எழுதியவர் : ராபியா குமாரன்
வருகிற மே 16ஆம் தேதி தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவர இருக்கின்றன. சிறந்த வழிகாட்டுதலும், ஆலோசனையும் கிடைக்கப் பெறும் மாணவர்கள் தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே என்ன படிக்கப் போகிறோம்? எந்தக் கல்லூரியில் படிக்கப் போகிறோம் என்பதை நன்கு திட்டமிட்டு தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி இருப்பர்.
அவர்களில் சிலர் கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளைப் படிக்க விரும்பினால் தான் படிக்க நினைக்கும் படிப்பு எந்தெந்தக் கல்லூரிகளில் சிறப்பாக கற்றுத் தரப்படுகிறது என்பதை விசாரித்து, இரண்டு மூன்று கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வாங்கி தயார் நிலையில் வைத்திருப்பர். தேர்வு முடிவுகள் வெளியான அன்றே மதிப்பெண் பட்டியலை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பப்படிவத்துடன் இணைந்து அனுப்பிவிடுவர்.
தரமான கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கு கடும் போட்டி நிலவும். அக்கல்லூரிகளில் குறிப்பிட்ட பிரிவுகளில் சேர விரும்புபவர்களுக்கு குறிப்பிட்ட மதிப்பெண்களை தகுதியாக நிர்ணயித்திருப்பர். அத்தோடு முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கே முன்னுரிமை என்ற விதியையும் வைத்திருப்பர். இவ்வாறான கல்லூரிகளில் நல்ல மதிப்பெண்களோடு, முதலில் விண்ணப்பிப்பவர்கள் இடம் கிடைத்து விரும்பிய படிப்பு கிடைக்கப் பெறுவார்கள். அவர்களின் எதிர்காலமும் சிறப்பான முறையில் இருக்கும்.
ஆனால் பெரும்பாலான மாணவர்கள், குறிப்பாக வழிகாட்டுதல்கள் ஏதும் கிடைக்கப் பெறாத மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு முடிவுகளுக்குப் பின்னரே என்ன படிக்கலாம் என்று யோசிப்பர். தேர்வு முடிவுகளுக்குப் பின் யோசித்து, கல்லூரியில் விண்ணப்பம் வாங்கி விண்ணப்பிப்பதற்குள் இரண்டு, மூன்று வாரங்கள் கடந்திருக்கும்.
மேலே குறிப்பிட்டதைப்போல் தரமான கல்லூரிகள் நிர்ணயித்திருக்கும் மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும், தாமதமாக விண்ணப்பித்த காரணத்தால் விண்ணங்கள் நிராகரிக்கப்படும். நீங்கள் கேட்கும் பிரிவுக்கான இடங்கள் பூர்த்தியாகிவிட்டது, இந்தப் பிரிவுதான் இருக்கிறது வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் என்பார்கள். மாணவர்களும் நல்ல கல்லூரி என்பதற்காக விருப்பம் இல்லாத ஏதாவது ஒரு பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படிப்பார்கள் அல்லது தான் விரும்பிய படிப்பை தரமற்ற கல்லூரிகளில் தேர்ந்தெடுத்துப் படிப்பர். இவ்வாறு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
ஆகவே, உங்களுக்குத் தெரிந்த மாணவ, மாணவியர் யாரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இருந்தால் தேர்வு முடிவுகள் வந்த அன்றே விண்ணப்பிக்கச் சொல்லுங்கள். அதற்குத் தேவையான உதவிகளை செய்ய முயற்சியுங்கள்…
கலை அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் முதலாம் ஆண்டு சேர இருக்கும் மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் வாங்கிக் கொடுக்க உதவுங்கள். ஏனெனில் விழிப்புணர்வு கிடைக்காத மாணவர்களுக்கு விழிப்புணர்வை வழங்கவும், வழிகாட்டவும் வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. நாம் நம் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் அதிகமான மாணவர்கள் பயனடைவர். அவர்களின் எதிர்கால நலனுக்ககு நாமும் ஒரு காரணியாக இருப்போம்.. இருக்க முயற்சிப்போம்…