உலக மக்கள் தமது ஓய்வு நேரத்தை ஆரோக்கியமான முறையில் கழிப்பதற்கும் உடலுக்கு நன்மை பயக்கும் விதமாகவும் எண்ணற்ற விளையாட்டுகளை கண்டுபிடித்து வைத்துள்ளனர். இப்புவியின் ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான விளையாட்டுகள் விளையாடப்படுவதை நாம் கண்டிருப்போம்.
நாடு, இனம், மொழி என்கிற ரீதியில் ஒவ்வொரு சமூக மக்களும் தனக்கென்ற சில பிரத்யேகமான விளையாட்டுகளை விளையாடி மகிழ்வார்கள். கிரிக்கட் என்றவுடன் இங்கிலாந்து நாடு நம் நினைவில் உதிக்கும்.அதுபோலவே, பேஸ்பால் விளையாட்டுக்கு அமெரிக்கா நாட்டவர்களும், காளைச் சண்டைக்கு ஸ்பெயின் நாட்டவர்களும், கால் பந்து விளையாட்டுக்கு பிரேசில் நாட்டவர்களும் பெயர் பதித்தவர்கள்.
ஒவ்வொரு பகுதிக்கென்றும் பிரத்யேகமான விளையாட்டுகள் இருப்பதை போல தமிழ் மக்களுக்கென்றும் சில விளையாட்டுகள் உண்டு. அவைகளெல்லாம் தற்காலத்தில் விளையாடப்படுவதே மிகவும் அரிதாகிவிட்டது. கிராமப்புறங்களில் மட்டுமே அவற்றைப் பார்க்க முடியும்.
நமது தமிழ்நாட்டு பாரம்பரிய விளையாட்டுகளில் சிறுவர், சிறுமிகள் விளையாடுபவை என்று எடுத்துக்கொண்டால் பல்லாங்குழி, தாயக்கட்டம், நொண்டி, பம்பரம், கோலி, கண்ணாமூச்சி போன்ற பல விளையாட்டுகள் இருக்கும். சிறுவர்கள் விளையாடும்போது அவர்களின் உள்ளக் களிப்பு அகத்தில் பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்திருக்கும்.
ஆனால், இன்றைய நவீன உலகில் சிறுவர்கள் வீடியோ கேம், கார்ட்டூன், தொலைகாட்சி பார்ப்பது என்று தான் தனது பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறார்கள். முகத்தில் பெரிதாக எந்த ஒரு சந்தோசத்தையும் காண இயலவில்லை. ஆம், சமீபத்திய தொழில்நுட்பக் கருவியின் முன்பு புத்தர் சிலைபோல தனிமையில் சப்தமின்றி அமர்ந்து அவர்களின் ஓய்வு நேரங்களை கழிக்கிறார்கள்.
ஆடவர்களின் விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால் ஏறு தழுவுதல், சடு குடு, பானை உடைத்தல், சிலம்பம் போன்ற சில விளையாட்டுகளை தனது வீரத்தை எடுத்துரைக்கும் நோக்கில் விளையாடுவார்கள். கும்மி, கண்கட்டி போன்ற சில விளையாட்டுகளை பெண்கள் விளையாடி மகிழ்வார்கள்.
இந்த விளையாட்டுகள் எல்லாம் தற்கால தலைமுறையினரின் காது வரையிலாவது எட்டியுள்ளதா என்பதே கேள்வியாக உள்ளது. நமது பாட்டன்-பூட்டன் விளையாடிய விளையாட்டுகள் நம் நினைவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகினறன. கிராமப்புறங்களில் கூட அயல் நாட்டு விளையாட்டுகள் ஊடுருவி இருப்பதைக் காண முடிகிறது.
‘FIFA’ என்னும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ஜீன்-12 முதல் தொடங்கி தற்போது நடைபெற்றுகொண்டிருக்கிறது. இந்த போட்டியை பார்க்காத வாலிபர்களை ஏளனமாய் பார்க்கும் மக்களும் நம் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தமது பாரம்பரிய விளையாட்டுகள் என்னவென்றே தெரிந்துகொள்ளாமல் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் விளையாட்டில் அளவுகடந்த ஆர்வம் காட்டுவது விசித்திரமாய் இருக்கிறது.
இன்னொரு வேடிக்கை என்னவெனில் அயல் நாட்டு விளையாட்டுகளை, தான் விளையாடுவதை விடவும் தொலைகாட்சி பெட்டி முன் கண் விழித்து பார்க்க வேண்டும் என்கிற மனோபாவம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. (இந்த மனோபாவம் இயல்பாக வருகிறதா அல்லது வரவழைக்கப்படுகிறதா என்பது விவாதத்திற்குரியது)
தனிமையில் பொழுதை செலவிடுவதை விட கூட்டாக தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளோடு மகிழ்ச்சியாக ஓய்வு நேரத்தை கடக்க முயற்சிப்போம். எந்த நாட்டினுடைய விளையாட்டாக இருந்தாலும் அதை நம்மவர்கள் விளையாடுவதில் தவறேதுமில்லை. மாறாக, அவைகளை கௌரவமாகவும் நம் ஊர் விளையாட்டுகளை ஏளனமாகவும் கருதுவது தவறானது.