ஆட்சியும் அரசாங்கமும் விமர்சிக்கப்படுகின்றபோது அதனை நேர்மறையாக எதிர் கொள்வதற்கு பதிலாக விமர்சிப்பவர்களின் மதத்தையும் இனத்தையும் பிரச்சினைகளுக்கு உட்படுத்துவத்துவதை கவலையோடுதான் நாம் பார்க்க வேண்டும்
பிறமத வெறுப்பும் வகுப்பு வாதமும் இனவெறியும் நிரந்தர நோயாக மாறிப்போன ஒரு மோசமான நிலைமையில்தான் இந்தியர்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனித உணர்வுகளை பாதிக்கக்கூடிய இந்தத் தீரா நோயின் பலன்தான் இனக் குருட்டு. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண்களும் காதுகளும் உண்மையை அறிவதற்கோ சரியான தகவல்களை ஏற்றுக் கொள்வதற்கோ தயாராக இருக்காது. உண்மைகளை ஏற்றுக் கொள்ளாமல் அதற்கு எதிராக குறைப்பார்கள். இருப்பதை எடுத்துச் சொல்பவர்களை ஏளனத்தோடு இழிவுபடுத்துவார்கள். பின் சத்திய காலத்தில் உண்மைகளுக்கு இடமில்லை என்றும் இனி வரும் காலம் பெரும் பொய்களின் காலம் என்றும் நிரூபிப்பார்கள். இந்த நோய் அரசாங்கத்தையும் ஊடகங்களையும் பாதித்தால் ஏற்படும் இன்னல்கள் மிகவும் பயங்கரமாக இருக்கும். கும்பல் படுகொலைகளுக்கும் இனவெறி தாக்குதல்களுக்கும் இனப்படுகொலைகளுக்கான கூச்சல்களுக்கும் அது தைரியத்தை அளிக்கும். வெறுப்பையும் பகையையும் வளர்க்கும் இனக் குருட்டு நோய் புதிய காலத்தில் ‘இயல்பானதாக (new normal)’ மாறிக்கொண்டிருக்கிறது.
குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டதற்காக முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் டாக்டர் ஹமீத் அன்சாரிக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் தனிநபர் தாக்குதல் அதைத்தான் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘HINDUS FOR HUMAN RIGHTS’ என்ற அமைப்பு அந்த நாட்டிலுள்ள அரசியல் நிபுணர்களையும் நாடாளுமன்ற (காங்கிரஸ்) உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து ஜனவரி 26 இந்திய குடியரசு தினத்தன்று ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. நாட்டில் உள்ள 17 தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்துதான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிசம்பர் 17 முதல் 19 வரை உத்தரகாண்ட், ஹரித்துவாரில் இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த தர்மசன்சதிலே முஸ்லிம் இனப்படுகொலைக்கு அழைப்பு கொடுத்தது, கிறிஸ்துமஸை ஒட்டி நாட்டின் பல்வேறு இடங்களில் சர்சுகளின் மீது நடந்த தாக்குதல்கள் ஆகிய நிகழ்வுகளை தொடர்ந்துதான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
1994இல் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையை குறித்து 1998ல் வெளியான அறிக்கையில், அன்றைக்கு உலக தலைவர்களாக இருக்கைகளில் அமர்ந்து இருந்தவர்களுக்கு அப்போது ருவாண்டாவில் நடைபெற்ற துயர நிகழ்வுகள் குறித்து தூரநோக்கு எதுவும் இருக்கவில்லை என்றும் அதனால்தான் மிகப்பெரும் ஒரு ஆபத்தை தடுக்க இயலாமல் போனது என்றும் அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் கூறியிருந்தார். அப்படிப்பட்ட ஒரு ஆபத்தின் அருகில் தான் இந்தியா இருக்கிறது என்றும், அமெரிக்க அதிபர் பைடன் காலத்தின் தேவைக்கேற்ப செயல்பட்டு இந்தியாவில் அதிகரித்து வரும் இனவெறி இனப்படுகொலையாக மாறாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் Hindus for Human rights ன் கோரிக்கை. ‘இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட அமைப்பு சட்டத்தின் பாதுகாப்பு’ என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் நோக்கமும், இந்த விஷயத்தில் இந்தியாவின் தவிர்க்கவியலாத கூட்டாளியாக இருக்கும் அமெரிக்காவின் தலையீட்டுக்கு அழுத்தம் கொடுப்பதுதான்.
இணையதளம் வழியாக நடந்த இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் டாக்டர் ஹாமீது அன்சாரியும் கலந்து கொண்டார். 17 அமைப்புகள் இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களாக இருந்தனர். பதினோரு சொற்பொழிவாளர்கள் கலந்து கொண்டனர். அதில் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் என்ற ஒரு அமைப்பின் மீதும் சொற்பொழிவாளர்களில் ஒரே ஒரு முஸ்லிமாக இருந்த டாக்டர் ஹாமீத் அன்சாரி மீதும் மட்டும் தாக்குதலை தொடுத்து இருக்கிறார்கள் ஊடகங்களும் அதிகார மையங்களும். அன்சாரியின் பதிவுசெய்யப்பட்ட வீடியோ சொற்பொழிவில் முதலில் இந்தியாவின் பன்மைத்துவத்தை கூறியதற்கு பிறகு, நாகரிக தேசியம் (civic nationalism) என்ற பிரகடனப்படுத்தப்பட்ட தத்துவத்திலிருந்து கலாச்சார தேசியம் என்ற சித்தாந்தத்தின் பக்கம் மாறுவதன் மூலம் உருவாகும் ஆபத்துகளை சுட்டிக்காட்டியிருந்தார்.
