மீண்டும் மீண்டும் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு விவாதத்திற்குள்ளாக்கப்படுகிறது. பல தசாப்தங்களாய் நீடிக்கும் நிதர்சனம் தான் என்றாலும் சமூக ஊடகங்களின் அசுரப் பாய்ச்சலால் சமீப காலங்களில் பெண்கள் வன்கொடுமை, பணியிட தொந்தரவுகள், குழந்தைகள் சித்ரவதை போன்றவை பற்றிய செய்திகள் அதிகம் விவாதிக்கப்படுகின்றன. எதிர்ப்பு பிரச்சாரங்கள், விழிப்புணர்வு இயக்கங்கள் போன்றவை மூலமும் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக தங்கள் வேதனைகளை உலகிற்கு தெரியப்படுத்துவதாலும் பெண் பாதுகாப்பு பற்றி தேசம் பேசுகின்றது.
உலகளவில் பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுதியில்லாத நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு ஊடகங்களில் செய்திகள் வந்தன. அப்படிலாம் கிடையாது, என் தேசம் பெண்களுக்கு பாதுகாப்பானது என்று மார்தட்டி சொல்லலாம் என்று உதடுகள் துடிக்கிறது. ஆனால் உண்மை நிலவரம் தடுக்கிறது. பொதுவாக இந்த ஆய்வுகள், கருத்துக்கணிப்புகளின் மீது அவ்வளவாக ஈர்ப்பு ஏற்படுவதில்லை. ஏனென்றால் அவை நூறில் ஒரு மடங்கிற்கும் கீழான எண்ணிக்கையிலான நபர்களிடம் இருந்து தருவிக்கப்படும் முடிவுகள். ஒருபோதும் அவை ஒட்டுமொத்த மக்களின் கருத்தாக ஆகமுடியாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதெல்லாம் சோற்றுக்கு மட்டுமே உதவ முடியும். ஒரு நாட்டின் தரத்தை நிர்ணயிக்க உதவமாட்டா. அப்படி கருத்துக்கணிப்புகளை எல்லாம் ஏற்றுக்கொள்வதென்றால் சமீபத்தில் இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் மோடி மீண்டும் பிரதமராவதை விரும்புவதாக ஒரு பத்திரிகை வெளியிட்ட ஆய்வு முடிவையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.அந்த அடிப்படையில் பெண்களுக்கு பாதுகாப்பின்மையில் இந்தியா முதலிடம் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அது ஒரு குறுகிய பார்வை. ஆனால் இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் பல் போன பாட்டி வரை பாதுகாப்பு மிகவும் மோசமாக இருக்கிறது என்பதே நிதர்சனம். அதனை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.
பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகள் கடத்தல், விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக கடத்தப்படும் பெண்கள், பள்ளிகளில், கல்லூரிகளில், பணியிடங்களில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் பெண்கள்,திரைகளில் போகப்பொருளாக காட்டப்படும் பெண்கள், கணவன், பெற்றோரால் வன்முறை எதிர்கொள்பவர்கள் என்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் மலிந்து காணப்படுகிறது. கடந்த காலங்களில் இருந்து கடந்த வாரம் வரை இதற்கான ஆதாரங்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன.
சில வருடங்களுக்கு முன்பு புதுடில்லியில் ஓடும் பேருந்தில் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிர்பயா மூலம் பெண்கள் பாதுகாப்பு அதிகம் விவாதத்திற்குள்ளானது. ஆனாலும் கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துதான் வந்துள்ளதே ஒழிய குறையவில்லை.
இதற்கு முன்பும் பெண்கள் பாதுகாப்பு பற்றிய இந்தியாவின் நிலை மோசம்தான் என்றாலும் கூட இப்போது அதனைப் பற்றி அதிகம் பேசப்படுகின்றது. இன்று இந்தியாவை ஆளும் உயரிய பொறுப்பில் இருக்கும் கட்சியினர் அதிகமாக பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களாகவோ அல்லது அந்த குற்றவாளிகளை பாதுகாப்பவர்களாகவோ இருப்பதுதான் அதற்கான காரணம் என்றால் அதை யாரும் மறுக்கமுடியாது.
