2014 இல் நரேந்திர மோடி, “குஜராத் மாடல் போல இந்தியாவையும் வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வேன்” என்று கூறியிருந்தார். அதை அவர் இப்போது செய்து காட்டிக்கொண்டும் இருக்கிறார். அதாவது உண்மையில் குஜராத்தின் மாடல் என்பதே மக்களிடையே கவர்ச்சி திட்டங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலமாக உருவாக்கப்படும் ஏமாற்று வேலை தான். மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் 9வது மிகப்பெரிய மாநிலம் குஜராத். ஆனால் அந்த மக்களில் பெரும்பாலானோர் காவிமயத்தாலும், வளர்ச்சி என்ற பெயரில் ‘மோடி பிராண்ட்’ காட்டியுள்ள பிம்பத்தாலும் குருட்டு பக்தர்களாக, மாயையில் மூழ்கிக் கிடப்பவர்களாக இருந்தால் வளர்ச்சி என்பதை என்னவென்று குஜராத் மக்கள் புரிந்துகொள்வார்கள்?! அல்லது குஜராத் என்பதே மேட்டுக்குடி மக்கள் மற்றும் காவி கார்ப்பரேட்கள் மட்டும் வாழக்கூடிய மாநிலம் மட்டுந்தானா? உண்மையில் பாரதிய ஜனதா கட்சி அங்கு ஆட்சியை பிடித்ததே மூன்று ‘உருட்டு’களால்தான்(தீவிரவாதம், தேசப்பாதுகாப்பு, ஹிந்துத்துவா).
உலகிற்கே வழிகாட்ட வந்த மனித அவதாரமான இராமரின் ஆட்சியில் பாரதம் செழிப்பாகவும், வளமாகவும், குடிமக்கள் மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் வாழ்ந்தனர். இந்த ஆட்சியில் தான் அறிவிலும், ஆரோக்கியத்திலும் சிறந்து விளங்கிய பொற்காலமாக கருதப்பட்டது நமது பாரதம். ஆனால் பிறகு வந்த முஸ்லீம்களும் பின்னர் வந்த கிறிஸ்தவர்களும் கடந்த 1000 ஆண்டுகளாக மக்களை அடிமைப்படுத்தி பாரதத்தின் சீறையும், சிறப்பையும் பாழ்படுத்தி விட்டனர்.
இப்போது மனிதாபிமானம் என்ற திரையையும், ஜாதி ஒரு சாபக்கேடு என்று பேசக்கூடிய அனைத்து கட்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு மோடி தலைமையிலான பாஜகவை ஆட்சிக்கு அமர்த்தினால் பல ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த அந்த கடவுளின் அற்புத ஆட்சியே மீண்டும் ஏற்பட்டு பாரதம் பழையபடி மீண்டும் உலகத்திற்கே தலைமையாகக் கொண்டு தனக்குரிய இடத்தைப் பெற்று தனித்தியங்கும்.
இது வேறொன்றுமில்லை! கொஞ்சம் கூட மூளையில்லாத, வளராத கால்சட்டை கும்பலான RSS சர்வாதிகாரிகளின் மனதை மயக்கும் மந்திர கட்டுக்கதைகள். அறிவுடையோர், உலக வரலாற்றில் எங்குமே காணமுடியாத இவ்வரலாற்று நிகழ்வுகளை தெளிவாக அறிந்து கொள்வர், இதன் காரணமாகவே குஜராத்தின் பெரும்பாலான மக்கள் வெறும் குருட்டு நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கின்றனர் என்ற கருத்தை ஆரம்பத்தில் வைக்க நேர்ந்தது.
இப்போதுவரை ஊடக பிம்பங்களும், மேட்டுக்குடி அம்பிகளும் குஜராத்தை முன்மாதிரியாக, வளர்ச்சி அடைந்த மாநிலமாக, உண்மை அதற்கு நேர்மாறானது என்று தெரிந்தும் கூட மாயபிம்பங்களை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் நாம் குஜராத் பற்றியும் அது அடைந்த வளர்ச்சி பற்றியும் அறிந்துகொள்வது இன்றியமையாதது. அதனடிப்படையில் குஜராத்தின் ஆரோக்கியம் சார்ந்த வளர்ச்சி பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.
ஆரோக்கியம்:
குஜராத் ‘மாதிரி’ அசுர வளர்ச்சி அடைந்த ‘அந்த’ ஆட்சி காலத்தில் மக்களின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் அரசு போதுமான அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை.
