சுதந்திர இந்தியாவின் 75 ஆம் வருடத்தில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று திரௌபதி முர்மு இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஆதிவாசி சமூகத்தில் இருந்து முதல் ஆளுநராக பதவி வகித்த திரௌபதி முர்மு, ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசு தலைவர், சுதந்திரத்திற்கு பிறகு பிறந்து குடியரசுத் தலைவர் ஆனவர், வயது குறைவான குடியரசுத் தலைவர் போன்ற சிறப்புகளும் அவருக்கு உண்டு.
பாஜகவின் மிகவும் திட்டமிடப்பட்ட நகர்வுகளின் மூலம்தான் திரௌபதி முர்மு இந்த உயர் பதவியை அடைந்திருக்கிறார். கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் ஆதிவாசி, தலித் சமூகங்களுக்குள்ளே ஊடுருவதற்கான வழிகளை எளிமைப்படுத்துவதற்கும் அவர்களுடைய நம்பிக்கையை பெறுவதற்குமான மிகச் சிறந்த அரசியல் நகர்வாகத்தான் ஆர்எஸ்எஸ் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவராக ஆக்கி உள்ளது. கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலின் போதும் இவரது பெயர் பட்டியலில் இருந்தது. திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் எதிர்க்கட்சிகளை உடைப்பதற்கும் அரசியல் லாபத்தை அதிகரிப்பதற்கும் பாஜகவால் முடிந்தது.
உத்தரப்பிரதேசத்தில் தலித் சமூகத்தை இந்துத்துவ பாதையில் இணைத்ததை போல, கிழக்கு பிராந்தியத்தில் ஆதிவாசி பழங்குடியின சமூகத்தையும் இந்துத்துவத்தின் வாக்கு வங்கிகளாக மாற்றி அமைப்பதற்கான சங்கரிவார் நகர்வுகளுக்கு கிடைத்த மிக முக்கியமான முன்னேற்றம்தான் குடியரசு தேர்தலில் அவர்களுக்கு கிடைத்துள்ள வெற்றி . இதனது பலன் ஒரிசாவிலும் ஜார்க்கண்டிலும் பீகாரிலும் மட்டுமல்ல மேற்கு வங்கத்திலும் வெளிப்படும்.
பாதகமான சமூக சூழ்நிலைகளுக்கு மத்தியில் தனது கடினமான முயற்சியினால் வளர்ந்து ஒரு முக்கியமான காலகட்டத்தில் அமைப்புச் சட்டத்தின், நாட்டின் உயரிய பதவியை ஏற்றெடுக்கும் திரௌபதி முர்மு, புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின், விளிம்பு நிலை மக்களின், பெண்களின் பிரதிநிதி ஆவார்.
பழங்குடியினரும் தலித்துகளும் பெண்களும் சிறுபான்மையினரும் நாட்டில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட, நீதியும் உரிமைகளும் மறுக்கப்பட்ட சமூகங்களாவர். அப்படிப்பட்ட அடித்தட்டு சமூகத்தில் இருந்து அமைப்புச் சட்டத்தின் காப்பாளராக இருக்கக்கூடிய உயர் அந்தஸ்தை அடைந்திருக்க கூடிய திரௌபதி முர்முவிற்கு, நீதி மறுக்கப்பட்ட சமூகங்களின் வேதனையை புரிந்து கொள்ளவும் அவர்களது பக்கம் நிற்கவும் இயல வேண்டும். அவர் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருக்கின்ற பொழுது ஆதிவாசி மக்களின் நிலங்களை பிறருக்கு பெயர் மாற்றம் செய்வதற்கான சட்டங்களை எளிமைப்படுத்தி பாஜக அரசால் அனுப்பப்பட்ட மசோதாவை அவர் திருப்பி அனுப்பி உள்ளார் என்பது நம்பிக்கை அளிக்கும் செய்தி.
சங்பரிவாரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருப்பினும், அமைப்புச் சட்டம் அனைவருக்கும் உறுதியளிக்கும் நீதியின் தேட்டத்தை நிறைவேற்ற அவர் துணை நிற்பாரா என்பது அவருக்கு முன்னால் எழுந்திருக்கும் மிகப்பெரும் கேள்வியாகும். குறைந்தபட்சம், கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஆதிவாசிகளின் பாதுகாப்பையும் நீதியையும் உறுதிப்படுத்த வேண்டியது அவர் மீது கட்டாய கடமையாகும். அவர் தனது கடமையை உரிய முறையில் நிறைவேற்ற நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
குடியரசு தலைவர் பொறுப்பிலிருந்து விடை பெற்றுச் செல்லும் ராம்நாத் கோவிந்துக்கும் நமது வாழ்த்துக்கள். அவர் தனது இறுதி உரையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டின் நலன் கருதி செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். நாட்டின் முதல் குடிமகனாக இருந்துள்ள அவரது வேண்டுகோளை நாம் மிகவும் மதிக்கிறோம். அதே வேளையில் ஜனநாயகத்தின் உயர் ஆலயமாக மதிக்கப்படும் நாடாளுமன்றத்தில் விவாதங்களும் ஆலோசனைகளும் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதும் கேள்விகள் கேட்பதற்கு தடைகள் விதிக்கப்படுவதும் ஜனநாயகத்தின் உயர அந்தஸ்தை இழிவுபடுத்துவதாக ஆகாதா என்பதை அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு முரணாக மசோதாக்களை நிறைவேற்றி அனுப்புகின்ற பொழுது அவற்றில் எவ்வித கேள்விகளும் கேட்காமல் கையெழுத்திட்ட பொழுது தேச நலன் அவருக்கு தென்படவில்லையா? நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கக் கூடிய அதே நேரத்திலே, தனக்குத்தானே சுய கேள்விகள் கேட்டு ஆய்வு செய்ய இந்த ஓய்வு காலத்தில் ராம்நாத் கோவிந்த் முன்வர வேண்டும்.
ஒன்றிய அரசு நிறைவேற்றக்கூடிய எல்லா சட்டங்களிலும் கையெழுத்திட்டு அனுப்பக்கூடிய ரப்பர் ஸ்டாம்புகளாக ஒருபோதும் குடியரசுத் தலைவர் இருக்கக் கூடாது என்பது நாட்டு மக்களின் விருப்பமாகும். காங்கிரஸ் கட்சியால் தேர்வு செய்யப்பட்ட போதும் தனித்துவத்தோடு இயங்கிய கே ஆர் நாராயணனை போல் குடியரசுத் தலைவர்கள் செயல்பட்டால் இந்த நாடு ஒருதலை பட்சமாக ஒருபோதும் இயங்காது. பதவி விலகும் காலத்தில் பிறருக்கு அறிவுரை கூறி கடந்து செல்வதை விட பதவியில் இருக்கின்ற பொழுது முன்மாதிரியாக செயல்படுவது சிறந்ததாகும். அமைப்புச் சட்டத்தின் காவலர்களாக உறுதியுடன், தைரியத்துடன் செயல்பட்ட குடியரசுத் தலைவர்களின் பட்டியலில் திரௌபதி முர்முவின் பெயரும் இடம்பெறட்டும் என்று வாழ்த்துகிறோம்.
– K.S. அப்துல் ரஹ்மான்