மத்திய அரசின் முத்தலாக் மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருந்தாலும் ஒரு நல்ல காரியத்தை நிகழ்த்தியிருக்கிறது. அந்த மசோதாவை ஆதரித்தும் எதிர்த்தும் பேசுவதற்காக பல எம்பிக்களை குர்ஆனை படிக்க, புரிந்துகொள்ள வைத்திருக்கிறது இந்த மசோதா.
நேற்று மக்களவையில் இந்த மசோதாவை எதிர்த்து பேசிய காங்கிரஸ் எம்பி ராஜ்நீத் ரஞ்சன் இப்படி கூறுகிறார் : குர்ஆனை நினைத்து நான் பெருமை கொள்கிறேன், ஏனென்றால் விவாகரத்து குறித்த குர்ஆனின் கொள்கைகள் மிகவும் சிறப்பானவையாக இருக்கின்றன. அரசு அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு மசோதாவை கடுமையாக எதிர்த்ததுடன், இந்த மசோதா மூலம் குர்ஆனையும், குர்ஆன் கூறும் விவாகரத்து கொள்கைகளையும் விரிவாக படிக்க நேர்ந்தது. குர்ஆனின் விவாகரத்து கொள்கையே உலகின் சிறந்த சட்டம் என்று கூறினார்.
அவரது முழு உரை :
இந்த மசோதா மூலம் குர்ஆனை படித்து புரிந்து கொள்ள உதவியதற்காக மத்திய அரசுக்கு நன்றிகள். குர்ஆனில் இடம்பெற்றிருக்கும் விவாகரத்து குறித்த விரிவான சட்டத்திற்காக குர்ஆனை நான் மதிக்கிறேன். இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் முஸ்லிம் பெண்கள் உங்களுக்கு வாக்களித்துவிடுவார்கள் என்ற மாயையில் இருக்கிறீர்கள், ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் ஒரு பிரிவையாவது உங்களால் இந்த சட்டத்தில் இருந்து எடுத்துக்காட்ட முடியுமா.?
குர்ஆனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். விவாகரத்தில் ஆணுக்கு இருப்பதைப் போல சமமான உரிமையை பெண்ணுக்கும் குர்ஆன் வழங்கியுள்ளது. இரண்டு நபர்களுக்கிடையேயும், இரண்டு குடும்பங்களுக்கிடையேயும் உறவுகள் எப்படி பேணப்பட வேண்டும் என்பதை குர்ஆன் விளக்குகிறது. விவாகரத்தை தடுக்க ஐந்து கட்ட வழிமுறைகளை குர்ஆன் சொல்கிறது. இதைவிட வலிமையான சட்டம் வேறேங்கும் இருக்க முடியாது.
உச்சநீதிமன்றம் தடை செய்த பிறகும் 477 வழக்குகள் முத்தலாக் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு சொல்கிறது. கடுமையான சட்டங்கள் இருந்தும் கூட வரதட்சணை மரணங்கள் பற்றிய வழக்குகள் ஏராளமாக பதிவாகின்றன, இந்து கணவர்கள் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே வேறு பெண்களை மணக்கின்றனர், சட்டத்தை மீறுகின்றனர், அவற்றை ஏன் நீங்கள் இங்கு விவாதிப்பதில்லை? முஸ்லிம்களை மட்டும் ஏன் குறி வைக்கின்றீர்கள்? தவறான முறையில் ஒருவர் விவாகரத்து கொடுக்கின்றார் என்றால் எதற்காக முஸ்லிம்களை மட்டும் குறி வைக்கிறீர்கள், இந்துக்களை ஏன் தண்டிக்க முன்வருவதில்லை? உச்சநீநிமன்ற உத்தரவிற்கு பிறகும் கும்பல் படுகொலைகள் அரங்கேறிக் கொண்டுதானே இருக்கின்றன, அவற்றைப் பற்றி ஏன் பேசுவதில்லை? பீகாரின் முசாஃபர்பூரில் உங்கள் அரசில் 37 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர், உங்கள் அமைச்சர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களை ஆதரிக்கிறார், அவற்றைப் பற்றி ஏன் பேசுவதில்லை? பாதிக்கப்பட்ட பெண்கள் இந்துகள் என்பதால் அவற்றைப் பற்றி பேசுவதில்லையா.? இந்த மசோதா மூலம் முஸ்லிம்களின் வாக்குகளை நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனால் இந்த சட்டத்திற்காக முஸ்லிம் பெண்கள் உங்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்ற மாயையில் நீங்கள் இருந்துவிடக் கூடாது.
இந்த சட்டம் மூலம் பெண்களை எப்படி பாதுகாக்கப் போகிறீர்கள் என்று எனக்கு விளக்குங்கள். வேலையை இழந்து சிறைக்கு செல்லும் ஒரு ஆண் எப்படி அந்த பெண்ணுக்கு பாதுகாப்பளிக்க முடியும்? பெண்ணுக்கு என்னவிதமான பாதுகாப்பு அளிக்கிறீர்கள்? அவர்களை முஸ்லிம் தனியார் சட்டம், அவர்களது மதம், வீடு இவற்றில் இருந்து வெளியேற்றுகிறீர்கள். இது பிளவையே ஏற்படுத்தும்.
உண்மையிலேயே அரசு முஸ்லிம்களின் விவாகரத்து ப்ரச்னையை சரிசெய்ய விரும்பினால், குர்ஆன் கூறும் விவாகரத்து சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏனென்றால் அவையே சிறப்பான சட்டம், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அதனை ஏற்றுக்கொள்ளவும் செய்யும். முத்தலாக் விவகாரத்திற்கு முடிவு கட்ட சட்டம் இயற்ற விரும்பினால் குர்ஆனை முழுவதும் படித்து புரிந்து கொண்டு அதன் விவாகரத்து கொள்கைகளை சட்டமாக்கினால் முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். நீங்கள் முஸ்லிம் பெண்களின் ப்ரச்னைகளுடன் விளையாடுகிறீர்கள். பெண்கள், உட்பிர்ச்னைகளால் இந்து-முஸ்லிம் பிரிவினை ஏற்பட்டுவிடக்கூடாது.
தமிழில் ஆர்.அபுல் ஹசன்