இந்திய முஸ்லிம்களுக்குப் புதிய நெருக்கடி ஒன்று தற்போது உருவாகியிருக்கிறது. தாலிபான் விவகாரத்தில் ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கோரும் நிர்பந்தம் கடந்த இரண்டு நாட்களாக இங்கிருக்கும் முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தாலிபான்களை ஏற்பதும், எதிர்ப்பதும் அவரவர் அரசியல் புரிதலுக்கு ஏற்ப நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நான் தாலிபான்களை எதிர்க்கிறேன். தாலிபான் எதிர்ப்பு என்பதை ஏகாதிபத்தியங்களின் தரப்பிலோ, பார்ப்பன தரப்பிலோ, Hindu Nazi enablers ஆக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சாதி இந்து லிபரல்களின் தரப்பிலோ நின்றுகொண்டும், இந்தத் தரப்புகளின் ஒப்புதலுக்காகவும் செய்யவில்லை. தாலிபான்களால் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படவிருக்கும் அப்பாவி ஆப்கன் முஸ்லிம்கள் – ஆப்கன் சிறுபான்மையினர் தரப்பில் நின்று எதிர்க்க விரும்புகிறேன். தாலிபான்களின் பெண் ஒடுக்குமுறை, கலைகள் மீதான வெறுப்பு, இஸ்லாம் பற்றிய அவர்களின் கடுமையான கோட்பாட்டுப் புரிதல் முதலானவற்றின் அடிப்படையில் தாலிபான்களோடு முரண்பட்டு எதிர்க்க வேண்டியதாக இருக்கிறது.
தாலிபான்களைக் காரணமாக வைத்துக் கொண்டு, இந்திய முஸ்லிம்கள் மீதான தங்கள் வெறுப்பைத் தணித்துக் கொண்டிருந்த பலரை இன்று அடையாளம் காண முடிந்தது. பொத்தாம் பொதுவாக, மதம் மனிதனை மிருகமாக்கும் என்று உருட்டிக் கொண்டிருந்தார்கள். தாலிபான்கள் மத விவகாரத்தில் கடுங்கோட்பாட்டுவாதிகள் என்ற போதும், மதத்தோடு முடிந்துபோகும் பிரச்னை அல்ல அவர்களிடம் இருப்பது. அவர்களின் வளர்ச்சி தேச அரசு என்ற கட்டமைப்போடு தொடர்புகொண்டிருக்கிறது. அடிப்படையில் பஷ்டூன் இனத் தேசியவாதிகள் இந்த தாலிபான்கள். கடந்த நூற்றாண்டில், முதலாளித்துவம் உருவாக்கிய சுரண்டல் வடிவமான தேச அரசுகளின் வல்லாதிக்க வெறிக்கு வேட்டைக்களமாக ஆப்கன் மாறியிருப்பது வரலாறு. தாலிபான்களின் கைகளில் இன்றும் அமெரிக்க உற்பத்தி துப்பாக்கிகளே இருக்கின்றன.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கின் தலையீட்டை நீக்கிவிட்டு தாலிபான்களை எதிர்க்கிறோம், மத அடிப்படைவாதிகளை எதிர்க்கிறோம் என்று பேசுபவர்கள் தேச அரசு என்ற கடந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கட்டமைப்பின் சிக்கலையும் பேச வேண்டும்.
ஒலிம்பிக்ஸ் போட்டியில் தேசமற்ற அகதிகள் அணி என்று சன் நியூஸ் வெளியிட்ட செய்திக் கார்டைப் பகிர்ந்து கொண்டாடிக் கொண்டிருந்த யாருக்கும் தேச அரசுகளால் உலகம் முழுவதும் ஏதுமற்றவர்களாக உருவாக்கப்படும் அகதிகளைக் குறித்த நியாயமான கோபம் எழவில்லை என்பதில் இருந்து தாலிபான் சிக்கல் குறித்த இவர்களின் நிலைப்பாட்டை வெறும் இஸ்லாமிய வெறுப்பாக மட்டுமே கருத முடிகிறது. இந்தப் புரிதல் இல்லாமல் உண்மையிலேயே மனித உரிமைகளை மனதில் கொண்டு பேசுவோரிடம் வெறுப்பு இல்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும், தாலிபான்களையும் ஒரே தராசில் அணுகுவோர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தாலிபான்கள் ஆயுதம் ஏந்தி, நாட்டைக் கைப்பற்றி, அதிபரை விமானம் ஏற்றிப் பறக்கவிட்டவர்கள். ஆர்.எஸ்.எஸ் அப்படியல்ல. பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று, அவர்களின் ஏகபோக ஒப்புதலோடு ஆட்சிக்கு வந்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். இரு அமைப்புகளுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது.
இதுதான் சரியான நேரம் என்று சமூக வலைத்தளங்களில் இங்கிருக்கும் முஸ்லிம்கள் மீது நெருக்கடியையும் வெறுப்பையும் உருவாக்கும் சாதி இந்து லிபரல்கள், முதலில் உங்கள் உறவினர்களின் குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் இருந்து மீட்கும் பணியைத் தொடங்குங்கள். உங்கள் குடும்பங்களில் இருந்துதான் சங்கிகள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். மறந்துவிடாதீர்.
தாலிபான்கள் ஆட்சிக்கு வந்திருப்பதால், ஆப்கன் மக்கள் தங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த இரண்டு சாத்தான்களுள் ஒன்றில் இருந்து தப்பிவிட்டார்கள் என்றே கருத முடிகிறது. எஞ்சியிருக்கும் மற்றொரு சாத்தானான தாலிபான்களை ஆப்கனில் வாழும் சிவில் அமைப்புகள், புரட்சிகர ஜனநாயக சக்திகள், பெண் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள் என அனைவரும் ஒன்றிணைந்து ஒரு நாள் வீழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அன்று ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சோசியலிச ஜனநாயகம் உருவாக வேண்டும் என்று விரும்புகிறேன். இது மட்டுமின்றி எதிர்காலத்தில் உருவாகும் அரசியல் ஆய்வாளர்கள் தேச அரசுக் கருத்தாக்கத்தின் மீது மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் கருதுகிறேன்.
~ர. முகமது இல்யாஸ்.