• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கட்டுரைகள்»ஒழுக்க வீழ்ச்சி என்பது இறை நம்பிக்கையின் பலவீனமே!
கட்டுரைகள்

ஒழுக்க வீழ்ச்சி என்பது இறை நம்பிக்கையின் பலவீனமே!

AdminBy AdminAugust 2, 2024Updated:September 5, 2024No Comments3 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

அற உணர்வுகள், ஒழுக்க உணர்வுகள் என்பது மனிதனிடம் இயற்கையாக அமைந்துள்ள இயல்புகள். மனித உள்ளம் தன்னியல்பாகவே நன்மைகளை விரும்புகிறது. அதுபோல, தீமைகளை வெறுக்கிறது.

உதாரணத்திற்கு, நீதி, அன்பு, சமத்துவம், வாய்மை, நேர்மை போன்ற அம்சங்களை மனிதன் எப்போதும் நல்லவை என்று அங்கீகரித்து வந்திருக்கிறான். அதுபோல, பொய், ஏமாற்று, கொலை, அநியாயம் முதலானவற்றை தீயவை என்றே உணர்கிறான். ஆக, நன்மை, தீமை என்பன மனிதன் தேடிக் கண்டிபிடிக்க வேண்டிய அளவுக்கு மறைபொருள்களாக இல்லை. மனித உள்ளுணர்விலேயே அதை இறைவன் உணர்த்தியிருக்கின்றான்.

திருமறையில் இறைவன் கூறுவான்: فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰٮهَا
“அதன் தீமையையும் தூய்மையையும் அதனுடைய உள்ளுணர்வில் வைத்தவன் மீதும் சத்தியமாக!”

இஸ்லாத்தைப் பொறுத்தவரை அறம், நல்லொழுக்கம் என்பது நிலையானது. அது காலத்துக்கு ஏற்றார்போல் மாறக்கூடியது அல்ல. ஆனால், மனிதனின் சுயநலம், மனோ இச்சை, ஷைத்தானின் தூண்டுதல் காரணமாக அந்த அறமும் நல்லொழுக்கமும் சிதைக்கப்படுகிறது. சமூகத்தில் தீமைகள் பல்கிப் பெருகக் காரணி இதுதான்.

வாழ்வின் நோக்கம் மறவேல்!

இறைவனின் படைப்புகள் அனைத்தும் அவன் வகுத்துத் தந்திருக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன. சூரியன் கிழக்கில் உதிக்க வேண்டும், மேற்கில் மறைய வேண்டும் என்பது ஏகனின் கட்டளை. அதை சூரியன் மீறுவதில்லை. இதேபோலத்தான் வானம், கடல், நிலவு, மரங்கள் எனப் பிற படைப்புகளும் இறைவனின் ஆணைக்கு இணங்கவே பூமியில் செயல்படுகின்றன.

மனிதனும் அல்லாஹ்வின் படைப்புதான். மற்ற படைப்புகளுக்கு வழங்கப்படாத ஓர் அம்சம் மனிதனாகிய நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதுதான் தேர்வுச் சுதந்திரம். ஆம், நாம் எவ்வழியில் வாழ வேண்டும், எப்படி இந்த உலகில் இயங்க வேண்டும் என்பதை நாமே முடிவு செய்யும் உரிமை அது. அதை அல்லாஹ்வின் விருப்பத்துக்கு மாற்றமாக பிரயோகிக்கும்போது இம்மை, மறுமையில் தீங்கும் தோல்வியும் மனிதர்களுக்கு ஏற்படுகிறது.

மனிதனுக்குத் தேர்வுச் சுதந்திரத்தை வழங்கிய இறைவன் இஸ்லாம் எனும் உன்னதமான வாழ்க்கைத் திட்டத்தையும் வழங்கியிருக்கிறான். அதைத் தன் திருத்தூதர்களின் வழியாக நமக்கு அறிமுகப்படுத்தியும் இருக்கிறான். அதைப் பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே ஈருலக வெற்றி சாத்தியம். இல்லையேல் நஷ்டம் நமக்குத்தான்.

மனிதனை படைத்ததற்கான நோக்கத்தைப் பற்றி திருக்குர்ஆனில் இறைவன் இப்படி கூறுகிறான்: وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏
“நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை.”

ஆக, முழு மனித நடத்தைகள் இறைவனும் அவனின் தூதரும் காட்டித் தந்தமைக்கு இணங்க அமைதல் அவசியம். ஆனால் இன்றைக்கு ஒழுக்க வீழ்ச்சியில் மனிதன் உழன்றுகொண்டிருக்கிறான். ஆபாசமும், வன்முறையும் ஊடகங்களின் வழியாக நம்மிடம் திணிக்கப்படுகிறது. சமூகத்தில் மோசடி, சுரண்டல், களவு, கொலை, பாலியல் வன்முறை போன்றவை பெருகியிருக்கின்றன.