நண்பர் ஒருவரது பதிவில் ஒருவர் கேட்டிருந்தார், ஏன் எதற்கெடுத்தாலும் மோடியை குறை சொல்கிறீர்கள், பெண்கள் பாதுகாப்புக்கு பாஜகவோ, மோடியோ என்ன செய்ய முடியும் என்று. இதற்கு முன்பு எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளன, அப்போதெல்லாம் பாஜகவையோ, மோடியையோ காரணப்படுத்தவில்லையே. பெங்களூரில் ஒரு பெண் நள்ளிரவில் மானபங்கப்படுத்தப்பட்டாரே அப்போது யாரும் மோடியை நோக்கி கையை நீட்டவில்லை, நிர்பயா சம்பவத்திற்கு பாஜகவை குறை கூறவில்லை, கேரளாவில் தலித் பெண் கொடூரமாக கொல்லப்பட்ட போது இன்னும் பல்வேறு சம்பவங்களில் மோடியையோ, பாஜகவையோ யாரும் விமர்சிக்கவில்லை. ஆனால் இப்போது ஏன் மோடியையும், பாஜகவையும் குற்றம் சொல்கிறார்கள் என்றால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்னெடுப்பவர்களாக, அதனை நியாயப்படுத்துபவர்களாக, குற்றவாளிகளை காப்பாற்ற முயல்பவர்களாக அவர்கள் இருப்பதால்தானே.
பிரதமர் மோடி ஒரு பெண்ணை உளவு பார்க்க சொன்ன சம்பவம் தேசத்தின் நிகழ்பதிவுகளில் இடம்பெற்றது அனைவருக்கும் நினைவிருக்கலாம். சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் ஒரு பாஜக எம்எல்ஏ ஒரு பதின்ம வயது பெண்ணை தனது சகாக்களுடன் கூட்டு வன்புணர்வு செய்ததும், அந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் இறந்து போனதும் மறக்க முடியாது.
ஜம்முவின் கத்துவா பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஆசிஃபா கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகளை காப்பாற்ற அம்மாநில பாஜக அமைச்சர் முயற்சி செய்ததும், நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க விடாமல் பாஜக வழக்கறிஞர்கள் தடை ஏற்படுத்தியதும் அவ்வளவு எளிதில் நம் நினைவை விட்டு அகன்று விடுமா? ஒரு மாவட்ட ஆட்சியரின் மகளை பாஜக அமைச்சரின் மகன் துரத்திச் சென்று அச்சமூட்டிய சம்பவமும் இந்தியாவில்தானே நடந்தது.
பாஜகவினரால் பிற பெண்களுக்குத்தான் ஆபத்து என்றால் இப்போது தங்கள் கட்சியைச் சார்ந்த பெண்களையும் கூட அவர்கள் விடுவதாயில்லை. அதிலும் மத்தியில் ஆளும் ஒரு பெண் அமைச்சருக்கே பாதுகாப்பில்லாத ஒரு சூழல் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்டதை நினைத்தால் இந்த ஆய்வு முடிவு உண்மை தான் என்று சொல்லத் தோன்றுவதை தடுக்க முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு, முஸ்லிம் ஆணைத் திருமணம் செய்த ஒரு பெண்ணிற்கு பாஸ்போர்ட் தரமுடியாது என்று ஒரு அதிகாரி சொல்ல, அந்த பெண்ணின் கணவன் சமூக வலைத்தளங்களில் நாறடிக்க, பதறிப்போன அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நேரடியாக தலையிட்டு அந்த தம்பதிக்கு பாஸ்போர்ட் கிடைக்கச் செய்தார். இந்த சம்பவம் சுஸ்மா கட்சியினரின் இணையப் படைக்கு அல்சர் ப்ரச்னையைவிட அதிகமான எரிச்சலை ஏற்படுத்தவே தங்கள் அமைச்சர் என்றும் வித்தியாசம் இல்லாமல் தங்கள் கடமையை செய்ய ஆரம்பித்துவிட்டனர். மாட்டியது பெண் அல்லவா.? காவிகளிடத்தில் கண்ணியமோ, பெண்ணியமோ எதிர்பார்க்க முடியுமா.? சுஸ்மா சுவராஜை கேவலமாக விமர்சித்து அவரை கொலை செய்ய வேண்டும், அவர் முஸ்லிம் கிட்னியை வைத்திருப்பதால் இப்படி முஸ்லிம்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார், இருக்கும் ஒரு கிட்னியும் சீக்கிரம் நின்றுவிடும் என்றெல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டனர்.
