குஜராத்தில் படேல் சாதியினர் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவில் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி, கடந்த செவ்வாய் கிழமை (25/08/2015) குஜராதின் தலைநகரான அஹமதாபாத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 5 இலட்சம் படேல்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து, மாநிலம் முழுவதிலும் வன்முறை வெடித்தது. காவல் துறையினர் உட்பட இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 8 இடங்களில் ரயில் தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது தாக்குதல் என பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்துள்ளன.
2002இல் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்தின்போது மிக நீண்ட காலத்திற்கு பிறகே அரசு இராணுவத்தை வரவழைத்தது. ஆனால், தற்போதைய குஜராத் விவகாரத்தில் அரசு மெத்தனம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படேல் சாதியினரின் இவ்விவகாரம் தற்பொழுது வேறு பல பரிமாணங்களையும் எட்டியுள்ள நிலையில், இந்தியா முழுவதும் இட ஒதுக்கீடு குறித்த வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதை லாவகமாக பயன்படுத்திக் கொண்டு, வகுப்புவாத சக்திகள் இடஒதுக்கீட்டிற்கு எதிரான தமது பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டனர். விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இணைப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின், ‘சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும்’ என்கிறார். இந்நிலையில், கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கிய அரசாங்கத்தின் மீதும் சமூகநீதிக்காக போராடியோர் மீதும் தவறான சித்திரத்தை உண்டாக்கும் முயற்சிகளை சங்கப்பரிவாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர். இடஒதுக்கீட்டை முதன் முதலில் கொண்டுவந்தது அரசாங்கமோ அல்லது அதற்காக போராடிய அம்பேத்கர், காயிதே மில்லத், பெரியார் போன்றவர்களோ அல்ல. பார்ப்பனர்கள்தான் என்பது இவர்களுக்குத் தெரியாதா என்ன!
மனுதர்மத்தின்படி, ஒவ்வொரு மனிதனும் பிறப்பதற்கு ஆண்டவனின் (பிரம்மனின்) உடலில் ‘இடஒதுக்கீடு’ செய்யப்பட்டது. சாதிப் பிரச்னைகளுக்குத் தொடக்கப்புள்ளி இதுவே. மனு கொண்டு வந்த இந்த கோட்பாட்டைக் கொண்டே ஏராளமானோர் ஒடுக்கப்பட்டனர். அவர்கள் சமூகத்திலிருந்து முற்றிலும் புறந்தள்ளப்பட்டனர். தொட்டாலே தீட்டு எனக் கூறி சக மனிதனோடு உறவாடக் கூட அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. பிறப்பின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்பட்டது. அதிகாரமெல்லாம் ஆதிக்க சாதியினரிடமே தேங்கி நின்றன.
இன்றுவரை நாம் பார்க்கிறோம், பல்வேறு பிரிவுகளைக் கொண்ட சமூகத்தில் சில சமூக மக்கள் அதிகாரத்தில் கோலோச்சுகிறார்கள். சில சமூகத்தார்கள் அதிகாரத்தின் வாசனையைக் கூட உணராதிருக்கிறார்கள். அந்தச் சமூகத்தின் மக்கள் தொகையையும் அவர்களது பிரநிதித்துவத்தையும் கணக்குப் போட்டு பார்த்தால், இரண்டிற்கும் மத்தியில் மிகப் பெரிய இடைவெளி இருந்துவருவதைப் பார்க்க முடியும். இந்த அவல நிலைக்கு காரணம், சாதி அமைப்புதான்.
குஜராத்தில் இடஒதுக்கீடு வேண்டி ஆர்ப்பரிக்கின்ற படேல் சமூகம், மைய நீரோட்டத்திலிருந்து புறந்தள்ளப்பட்ட சமூகமா? நிச்சயமாக இல்லை. உண்மையில், இவர்களது நோக்கம் இட ஒதுக்கீட்டை ரத்துசெய்ய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதுதான். இது ஓர் இடஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டமே.
“பாடிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி” (படேல் இடஒதுக்கீடு போராட்டம்) என்கிற அமைப்பின் மூலம் படேல் இனத்தவர்களின் ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தும் ஹர்திக் படேல் (வயது 22) எனும் இளைஞன் செய்தியாளர்களிடம், தங்கள் சமூகத்திற்கும் இடஒதுக்கீடு வேண்டும்; இல்லையெனில், இடஒதுக்கீடு என்கிற அமைப்பையே முடிவுக்குக் கொண்டிவாருங்கள் என்கிறார். இந்த சூட்சுமமான பேச்சில், போராட்டத்தின் உண்மை நோக்கத்தையும் குறிகோளையும் எளிதாக புரிந்துகொள்ள முடியும்.