இளைய சமூகத்தை போதைப் பொருள் கலாச்சாரம், நுகர்வுக் கலாச்சாரம், Screen Addiction போன்றவை பீடித்திருக்கின்றன. உணவு, உறக்கம் போன்ற அன்றாடப் பழக்கத்தில்கூட ஒரு ஒழுங்கு இல்லாத நிலைமை இன்று ஏற்பட்டிருக்கிறது. வாழ்வின் நோக்கத்தை மறந்து இவ்வுலகின் அலங்காரங்களிலும், கேளிக்கைகளிலும் நாம் மூழ்கிக்கிடக்கிறோம்.

இறை நம்பிக்கையும் நல்லொழுக்கமும்

ஒழுக்க வீழ்ச்சியில் சிக்குண்டு நிம்மதியையும் அமைதியையும் நாம் தொலைத்திருக்கிறோம். இதனால் உடல் ரீதியான, மன ரீதியான பல பிரச்னைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இதற்கெல்லாம் தீர்வு இறை நம்பிக்கையின் பக்கம் மீண்டு, அதை வலுப்படுத்துவதே ஆகும். அது நமது நடத்தையைத் தீர்மானித்தால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும்.

பெருமானார் (ஸல்) கூறினார்கள்: “நல்லொழுக்கமும் நம்பிக்கையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவையாகும். ஒன்றை விட்டுவிடுபவன் அடுத்ததையும் விட்டுவிட வேண்டிவரும்.”

“எந்த முஸ்லிமின் நம்பிக்கை முழுமையானது?” என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. “யாரிடம் சிறந்த ஒழுக்கப் பண்புகள் இருக்கின்றனவோ அவர்தான்” என்று பதிலளித்தார்கள்.

இறை நம்பிக்கை, இறை வணக்கம், நல்லொழுக்கம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இவற்றில் எந்த ஒன்றில் குறை இருந்தாலும் அது மானுட வாழ்வை சீர்குலைக்கும்.

இறை வணக்கம் என்பது இறைவனுடனான தொடர்பையும் பிணைப்பையும் சீரமைக்கும். நாம் வாழ்வதற்கான பயிற்சியை அது நமக்கு அளிக்கும். உதாரணத்திற்கு, நோன்பு மூலம் நாம் எதை அடைய வேண்டும் என்று அல்லாஹு தஆலா எதிர்பார்க்கிறான்? ஸூரத்துல் பகராவில் இடம்பெறும் வசனம் இப்படி தெளிவுப்படுத்துகிறது: “(அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்”.

தக்வா எனும் இறையச்சத்தை, இறைவன் பார்க்கிறான் என்ற உணர்வை வணக்க வழிபாடுகள் நம்முள் விதைக்கின்றன. அது நம் செயல்பாடுகளில் தாக்கம் செலுத்துவதாக உள்ளது. ஒழுக்க வீழ்ச்சி என்பது நம்பிக்கையின் பலவீனத்தையே காட்டுவதாகக் கூறுவார் அறிஞர் முஹம்மது அல்கஸ்ஸாலி.

எனவே, நாம் நம்மை சுய ஆய்வு செய்துகொள்வோம். ஈமானையும் தக்வாவையும் நம்முள் வலுப்படுத்த தர்பியா, தஸ்கியாவில் மிகுந்த கவனம் செலுத்துவோம். அதுதான் தற்கால ஒழுக்கவியல் சவால்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். இறை திருப்தியைப் பெறுவதற்குத் தோதுவான வாழ்வை வாழ்வதற்கு நம்மை ஆயத்தப்படுத்தும். இம்மை, மறுமையில் அதுதான் நமக்கு வெற்றியை ஈட்டித்தரும்.

அறம் சார்ந்த வாழ்க்கையை வாழுவோம். சுயத்தையும் சமூகத்தையும் சீரமைப்போம், இன்ஷா அல்லாஹ்.

(எஸ்ஐஓ நடத்திவரும் ‘அற வாழ்வு: சுயத்தையும் சமூகத்தையும் சீராக்குவோம்’ என்ற பரப்புரை இயக்கத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட பிரசுரம்.)

அறவாழ்வு ஒழுக்கம்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
Admin
  • Website

Related Posts

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025

வி.எஸ். நைபாலும் இஸ்லாமிய வெறுப்பு பயணங்களும்

October 4, 2025

நபிகள் நாயகம் ஒரு மகான்

September 6, 2025

சாதியப் பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெற காரணங்களும் தீர்வும்

August 27, 2025

சூப்பர் மேன் திரைப்படம் பேசுபொருளானது ஏன்?

July 26, 2025

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025

வி.எஸ். நைபாலும் இஸ்லாமிய வெறுப்பு பயணங்களும்

October 4, 2025

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025

ஷதியா அபூ கஸ்ஸாலே: ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் உயிர்த்தியாகி

September 10, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.