ஊட்டச்சத்து குறைப்பாட்டில் இந்தியாவிற்கே ‘முன்மாதிரி’யாக முதல் இடத்தில் இருக்க வேண்டிய குஜராத் 2012ஆம் ஆண்டுவாக்கு தரவரிசையின்படி 20 வது இடத்தில் இருந்திருக்கிறது.
குஜராத் மாநிலம் வகிக்கக்கூடிய 20 வது இடத்திற்கு முன்னால் 19 மாநிலங்கள் உள்ளன. முதல் பத்து இடங்களுக்குள் கூட வர முடியாத ஒரு மாநிலம் எப்படி மாதிரியாக இருக்க முடியும். தரவரிசையில் முதல் ஐந்து இடங்களை பெற்றிருக்கக்கூடிய மாநிலங்கள் அடைந்து இருக்கக்கூடிய வளர்ச்சியில் இருந்து குஜராத் மாநிலம் படிப்பினை பெற்று போதிய வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனால் அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மோடிக்கோ பன்னாட்டு நிறுவனங்களுக்காக குறைந்த விலையிலும், சலுகை மற்றும் மானியங்களுடனும் தனது மாநில நிலங்களை தாரை வார்ப்பதிலேயே தனது ஆட்சிக் காலத்தை கழித்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
» ரத்த சோகையால் பாதிக்கப்படும் பெண்களின் சதவிகிதம் 1999-இல் 46.3% இருந்து 2004-இல் 55.5 ஆக உயர்ந்துள்ளது. குழந்தைகளில் 74.5 ஆக இருந்த இரத்தசோகை சதவீதம் 80 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2006-இல் எடுத்த மூன்றாவது தேசிய குடும்ப நல கணக்கெடுப்பில் இந்த உண்மைகள் காணக்கிடைக்கிறது.
» மனிதவள மேம்பாட்டு அட்டவணை 2011 வெளியிட்ட அறிக்கை, குஜராத் இரண்டு முக்கிய சமூக குறிகாட்டிகளில் மோசமாக செயல்படுவதை அப்பட்டமாக காட்டியிருக்கிறது.
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 44.6% பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் மாநிலத்தில் கிட்டத்தட்ட 70% குழந்தைகள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்து குறைபாட்டில் குஜராத்தை விட உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசம் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலம், அம்மாநிலத்தால் எப்படி சிறப்பாக செயல்பட முடிந்தது?
» CAG (Comptroller Auditor General) இன் 2012ஆம் ஆண்டு அறிக்கையின்படி, குஜராத்தில் 2007 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் இலக்கு வைக்கப்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலைகளை பொறுத்தவரை ஒவ்வொரு மூன்று குழந்தையிலும் ஒரு குழந்தை (3:1) எடைக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு குழந்தை இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது சாதாரண விடயமே அல்ல…
» குஜராத்தின் ஆண்-பெண் பாலின விகிதம் 2001-ஆம் ஆண்டு 1000 ஆண் குழந்தைகளுக்கு 921 பெண் குழந்தைகள் என்பதாக இருந்தது. அடுத்த பத்தாண்டுகள் ஆட்சிக்குப்பின் 2011-இல் இந்த எண்ணிக்கை 1000 ஆண் குழந்தைகளுக்கு 918 பெண் குழந்தைகள் என குறைந்தது. இதே பத்தாண்டு காலகட்டத்தில் அகில இந்திய அளவில் ஆண்-பெண் குழந்தைகள் பாலின விகிதம் 1000க்கு 933 பெண்கள் குழந்தைகள் என்பதிலிருந்து 1000க்கு 940 என்றளவில் உயர்ந்தது. குஜராத் மாநிலத்தைக் காட்டிலும் தேச அளவில் இந்த எண்ணிக்கை ‘உயர்ந்துள்ளது’ இங்கு குறிப்பிடத்தக்கது. 1000:1000 என்ற விகிதத்தில் ஆண்-பெண் குழந்தைகள் பாலின விகிதம் இருக்குமானால், பெண் சிசுக் கொலைகளே நடக்கவில்லை என புரிந்துகொள்ளலாம். ஆனால் குஜராத்தைக் காட்டிலும் வளர்ச்சி குறைந்த பல மாநிலங்கள் இவ்வரிசையில் முன்னேறி இருக்கின்றன. உதாரணமாக, அஸ்ஸாமில் பாலின விகிதம் 935 இருந்து 954 ஆகவும், ஆந்திராவில் 978 இருந்து 992 ஆகவும் ஏன், ஒரிசாவில் 972 இருந்து 978 ஆகவும் புள்ளிகளை மேம்படுத்தியிருக்கின்றன. ஆனால் முன்மாதிரி மாநிலமோ புள்ளிகளை உயர்த்தவில்லை, 2 புள்ளிகள் குறைத்திருக்கின்றது என்பதே இங்கு வேடிக்கையான விடயம். வழக்கம்போல இதிலும் தென்மாநிலங்களான கேரளம் மற்றும் தமிழகமே முதல் இரண்டு இடங்களில் இருந்திருக்கிறது.