30 ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தில் மாதவ் சிங் கோலங்கி தலைமையிலான காங்கிரஸ் அரசு உயர் கல்வி அமைப்புகளில் கொண்டுவந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை, இதே படேல் சாதியினர் தீவிரமாக எதிர்த்து வன்செயல்களில் ஈடுபட்டனர். 10 ஆண்டுகள் அமல்படுத்தாமல் இருந்த மண்டல் கமிஷனின் அறிக்கையை 1990இல் அப்போதைய பிரதமர் வி.பி சிங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டபோது, போராட்டத்தில் இறங்கியது இதே படேல் இன மக்கள்தான். அந்தச் சமயத்தில் வி.பி. சிங்கிற்கு பாஜக வெளியிலிருந்து கொடுத்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டு, அவர் ஆட்சியையே கவிழ்த்த கட்சி என்பதை இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.
காலங்காலமாக படேல்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்தே போராட்டம் செய்து வருகின்றனர். தற்போது எங்களுக்கும் இடம் ஒதுக்கிக் கொடுக்கவேண்டும் என்கிற பெயரில் இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவில் படேல் சாதியினரைச் சேர்க்க முடியாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். குஜராத்தில் முற்படுத்தப்பட்ட பிரிவினர் மொத்தம் 26 சதவிகிதத்தினர். இதில் 15 விழுக்காட்டினர் படேல்கள். படேல் சாதியினர் சமூக – அரசியல் ரீதியாக மிகவும் முன்னேறிய சமூகம். வைரம், ஜவுளி, வேளாண்மை, பால் உற்பத்தி என்று வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் சமூகம்.
அதற்குச் சான்றான சில புள்ளி விவரங்கள்:
*குஜராத்தில் ரூ.10 கோடிக்கு மேலாக முதலீடு செய்துள்ள தொழிற் சாலைகள் மொத்தம் 6146 உள்ளன; அவற்றுள் 1700 ஆலைகள் படேல்களுக்கு சொந்தமானவை.
*படேல் சாதியினர் 1.40 இலட்சம் பேர் அமெரிக்காவில் வசிக்கின்றனர். இது அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் 25 சதவிகிதம் ஆகும். கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்.
*அமெரிக்காவில் 22,000 ஹோட்டல்கள் இந்தியர்களால் நடத்தப்படுகிறது. இவற்றில் மதிப்பு 127 பில்லியன் டாலர்கள். அவற்றில் 60 சதவிகிதம் படேல் இனத்தவர்களுடையது.
*குஜராத் முதலமைச்சர் ஆனந்தி பென் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது அமைச்சரவையில் 7 அமைச்சர்கள் பட்டேல்கள்.
*குஜராத் பாஜக-வின் 121 எம்.எல்.ஏ-க்களில் 40 பேர் படேல்கள். பாஜக தலைவர் R.C. ஃபல்டு ஒரு படேல்.
இப்படி படேல் இன மக்கள் பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக மிகவும் முன்னேறிய சமூகமாக இருக்கும் நிலையில், 5இல் இருந்து 10 சதவீகிதத்தினர் மட்டுமே அப்படி வசதியாக இருக்கிறார்கள் என ஹர்திக் படேல் கூறி வருகிறார்.
இடஒதுக்கீடு என்பது சமூகத்தில் பின்தங்கிய மக்களை கைத்தூக்கிவிடுவதற்கும், மக்களிடையே சமமான பிரதிநிதித்துவத்தைக் கொண்டுவருவதற்கும் உருவாக்கப்பட்ட வழிமுறையாகும். படேல் சாதியினர் ஒருபோதும் பின்தங்கிய நிலையில் இருந்ததில்லை. தலித்துகளும் ஆதிவாசிகளும் சிறுபான்மையினருமே கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய சமூகங்களாக இருக்கின்றனர். இவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், சமூக அந்தஸ்தைப் பெற்றுத்தரவும் இடஒதுக்கீடு அவசியமாகிறது.
35 சதவிகித முஸ்லிம்கள் குடி தண்ணீர், கழிப்பிட வசதிகூட இல்லாத குடிசைகளில் வசிக்கின்றனர் என்றும்; 23 முஸ்லிம்கள்தான் வசிக்கத் தகுந்த வீடுகளில் வசிக்கின்றனர் என்றும் 2007இல் வெளியிடப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிட்டியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2006 வெளியிடப்பட்ட ராஜேந்திர சச்சார் கமிட்டியின் அறிக்கையின்படி, ‘புகழ்பெற்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் 100 மாணவர்களில் 4 பேர் தான் முஸ்லிம்கள்; நகரங்களைப் பொறுத்தவரை வழக்கமான வேலை வாய்ப்புகளில் தலித் மக்கள், பழங்குடியினர் ஆகியோருக்குக் கிடைப்பதைவிடக் குறைந்த அளவே முஸ்லிம்களுக்குக் கிடைக்கின்றன’.