தேர்தல் வாக்குகள் மூலம் கிடைக்கும் பெரும்பான்மையை தங்களுக்கான மதப் பெரும்பான்மையாக சித்தரித்து அரசியல் அதிகாரத்தை தங்களது உரிமையாக மாற்றிக் கொள்வதற்கு நடந்துகொண்டிருக்கும் முயற்சிகளை தனது உரையில் அவர் கவனப்படுத்தினார்.
ஆனால், வெளிநாட்டில் நடைபெற்ற தேசத்துரோக அமைப்புகளின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்றும் நாட்டை இழிவுபடுத்தி விட்டார் என்றும் குற்றம்சாட்டி முதன்மை ஊடகங்களாக தங்களை சொல்லிக் கொள்ளும் கோடி மீடியா கூச்சலிட்டுக் கொண்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரின் சொற்பொழிவையும் நிகழ்வையும் விமர்சித்துள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முஸ்லீம் பெயருள்ள அமைப்பையும் ஹாமித் அன்சாரியையும் மட்டும் குறிவைத்துத் தாக்கும் ஊடகங்கள், அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஹிந்துஸ் ஃபார் ஹியூமன் ரைட்சையோ மற்ற அமைப்புகளையோ சொற்பொழிவாளர்களையோ திட்டமிட்டேதான் குறிப்பிடாமல் இருந்தார்கள் என்றும் அன்சாரியின் மீது எவ்வித அடிப்படைகளும் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறுவது தெளிவான இஸ்லாமோஃபோபியாவின் அடிப்படையில்தான் என்றும் நிகழ்ச்சியின் செயல் இயக்குனர் சுனிதா விஸ்வநாத் குற்றம் சாட்டுகிறார். ‘ஒடுக்கப்பட்டவர்கள் கொடுமைகளுக்கு ஆளாகின்றபோது அதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டியது இந்துவான தனது கடமையாகும்’ என்ற முன்னுரையோடுதான் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சிரவ்யா தாண்டப்பள்ளி நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததை சுட்டிக்காட்டிய அவர், அவற்றையெல்லாம் மறைத்து வைத்துவிட்டு அன்சாரிக்கு எதிராக மட்டுமே தாக்குதலை தொடுப்பது என்பது இன வெறுப்பை பரப்ப வேண்டும் என்ற துர்நோக்கமே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணனுக்கு பிறகு இரண்டு முறை குடியரசு துணைத் தலைவர் பதவியை அலங்கரித்தவர் டாக்டர் அமித் அன்சாரி. சிறந்த இராஜதந்திரியும் அறிஞருமான ஹாமீத் அன்சாரி தனது பக்கச்சார்பற்ற ஜனநாயக நிலைபாடுகளால் மக்களின் ஆதரவை பெற்றவர். மாநிலங்களவை தலைவராக இருந்த பொழுது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தோடும் பாஜக தலைமையிலான அரசாங்கத்தோடும் அவர் முரண்பட்டுள்ளார். அதை ஜனநாயக செயல்பாடுகளின் இயல்பான நடைமுறையாக மட்டுமே பார்க்க வேண்டும். ஆனால் பாஜக அரசு அதை பகையோடு எதிர்கொண்டது. எல்லாம் முறைமைகளையும் புறக்கணித்து அன்றைய ஆட்சித் தலைமை ஹாமீது அன்சாரியை குற்றப்படுத்தி வழியனுப்பி வைத்தார்கள். சங்பரிவார் கும்பல்களுக்கு இன்னமும் அவர் மீதான கோபம் தீரவில்லை என்பதுதான் இப்போது அவருக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் பிரச்சாரங்கள் எடுத்துக்காட்டுகிறது.
ஆட்சியும் அரசாங்கமும் விமர்சிக்கப்படுகின்றபோது அதனை நேர்மறையாக எதிர் கொள்வதற்கு பதிலாக விமர்சிப்பவர்கள் மதத்தையும் இனத்தையும் பிரச்சனைகளுக்கு உட்படுத்தக் கூடிய குறுக்கு புத்தியை கவலையோடு தான் நாம் காண வேண்டும். இந்த நாட்டில் நிலவும் சிக்கலான சூழலை குறித்து Hindus for Human rights கவலைப்படுவதற்கும் அப்பால் இந்த நாடு சென்று கொண்டிருக்கிறது என்பதை இந்த நிகழ்வுகள் சாட்சிப் படுத்திக் கொண்டிருக்கிறது.
K.S அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்