» குஜராத், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கணிசமாகக் குறைத்துள்ளது, ஆனாலும் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ள காரணத்தால், ஐந்து வயதுக்குட்பட்ட இறப்புகளில் இது 63 சதவீதத்திற்கு பங்களிக்கிறது. சிறுவர்களை விட அதிகமாக பெண்கள் இறக்கின்றனர்.
» மேலும், குஜராத் மாநிலத்தின் பழங்குடிப் பகுதி மக்களின் 94 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
» சமீபத்தில் நடத்திய ஆய்வில் கூட, குஜராத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ஊட்டச்சத்து பிரச்சனைகள் சிறிதளவு குறைந்திருந்தாலும், சுமார் 39 சதவீத குழந்தைகள் இன்னும் நீண்டகாலமாக ஊட்டச்சத்து குறைபாடு அல்லது குன்றிய நிலையில் உள்ளனர். வீணான (wasted) அல்லது கடுமையான (stunning) ஊட்டச்சத்துக் குறைபாடு 2006 மற்றும் 2016 க்கு இடையில் அதிகரித்து, குழந்தைகளின் உயிர்வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தியது. பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் 50 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் கிடைக்கின்றது.
» பெருமுதலாளிகள் தனக்கு பக்கபலமாக இருக்க மாநிலத்தின் கஜானாவை Open Door Policy போல் திறந்து விட்டதன் மூலம் குஜராத்திலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாக காரணமாக இருந்திருக்கிறார் மோடி. அதே நேரத்தில் சாதாரண மக்கள் மேலும் வறுமையின் பக்கம் தள்ளப்படுகின்றனர்.
சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனத்தின் ‘இந்திய மாநிலங்களின் வறுமை நிலவரம் 2008’ பற்றிய அறிக்கையில் 17 பெரிய மாநிலங்களின் தரவரிசையில் குஜராத் 13வது இடம் பெற்று ஒரிசாவைவிட கீழாக இருந்திருக்கிறது. சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார் போன்ற மாநிலங்கள் குஜராத்துக்கு சற்று மேலே இருக்கின்றன.
இந்த தொடர்ச்சியான புள்ளிவிவரங்கள் எதை நமக்கு உணர்த்துகின்றன? குஜராத் மாநிலம் ஒரு முன்மாதிரியாக இருந்திருந்தால் இத்தகைய புள்ளிவிவரங்கள் தலைகீழாக, அதாவது குஜராத்திற்கு சாதகமாக இருந்திருக்க வேண்டுமல்லவா. உண்மையில் குஜராத் மாநிலம் முன்மாதிரியாகவே இருந்திருக்கிறது, ஒரு மாநிலம் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் எந்தமாதிரியான வளர்ச்சிகள் அடையக்கூடாது என்பதற்கு குஜராத் மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரி.
இத்தகைய புள்ளிவிவரங்கள் மேட்டுக்குடியைச் சார்ந்த அம்பிகளுக்கு வேண்டுமானால் சாதாரணமாக தோன்றலாம். ஏனெனில் அவர்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது, தண்ணீர் வசதி கிடைக்கிறது, பளபளப்பான சாலைகள் இருக்கிறது, ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது இவர்களுக்கு என்ன கவலை இனிமேல்… கவலையெல்லாம் பாமர, தலித் மற்றும் சிறுபான்மையின மக்களுக்குத்தான்.