உள்ளூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 90% பேர் தலித்துகளாக இருக்கின்றனர். இடஒதுக்கீடு முறை பின்பற்றும் நிலையிலும், கிராமங்களைச் சேர்ந்த தலித்களுக்கு உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களில் வாய்ப்பு மறுக்கப்படும் நிலையே உள்ளது. இதுவரையில் கிராமங்களில் 10 சதவீதம் தலித்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்த நிலையில், மீதமுள்ள 90 சதவீதம் பேர் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கிராமங்களிலேயே உள்ளனர். பழங்குடி மக்களின் நிலையும் படுமோசமாகவே உள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் பல்வேறு மதங்களைச் சேர்ந்த வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்கிறது. இடஒதுக்கீடு இருந்தும்கூட, அதை முழுமையாகப் பயன்படுத்த இயலாமல் பின்தங்கிய சமூகங்கள் இருந்துவருகிறது. சிறுபான்மையினரும், தலித்துகளும், பழங்குடியினரும் தங்களது எண்ணிக்கைக்குத் தக்க வாய்ப்பை கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் ஓரளவுகூட பெறவில்லை. மிக மிகப் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர். இடஒதுக்கீடும் இல்லாமல் போனால் இவர்களது நிலைமை என்னவாகும்! பின்தங்கியவர்கள் முன்னேறும் வரை இடஒதுக்கீடு முறை நிச்சயமாக இருக்கவேண்டும். 50 விழுக்காட்டிற்கும் மேல் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம் இடம் ஒதுக்கினால் என்ன தவறு?
சாதி, மத அடிப்படையில் அல்லாமல் பொருளாதார அடிப்படையில் creamy layer முறை மூலம் இடஒதுக்கீடு தரலாமே என சிலர் வைக்கும் வாதம் அபத்தமானது. காரணம், பிறப்பின் அடிப்படையில் சில சமூகங்கள் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆகையால், பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இதை அணுகுவது ஒருவகை மோசடி. ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக அந்தஸ்தையும் இருப்பையும் உறுதி செய்வதே முதன்மையானது. பொருளாதார முன்னேற்றமும் அதை ஒட்டியே வரவேண்டும்.
‘சாதி வேண்டாம் என ஒருபுறம் கூறிவிட்டு சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்கிறீர்களே’ என்று சிலர் அப்பாவித்தனமாக கேட்கின்றனர். குறிப்பிட்ட ஒரு சாதி அடையாளத்தால் தானே அந்தச் சமூகத்தினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எந்தச் சாதி அடையாளத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டார்களோ அதே பெயரைக் கொண்டுதானே அவர்களை அடையாளப்படுத்த முடியும். வேறெப்படி அடையாளப்படுத்த முடியும்!
சச்சார் கமிட்டியின் அறிக்கையில் முஸ்லிம்கள் எப்படியெல்லாம் புறந்தள்ளப்படுகிறார்கள் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. படித்து முடித்த பின் வேலை தேடும்போதும் முஸ்லிம் அடையாளம் ஒரு பிரச்னையாகி விடுகிறது, இராணுவம் போன்ற துறைகளில் முஸ்லிம்களுக்கு இடமில்லாமல் போவது ஓர் எழுதப்படாத விதியாகிறது. வெறுப்பு அரசியலும், காவல்துறையும் ஊடகங்களும் கட்டமைக்கும் பயங்கரவாதப் பிம்பமும் முஸ்லிம்கள் அதிகாரம் பெறுவதற்குப் பெருந்தடையாகி விடுகின்றன.
ஒடுக்கப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் சந்திக்கும் பிரச்னைகளில் கால் பங்காவது குஜராத் பட்டேல் சமூகம் சந்தித்திருக்குமா?
“தகுதி, திறமை” என்கிற மாய சொற்களைக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டுமென சிலர் அறியாமையில் சொல்கின்றனர். தலித்களும் முஸ்லிம்களும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும், புறந்தள்ளப்பட்டதன் வலியையும் இந்தச் சொற்களுக்குப் பின்னால் மறைக்கப்பார்க்கிறார்களோ எனும் ஐயம்தான் எழுகிறது.
