The Royal Islamic Strategic Studies அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய 500 முஸ்லிம் ஆளுமைகளை வரிசைப்படுத்தி வெளியிடுவது வழக்கம். இந்த பட்டியலில் கடந்த 2020 ஆண்டின் சிறந்த முஸ்லிம் பெண்மணியாக 82 வயதான பல்கீஸ் பானு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நன்கு கவனியுங்கள் வயது 82.!
நீதி வேண்டி ஆதிக்க சக்திகளை எதிர்த்து நடைப்பெறும் போராட்ட களங்களே வரலாறு முழுவதும் புதிய தலைவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் நடைப்பெற்ற CAA எதிர்ப்பு போராட்டங்களுக்கு வழிக்காட்டியாக அமைந்த டெல்லி ஷாஹின்பாக் போராட்டக்களம் கண்டெடுத்த முதன்மை போராளி தான் பில்கீஸ் பாட்டி என்று அழைக்கப்படும் பில்கீஸ் பானு.
உத்தரபிரதேசத்தின் ஹபூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். தமது இளமையையும் முதுமையின் பெரும்காலத்தையும் சாமானிய மக்களில் ஒருவராகவே கழித்தார். 2019-ம் ஆண்டு நடைப்பெற்ற பொதுத்தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியை தக்கவைத்த பாஜக, தமது தாயகமான RSS-ன் முஸ்லிம் விரோத கனவுத்திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றியது. இதன் தொடர்ச்சியில், முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்கும் CAA சட்டத்தை மக்களின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆணவத்திமிருடன் நிறைவேற்றியது. சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் முன்பே SIO போன்ற மாணவர் அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் இதற்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.
சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்பு போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்தன. குறிப்பாக மாணவர் போராட்டங்கள். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையின் நடத்திய காட்டுமிராண்டி தனமான தாக்குதல்கள் பொதுமக்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. தமது ஆயுதபலத்தால் அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் மாணவர்களை ஒடுக்கிவிடலாம் என்று கணக்குபோட்ட அரசின் எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக நாடு முழுவதும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்தன. டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் ஆரம்பமான அமைதி வழியில் நடைப்பெற்ற தொடர் இருப்பு போராட்டம், போராளிகளுக்கு புதிய பாதையை காட்டியது.
ஷாஹின்பாக் பகுதியில் நடைப்பெற்ற போராட்டத்தில் முதல் நாளிலிருந்து கொரோனா பெருந்தொற்று காரணமாக போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படும் வரை 101 நாட்களும் முழுமையாக கலந்துக் கொண்டவர் பில்கீஸ் பாட்டி. அவரும் அவரது சகவயது தோழியர்களும் தான் ஷாஹின்பாக் போராட்டக்காரர்களுக்கு உத்வேகம் அளிப்பவர்கள். (ஷாஹின்பாக் தாதிகள்- பாட்டிகள் என்று அங்குள்ளோரால் அழைக்கப்படுபவர்கள்.) அதிகாலையில் போராட்டக்களத்திற்கு வரும் பில்கீஸ் பாட்டி நடுஇரவு வரை போராட்ட களத்தில் இருப்பார். தொழுகை நேரம் மட்டுமே ஓய்வு.
போராட்டக்களத்திலும் அதற்கு வெளியிலும் அவரது பேச்சுகள் கவனத்தை பெற்றன. “எல்லா எதிர்ப்பிற்கு மத்தியிலும் அவர்கள் பாபர் மசூதி தீர்பை வழங்கினார்கள், முத்தலாக் சட்டம் இயற்றினார்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்கள். நாம் ஒன்றும் பேசவில்லை. ஆனால் பாரபட்சமான இந்த CAA சட்டத்தை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது” என்று ஒருமுறை பாசிச அரசின் செயல்திட்டங்களை குறித்து மக்களுக்கு விளக்கினார்.
போராட்டம் மாதக்கணக்கில் தொடர்ந்த போது டெல்லியின் வாகன நெரிசல் ஏற்படுவதற்கு இப்போராட்டம் தான் காரணம் என்ற கூறி டெல்லி போலீஸ் போராட்டத்தை களைக்க முயன்றது. CAA சட்டம் திரும்பப்பெற்றாலே தவிர போராட்டாத்தை களைக்க முடியாது என்ற போராளிகளின் உறுதியின் முன் காவல்துறையின் திட்டம் தோல்வியுறது. தொடர்ந்து உச்சநீதிமன்றம் மூலமாக போரட்டத்தை களைக்கும் முயற்சிகள் தொடர்ந்தன. மக்கள் போராடுவதை உச்சநீமன்றம் ஏற்றாலும், போராட்டத்திற்கு வேறு இடத்தை பரிசீலிக்க போரட்டக்காரர்களை கேட்டுக்கொண்டது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவையும் அமைத்தது. உச்சநீதிமன்றம் அமைத்த குழுவோடு விவாதிக்க ஷாஹின்பாக் போராளிகளால் தேர்வு செய்யப்பட்ட குழுவில் பல்கீஸ் பாட்டியும் இடம்பெற்றார். உச்சநீதிமன்றக்குழுவிடம் இடமாற்றம் குறித்து எவ்வித சமரசமும் செய்யாமல் போராட்டக் களத்தின் கண்ணியத்தை காத்தார் பல்கீஸ் பாட்டி.
