இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் என்பது மட்டுமே அவர் அடையாளம் அன்று. கதீஜாவை அறிந்தவர்கள் எல்லோரும் அறிவர், ஏ.ஆர்.ரஹ்மானைப் போலவே அவரும் எவ்வளவு முக்கியமானதோர் ஆளுமை என்று.
கதீஜாவை எனக்கு ஒன்பது ஆண்டுகளாகத் தெரியும். இன்று ‘கருணாமிர்தசாகரம்’, தமிழ் இசை இணையத்தளத்திற்காகச் சேர்ந்து பணியாற்றத்தொடங்கியிருக்கிறோம். யார் யார் கைகளிலேயோ இந்தப் பணியை ஒப்படைத்தும் அது முன் நகரத்தொடங்காமல் கடைசியாக, ஏ.ஆர்.ரஹ்மான், கதீஜாவிடம் ஒப்படைத்த பின்பு தான் இந்தப்பணி வேகமும் உறுதியும் கொண்டது. அந்த அளவிற்கு தனித்த ஆற்றல் கொண்டவர், கதீஜா ரஹ்மான்.
‘சிறகு’, திரைப்படப்பணி தொடங்கிய நாள் முதல் எங்களுடன் இருக்கிறார். தொடர்ந்து மிகுந்த அக்கறையுடன் படப்பணிகள் குறித்து விசாரிப்பார், அலுவலகத்திற்கு வருவார், தயாரிப்பாளருடன் உரையாடி நலம் விசாரிப்பார். என்னிடம் மட்டுமன்று, அவர் தொடர்பில் இருக்கும் யாரைக் கேட்டாலும் அவரவர்க்குத் தனித்த சிறப்பான அனுபவங்கள் இருக்கும். அந்த அளவிற்கு இளம் வயதிலேயே முதிர்ந்த பண்பும் நடத்தையும் ஆளுமையும் கொண்டவர். கதீஜா ஒரு கொடை. இருபதுகளைக் கடந்து கொண்டிருக்கும் ஒரு பெண், எந்த நேரத்திலும் தன் வாழ்வு, தன் ஆசைகள் என்று தன்னைக்குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், கதீஜா பொதுநலத்தின் பாற்பட்டே இயங்குபவர். பல இடங்களில் அவர் தான் ஒரு நற்செயலைச் செய்தார் என்று பெயர் கூடப் பதிவாகியிருக்காது.
விடயத்திற்கு வருவோம். தஸ்லீமா நசுரீன், கதீஜா புர்கா அணிவதை விமர்சித்திருக்கிறார். பெண்ணியவாதம் கடுமையான வீழ்ச்சியைக் கண்டிருப்பதைப் பொதுவாகவே இங்கு எல்லா பெண்ணியவாதிகளும் அறிவார்கள், ஒத்துக்கொள்வார்கள் என்று தான் நினைக்கிறேன். மதம், சாதி, ஏன் பெண் பாலினம் என்பதைத் தாண்டியெல்லாம் பெண்ணிய உரிமைகளை இங்கே பேசிவிட முடிவதில்லை.
தன் பாலியல் விடுதலை, தன் பெண்ணியம் என்னும் பெயரில் மற்ற பெண்களின் பாலியல் உரிமைகளையும், சமூக உரிமைகளையும் கூடத் தமக்குக் கிடைத்திருக்கும் சொற்ப சமூக அதிகாரத்தின் பெயரால் வன்மத்துடன் பறித்துவிடும் நிலையில்,

உலகப்புகழ் பெற்ற ஒருவரின் மகள் சமூகத்தில் விடுதலையுடன் அங்கும் இங்கும் நகர்வதற்கான ஒரு கருவி தான் புர்கா. தஸ்லீமாவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கே உரிய பாணியில் பதில் அளித்திருக்கிறார், தனக்கு உரிமை இருந்திருந்தால் தானும் புர்க்கா அணிந்து கொள்வேன் என்று; ஆணாக இருப்பதால் அந்த உரிமை இல்லை என்கிறார்.
நன்கு கூர்ந்து கவனித்தால், ‘வெறுப்புணர்வு’, என்பது இன்றைய சமூகத்தின் முக்கியமானதோர் அவலமான மூலதனம் என்பதை நாம் உணரக்கூடும். வெறுப்புணர்வை முன்வைத்தே சமூகத்தில் முன் நகர்வதும், வேறு எந்த உணர்வையும் விட வெறுப்புணர்வை சமூகத்தில் விதைத்துக் கொண்டே செல்வதும் இன்றைய நவீன உரிமை என்று சொல்லப்படுகிறது. கதீஜா போன்றவர்களுக்கு வெறுப்புணர்வை வெல்வதும், கடந்து செல்வதும் மிக எளிதான செயல்.
கதீஜா ரஹ்மான் பயணிக்க வேண்டிய தூரமும், செயல்படுத்த வேண்டிய சமூக இலட்சியங்களும் நிறைய, நிறைய! வாழ்த்துகள், கதீஜா ரஹ்மான்!
-குட்டி ரேவதி,எழுத்தாளர்