இங்கே ஒரு மிக முக்கியமான ஒன்றை சொல்லியாக வேண்டும். குஜராத் படேல்கள் முற்படுத்தப்பட்ட சமூகமே. இருப்பினும், அவர்கள் எல்லாரையும் ஒரே மாதிரி வகைப்படுத்த முடியாது. 13 ஆண்டுகள் குஜராத்தை மோடி ஆட்சி செய்தபோது, அவர் கடைப்பிடித்த தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நிறைய பிரச்னைகளை படேல் இனத்தவர்கள் சந்தித்துள்ளனர்.
*கடந்த 10 ஆண்டுகளில் 60,000 சிறிய மற்றும் நடுத்தர ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை படேல்களுக்குச் சொந்தமானவை.
*கீழ்மட்டத்தில் உள்ள படேல்கள் மாத ஊதியமாக ரூ.7,500 மட்டுமே பெறுகின்றனர். மேலும், நிரந்தரமற்ற அரசுப் பணிகளில் அவர்கள் உள்ளனர்.
*வெளிநாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் படேல்களின் வைரத் தொழிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. சூரத்தில் பல சிறிய ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
இப்படி படேல் சாதியினரின் இன்னொரு புறத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். தாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை படேல் சமூகத்தினர் நன்கு உணர்கின்றனர். ஆனால், இந்நிலைக்கு ஆளானதற்கான காரணம், முதலாளிகளுக்கு சாதகமான பாஜக அரசு பின்பற்றிவரும் பொருளாதாரக் கொள்கையே என்பதை உணரவில்லை. அரசுத் துறைகள் தனியார்மயமாவதால் உண்டாகும் தீங்கையும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. மாறாக, இடஒதுக்கீடுதான் எல்லாவற்றுக்கும் காரணம் என அவர்கள் எண்ணுகின்றனர். அவர்களின் அறியாமை வகுப்புவாத சக்திகளுக்கு சாதகமாகிவிட்டது. உண்மையில், அவர்கள் போராடவேண்டியது அரசின் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்துத்தான்.
குஜராத்தில் போராடுவோரிடமும் அதற்காக குரல் கொடுக்கும் உயர் சாதியினரிடமும் ஒன்றை அவதானிக்க முடிகிறது. காலங்காலமாக தம் சமூகம் அனுபவித்தவற்றில், இனி ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் வாய்ப்பு கிடைத்துவிடுமோ எனும் காழ்ப்புணர்வு வெளிப்படையாக தெரிகிறது.
படேல் இனத்தவர்களின் போராட்டத்தை இந்துத்துவ அமைப்புகள் வரவேற்பதோடு, அதை ஊக்குவிக்கிறார்கள். அத்தோடு, தம் செயல் திட்டத்தை கட்சிதமாக நிறைவேற்றிவிட முயற்சி செய்கிறார்கள். குஜராத் படேல் சாதியினரின் போராட்டத்தை வழிநடத்தும் ஹர்திக் படேல் சொல்கிறார், ‘சர்தார் வல்லபாய் படேல், பால் தாக்ரே வழியே என் வழி’ என்று. இந்தப் போராட்டமெல்லாம் இந்துத்துவ அமைப்புகளின் திட்டத்தை நிறுவுவதற்கே ஒருங்கிணைக்கப் படுகின்றன என்பதற்கு ஹர்திக் சொன்ன இவ்வார்த்தை ஒன்றே போதுமானது. படேல் இனத்தவர்கள் எப்படி ஒன்றிணைக்கப்படுகிறார்கள் என்பதையும் இதனூடாக ஊகிக்க முடிகிறது.
பாஜக-வின் வாக்கு வங்கியாக படேல்கள் பல ஆண்டுகளாக இருந்துவரும் நிலையில், படேல்களின் போராட்டத்திற்கு குஜராத் அரசு மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறது எனும் குற்றச்சாட்டும் சொல்லப்படுகிறது. அதற்கு நிறைய ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது கவனத்திற்கு உரியது.
ஹரியானாவைச் சார்ந்த ஜாட் சாதியினரும் குஜராத் படேல்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களும் இடஒதுக்கீடு கேட்கும் உயர் சாதியினரே. ராஜஸ்தானிலும், உ.பி-யிலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குஜ்ஜார், குர்மிஸ் போன்ற உயர் சாதியினரையும் ஒன்றிணைத்து போராடப் போவதாகவும், இந்தியா முழுவதும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் ஹர்திக் படேல் மிரட்டல் விடுத்துள்ளார்.
சமூகநீதிக் கோட்பாடான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சங்கப் பரிவாரங்கள் முனைப்பாக செயல்படுகின்றன. இச்சமயத்தில், நாம் விழிப்போடு இருப்பதோடு மக்களுக்கு இதைப் பற்றிய விழிப்பு உணர்வைக் கொண்டுவரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.