போரட்டக்களத்திற்கு அருகில் பாசிச வெறியன் ஒருவனால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இத்துப்பாக்கி சூட்டு சம்பவம் முடிந்தவுடன், பில்கீஸ் பாட்டி, துப்பாக்கி குண்டுக்கிடந்த இடம் வரை சென்று பார்வையிட்டு, அங்கையே தொழுதார். பின்பு “இதுப்போன்ற துப்பாக்கி குண்டுகள் எங்களை ஒருபோதும் பயமுறுத்தாது” என்று கர்ஜித்தார்.
ஒருமுறை நீங்கள் எதற்காக போராடுகிறீர்கள் என்று அவரிடம் வினவப்பட்ட போது “இந்தியாவின் பன்மைத்துவத்தை மீட்டெடுக்கவே நாங்கள் போராடுகிறோம்”
இது எங்களுக்கான போராட்டமல்ல. நாங்கள் வயதானவர்கள். இது எங்களுடைய குழந்தைகளுக்கான போராட்டம். அவர்களின் உரிமைகளுக்காகவே நாங்கள் இரவிலும் குளிரிலும் போராடுகிறோம் என்று கூறினார்.
உலகப்புகழ் பெற்ற டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் வெளியிடும் 2020 ஆண்டுக்கான செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலில் பில்கீஸ் பானுவும் இடம்பெற்றார். டைம்ஸ் இதழ் இதற்கு கூறிய காரணம் கவனிக்கத்தக்கது.” பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் குரல்வளைகள் திட்டமிட்டு நசுக்கப்படும் ஒரு நாட்டில், பில்கீஸ் பானு (ஆதிக்க சக்திக்கு எதிரான) எதிர்ப்பின் குறியீடாக திகழ்கிறார்” என்று வர்ணித்துள்ளது.
இதேப்போல BBC தனது உலகளவில் செல்வாக்கு மிகுந்த 100 பெண்கள் பட்டியலில் பில்கீஸ் பாட்டியை பட்டியலிட்டுள்ளது.
பெண்களை பலவீனமானவர்களாகவும், அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்களை ஆணாதிக்கத்தின் கட்டுப்பாடுகளில் சிக்குண்டு வாழ்பவர்களாகவும் சித்தரிக்கப்படும் தேசத்தில், வயது முதுமையையும் கடந்து வீழ்த்த முடியாத நெஞ்சுரத்துடன் அநீதிக்கு எதிராக போராடும் பில்கிஸ் பாட்டி பெண்களுக்கு சொல்லும் செய்தி இதுதான்
“அநீதிக்கு எதிராக குரலெழுப்புவதற்காக
பெண்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வருவதை தமது ஆற்றல் வலிமையாக உணர வேண்டும். அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வரவில்லையெனில், அவர்கள் எவ்வாறு தங்களது ஆற்றலை பரைசாற்றுவார்கள்?”
டெல்லியில் நடைப்பெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தில் தாம் கலந்துக் கொள்ளப்போவதாக பில்கீஸ் பாட்டி அறிவித்த உடன், மத்திய மாநில அரசுகள் அச்சம் கொண்டன. எங்கே விவசாயிகள் CAA எதிர்ப்பு போராட்டம் போன்று மாறிவிடக்கூடும் என்றோ அல்லது CAA எதிர்ப்பு போராட்டம் மீண்டும் ஆரம்பித்து விடும் என்ற அச்சத்திலோ பாட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பில்கீஸ் பாட்டி காத்திருக்கிறார். CAA திரும்பப்பெறப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். பாஜக நாஜி அரசு மீண்டும் CAA சட்டத்தை பற்றி யோசித்தால் அப்போது பில்கீஸ் பாட்டியின் பேரன் பேத்திகள் பாட்டியை போன்ற உறுதியுடன் போராட்ட களம் காண்பார்கள். பில்கீஸ் பாட்டி வழிக்காட்டுவார் இன்ஷா அல்லாஹ்.
- அபு ஸைத்