சாதியத் தீண்டாமை எதிர்ப்பையும் அதற்கு எதிரான அரசியலையும் பேசிவரும் தமிழ்நாட்டில், 2025 ஜூலை 27ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்திலுள்ள பட்டியலினத்தைச் சார்ந்த மென்பொறியாளரான கவின் செல்வகணேஷ், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வசிக்கும் ஆதிக்க சாதியைச் சார்ந்த சுபாஷினியின் சகோதரரான சுர்ஜித்தால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். சாதித் தீண்டாமையை ஒழிக்க பல முயற்சிகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டும் கூட இந்தியா முழுவதும் இன்றளவும் ஆணவக் படுகொலைகளும், சாதித் தீண்டாமைக் கொடுமைகளும் அரங்கேறியே வருகின்றன. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது இவற்றை தடுக்க வேண்டிய ஆட்சியாளகளும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், சமுதாயத்தில் முக்கியப்பங்காற்றும் நபர்களும் சாதிய சிந்தனைகளை தடுக்காமல் அவற்றை வளரவிட்டு அதன்மூலம் ஆதாயம் தேடுவதே. சாதியானது எப்படி அவர்களுக்கு உதவுகிறது சாதியப் பிடியில் இருந்து விடுபடுவதற்கான வழியென்ன என்பதைப் பற்றி கீழே காண்போம்.
காவல்துறையில் மாற்றங்கள் தேவை
சுர்ஜிதின் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் தொடர்ச்சியாக கத்தி போன்ற ஆயுதங்களுடன் சாதிப் பெருமையைப் பேசும் பதிவுகளைத் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இதைச் சுர்ஜிதின் பெற்றோர்கள் கண்டிக்கவில்லையா? அல்லது அவர்களுக்குத் தெரிந்துதான் அவர் இதைச் செய்து வந்தாரா? இதைக் காவல்துறையினர் கவனிக்கத் தவறியது எப்படி? போன்ற கேள்விகள் எழுகின்றன.
இதில் மிகப்பெரிய அவலம் என்னவென்றால் இந்தக் கொலையில் ஈடுபட்ட சுர்ஜிதின் பெற்றோர்கள் இருவரும் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் என்பதுதான். கொலை செய்ததும் எந்த ஒரு பதற்றமும் பயமும் இன்றி காவல்நிலையத்தில் சுர்ஜித் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலை திட்டமிட்டு செய்யப்பட்டதா? அவருக்கு இந்தத் திட்டத்தை வகுத்தளித்தது யார்? போன்ற கேள்விகள் அனைத்திற்கும் விசாரணைக்குப் பின்தான் பதில் கிடைக்கும். ஆனால் பட்டியலினத்தவர் சம்பந்தப்பட்ட பல வழக்குகளில் காவல்துறையினரின் விசாரணையில் மக்களுக்கு அவநம்பிக்கையே மிஞ்சுகிறது. அதற்கு சில காரணங்கள் உள்ளன. அதை நாம் கீழ் உள்ள ஆய்வறிக்கையின் முடிவின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
Broken people: Caste Violence Against India’s Untouchable’s என்ற தலைப்பில் வெளியான ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் ஒவ்வொரு இடத்திலும் எந்த சாதியினர் அதிகமாக உள்ளனரோ அந்த சாதியைச் சேர்ந்தவர்களே அப்பகுதி காவல்துறை அதிகாரிகளாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அதாவது தமிழகத்தின் புவியியலைப் பொறுத்தவரை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு சாதியினர் அதிகமாக வசிப்பது உண்டு. அவ்வாறான இடங்களில் இருக்கும் பட்டியலினத்தவர்கள் இவர்களால் தாக்குதலுக்கும் வன்முறைக்கும் ஆளாக்கப்படும்பொழுது அவர்கள் காவல்துறையினரை அணுகுகின்றனர். அங்கு அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை என இந்த ஆய்வறிக்கை விவரிக்கின்றது. இதனால்தான் அவ்வப்போது அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் அந்த இடத்தில் அதிகமாக இருக்கும் சாதியைச் சார்ந்தவராக இல்லாமல் இருப்பதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
காவல்துறையிலேயே சாதிப் பாகுபாடும் சாதிப் பிரச்னைகளும் இருக்கின்றன. காவல்துறை கட்டமைப்பிலேயே கோளாறு இருப்பதே இந்தப் பிரச்னைகள் தொடர்வதற்குக் காரணமாக இருக்கிறது. 1948இல் இந்திய காவல் சேவை (IPS) உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் பெரும்பாலான கூறுகள் 1861ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே உள்ளது. ஆகவே மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பாங்கின்றி காலனிய ஆதிக்க மனப்பாங்கில் காவல்துறையின் கட்டமைப்பு இருக்கிறது.
