயிலாக ப்ரோ ஃபலஸ்தீன கருத்தாக்கம் வலுப்பெறுவது ஸியோனிசவாதிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சூப்பர் மேன் படத்திற்கு எதிரான கருத்துக்களை கட்டுரைகளாக எழுதி தங்களது ஆதங்கத்தை தீர்த்துக்கொள்கிறார்கள்.
சூப்பர் மேன், பொராவியா மற்றும் ஜர்ஹான்பூர் இடையே நடக்கும் போரினை நிறுத்தி அமைதியை நிலைநாட்டி பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தாலும், நிகழ்காலத்தில் நடக்கும் போர் தீவிரமாக நடந்து கொண்டேதான் இருக்கிறது. நாம் மேற்கூறியது போல கதாநாயகனின் தன்மை மக்களுக்கு சாதகமாகவும் அநியாயங்களுக்கு எதிராகவும், நீதியை நிலைநாட்டக் கூடியவர்களாக இருப்பதாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் எப்பொழுதும் வில்லத் தன்மை கொண்டவர்களாகவே வரலாறு நெடுகிலும் இருக்கிறார்கள்.
ஜர்ஹான்பூரை காப்பாற்றுவதற்கு சூப்பர் மேன் வந்தது போல ஃபலஸ்தீனர்கள் தங்களை காப்பாற்றுவதற்கு எந்த மேற்கத்திய சூப்பர் ஹீரோக்களுக்காகவும் காத்திருக்கவில்லை. அவர்களே ஃபலஸ்தீனிலும் உலகின் அனைத்து பகுதிகளிலும் தங்களுக்காக போராட்டங்களை அச்சமின்றி முன்னகர்த்தி செல்கின்றனர். இந்த ஃபலஸ்தீனர்களும் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்துவரும் மக்களுமே இங்கு உண்மையான சூப்பர் ஹீரோக்கள்.