இப்படி எழுதுபவர்களை பாஜக எம்பிக்களும், ஏன் பிரதமர் மோடியே கூட ட்விட்டரில் ஃபாலோ செய்கிறார் என்றால் அவர்கள் கட்சியில் எப்படிப்பட்ட இடத்தில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். சுஸ்மாவே தன்னை விமர்சித்து வந்துள்ள ட்வீட்களை ரீட்வீட் செய்து தனக்கு நேர்ந்துள்ள அநியாயத்தை வெளிப்படுத்தியுள்ளார். இத்தனைக்கும் பிறகும் கூட எந்த பாஜக அமைச்சரோ, எம்பியோ சுஸ்மாவை ஆதரித்தோ அந்த ட்விட்டர்வாசிகளை கண்டித்தோ ஒரு சிறு வார்த்தை கூட எழுதவில்லை. காங்கிரஸ் மட்டும் கண்டித்து அறிக்கை விட்டது.
தன் கட்சியினரால் தனக்கு ஆபத்து என்று மத்திய பிரதேச பாஜக பெண் எம்எல்ஏ சட்டசபையில் கண்ணீர் விட்டு அழுத சம்பவமும் நாட்டை ஆளும் கட்சியில் பெண்களின் நிலையை கட்டியம் கூறுகின்றது. அனைத்திற்கும் முந்திக் கொண்டு கருத்து சொல்லும் பிரதமர் மோடி தனது கட்சியினரின் இந்த கேவலமான நடத்தைகள் குறித்து வாயே திறக்கவில்லையே.
கட்சியின் அடிமட்டத்தில் இருப்பவர்கள்தான் இப்படி தரக்குறைவாக நடந்து கொள்கிறார்கள் போலபோல என்று நினைத்தால் இப்போது புது பூகம்பங்கள் கிளம்பியுள்ளன. தேசத்தையே உலுக்கி வரும் #MeToo பிரச்சாரத்திலும் கூட பாஜகவினர் சாதனைகள் இடம்பெறத் தவறவில்லை. அதுவும் மத்தியில் அமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஒருவரது பெயரே இப்போது சந்திக்கு இழுத்து வரப்பட்டுள்ளது. அதுவும் ஒரே நேரத்தில் ஆறு பெண் பத்திரிகையாளர்கள் மத்திய அமைச்சர் M.J.அக்பர் மீது பத்திரிகையாளராக இருந்தபோது தங்களிடம் அத்துமீறி நடந்துகொள்ள முயன்றதாக குற்றம் சுமத்தியுள்ளனர். அவர் அதற்காக பதவியும் விலகியுள்ளார்.
முன்னாள் பாஜககாரரும், ஆர்எஸ்எஸ் உறுப்பினருமான பன்வாரிலால் புரோகித். யாரென்று நான் சொல்லத் தேவையில்லை. தமிழக ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்தே பேசுபொருளாக இருந்துவரும் அவரது பெண்கள் பலவீனம் நாற்றம் வீசும்பொருளாக மாறிவிட்டுள்ளது. ஆளுநர் அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு பெண் நிருபர் கன்னத்தில் தட்டிக் கொடுத்து பிறகு அவர் வீதிக்கு இழுத்ததும் தாத்தா மாதிரி என்று சமாளித்ததும் தமிழகம் அறிந்தது. அருப்புக்கோட்டையில் ஒரு கல்வி நிலையத்தை கலவி நிலையமாக மாற்ற முயன்ற நிர்மலாதேவி என்ற இழிபிறவி தனக்கு ஆளுநர் மாளிகை வரை செல்வாக்கு இருக்கிறது என்று தைரியமாக சொன்னது, ஊருக்கு முந்திக்கொண்டு விசாரணை ஆணையம் அமைத்தது, அதற்காக நக்கீரன் கோபாலை கைது செய்து நீதிமன்றத்திடம் செருப்படி வாங்கியது என்று தமிழக ஆளுநரின் பெண்கள் பலவீனம் இப்போது தமிழகத்தின் சூடான விவாதப்பொருளாக இருக்கிறது.
இப்படி ஒரு பெண் மத்திய அமைச்சர் முதல் வயிற்றில் இருக்கும் சிசு வரை பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு தேசம் பெண்களுக்கு பாதுகாப்பின்மை பட்டியலில் முதலிடம் பிடிக்கவில்லை என்றால்தானே ஆச்சரியப்பட வேண்டும். ஆட்சியின் தலைவர் முதல் எம்பி, அமைச்சர், எம்எல்ஏ ஆளுநர் என்று அடிமட்ட தொண்டன் வரை பெண்களை இச்சை தணிக்கும் இயந்திரமாக பார்க்கும் தேசம் பெண்கள் வாழ பாதுகாப்பான நாடாக எப்படி இருக்க முடியும்.?
அபுல் ஹசன்
9597739200