திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிராக ஆற்றிய உரை
முக்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக திராவிட முன்னேற்ற கழகத்தின் முழுமையான எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு ஏன் துடிக்கிறது. இதன் மூலம் இந்த நாட்டிற்கு என்ன சொல்ல நினைக்கிறது மத்திய அரசு.
இதன் மூலம் நாட்டு மக்களை பிரிக்கும் முயற்சியில் இறங்குகிறது மத்திய அரசு. பெண்களுக்கு பயன் தரக் கூடிய 33 சதவிகிதம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் நீங்கள் பொடுபோக்காக உள்ளீர்கள். ஆனால் முத்தலாக் தடை மசோதாவை கொண்டு வருவதில் நீங்கள் காட்டும் ஆர்வம் வியப்பளிக்கிறது. காரணம் கேட்டால் “முத்தலாக் தடை மசோதா பெண்களின் நலனுக்காக” என்கிறீர்கள்.
பெண்களுக்கான நலன் எது என்பது பெண்களாகிய எங்களுக்கு உங்களை விட நன்றாக தெரியும். ஒன்றும் உதவாத முத்தலாக் தடை மசோதாவை விட்டுவிட்டு பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டைத்தை நிறைவேற்றுங்கள்
இந்த நாட்டின் இளைஞர் சக்தி மதம் சாதி கடந்து ஒற்றுமையாகவும், அன்பாகவும் இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் விரும்பும் அந்த ஒற்றுமையும் அன்பும் நாளுக்கு நாள் செத்துக் கொண்டு வருகிறது. இவைகளை தடுக்க என்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள் நீங்கள்?
இங்கே பா.ஜ.க. உறுப்பினர்கள் சுதந்திரத்தை பற்றி பேசினார்கள். இந்த நாட்டில் தனி நபர் சுதந்திரம் எங்கே இருக்கிறது? ஒரு நபர், தான் விரும்பிய உணவை உண்ண, விரும்பிய மதத்தை பின்பற்ற இவர்கள் அனுமதிக்கிறார்களா? ஒவ்வொரு நாளும் மாட்டின் பெயராலும், மதத்தின் பெயராலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். அவற்றிற்கு எதிரான மசோதாக்கள் தான் தற்போதைய அவசரத் தேவையாக உள்ளது.
இந்த முத்தலாக் தடை மசோதாவை நீங்கள் கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று முனைப்பாக இருக்கிறீர்கள். அதற்கான எல்லா சாத்திய கூறுகளும் இருக்கிறது. நீங்கள் தான் பெரும்பாண்மையாக இருக்கிறீர்கள். ஆனால் நான் இங்கு இருக்கிறேன். நான் அதற்கு எதிராக நிற்பேன். இந்த சட்டத்தை கைவிடுங்கள்.
இந்திய திருமணச் சட்டத்தின் படி விவாகரத்து கோருவது கிரிமினல் டிவிஷனில் வருகிறது. எனக்கு இதை புரிந்து கொள்ள முடியவில்லை. கணவன் மனைவி விவாகரத்து கோருவது என்பது CIVIL ISSUE. அது எப்படி குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் அடங்கும்.
ஒரு இந்து கணவன் அவனுக்கான திருமணச் சட்டத்தின் அடிப்படையில் குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டனை பெற்று விவாகரத்து பெற வேண்டும்.அதன் மூலம் அவன் குற்றவாளி ஆகிறான்.
ஆனால் முஸ்லிம் தனியார் சட்டத்தின் அடிப்படையில் தலாக் சொல்லி விவாகரத்து செய்தால் நீதிமன்றத்திற்கு வரத் தேவையில்லை. குற்றவாளியாகத் தேவையில்லை. அழகான முறையில் பிரிந்து விடலாம்.
நான் ஒரு பெண்ணிய வாதி. எப்போதும் பெண்களுக்கான நலன் சார்ந்தே செயல்படுபவள். முத்தலாக் மூலம் ஆண்கள் அநீதீயிழைப்பார்கள் என்பதில் எந்த உண்மையுமில்லை. அது முஸ்லிம் பெண்களுக்கான அழகிய நடைமுறை. இதை சிந்திக்க வேண்டும்.
பா.ஜ.க. ஏன் முஸ்லிம் பெண்கள் மேல் மட்டும் அக்கறை கொள்கிறது? இந்த நாட்டில் இந்து பெண்கள் கிருஸ்தவ பெண்கள் பாதிக்கப் படுவதேயில்லையா?
Domestic voilence law இன்று நிறைவேற்றப்படுமா? அது வந்து விட்டாலே எல்லாமும் அதற்குள்ளேயே அடங்கி விடுமே! முஸ்லிம் பெண்களும் அதன் மூலம் பாதுகாக்கப்படுவார்களே!
உச்சநீதிமன்றத்தின் வார்த்தைகளை மதிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களே! நான் மத்திய அரசைப் பார்த்து கேட்கிறேன், உச்சநீதிமன்றம் கூறியும் ஏன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பதில்லை?
பெண்கள் அந்த கடவுளை நம்பவில்லையா? அவர்களுக்கு மத நம்பிக்கை இல்லையா? ஏன் அவர்களை அந்த கோவிலில் அனுமதிக்க மறுக்கிறீர்?
இந்திய குற்றவியல் சட்டம் 375 சட்டம் என்ன சொல்கிறது. தன்னுடைய கணவன் தன்னை கற்பழித்து விட்டான் என்று வழக்கு தொடுத்தால் அவன் குற்றவாளியாம். இப்படியான ஒரு கேவலமான சட்டத்தை எந்த நாட்டிலாவது பார்த்ததுண்டா?
திமுக எப்போதும் சிறுபான்மையினர் பாதுகாப்பற்றவர்களாக உணர்வதை அனுமதிக்காது. பயனற்ற முத்தலாக் தடை மசோதாவை கைவிட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.