சமூகத்தின் மேல் அக்கறை இருப்பது போல் காட்டிக்கொள்ளும் மேட்டுக்குடி வர்க்கம், மோடியின் ஆட்சியை மெச்சும் இவர்கள் மக்களின் உரிமை மறுக்கப்படும்போது உரிமையை மீட்டெடுக்கும் ஒரு போராட்டத்திலாவது கலந்திருப்பார்களா? அல்லது சாலையில் இறங்கிதான் போராடியிருப்பார்களா? ஆனால் மோடியை, குஜராத்தை மீட்க வந்த உலக மீட்பராகவும், நாட்டை காக்க வந்த ஆபத்பாந்தவனாகவும் இல்லாத கதையையெல்லாம் கட்டிவிடுகின்றனர்.. இந்த விளம்பரங்களினால் ஏமாற்றப்படுவது மற்றும் பாதிக்கப்படுவது என்னவோ பாமர மக்கள் தான்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்னும் அமெரிக்க தினப் பத்திரிகையின் ஒரு நேர்காணலின் போது குஜராத்தில் பெண்களின் ஆரோக்கியம் குறித்து நரேந்திர மோடி, “உணவுமுறை அடிப்படையில் குஜராத் சைவ உணவை உட்கொள்ளும் மாநிலம். பொருளாதார அடிப்படையில் பார்த்தாலும் நடுத்தர பிரிவினர் அதிகம் வாழும் மாநிலம் குஜராத் தான். மாநிலத்தில் உள்ள நடுத்தர வகுப்பு பெண்கள் தங்கள் உடல் நலங்களில் அக்கறை செலுத்துவதை காட்டிலும் தங்களை அழகுபடுத்தி கொள்வதிலேயே அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். இதன்மூலம் தாங்களாகவே தங்களது உடல் நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர். நடுத்தர வகுப்பு குடும்பங்களிடையே உடல்நலம் மற்றும் அழகுக்கு என பெரும் போராட்டமே நடைபெற்று வருகிறது, ‘பால் குடித்தால் நோய்களில் இருந்து காத்துக் கொள்ளலாம்’ என்று மகளுக்கு தாய் அறிவுரை கூறினால், ‘பால் குடித்தால் குண்டாகி விடுவேன்! இதனால் எனது அழகு கெட்டு விடும் எனவே பால் குடிக்க மாட்டேன்’ என்று மகள் கூறும் நிலைமையே இங்கு அதிகளவில் உள்ளது. அதனால் தான் குஜராத்தில் ஊட்டச்சத்து குறைவால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்” என கொஞ்சம் கூட சமுதாய பொறுப்பும், அக்கறையும் இல்லாமல் இப்படி ஒரு திமிரான பதிலை கொடுத்திருக்கிறார்.
என்னவோ இவரே ஒவ்வொரு குடும்பத்திற்கும் சென்று எட்டிப் பார்த்து விட்டு வந்து இதுதான் காரணமாக இருக்க முடியும் என தன்னுடைய ஞான அறிவின் வாயிலாக நினைத்துக் கொண்டார் போலும்…
பெண்கள் ஊட்டச்சத்து குறைவு மற்றும் இரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றார்கள் என்றால், ஊட்டச்சத்து மிகுந்த சத்துள்ள உணவுகளை வாங்கி உண்பதற்கு அவர்களிடம் போதிய பணம், வருமானம் இருப்பதில்லை. இதன்காரணமாகவே ஊட்டச்சத்து குறைவான, சத்தில்லாத உணவுகளை உட்கொள்கின்றனர். அப்படியானால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைவுக்கு குடும்ப வறுமை மற்றும் வேலையின்மை தான் முக்கிய காரணி. வறுமை மற்றும் வேலையின்மையை போக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமுள்ளது (இதனை குறித்து பிரிதொரு கட்டுரையில் காண்போம்). இதை விட்டுவிட்டு ‘அழகிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெண்கள் உடல்நலத்திற்கு கொடுப்பதில்லை’ என சம்பந்தமே இல்லாத காரணத்தை சிறிதும் வெட்கமில்லாமல் கூறி சமாளித்திருக்கிறார்.
இந்த வளர்ச்சியையும் மோடி ஏற்படுத்திய குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியாக சேர்த்துக்கொள்ள வேண்டும். மோடி 13 ஆண்டுகளாக குஜராத்தில் முதலமைச்சராக பதவி வகித்திருக்கிறார், தன்னுடைய மாநிலம் மனித வள மேம்பாட்டில் மட்டுமல்ல, சமூக நலத்துறையில் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிடம் கூட முதல் இடம் பிடிக்கமுடியவில்லை என்பதே மோடி சாதித்த (போலி) வளர்ச்சியாகும். எனவே குஜராத் மாநிலம் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஆரோக்கியம் மற்றும் சமூகநலத்தில் ‘மாதிரி’யாக இல்லை, அது ‘விளக்குதிரி’யாக இருந்தது என்பதே நிதர்சனமான உண்மை.
- முகமது சாதிக் இப்னு ஷாஜஹான்