இன்றளவும் காவல்துறையினரின் செயல்திறன் மதிப்பீடு படிவத்தில் Annual Confidential Report(ACR)இல் அடிப்படைத் தகவல்பெறும் பக்கத்தில் காவல்துறையினரின் சாதி குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இது அங்குள்ள சில அதிகாரிகளால் சாதிப் பாகுபாட்டை மேற்கொள்வதற்குப் பயன்படுகிறது. சமீபமாக நடைபெற்ற பல காவல்துறை மரணங்களானது காவல்துறையில் சீர்திருத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவே உள்ளன.
ஓட்டு அரசியல்
என்னதான் நாம் அரசுத் துறைகளில், அரசு அதிகாரிகளிடம் மாற்றங்கள் வர வேண்டும் என சிந்தித்தாலும் இங்கு அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளிடமே சாதிப் பிரச்னை உள்ளது என்பது மறுக்க இயலாத ஒன்றாக உள்ளது. இன்றளவும் பல கட்சிகள் கண்டன அறிக்கை வெளியிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவிட்டு அமைதியாகி விடுகின்றனர். ஏனென்றால், கட்சிகள் ஒரு சாதிக்கு ஆதரவாகத் தீவிர நடவடிக்கை எடுத்தால் மற்றொரு சாதியினர் கோபித்துக் கொள்வார்கள். இதனால் அவர்களின் சாதி ஓட்டு பறிபோய்விடும் என்ற பெரும் அச்சம் அவர்கள் மத்தியில் நிலவுகிறது. தேர்தலின் போது எந்தத் தொகுதிகளில் எந்த சாதியினர் அதிகமாக உள்ளனரோ அந்தச் சாதியைச் சார்ந்தவரே வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். முற்போக்குச் சக்திகள், சமூக நீதி அரசியல் பேசும் அரசியல் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. தேர்தலில் சீட்டு பங்கிடுவது முதல் அமைச்சரவை அமைப்பது வரை அனைத்திலும் சாதியவாதிகளின் தாக்கம் இருக்கிறது.
தமிழகத்தில் ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க சாதி ஓட்டு இன்றியமையாதது. தங்களின் சாதிப் பின்புலத்தை முன்னிறுத்தியே பலர் தேர்தலில் சீட்டும், பதவிகளையும் வாங்குகின்றனர். இவர்கள் எப்படி சாதியை ஒழிப்பார்கள்? சாதி அழிந்தால் இவர்களின் அரசியல் பிழைப்பு அழிந்துவிடும். ஒன்றிய அளவில் ஃபாசிச பாஜக போன்ற கட்சிகள் இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டி சாதி ஓட்டுகளை ஒன்று சேர்த்து சாதி, மத ஆதிக்கத்தைத் தக்கவைக்க முயற்சிக்கின்றனர். இது தேர்தல் அரசியலில் சாதியின் தாக்கத்தை வெளிக்காட்டுகிறது.
ஆணவக் கொலை சிறப்பு சட்டம்
பெரும்பாலான அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் ஆணவப் படுகொலை நடைபெறும்போதெல்லாம் ஆளும் அரசாங்கத்திடம் ஆணவக் கொலைக்கு எதிராக சிறப்புச் சட்டம் கொண்டுவர கோரிக்கை வைப்பதுண்டு. இதையே ஆணவக் கொலைக்கு எதிரான தீர்வாக முன்வைக்கின்றனர். சட்டங்களினால் குற்றங்களைக் குறைக்க முடியும். ஆனால் அது மட்டுமே நிரந்தரத் தீர்வு அல்ல. எவ்வளவுதான் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்தக் கூடிய அதிகாரிகளே சாதிவெறியில் இருந்தால் சாதி எப்படி ஒழியும்? ஒருவேளை கவின் கொலை வழக்கு இந்த அளவிற்குப் பேசு பொருளாகவில்லை என்றால் சுர்ஜித்தின் பெற்றோர்கள் இந்த வழக்கைத் தங்களின் அதிகாரத்தைக் கொண்டு ஒன்றும் இல்லாமல் ஆக்கியிருக்க மாட்டார்களா?
மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக இருக்கக்கூடிய இந்தியாவில் சில நீதிபதிகளே சாதி ஏற்றத்தாழ்வை முன்னிறுத்தக் கூடிய மனுஸ்மிருதி போன்ற இந்து வேதங்களின் அடிப்படையில், கடவுள் என் கனவில் வந்து கூறினார் என விமர்சனத்திற்குரிய வகையில் தீர்ப்பு வழங்கும் அவலம் இருக்கிறது.
