எப்போதும் போல் ஆளும் பாஜக கட்சி தனக்குத் தெரிந்த – நன்கு பரீட்சித்து பெரும் பலன்களை ஈட்டிய வழிமுறைகளுக்குத் திரும்பியுள்ளது. தனது விரிவான சித்தாந்த சட்டகத்துக்குள் நின்று கொண்டு, இந்தியாவில் பெருந்திரளாக முஸ்லிம்கள் வாழும் இரண்டாவது பிரதேசத்தில் அவர்களின் வாழ்வியல் – கலாச்சாரத்தின் மீது தனது வன்மப் பார்வையை படிய விட்டுள்ளது..
எந்த விதத்தில், எப்படி இதை வன்மப் பார்வையாக பார்ப்பது? முதலாவது கொரானா பெருந்தொற்றை எதிர்கொண்டதில் பெரும் தோல்வியை சந்தித்துள்ள மோடி அரசு, அதற்கான எந்த பதிலையும் வழங்காமல் வாய்மூடி மௌனம் சாதிக்கிறது. ஆனால் மக்கள் தொடர்ந்து மௌனமாகவே இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது அல்லவா? இப்போது என்ன செய்வது? ஆட்சிக்கெதிரான கோபம் தம் மீது பாயாமல் வெகு மக்களை ஒரு பொது எதிர் தரப்பின் மீது திருப்பி விட்டால் அங்கே பற்றியெரியும் தீயில் கொஞ்சங் காலம் குளிர்காய்ந்து கொள்ளலாம். இதையொட்டி பாஜக அரசு தனது மேலாதிக்கக் கரத்தை இந்த சிற்றெரும்பின் மேல் வைப்பதற்கு அடுக்கும் காரணங்களைப் பார்ப்போம்.
1. 70 ஆண்டுகளாக இங்கே எந்த முன்னேற்றமும் இல்லை என்ற வழக்கமான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலோடு நுழைந்திருக்கிறார்கள்..
2. புதிய திட்டங்களுக்கான நிலம் கையகப் படுத்தப் போகிறோம் என்ற சிறப்புரிமை சட்டங்களோடு புகுந்து இருக்கிறார்கள்.
3. குற்றச் செயல்கள் மலிந்து விட்டன என்ற கூப்பாடோடு குண்டர் சட்டம் போன்ற – காரணம் தெரிவிக்காமல் யாரை வேண்டுமானாலும் தூக்கி உள்ளே வைக்கும் கொடுஞ் சட்டத்தைப் பிரயோகித்து விட்டே பேசுகிறார்கள்..
4. இந்த பிரதேசத்தில் சட்டவிரோத குடியிருப்புகள் அதிகரித்து விட்டன என்று அங்கலாய்க்கிறார்கள்.
ஆக வரைபடத்தைத் தயாரித்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.. இப்ப அந்த வரைபடத்தின் படி வேலைகளை நடத்த வேண்டும்.. அவற்றையும் வரிசைக் கிரமமாக தொடங்கி விட்டார்கள்.. இப்போது அவை டைம்பாம்களாக வெடிக்கக் காத்திருக்கின்றன.
¶ இதற்கு முதலாவதாக நமக்கான – நமது நோக்கத்தை பழுதில்லாமல் அமுல் படுத்துவதற்கான – ஆள்தேவை. இதுவரை மத்திய அரசின் உயர் அதிகாரி ஆட்சி பரிபாலனம் செய்து வந்த இலட்சத்தீவுகளில் ஒரு தொழில்முறை அரசியல்வாதியை போட்டுவிட்டார்கள். அதுவும் மோடியின் குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்த பிரபுல் பட்டேல் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப் பட்டுவிட்டார். இனி மக்களைக் குறுக்கு வெட்டாக பிளப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை.
¶ அடுத்ததாக முஸ்லிம்கள் நிறைய இருக்கிறார்கள். என்ன பண்ணலாம்? இரண்டு குழந்தைக்கு மேல் இருப்பவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டம் போட்டுவிட்டார்கள். வெறும் 70000க்குள் மக்கள் தொகை இருக்கும் 36 தீவுக் கூட்டத்திற்கு இந்த சட்டம்.. அதுவும் கடந்த பத்தாண்டுகளில் ஜனத்தொகை வளர்ச்சி விகிதம் இங்கே வெறும் 6.23%.. தேசிய விகிதாச்சாரமோ 17.70%. ஆனால் மற்ற மாநிலங்களில் எவ்வளவு வேண்டுமானாலும் பிள்ளைப் பெற்றுக் கொள்ளலாம்.
