கர்நாடகாவில் உடுப்பி அரசு பெண்கள் பியுசி கல்லூரியில் 11,12 வகுப்புகளில் படிக்கும் 8 முஸ்லிம் மாணவிகளை ஹிஜாப் – தலை முக்காடு அணிந்ததன் பெயரில் வெளியேற்றிய நிகழ்வானது நாட்டின் ஜனநாயக, மதச்சார்பற்ற தன்மை எதிர்கொண்டு வரும் நெருக்கடியைத்தான் எடுத்துச் சொல்கிறது. கடந்த டிசம்பர் 27 அன்று சீருடையும் தலையில் ஹிஜாபும் அணிந்து கொண்டு வந்த மாணவிகளுக்கு சீருடையின் காரணத்தைச் கல்லூரியின் கதவுகள் அடைக்கப்பட்டன. தங்களது படிப்பை கைவிட தயாராக இல்லாத மாணவிகள் கல்லூரியின் கேட்டுக்கு வெளியே இருந்து படிக்க தீர்மானித்தனர். விஷயம் தீவிரம் அடைவதைக் கண்ட இந்துத்துவ பாசிச அமைப்புகள் தலையிட ஆரம்பித்தனர். அதிகாரிகளும் அவர்களுக்கு கீழ்ப்படிந்து கல்லூரியை மூடினாலும் மாணவிகளின் கோரிக்கை கீழ்ப்படிய மாட்டோம் என்ற முடிவை எடுத்தார்கள். தலை முக்காடு அணிந்ததன் பெயரில் மாணவிகளை வெளியேற்றிய நடவடிக்கையை அங்கீகரிக்க முடியாது என கர்நாடகா துவக்க மற்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கல்லூரி முதல்வரிடம் அறிவித்தார்.
தற்போது கர்நாடக மாநிலத்தில் கல்லூரிகளுக்கு சீருடை இல்லை என்றும் அதை உருவாக்குவதற்காக மேற்படி விஷயத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்படும் எனவும் கல்வித்துறை செயலாளர் அறிவித்தார். இவ்விஷயம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையமும் கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருந்தது. கல்லூரியில் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக மாணவிகள் தொடுத்த வழக்கின் மீது தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி தலை முக்காடுக்கு தடை விதிக்க மறுத்தார். இதற்கிடையில் இவற்றையெல்லாம் புறக்கணிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் கல்வி நிலையங்களில் ஒற்றை சீருடையை கட்டாயமாக்கி கர்நாடக அரசு கடந்த சனிக்கிழமை என்று உத்தரவிட்டது.
அரசு கல்வி நிலையங்களில் பொதுவான சீருடையும் தனியார் பள்ளிகளிலும் பியூசி கல்லூரிகளிலும் அந்தந்த கல்லூரி அதிகாரிகள் தீர்மானிக்கும் சீருடையை அணிய வேண்டும் எனவும் அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது, விருப்பம் உள்ள மதத்தை ஏற்றுக்கொள்ளவும் பிரச்சாரம் செய்யவும் மத பழக்கவழக்கங்களை பின்பற்றவும் உறுதியளிக்கும் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 25க்கு எதிரானது அல்ல எனவும் அந்த உத்தரவில் உண்டு. சமத்துவத்தையும் ஒருங்கிணைப்பையும் பொதுவான சட்டங்களையும் சீர்குலைக்கும் ஆடை முறைமைகளை அனுமதிக்க முடியாது என்றும் அந்த உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது. முஸ்லிம் மாணவிகள் தலை முக்காடு அணிவதற்கு பதிலடி கொடுப்பதாக எண்ணிக்கொண்டு மாநிலத்தில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் காவி துண்டு அணிந்துகொண்டு சங்பரிவார் கும்பல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.