மனமாற்றம் ஒன்றே தீர்வு
பல தசாப்தங்களாக இந்தியச் சமூகத்தில் சாதிக் கட்டமைப்பிற்கு எதிரான பல முயற்சிகளை மேற்கொண்டும் விடுதலை இந்தியாவில் அதற்கான கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டும் கூட இன்றளவும் சாதிக் கொடுமைகளும் கொலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமூகத்தில் உள்ள இந்த சாதிக் கொடுமைகளைக் களைவதற்காகவே ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இட ஒதுக்கீடுகள் மூலம் கல்வி பெற்று பொருளாதாரத்தில் மேம்பட்டு சமூக உயர்வு பெறமுடியும் என நம்பினர்.
கொலை செய்யப்பட்ட கவின் கல்வியில் சிறந்து விளங்கி பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் வென்றது மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பத் துறையில் தலைச்சிறந்து விளங்கக்கூடிய ஒரு நிறுவனத்தில் நல்ல ஊதியத்துடன் பணி செய்து வந்தவர்தான். அவரின் குடும்பமும் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் நல்ல நிலையில்தான் உள்ளது. கவினின் தாத்தா பல முறை கிராமத் தலைவராகவும், அம்மா அரசுப் பள்ளி ஆசிரியராகவும், அப்பா விவசாயியாகவும் இருந்து வந்துள்ளனர். இருந்தும்கூட இவர்கள் சமூகத்தில் தாழ்ந்தவர்கள் எனவும் இவர்கள் தன் சாதியைச் சார்ந்தவர் இல்லை என்றும் பட்டியலினத்தவர் என்ற ஒரே காரணத்திற்காகக் கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். என்னதான் மிக நன்றாகப் படித்து கல்வியில் உயர்ந்து, பொருளாதாரத்தில் உயர்ந்தாலும் கூட இவர்களின் எண்ணங்களிலும் மனங்களிலும் அவை எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்தியா விடுதலை பெற்றபோது இந்தியாவிலேயே அதிகம் படித்தவரான அம்பேத்கர் எவ்வாறு அப்பொழுது சாதித் தீண்டாமையுடன் நடத்தப்பட்டாரோ அதே போல்தான் இன்றளவும் சாதித் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. சமூகத் தலைவர்கள் சாதித் தலைவர்களாக மாற்றப்பட்டு, அவர்களின் பெயர்களில் விழாக்கள் நடத்தும் போது, பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் சட்டங்கள் எதையும் மதிக்காமல் சாதி அடையாளங்களுடன் சாதிவெறியை ஊட்டக்கூடிய நிகழ்வாக அது மாற்றப்படுகிறது. கோவில் கருவறைக்குள் அனைத்து சாதியினரும் செல்ல சட்டம் போட்டால் அது எதிர்க்கப்படுகிறது. உயர்கல்வி நிலையங்களில் குறிப்பிட்ட சாதியினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர்; அரசுத் துறைகள், விளையாட்டு என அனைத்திலும் சாதிப் பாகுபாடு இருக்கத்தான் செய்கிறது. தமிழ்த் திரைப்படங்களில் ஆரம்பம் முதலே சாதிக் கொடுமைகளுக்கு எதிரான படங்களுக்கு இணையாக சாதிக்கு ஆதரவான படங்களும் வலம் வருகின்றன. ஒவ்வொரு சாதியினருக்கும் தனித்தனி வரன் தேடும் செயலிகள் வந்துள்ளன. இவ்வாறாக சாதி ஒழிக்கப்படுவதற்குப் பதிலாக நவீன மயமாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சாதியக் கட்டமைப்பு ஒருவருக்கு மேல் ஒருவர் என அடுக்குகளைக் கட்டமைத்து இருப்பதால் ஒவ்வொருவரும் அவர்களுக்குக் கீழ் இருப்பவரைத்தான் பார்க்கின்றனரே தவிர தங்களுக்கு மேல் ஒருவன் தன்னைக் கீழ் சாதியாகப் பார்ப்பதை மறுக்கவும் மறக்கவும் செய்கின்றனர். இந்த சாதியக் கட்டமைப்பு இந்து மதத்தின் வேரிலேயே இருக்கிறது. அந்த வேரானது மிக ஆழமாக சாதி எனும் மரத்தை உயர்த்திப் பிடித்து பாதுகாக்கிறது. இந்த சாதி எனும் கட்டமைப்பில் இருந்து வெளிவர வேண்டும் எனில், பெரியார் கூறியதைப் போன்றோ அல்லது கொடிக்கால் செல்லப்பா, டி.எம். மணி போன்ற சாதியை விட்டொழித்து சாதித்துக் காட்டிய முன்னோடிகளின் செயல்பாடான மனமாற்றம் ஒன்றுதான் தீர்வாகும்.