¶ இந்த பகுதியில் வளர்ச்சி – முன்னேற்றம் இல்லாமல் இருப்பதால் சுற்றுலாத்துறை நொண்டியடிக்கிறது. வழக்கம் போல எட்டுவழிச் சாலை போடணும். பெரும் தங்கும் விடுதிகள் கட்டணும்.. அதற்கு மக்களின் வாழ்விடங்களை பறித்து துரத்தியடிக்கணும். அவன் கொடி பிடிப்பான்.காஷ்மீராக இருந்தால் பாகிஸ்தான் கைக் கூலியாக்கி தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது பண்ணி காணாமல் போக்கி விடலாம். இங்கே என்ன பண்ணுவது? சமூக விரோத செயல் தடை சட்டம் 2021 போட்டுவிட்டார்கள்.. இந்த வளர்ச்சி எல்லாமே வெறும் 32 சதுர கிலோமீட்டர்ல நடத்தப் போறாய்ங்க.. அப்படியும் வளர்ச்சி வராவிட்டால் காங்கிரஸ் தான் காரணம் என்று சொல்லிக் கொள்ளலாம்.
¶ அப்புறம் லட்சத்தீவு மக்கள் என்ன சாப்பிடுறாங்க? அட.. மாட்டுக்கறி! அதுக்கொரு சட்டத்தைப் போடு.. எவனும் இனி மாடு அறுக்கக் கூடாது. ஏற்கனவே உள்ளூர் அளவில் நிறைய பால் பண்ணைகள் இயங்கிக் கொண்டிருந்ததை மூடிவிட்டு அமுல் நிறுவனத்தைக் கொண்டு வந்து விட்டுள்ளார்கள். இதேபோல் மீன் பிடித்தல் தொழிலுக்கும் ஏகப்பட்ட தடைகள். இரண்டு மாதத்திற்கு மீன் பிடிக்கக் கூடாது. பிரபுல் பட்டேலின் போலீஸ் மீன்பிடித் துறைமுகங்கள் பலவற்றை அனுமதிப்பெறாதவை என்று காரணம் சொல்லி அகற்றிவிட்டது. இதற்குப் பிறகு இவர்கள் சொல்லும் கடல் எல்லைக்குள் மீன் பிடித்தல், பெரு நிறுவனங்களின் மூலம் சந்தை என்று புதிய கெடுபிடிகள் தொடரும். எப்போதும் தீவு கூட்டத்தில் பயிர்த் தொழில் மிக குறைவாகவே இருக்கும். அவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடித்தல், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களாகவே இருக்கும். அதில் அடித்து இவர்களைத் தெருவில் நிறுத்த தயாராகி விட்டார்கள்.
¶ எல்லாவற்றிற்கும் மேலாக இலட்சத்தீவுகளில் மதுக்கடைகள் இல்லியாமே.. சொல்லவே இல்லை.. அப்புறம் எப்படி அடிச்சுக்குவானுங்க.. ஒரேயொரு தீவில் மட்டும் சாராயம் இருந்தது போய் இப்பொழுது மேலும் மூன்று தீவுகளில் கணிசமான மதுக்கடைகளில் திறந்து வைத்துவிட்டு பிரபுல் பட்டேல் இரத்த வாடையை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறார்.
¶ இதைவிட ரொம்பக் கொடுமை – 2020 முடிய தீவுகளில் கோவிட் நோயாளிகள் எண்ணிக்கை ரொம்ப குறைச்சல். நிலை இயக்கச் செயல்பாடுகளை (standard operating procedures) மிக தீவிரமாக கடைபிடித்து தீவுக்குள் கோவிட் இல்லாச் சான்றிதழ் பெற்றுத் தான் வரவேண்டும் என்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். இப்போது பிரபுல் படேல் பட்டாளம் உள்ளே புகுந்த பிறகு கோவிட் நோயாளிகள் 7000க்குமேல் எகிறியிருக்கிறது. சமீபத்தில் இறப்பு 26க்கு உயர்ந்துள்ளது.
ஆக, சக்கரம் முழுதாக சுழலத் தொடங்கிவிட்டது. சிக்குனவன் மேலே ஏத்தி உருட்டித் தள்ள வேண்டிய வேலைதான் பாக்கி. இவர்கள் ஒருநாள் கூட மக்களை வாழவைக்க ஆட்சி நடத்துவதில்லை. எங்கே பிணம் விழும்.. அந்த ஓலத்தில் யார் தலையைத் தடவலாம் என்றே காத்திருக்கிறார்கள்..இன்னொரு பிரதேசம் இந்தியாவின் புதைகுழி ஆகப் போகிறது.
லியாக்கத் அலி
எழுத்தாளர்