இனவெறியும் வெறுப்பும் சூழ்ந்து நிற்கும் தெற்கு கன்னட கடற்கரையோர பகுதிகளிலிருந்து ஆரம்பித்த தலை முக்காடு விவகாரத்தை முஸ்லிம் இன வெறுப்பு பிரச்சாரமாக மாநிலம் முழுவதும் பரப்புவதற்கு சங்பரிவார்கள் முயற்சித்து வருகின்றனர். வட இந்தியாவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் பிரச்சார ஆயுதமாக இவற்றை கொண்டு செல்வதற்குண்டான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக ஆளும் மற்ற சில மாநிலங்களிலும் தலைமுக்காடை தடை செய்வோம் என அறிவித்துள்ளது அதனது ஒரு பகுதியாகும். முஸ்லிம் மாணவிகளின் அடிப்படை உரிமை பாதுகாப்பிற்கு ஆதரவு தெரிவித்து தலித் மாணவ அமைப்புகள் நீலவண்ண துண்டை அணிந்து போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக கர்நாடகாவில் உள்ள கல்லூரி வளாகங்கள் கலவரச் சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஒரு மதத்துடன் தொடர்புடைய விஷயங்களில் அந்த மதத்தின் அடிப்படை தத்துவங்களுக்கு அனுகூலமாகத்தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்று சுதந்திர இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட முதல் முக்கியமான வழக்கில் தீர்ப்பாக சொல்லப்பட்டுள்ளது. உடுப்பியில் உள்ள ஶ்ரீசுறுர் மதத்துடன் தொடர்புடைய வழக்கில்தான் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்தியா போன்ற பன்முக சமூகங்கள் வாழக்கூடிய நாட்டில் மத நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களை ஆதரவுடன் அணுக வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவில் சொல்லப்பட்டிருந்தது. அதே உடுப்பியில்தான் இப்போது பிற மத முறைமைகளுக்கு எதிராக மதவெறியை தூண்டி விட்டு பேயாட்டத்தை துவங்கி இருக்கிறார்கள் என்பது பெரும் விந்தையாக உள்ளது.
2016இல் அம்னா பின்த் பஷீருக்கும் சிபிஎஸ்சிக்கும் இடையே நடந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றமும் யூசுப் பாய் உஸ்மான் பாய் ஷேக்குக்கும் குஜராத் அரசுக்கும் இடையேயான வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றமும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி அளிக்கும் மத கலாச்சார உரிமை என்ற அடிப்படை உரிமைக்கு ஏற்பவே முஸ்லிம்களின் ஆடை கலாச்சாரத்தையும் காண வேண்டுமென தெளிவுபடுத்தி இருந்தார்கள். இந்த தீர்ப்பை மீறிய செயலாகத்தான் உடுப்பியில் நடந்த நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு போட்ட உத்தரவும் உள்ளது. இதற்கு அமைப்புச் சட்டத்தின், இந்திய நீதி முறைமைகளின் ஆதரவு இருக்காது என மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
சீருடையுடன் மத கலாச்சார அடையாளமான தலை முக்காடு அணிவது எவ்வாறு சட்ட விரோதமாக மாறும்?. சீக்கிய சமூகத்தை சார்ந்தவர்கள் சீருடையுடன் அவர்களது தலைப்பாகையை அணிந்து வருகிறார்கள் அல்லவா?. சீருடை சட்டத்தை மீறினார்கள் என்று சொல்லி பெண் குழந்தைகளின் கல்வியை முடக்குவது என்ன நியாயம்? அனைவருக்கும் கல்வி என்ற தத்துவத்தை விட ஒருங்கிணைந்த சீருடை சட்டத்தை நிறைவேற்றுவது அவசியமா போன்ற கேள்விகளை அவர்கள் எழுப்பியிருக்கிறார்கள். எல்லாவற்றிக்கும் மேலாக, கர்நாடக அரசின் உத்தரவானது அமைப்புச் சட்டத்தின் பிரிவு 25ன் தேட்டங்களை புறக்கணிப்பதாக உள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதற்கு சில மாதங்களுக்கு முன்பாக மாணவர் போலீஸ் துறையில் தலை முக்காடு விஷயத்தில் தடைவிதித்த கேரள அரசின் நிலைப்பாட்டையும் இத்தோடு சேர்த்து வாசிக்க வேண்டும்.
தலை முக்காடை காட்டியும் இஸ்லாமோஃபோபியாவை வளர்த்தியும் முஸ்லிம் மாணவிகளின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை தடை செய்வதற்கும் இந்தியாவில் தங்களது ஒற்றைக் கலாச்சாரத்தை திணிப்பதற்கும் பாசிச சங்பரிவார் கும்பல் எடுக்கும் முயற்சிகளே இவைகள். கர்நாடகாவில் உள்ள வலதுசாரி அரசாங்கத்தின் செயல்பாடுகளும் கேரளாவில் உள்ள இடதுசாரி அரசாங்கத்தின் செயல்பாடுகளும் பாசிசவாதிகள் அவர்கள் நோக்கத்தில் வெற்றி பெற்று வருகிறார்கள் என்பதையே காட்டுகிறது. ஆனால், வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படை தத்துவத்தை மையமாகக்கொண்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டமே இங்கே தோல்வி அடைகிறது என்பது நாம் கவலை கொள்ள வேண்டிய விஷயமாகும்.
அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்